மாவட்ட ஆட்சியருக்கு டாஸ்மாக் கடையை மூடக்கோரி மனு மீது நடவடிக்கை எடுக்காததால் தவெகவினர் போராட்டம்

அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி , அரசு மருத்துவமனை மற்றும் நியாயவிலை கடை அமைந்துள்ள பகுதியில் டாஸ்மாக் கடையை மூட மாவட்ட ஆட்சியருக்கு மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்காத காரணத்தால் தவெகவினர் போராட்டத்தில் ஈடுபட்டதால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. அமைந்தகரை செனாய் நகரில் உள்ள மாநகராட்சி மண்டல அலுவலகத்தின் பின்புறம் கடைக்கு எதிர்ப்புறம் அரசு மருத்துவமனை, நியாயவிலை கடை, சுமார் 2000 பள்ளி மாணவிகள் படிக்கும் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் நூலகம் அமைந்துள்ள பகுதியில் டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது.

இந்த டாஸ்மாக் கடைக்கு வரும் குடிமகன்கள் தினந்தோறும் சாலையில் இருந்தபடி மதுபானங்களை குடித்து கும்மாளமிட்டு வருகின்றனர். இதனால் பொதுமக்கள் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். ஆகையால், பொதுமக்களின் நலன் கருதி இந்த மது கடையை மூட வேண்டும் என வலியுறுத்தி கடந்த 24-ந் தேதி சென்னை மத்திய மேற்கு மாவட்ட தவெக சார்பில் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுக்கப்பட்டது.

ஆனால், அந்த மனுவின் மீது இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில் தவெக மாவட்ட செயலாளர் ஏ.எஸ்.பழனி தலைமையில் செனாய் நகர் டாஸ்மாக் கடையை மூடக்கோரி இன்று போராட்டம் நடத்தினர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட தவெகவினரை காவல்துறை தடுத்து நிறுத்தினர். அப்போது இருதரப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து வலுக்கட்டாயமாக தவெகவினர் சுமார் 300 பேரை காவல்துறை கைது செய்து அமைந்தகரையில் உள்ள அய்யாவு திருமண மண்டபத்தில் மண்டபத்தில் வைத்துள்ளனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

அமலாக்க துறை மீது தமிழக அரசு தொடர்ந்த வழக்கு விசாரணையில் இருந்து நீதிபதிகள் விலகல்..!

டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் அமலாக்கத் துறை நடத்திய சோதனையை எதிர்த்து தமிழக அரசு தொடர்ந்த வழக்கின் விசாரணையில் இருந்து விலகுவதாக உயர் நீதிமன்ற நீதிபதிகள் அறிவித்தனர். சென்னையில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் கடந்த மார்ச் 6 முதல் மார்ச் 8 வரை அமலாக்கத் துறை அதிகாரிகள் தொடர் சோதனை நடத்தி பல்வேறு ஆவணங்களை எடுத்துச் சென்றனர். இதுதொடர்பாக டாஸ்மாக் அதிகாரிகளிடமும் வாக்குமூலம் பெற்றனர். அதன் தொடர்ச்சியாக டாஸ்மாக் நிறுவன மதுபான கொள்முதல், பார் உரிமம், போக்குவரத்து போன்றவற்றுக்கான டெண்டர் உள்ளிட்டவை மூலமாக ஆயிரம் கோடி அளவுக்கு முறைகேடுகள் நடந்துள்ளதாக அமலாக்கத் துறை அறிக்கை வெளியிட்டது.

அமலாக்கத் துறை நடத்திய இந்த சோதனை அரசியலமைப்பு சட்ட கூட்டாட்சி கட்டமைப்புக்கு எதிரானது என்றும், தமிழக அரசின் அனுமதியின்றி நடத்தப்பட்ட இந்த சோதனை சட்டவிரோதமானது என்றும், விசாரணை என்ற பெயரில் அதிகாரிகளை துன்புறுத்தக்கூடாது என்றும் அறிவிக்கக்கோரி தமிழக அரசு தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தி்ல் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை கடந்த மார்ச் 20 அன்று விசாரி்த்த நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், என்.செந்தில்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு, இதுதொடர்பாக அமலாக்கத் துறை பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை மார்ச் 25-க்கு தள்ளிவைத்திருந்தனர். அதுவரை அமலாக்கத் துறை எந்தவொரு மேல் நடவடிக்கையும் எடுக்கக் கூடாது எனவும் இடைக்கால தடை விதித்திருந்தனர்.

