இன்பதுரை பேச்சு: “திருமாவளவன் எங்களுடன் தான் இருக்கிறார்..!”

திருமாவளவன் எங்கு செல்வார் என இன்று தமிழ்நாடே பார்த்துக் கொண்டிருக்கிறது. அவர் இங்குதான் இருக்கிறார், எங்களுடன் தான் இருக்கிறார்.” என அதிமுக முன்னாள் MLA இன்பதுரை பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது. சென்னையில் உள்ள காமராஜர் அரங்கில் 3 குற்றவியல் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என்று தமிழக வழக்கறிஞர்கள் சார்பாக அனைத்து கட்சிகளின் பிரதிநிதிகளை ஒன்றிணைத்து கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் முன்னணி வழக்கறிஞர்கள் பலர் பங்கேற்றனர். இதில் தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, விசிக தலைவர் திருமாவளவன், அதிமுக வழக்கறிஞர் இன்பதுரை, தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

இந்த நிகழ்வில் பேசிய அதிமுக வழக்கறிஞர் பிரிவு செயலாளர் இன்பதுரை பேசினார். அப்போது, “திருமாவளவன் எங்கு செல்வார் என இன்று தமிழ்நாடே பார்த்துக் கொண்டிருக்கிறது. அவர் இங்குதான் இருக்கிறார், எங்களுடன் தான் இருக்கிறார்.” என்றார். தொடர்ந்து பேசிய இன்பதுரை, “நான் அரசியல் பேச வரவில்லை.. வழக்கறிஞர்கள் எங்கு இருந்தாலும் அவர் வருவார் எனத் தெரியும். அவரும் ஒரு வழக்கறிஞர். திருமா நம்மோடுதான் இருக்கிறார். எப்போதும் நம்மோடுதான் இருப்பார். நல்லவர்கள் பக்கம் இருப்பார்” என இன்பதுரை தெரிவித்தார். கூட்டணி தொடர்பாக விசிக-வை முன்வைத்து விவாதங்கள் நடந்து வரும் சூழலில், இன்பதுரையின் இந்தப் பேச்சு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

எச்.ராஜா விமர்சனம்: திருமாவளவன் போடும் வேஷங்கள் மிக அதிகம் ..!

தேர்தல் நெருங்க நெருங்க திருமாவளவன் போடும் வேஷங்கள் அதிகமாக உள்ளதுஎன எச்.ராஜா விமர்சித்துள்ளார். தமிழக பாஜக ஒருங்கிணைப்புக்குழுத் தலைவர் எச்.ராஜா திருச்சியில் செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்தார்.

அப்போது, “பாஜக அமைப்புத் தேர்தல் துவங்குவதற்கு முன்பாக தீவிர உறுப்பினர் தேர்வு தொடங்கி உள்ளது. மண்டல்களுக்கு தீவிர உறுப்பினர் படிவம் வழங்கப்பட்டு வருகிறது. திமுக 1963-க்கு முந்தைய காலத்துக்கு செல்வதாக உணர்கிறேன். திமுகவின் அயலக அணி போதைப் பொருள் கடத்த மட்டும் வைத்திருப்பதாக எண்ணினோம். பட்டவர்த்தனமாக தேச விரோதமாக செயல்படும் அமைப்பாக அது இருக்கிறது. அந்நிய நாடுகள் கூட பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை இந்தியாவின் பகுதி அல்ல என்று காட்டுவது இல்லை.

ஆனால் திமுக அயலக அணி, இந்திய பகுதியாக இல்லாமல் வரைபடம் வெளியிட்டுள்ளனர். இதற்கு தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பகிரங்கமாக மன்னிப்பு கோர வேண்டும். திமுக மூத்தத் தலைவர்களே சிறுபிள்ளைகள் தலையிடுவதால் சிக்கல்கள் வருவதாக பேசி உள்ளனர். உதயநிதி வந்த பிறகு தரங்கெட்ட கட்சி திமுக என்ற எண்ணம் மக்களுக்கு ஏற்பட்டுள்ளது.

