H. ராஜா கேள்வி: சிதம்பரம் நடராஜர் கோயில் நிலத்தை எப்படிப்பா தீட்சிதர்கள் விற்க முடியும்..!?

விழுப்புரத்தில் தமிழக பாஜக ஒருங்கிணைப்பு குழு தலைவர் எச்.ராஜா நேற்று செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்தார். அப்போது, சிதம்பரம் நடராஜர் கோயில் குறித்து தவறான தகவல்கள் திட்டமிட்டு பரப்பப்படுகின்றன. ஒரு காவல்துறை அதிகாரியும், இந்து அறநிலையத்துறையை சேர்ந்த 9 அதிகாரிகளும் சேர்ந்து சிதம்பரம் நடராஜர் கோயிலை பற்றி தினமும் ஏதோ ஒரு தகவலை பரப்பி வருகின்றனர். 2 ஆயிரம் ஏக்கர் நிலத்தை பொது தீட்சிதர்கள் விற்றுவிட்டார்கள் என்று கூறப்படுகிறது.

2 ஆயிரம் ஏக்கர் நிலத்தை யாராவது விற்க முடியுமா? ஏனென்றால் 1976-ல் கொண்டு வரப்பட்ட அரசாணையின்படி சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு கட்டளையாளர்கள் கொடுத்த நிலங்கள். அது தீட்சிதர்களுக்கான நிலங்கள் அல்ல. கோயிலுக்கு கொடுத்த இடம். இவர்கள் கூறியவாறு 3 ஆயிரம் ஏக்கர் இல்லை. 3,347 ஏக்கர் நிலம் இருக்கு. அது அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட தனி தாசில்தாரிடம் இருக்கிறது. இதனை எப்படி பொது தீட்சிதர்கள் விற்பனை செய்ய முடியும் என H. ராஜா கேள்வி எழுப்பியுள்ளார்.

தீட்சிதர்களால் VCK நிர்வாகி தாக்கப்பட்டதற்கு ராமதாஸ் கண்டனம்..!

நடராஜர் கோவிலில் கிரிக்கெட் விளையாடுவதை அனுமதிக்க முடியாது. அதை வீடியோ எடுத்த விசிக நிர்வாகியை தாக்கியது கண்டிக்கத்தக்கது என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்தார். சிதம்பரம் நடராஜர் கோயிலில் தீட்சிதர்கள் கிரிக்கெட் விளையாடியதை செல்போனில் படம் பிடித்ததால் தாக்கப்பட்டதாக விசிக நிர்வாகி காவல் நிலையில் போலீஸில் புகார் அளித்ததை தொடர்ந்து தீட்சிதர்கள் 5 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

சிதம்பரம் அருகே உள்ள வல்லம்படுகை கிராமத்தைச் சேர்ந்த இளையராஜா. இவர் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் வல்லம்படுகை முகாம் செயலாளராக உள்ளார். இவர், சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு திங்கள்கிழமை இரவு சுவாமி தரிசனம் செய்ய சென்றுள்ளார். அப்போது, தீட்சிதர்கள் சிலர் கோயிலுக்குள் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. இதைப் பார்த்த இளையராஜா அவரது செல்போனில் வீடியோ எடுத்துள்ளார்.

இதையடுத்து, இளையராஜாவிடம் இருந்து தீட்சிதர்கள் செல்போனைப் பறித்து, அவரை திட்டியதுடன் தாக்கியதாவும் கூறப்படுகிறது. இந்த தாக்குதலில் காயமடைந்த இளையராஜா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். பின்னர், இச்சம்பவம் குறித்து சிதம்பரம் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதைத்தொடர்ந்து, கோயில் தீட்சிதர்களை கைது செய்யக் கோரி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் காவல் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், திண்டிவனம் அருகே தைலாபுரம் தோட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, நடராஜர் கோவிலில் கிரிக்கெட் விளையாடுவதை அனுமதிக்க முடியாது. அதை வீடியோ எடுத்த விசிக நிர்வாகியை தாக்கியது கண்டிக்கத்தக்கது அதற்கு காரணமானவர்கள் மீது அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தீட்சிதர்கள் கிரிக்கெட் விளையாடுவதற்காக தனி மைதானத்தை அரசு ஏற்பாடு செய்யலாம். தீட்சிதர்கள் மட்டுமே இங்கு விளையாட முடியும் என்று விளம்பர பலகையை வைக்கலாம். ஆக பல கோவில்களில் இந்த விளையாட்டு நடைபெற வாய்ப்பு உள்ளது. கோவில் கிரிக்கெட் விளையாட்டு மைதானமாக மாறக்கூடிய பேராபத்தும் ஏற்படலாம் என ராமதாஸ் எச்சரிக்கை விடுத்தார்.