இந்நிலையில் இந்த வழக்கு இதே அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கின் விசாரணையில் இருந்து நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், என்.செந்தில்குமார் ஆகியோர் இருவரும் விலகுவதாக அறிவித்து, விசாரணையை தள்ளி வைத்தனர்.

கே.பி. முனுசாமி: டாஸ்மாக் கடைகளாக செயல்படும் திமுகவினர்..! அரசு வருமானம், திமுகவினர் பையில்..!

டாஸ்மாக் கடைகளில் விற்னை செய்ய வேண்டிய மது வகைகளை திமுகவினர் கள்ளத்தனமாக விற்பனை செய்து பணம் சம்பாதிக்கின்றனர் என அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி கூறியுள்ளார். திருவண்ணாமலையில் நேற்று இரவு நடைபெற்ற அதிமுக பொதுக்கூட்டத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி சிறப்புரையாற்றினார்.

அதற்கு முன்னதாக செய்தியாளர்களின் கேள்விகளுக்கு கே.பி.முனுசாமி பதிலளித்தார். தமிழகத்தில் 2026-ல் நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தல் பணியில் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதற்காக அதிமுக பொதுச் செயலாளர் கே.பழனிசாமி குழு அமைத்துள்ளார். அரசியல் களப் பணியை மாவட்ட வாரியாக செய்வதற்கு உந்து சக்தியாக, கள ஆய்வு அமையும்.

தேர்தலில் வெற்றி பெறுவதற்கான அனைத்து சாத்திய கூறுகளையும் ஆய்வு செய்து, கிளை நிர்வாகிகள், தொண்டர்களை ஒருங்கிணைத்து, திமுக ஆட்சியில் உள்ள தவறுகள் மற்றும் இயலாமைகளை மக்களிடத்தில் எடுத்து சொல்லி, மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். இதற்கு கள ஆய்வு துணையாக இருக்கும். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு முழுமையாக செயலிழந்து இருக்கிறது.

இதற்கு முக்கிய காரணம், ஒரு இடத்தில் வன்முறை உருவாகிறது என்றால், சமூக விரோத சக்திகள் ஆதாயம் தேடும் அளவில் எதாவது செய்யும். அதன்படி, சமூக விரோத சக்திகள் மூலமாக கஞ்சா, போதை பொருள், அபின் அதிகளவில் புழக்கத்தில் உள்ளன. டாஸ்மாக் கடைகளில் விற்னை செய்ய வேண்டிய மது வகைகளை திமுகவினர் கள்ளத்தனமாக விற்பனை செய்து பணம் சம்பாதிக்கின்றனர். டாஸ்மாக் மூலம் அரசுக்கு வர வேண்டிய வருமானம், திமுகவினருக்கு சென்று கொண்டிருக்கிறது ன கே.பி.முனுசாமி தெரிவித்தார்.

விரைவில் தமிழகத்தில் 500 டாஸ்மாக் கடை மூடுவது குறித்து முடிவெடுக்கப்படும்..!

அக்டோபர் 8-ஆம் தேதி நடைபெற உள்ள அமைச்சரவை கூட்டத்தில் தமிழகத்தில் மேலும் 500 டாஸ்மாக் மதுபானக் கடைகளை குறைப்பது உள்ளிட்ட சில முக்கியமான முடிவுகள் எடுக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், அக்டோபர் 8-ஆம் தலைமைச் செயலகத்தில் அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில், தமிழக அரசின் நிதி சார்ந்த புதிய மற்றும் பழைய திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டு, முக்கிய முடிவுகள் எடுக்கப்படுகின்றன. மேலும் தொழில்துறை முதலீடுகள், சலுகைகள் குறித்து விவாதிக்கப்பட்டு ஒப்புதல்கள் வழங்கப்பட உள்ளன.