தூர்தர்ஷன் நிகழ்ச்சியில் தவறுதலாக தமிழ்த்தாய் வாழ்த்து பாடலில் ஒரு வரி விடுபட்டது தொடர்பாக ஆளுநர் பற்றி உதயநிதி ஸ்டாலின் மிக அநாகரீகமாக பேசி உள்ளார். முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், நாகரீகமான அரசியலை விரும்புவதாக இருந்தால் உதயநிதியை அமைச்சரவையிலிருந்து நீக்க வேண்டும். தமிழ்த்தாய் வாழ்த்தை சிதைத்தது திமுக தான்.

தொடர்ந்து எச்.ராஜா பேசுகையில், இலவச இணைப்புகளான காங்கிரஸ், கம்யூனிஸ்ட், மதிமுக உள்ளிட்டவையும் திமுகவுக்கு ஆதரவாக செயல்படுகின்றன. பிரிவினைவாத தேச விரோத தீய சக்திகளின் கைகளில் தமிழகம் சிக்கியிருக்கிறது. தேர்தல் நெருங்க நெருங்க திருமாவளவன் போடும் வேஷங்கள் அதிகமாக உள்ளது என எச்.ராஜா விமர்சித்துள்ளார்.

கிருஷ்ணசாமி: திமுக கூட்டணியிலிருந்து திருமாவளவன் வெளியே வந்த பிறகு முதலமைச்சர் கனவு காணவேண்டும்..!

திமுக கூட்டணியிலிருந்து வெளியே வந்து முதலமைச்சர் ஆகும் முயற்சியை திருமாவளவன் மேற்கொள்ள வேண்டும்” என புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.

புதிய தமிழகம் கட்சியின் மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் மதுரையில் நடைபெற்றது. இதில் புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி பங்கேற்றார். பின்னர் கிருஷ்ணசாமி கேள்விக்கு பதிலளித்தார். அப்போது, புதிய தமிழகம் கட்சி சார்பில் நவம்பர் 7-ஆம் தேதி 6 அம்ச கோரிக்கை குறித்து ஆளுநர் மாளிகை நோக்கி பேரணி நடத்தப்படும்.

தென் தமிழகத்தில் தொழிற்சாலைகள் வர வேண்டும். மதுவிலக்கு உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆளுநர் மாளிகை நோக்கி பேரணி நடத்தப்படுகிறது. முதலமைச்சர் பதவி ஆசை திருமாவளவனுக்கு மட்டும் அல்ல அனைவருக்கும் தான் உள்ளது. முதலமைச்சராக ஆசைப்படுவது தவறில்லை.

ஆனால் திமுக கூட்டணியில் இருந்து முதலமைச்சர் கனவு காணக்கூடாது. அது பகல் கனவாகவே இருக்கும். திமுக கூட்டணியிலிருந்து முதலமைச்சர் பதவிக்கு ஆசைப்படுவது தவறாக புரிந்து கொள்ளப்படும். திமுக கூட்டணியிலிருந்து வெளியே வந்து முதலமைச்சர் ஆகும் முயற்சியை திருமாவளவன் மேற்கொள்ள வேண்டும்” என கிருஷ்ணசாமி தெரிவித்தார்.

திருமாவளவன் கேள்வி: MGR மதுக்கடைகள் ஏலம் விட்டார்..! ஜெயலலிதா மதுக்கடைகளை அரசே வியாபாரம் செய்வது என சட்டபூர்வமாக்கினார்..!

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மகளிர் விடுதலை இயக்கம் சார்பில் தமிழ்நாடு உள்பட தேசிய அளவில் முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும், தேசிய மதுவிலக்கு சட்டம் இயற்ற வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி மது மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு மகளிர் மாநாடு கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் நடைபெற்றது.

இந்த மாநாட்டினை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தலைமை தாங்கி, தொடங்கி வைத்தார். மாநாட்டில் கலந்துகொள்வதற்காக பல்வேறு மாவட்டங்களில் இருந்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் ஏராளமான தொண்டர்கள் குவிந்தனர். மேலும் மாநாட்டில் பங்கேற்க தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து பெண்கள் வந்திருந்தனர்.

இந்த மது மற்றும் போதை ஒழிப்பு மகளிர் மாநாட்டில் 13 தீர்மானங்கள் தொல்.திருமாவளவன் நிறைவேற்றினார். மாநாட்டில் தொல்.திருமாவளவன் பேசுகையில், மாநாடு தொடங்கியதும் மழை வரும் என்று பயந்தேன். இயற்கை நம் பக்கமே உள்ளது. மது ஒழிப்பு மாநாட்டிற்கு லட்சக்கணக்கான பெண்கள் திரண்டு வந்திருக்கிறார்கள்.
இந்த மாநாடு பேசிய தொல் திருமாவளவன், அரசியலுக்காகவோ, தேர்தலுக்காகவோ இல்லை. மது வேண்டாம் எனக்கூறும் அனைவரின் ஆதரவும் நமக்கு தேவை. மது ஒழிப்பு ஒற்றைக் கொள்கை- கவுதம புத்தரின் முழக்கம் அது. புத்தர் மட்டுமல்ல உலகில் எந்த மகானும் மதுவை ஆதரிக்கவில்லை.

தொடர்ந்து இறுதியாக பேசிய தொல் திருமாவளவன், மது விலக்குக் கொள்கையில் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவின் செயல்பாடுகளை சுட்டிக்காட்டி மீண்டும் விவாததத்துக்கு வழி வகுத்துள்ளார். 1971-ல் கருணாநிதி மதுவிலக்கை ரத்து செய்யும் போது, கடும் பொருளாதார சிக்கல் சூழ்ந்த நிலையில், கருணாநிதி கூறிய காரணங்கள், ‘நெருப்பு வளையத்துக்குள் கற்பூரம் சிக்கியுள்ளது, அது தானாகவே பிடித்து எரியும் நிலை உள்ளது.

எனவே மதுக் கடைகளை திறக்கிறேன்’ என்றார். அன்று அவர் எடுத்த முடிவு சரி என்ற நாம் நியாயப்படுத்தவில்லை. அன்றிருந்த பொருளாதார நெருக்கடியில் அதை அன்றைய முதல்வர் கருணாநிதி சொன்னார். அதே கருணாநிதி 1974-ல் மதுக் கடைகளை மூடி மதுவிலக்கை அமல்படுத்தி, தேசிய அளவில் மதுவிலக்கு கொள்கை வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தினார்.

அதன்பின் மதுக்கடைகளை திறந்தது யார், டாஸ்மாக் எனும் மதுக்கடைகளை திறந்தது யார் என எவரும் பேசவில்லையே ஏன்? தமிழ்நாடு ஸ்டேட் மார்க்கெட்டிங் கார்ப்பரேஷன் என்பதுதான் டாஸ்மாக் என கூறப்படுகிறது. தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம் என்பதை உருவாக்கியது எந்த அரசு, என்பது குறித்து யாரும் பேசுவதில்லையே ஏன்? இதில் எம்ஜிஆருக்கும், ஜெயலலிதாவுக்கும் என்ன பங்கு, ஜெயலலிதா என்ன செய்தார்? தற்போதைய திமுக தலைவர் ஸ்டாலின் முதலமைச்சரான பிறகா டாஸ்மாக் வந்தது என்று கேள்வி எழுகிறது. நான் யாருக்காகவும் முட்டுக்கொடுத்து பேசவில்லை. ஆனால் உரையாடக் கூடியவர்கள், வாதாடக் கூடியவர்கள் என்ன பேசுகிறார்கள், அதில் என்ன சூட்சுமம், சூழ்ச்சி உள்ளது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

எம்ஜிஆர் காலத்திலே மதுக்கடைகள் ஏலம் விடப்பட்டன. ஜெயலலிதா காலத்திலே மதுக்கடைகளை அரசே வியாபாரம் செய்வது என சட்டபூர்வமாக்கியது. அது இன்று வரை தொடர்கிறது. அது தொடரும்போது மு.க.ஸ்டாலின் முதல்வராகியிருக்கிறார். ஸ்டாலின் உருவாக்கவும் இல்லை, புதிதாக திறக்கவும் இல்லை. இது குறித்தும் யாரும் பேசுவதில்லையே.

நான் முதலமைச்சரை தனியாக சந்தித்தபோது, அவர் கூறியது, நான் கடைகளை மூடக்கூடாது என சொன்னேனா, மூடவேண்டும் என்று தான் நானும் நினைக்கிறேன் என பதறிபடியே, கூறினார். ஊடகங்களில் உங்கள் கட்சியினரும் பேசுகின்றனர்; ஆனால் நடைமுறைப்படுத்துவதில் நடைமுறைச் சிக்கல்கள் உள்ளது; பார்ப்போம் என கூறினார் அவர். அதன் பின் விசிக மண்டலச் செயலாளர்கள் கூட்டத்தில் நான் பேசும்போது, மதுக் கடைகளை மூடினால் திமுக மீண்டும் ஆட்சிக்கு வரும் என பேசினேன்” என தொல் திருமாவளவன் பேசினார்.