இந்நிலையில், தமிழகத்தில் மதுவிலக்கு படிப்படியாக அமல்படுத்தப்பட வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். உளுந்தூர்பேட்டையில் நடைபெற்ற மது ஒழிப்பு மாநாட்டில் பேசிய தொல் திருமாவளவன், 2026-ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலுக்குள் அனைத்து டாஸ்மாக் மதுக்கடைகளையும் மூடினால், திமுக நிச்சயம் வெற்றி பெறும் என்று தெரிவித்துள்ளார்.

மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை அமைச்சராக இருந்த அமைச்சர் சு.முத்துசாமி சமீபத்தில் பேட்டி ஒன்றில், தமிழகத்தில் 500 மதுக்கடைகளை மூடுவதற்காக கடைகளை கண்டறியும் பணி நடைபெறுவதாக தெரிவித்திருந்தார்.

அதன்படி, அக்டோபர் 8-ஆம் தேதி நடைபெற உள்ள அமைச்சரவைக்கூட்டத்தில், 500 கடைகளை மூடுவது குறித்து விவாதித்து முக்கிய முடிவு எடுக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கெனவே, 500 டாஸ்மாக் கடைகள் கடந்தாண்டு ஜூன் மாதம், மூடப்பட்டதால், தற்போது தமிழகத்தில் 4,829 கடைகள் உள்ளன.

மேலும், நடைபெற உள்ள அமைச்சரவை கூட்டத்தில், தொழில் முதலீடு ஒப்புதல், டாஸ்மாக் கடை தவிர்த்து, 2026 சட்டப்பேரவை தேர்தலை கருத்தில்கொண்டு, மகளிர் உரிமைத் தொகை திட்டம், புதுமைப்பெண் உள்ளிட்ட திட்டங்களில் பயனாளிகளின் எண்ணிக்கையை உயர்த்தும் வகையில் புதிய அறிவிப்பு தொடர்பாக விவாதிக்கப்பட உள்ளதாகவும் தெரிய வருகின்றது.

புதிய டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு..! அதிமுக, பாமக எம்எல்ஏ.க்களுடன் மனு..!

புதிய டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்த கிராம மக்கள், அதிமுக, பாமக எம்எல்ஏ.க்களுடன் தருமபுரி ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

தருமபுரி ஒன்றியம் நாயக்கனஅள்ளி மற்றும் குப்பூர் ஊராட்சி களைச் சேர்ந்த மக்கள், தருமபுரி பாமக எம்எல்ஏ வெங்கடேஷ்வரன், பாப்பிரெட்டிப்பட்டி அதிமுக எம்எல்ஏ கோவிந்தசாமி ஆகியோர் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்து மனு அளித்தனர். அந்த மனுவில், ஏழை, எளிய தொழிலாளர்கள், சிறு, குறு விவசாயிகள் உள்ளிட் டோர் எங்கள் பகுதி ஊராட்சிகளில் அதிகம் வசிக்கின்றனர்.

தினமும் கிடைக்கும் வருமானத்தின் மூலமே இந்த குடும்பங்கள் வாழ்கின்றன. இந்தச்சூழலில், குப்பூர் ஊராட்சிக்கு உட்பட்ட சித்தன் கொட்டாய் கிராமத்தில் ஓராண்டுக்கு முன்பு டாஸ்மாக் கடை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண் டனர். அதற்கு கிராம மக்கள் மத்தியில் எழுந்த எதிர்ப்பால் அந்த திட்டம் கைவிடப்பட்டது.

இந்நிலையில், கடத்தூர் பகுதியில் இயங்கும் கடைக்கு அப்பகுதி மக்கள் மத்தியில் எழுந்த எதிர்ப்பைத் தொடர்ந்து அந்தக் கடையை சித்தன் கொட்டாய் பகுதிக்கு இடம் மாற்ற தற்போது அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். எங்கள் பகுதியில் டாஸ்மாக் கடை திறக்கப்பட்டால் பல குடும்பங்களின் வாழ்வு சீரழியும். எனவே, குப்பூர் பகுதியில் டாஸ்மாக்கடை திறக்கும் முயற்சியை கைவிட வேண்டும் என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.