தொல். திருமாவளவன்: கூட்டணியில் ஒண்ணுமே நடக்கவில்லை அதனால் தமிழிசை சௌந்தரராஜன் வயிற்றெரிச்சல்

“மது ஒழிப்பு மாநாடு விவகாரத்தில் சிறுத்தையாக தொடங்கிய திருமாவளவன்; முதல்வரை சந்தித்ததும் சிறுத்துப் போய்விட்டார்” என்பன உள்ளிட்ட விமர்சனங்களை தமிழிசை சௌந்தரராஜன் முன் வைத்திருந்தார். இந்நிலையில், ரெட்டமலை சீனிவாசன் நினைவுநாளை ஒட்டி, அவரது நினைவிடத்தில் விசிக தலைவர் தொல். திருமாவளவன் இன்று அஞ்சலி செலுத்தினார்.

பின்னர் செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த தொல். திருமாவளவன், பெரியார் திடலில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் மரியாதை செலுத்தியதைக் கண்டு மிகுந்த மகிழ்ச்சியுற்றேன். அதை வரவேற்றுப் பாராட்டி, சமூக வலைதள பக்கங்களிலும் பதிவு செய்தேன். சமூக நீதி பார்வையோடு அவர் அரசியல் களத்தில் அடியெடுத்து வைக்கிறார் என்பது மகிழ்ச்சியளிப்பதுடன் மிகுந்த நம்பிக்கையும் அளிக்கிறது.

பெரியார் அரசியல் என்பது திமுக, அதிமுக அரசியல் கட்சிகளுக்கானது மட்டுமல்ல, சமூக நீதி மீது நம்பிக்கை கொண்ட அனைவருக்குமானது. சமத்துவத்தை நாடும் அனைவருக்குமானது. அந்த புரிதல் விஜய்க்கு இருப்பதை அறிந்து பெருமைப்படுகிறேன்.

திராவிட பாதையில் வந்தால் திராவிட கட்சிகள் வளரவிடாது என பாஜகவினர் விமர்சிப்பார்கள். அது அவர்களுக்கு வயிற்றெரிச்சலை தரக் கூடிய அரசியல் தான். பெரியார் என்றாலே அவர்களுக்குப் பிடிக்காது. சட்டப்பேரவையில் பெரியார் என்ற வார்த்தையை உச்சரிக்க மாட்டேன் என ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியேறினார். அந்தளவுக்கு பெரியார் மீது வெறுப்பு இருக்கிறது. எனவே, அவர்கள் அப்படித்தான் பேசுவார்கள்.

விசிக மாநாட்டை விமர்சிப்பவர்கள் மூக்கறுபட்டு கூக்குரலிடுகின்றனர். அவர்கள் எதிர்பார்த்தது நடக்கவில்லை. தேர்தலுக்கு 18 மாதங்கள் உள்ள நிலையில் இப்போதே தேர்தல் கணக்கு என்றெல்லாம் கூப்பாடு போட்டார்கள். எப்படியாவது கூட்டணி மேலும் விரிசல் அடையாதா, பிளவுபடாதா என்று எதிர்பார்த்து ஏமாற்றமடைந்ததன் விரக்தி வெளிப்படுகிறது.

தங்களுக்கு எதிரான அரசியலை பேசுவது புரிந்தும் விசிக மாநாட்டுக்கு திமுக வருகிறது என்றால் இரு கட்சிகளும் கொள்கை அளவில் ஒரே நேர்க்கோட்டில் பயணிக்கிறது என்பதே பொருள். தேசிய கல்விக் கொள்கையை ஏன் ஏற்க வேண்டும். தேசிய அளவிலான பார்வையோடு மனிதவளத்தை பாதுகாக்க கோரிக்கை விடுக்கிறோம். இது ஏற்கெனவே முன்னாள் முதல்வர்கள் அண்ணாதுரை, கருணாநிதி ஆகியோர் சொன்னது தான் என தொல். திருமாவளவன் தெரிவித்தார்

எச்.ராஜா: திருமாவளவன் அக்டோபர் 2 மாநாடே மக்களை ஏமாற்றுகிற செயல்..!

பிரதமர் மோடி பிறந்தநாளை முன்னிட்டு கோவையில் நடந்த பல்வேறு நிகழ்ச்சிகளில் தமிழக பாரதிய ஜனதா ஒருங்கிணைப்பு குழு தலைவர் எச்.ராஜா பங்கேற்றார். அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த எச்.ராஜா செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்தார். அப்போது, தேர்தலின்போதே முதல் 100 நாட்களுக்கு பல்வேறு திட்டங்களை பாஜக அரசு நிறைவேற்றும். ஆ

கவே நீங்கள் இந்த அரசை பற்றி எடை போட 100 நாட்கள் போதுமானதாக இருக்கும் என பிரதமர் மோடி கூறி இருந்தார். ஏறக்குறைய இந்த 100 நாட்களில் ரூ.15 லட்சம் கோடி மதிப்பிலான திட்டங்கள் தொடங்கி வைக்கப்பட்டு உள்ளன. அதில் உள்கட்டமைப்பு வசதிக்காக ரூ.3 லட்சம் கோடிக்கான திட்டங்கள் ஒப்புதல் அளிக்கப்பட்டு இருக்கிறது.

தமிழக பாஜகவில் தற்போது உறுப்பினர் சேர்க்கை நடந்து வருகிறது. எங்களுக்கு 31 லட்சம் பேர் உறுப்பினர்களாக உள்ளனர். இதனை 1 கோடியாக உயர்த்த உள்ளோம். கிராமப்புறங்களில் விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. மக்கள் ஆர்வத்துடன் பாரதிய ஜனதாவில் சேர்ந்து வருகிறார்கள்.

இன்று பிரதமர் மோடியின் பிறந்தநாள் மட்டுமல்ல விஸ்வகர்மா தினமும் ஆகும். மத்திய அரசின் விஸ்வகர்மா திட்டம் என்பது தங்கம், வெள்ளி, மர வேலை பார்ப்பவர்கள் மட்டுமல்ல கட்டிட தொழிலாளர், சைக்கிள் பழுதுபார்ப்பவர் என மொத்தம் 21 தொழில் செய்வோருக்கு பயிற்சி அளித்து உபகரணங்கள், நிதி உதவி செய்யும் திட்டமாகும். இந்த திட்டத்தை பல மாநிலங்கள் செயல்படுத்திக் கொண்டு இருக்கிறது. ஆனால் தமிழக அரசு திட்டத்தை நிறுத்தி வைத்துள்ளது.

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்பவர்கள் இந்த திட்டத்தில் சாதி வந்து விடும். அதனால் இந்த திட்டத்தை அமல்படுத்த மாட்டோம் என கூறுகிறார்கள். பல லட்சம் தொழிலாளர்கள் பயன்பெறும் இந்த திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என தமிழக அரசுக்கு நான் கோரிக்கையாக வைக்கிறேன்.

நேற்று திருமாவளவன், முதலமைச்சரை நேரில் சந்தித்துள்ளார். திருமாவளவன், அக்டோபர் 2 -ஆம் தேதி மாநாடு நடைபெறுவதற்குள் தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு இருக்க வேண்டும் என கேட்டு இருக்க வேண்டும். அதனை எதிர்பார்க்கிறோம் என சொல்லி இருக்க வேண்டும். ஆனால் அப்படி அவர் சொல்லவில்லை. இதனால் அக்டோபர் 2 மாநாடே மக்களை ஏமாற்றுகிற செயல். இன்று மாநில அரசு 500 கடைகளை மூடி உள்ளது என கூறி உள்ளது. ஆனால் 1000 கிளப்களை திறந்துள்ளீர்கள்.

இது எல்லா விதத்திலும் மக்களை முழுமையாக ஏமாற்றும் மோசடி அணுகுமுறை ஆகும். தமிழகத்தில் மதுவிலக்கு சாத்தியமே. அதற்கு சமீபத்திய உதாரணம் பீகார் மாநிலம் ஆகும். பீகாரில் பூரண மதுவிலக்கு கொண்டு வரப்பட்டு உள்ளது என எச்.ராஜா தெரிவித்தார்.

Tamilisai Soundararajan: சிறுத்தைபோல் இருந்த திருமாவளவன் தற்போது சிறுத்துப்போய் விட்டார்..!

சென்னை தி.நகரில் உள்ள கமலாலயத்தில் பிரதமர் மோடியின் 74-வது பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கலந்துகொண்ட பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர்களை சந்தித்து செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார்.

அப்போது, தவெக தலைவர் விஜய் திராவிட சாயலை சாயமாக பூசிக்கொண்டுள்ளார். பெரியார் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவிக்கும் விஜய், திராவிட மாதிரி போன்று பேசுகிறார்

சாயம் வெளுக்கிறதா? வேறொரு சாயத்தை பூசுவாரா என்பது போகப்போகத்தான் தெரியும். திராவிட கட்சி சாயலில் தமிழகத்தில் மற்றொரு கட்சி தேவை இல்லை. தேசிய சாயலில் தான் இன்னொரு கட்சி வர வேண்டும்.

எதிர்மறை அரசியலில் எங்களுக்கு விருப்பம் இல்லை. நாங்கள் நேர்மறை அரசியல் தான் செய்கிறோம்.

தேசிய கல்வி கொள்கையை ஏற்காதவர்கள் மதுவிலக்கு கொள்கையை பேசுவது ஏன்?

சிறுத்தைபோல் இருந்த திருமாவளவன் தற்போது சிறுத்துப்போய் விட்டார். மாநாட்டில் திமுகவை மேடையில் வைத்துக்கொண்டு மதுவிலக்கை எப்படி பேசப்போகிறீர்கள்? என்ன கண்டனத்தை தெரிவிக்க போகிறீர்கள்? என தமிழிசை சவுந்தரராஜன் பதிலளித்தார்.

ஹெச்.ராஜா: மது அருந்தாத உறுப்பினர்களைக் கொண்ட கட்சி..! மது ஒழிப்பு மாநாட்டிற்கு அழைப்பு இல்லை…!

மது ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்குமாறு பாஜகவுக்கு திருமாவளவன் அழைப்பு விடுக்கவில்லை. மது அருந்தாத உறுப்பினர்களைக் கொண்ட கட்சி என்பதால், எங்களை அழைக்காமல் இருந்திருக்கலாம் என ஹெச்.ராஜா கருத்து தெரிவித்தார்.

உலகிலேயே அதிகமான உறுப்பினர்களைக் கொண்ட பாஜக நாடு முழுவதும் கடந்த 2-ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி உறுப்பினர் சேர்க்கையைத் தொடங்கி வைத்தார். தற்போது பாஜகவில் 10 கோடி உறுப்பினர்கள் உள்ள நிலையில் மொத்தம் 11 கோடி உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என்ற இலக்குடன் பாஜக பயணிக்கிறது. அதேபோல, தமிழகத்தில் ஒரு கோடி உறுப்பினர்களைச் சேர்க்க வேண்டும் என்ற இலக்கை நிர்ணயித்து, அதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறோம்.

மதுரையில் நேற்று நடைபெற்ற பாஜக உறுப்பினர் சேர்ப்பு முகாமில், புதிய உறுப்பினர்களுக்கு அடையாள அட்டைகளை வழங்கிய பாஜக ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் ஹெச்.ராஜா, பின்னர் செய்தியாளர்களிடம் கேள்விக்கு பதிலளித்தார். அப்போது, அமெரிக்கா சென்றுள்ள ராகுல் காந்தி, இந்தியாவுக்கு எதிரானவர்களை சந்தித்துள்ளார். தேசிய கல்விக் கொள்கையை ஏற்றுக்கொண்டால் மட்டுமே, மத்திய அரசு நிதி வழங்கும். அவ்வாறு ஏற்றுக்கொண்டால், தமிழக அரசுக்கு மத்திய அரசின் கல்வி நிதி உடனடியாக வந்தடையும்.

மது ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்குமாறு பாஜகவுக்கு திருமாவளவன் அழைப்பு விடுக்கவில்லை. மது அருந்தாத உறுப்பினர்களைக் கொண்ட கட்சி என்பதால், எங்களை அழைக்காமல் இருந்திருக்கலாம். விஜய் திராவிடக் கட்சிகளுக்குத்தான் போட்டியாளராக இருப்பார், விஜய் அரசியலுக்கு வருவதால் பாஜகவுக்கு பாதிப்பில்லை. திராவிடக் கட்சிகளின் வாக்குகளைத்தான் அவர் பிரிப்பார் என ஹெச்.ராஜா கருத்து தெரிவித்தார்.

சீமான் கேள்வி: திமுகவுடன் திருமாவளவன் கூட்டணி வைத்துக்கொண்டே மதுவுக்கு எதிராக போராட்டமா..?

ராமநாதபுரத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது மதுவுக்கு எதிரான விடுதலை சிறுத்தைகள் கட்சியின் போராட்டத்தில் பங்கேற்க அதிமுகவுக்கு திருமாவளவன் அழைப்பு விடுத்தது தொடர்பாக சீமான் கருத்து தெரிவித்தார்.

ராமநாதபுரத்தில் சீமான் செய்தியாளர்கள் கேள்விக்கு, மது ஒழிப்புக்கு எதிராக இருந்தவர் ராமதாஸ். டாஸ்மாக்கை மூடுபவர்களுடன் கூட்டணி என்று சொல்லியிருப்பதை பார்த்திருப்பீர்கள். அப்புறம் என்ன ஆனது? திருமாவளவன் அதிமுகவுடன் இணைந்து மதுவுக்கு எதிராக போராட்டம் நடத்துவார், பின்னர் மீண்டும் டாஸ்மாக்கை திறக்கத் தானே செய்வார்கள்.

திமுகவுடன் இருந்து கொண்டு திருமாவளவன் டாஸ்மாக்கை எதிர்த்து போராட்டம் நடத்தலாமா? விற்பனை குறைவானதற்கு டாஸ்மாக் ஊழியர்களை பணியிடை நீக்கம் செய்த அரசு தான் திமுக அரசு என சீமான் தெரிவித்தார்.

விசிக தீர்மானம்: தமிழகத்தில் மதுக்கடைகளை நிரந்தரமாக மூட கால நிர்ணயம்..!

சென்னையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தலைமையில், கட்சியின் உயர்நிலைக்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் துரை.ரவிக்குமார் எம்.பி., எம்எல்ஏ-க்கள் ஆளுர் ஷா நவாஸ், சிந்தனைச் செல்வன், பனையூர் மு.பாபு, எஸ்.எஸ்.பாலாஜி துணை பொதுச்செயலாளர்கள் ரஜினிகாந்த், வன்னியரசு, ஆதவ் அர்ஜுனா, எழில்கரோலின் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

மது மற்றும் போதைப்பொருள் ஒழிப்புக்கான தேசியக்கொள்கையை மத்திய அரசு உருவாக்க வேண்டும். தமிழகத்தில் மதுக்கடைகளை நிரந்தரமாக மூடுவதற்கு தமிழக அரசு கால நிர்ணயம் செய்து அறிவிக்க வேண்டும். பிஎம்ஸ்ரீ பள்ளி திட்டத்துக்கு ஒப்புதல் அளித்தால் சமக்ரா சிக் ஷா திட்டத்துக்கு நிதி வழங்கப்படும் என மிரட்டல் அரசியல் செய்யும் பாஜக அரசுக்கு வன்மையான கண்டனம். நிதியை உடனடியாக வழங்க வேண்டும்.

முத்தமிழ் முருகன் மாநாட்டு தீர்மானங்கள் மூலம் தமிழக அரசின் அணுகுமுறை வழுவிச் செல்வதாக அச்சம் மேலிடுகிறது. சாதிய படுகொலையை கட்டுப்படுத்த சிறப்புச் சட்டம் இயற்ற வேண்டும். பட்டியலினத்தவர்களின் மக்கள் தொகைக்கு ஏற்ப இடஒதுக்கீட்டை 24 சதவீதமாக உயர்த்தி வழங்க வேண்டும்.

எஸ்.சி. பிரிவில் உள்ஒதுக்கீடு வழங்கும் பரிந்துரைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு சீராய்வு மனு தாக்கல் செய்யவேண்டும். இலங்கை கடற்படையால் தாக்குதலுக்கு ஆளாகும் தமிழக மீனவர்களை பாதுகாக்க வேண்டும். ஐ.நா. மனித உரிமைகவுன்சில் கூட்டத்தில், போரின்போது காணாமல் ஆக்கப்பட்ட தமிழர்களின் பட்டியலை இலங்கைஅரசு வெளியிட மத்திய அரசு வலியுறுத்த வேண்டும் போண்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.