குடிநீர் பாட்டிலுக்கு ஜிஎஸ்டி ரூ. 1 வசூலித்த ஓட்டலுக்கு ரூ.10 ஆயிரம் நஷ்டஈடு வழங்க உத்தரவு..!

புதுச்சேரி வீராம்பட்டினம் பகுதியை சேர்ந்த வழக்கறிஞர் சுதர்சனன் கடலூர் சாலையில் உள்ள ஒரு ஓட்டலில் ஒரு லிட்டர் மினரல் வாட்டர் பாட்டில் வாங்கியுள்ளார். மினரல் வாட்டர் பாட்டிலின் அதிகபட்ச சில்லரை விலையாக ரூ.20 என்று குறிப்பிட்டிருந்தும், அதற்கு ஜிஎஸ்டி ரூ.1 சேர்த்து ரூ.21 பெற்றுள்ளனர். இதுகுறித்து சுதர்சனன், ஜிஎஸ்டி தொகையை சேர்த்துதான் எம்ஆர்பி விலை எனவும், மேற்கொண்டு ஜிஎஸ்டி ஏன் வாங்குகிறீர்கள்? என கேட்டுள்ளார்.

அதற்கு நிர்வாகம் சரிவர பதில் சொல்லாமலும், அந்த தவறை சரிசெய்யாமலும் இருந்ததால் அவர், புதுச்சேரி மாவட்ட நுகர்வோர் குறைதீர்வு ஆணையத்தில் ஓட்டலில் முறையற்ற வர்த்தகம் செய்வதாகவும், அது மாதிரியான முறையற்ற வர்த்தகம் செய்வதை தடை செய்யவும், நஷ்டஈடு கோரியும் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இவ்வழக்கு புதுச்சேரி மாவட்ட நுகர்வோர் குறைதீர்வு ஆணையத்தின் தலைவர் முத்துவேல் மற்றும் உறுப்பினர்கள் சுவிதா, ஆறுமுகம் ஆகியோர் கொண்ட அமர்வு முன்பு விசாரணை நடைபெற்று, விசாரணையின் முடிவில், ஓட்டல் ஜிஎஸ்டி விதிமுறைகள் மற்றும் சட்ட அளவியல் வழிகாட்டுதல்களை மீறி, அனைத்து வரிகள் உட்பட அதிகபட்ச சில்லரை விலை நிர்ணயிக்கப்பட்ட பொருள் மீது, மேலும் ஜிஎஸ்டி பெற்றது முறையற்ற வர்த்தகம் என்று முடிவு செய்தது.

அதனால் மனுதாரர் வாங்கிய ஒரு லிட்டர் மினரல் வாட்டர் பாட்டிலுக்கு ஜிஎஸ்டி ஆக பெற்ற ரூ.1யை திரும்பி அளிக்கவும், முறையற்ற வர்த்தகத்தில் ஈடுபட்டதற்கு நஷ்ட ஈடாக ரூ.10 ஆயிரமும், வழக்கு செலவுக்காக ரூ.2,500 ம் முறையீட்டாளருக்கு வழங்க மேற்படி ஓட்டல் நிர்வாகத்துக்கு உத்தரவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

rahul gandhi whatsapp channel: மோடி நண்பர்களின் செல்வத்தை காப்பாற்ற நடுத்தர வர்க்கத்தின் முதுகை உடைக்கிறார்..!

மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி தனது வாட்ஸ்அப் சேனல் மூலம் வெளியிட்டுள்ள பதிவில், வரி பயங்கரவாதம் என்பது பாஜக ஆட்சியின் ஆபத்தான முகம். இதுதான் உண்மை. நடுத்தர வர்க்க மக்களின் வருமானத்தின் மீது இன்று இந்தியாவில் வரிச்சுமை சுமத்தப்பட்டுள்ளது. ஆனால் அவர்களின் சம்பளம் பல ஆண்டுகளாக அதிகரிக்கவில்லை.

வருமானம் அப்படியே உள்ளது. ஆனால் வருமான வரி பெருமளவில் அதிகரித்து வருகிறது. பயங்கர பணவீக்கத்தின் இந்த காலகட்டத்தில், எல்லாவற்றுக்கும் அதிக ஜிஎஸ்டி செலுத்தி பிழைக்கும் நடுத்தர மக்கள் சிந்திக்க வேண்டும். உங்கள் வருமானம் பெரிய கார்ப்பரேட்கள் அல்லது வணிகர்களின் வருமானத்தை விட அதிகமாக இருக்கிறதா? உங்களுக்கு அரசாங்க வசதிகளால் ஏதேனும் சிறப்பு பலன் கிடைக்கிறதா? இல்லை என்பது சரிதானே? அப்படியானால் உங்களிடமிருந்து ஏன் இந்த அளவு கண்மூடித்தனமான வரி வசூலிக்கப்படுகிறது?. உங்களை பயமுறுத்தி, உங்களிடம் அரசின் விருப்பத்தை திணிப்பதன் மூலம் உங்கள் பாக்கெட்டில் இருந்து பணம் எடுக்கப்படுகிறது.

இது வரி பயங்கரவாதத்தின் சக்கரவியூகம். பிரதமர் மோடி தனது நண்பர்களின் செல்வத்தை காப்பாற்றவும், அதிகரிக்கவும் இந்தியாவின் நடுத்தர வர்க்கத்தின் முதுகை உடைக்கிறார். இந்த பயங்கரவாதம் மற்றும் அநீதிக்குஎதிராக அனைத்து கடின உழைப்பாளி, நேர்மையான இந்தியர்களுடன் நான் நிற்கிறேன் என ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.

மு.க. ஸ்டாலின்: கார்ப்பரேட் வரியைத் தள்ளுபடி செய்யும் பாஜகவால், ஏழைகளுக்குக் கருணை காட்ட முடியாதா..!?

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில்,

GST: வரி அல்ல… வழிப்பறி!

“தன் பிணத்தின் மீதுதான் ஜி.ஸ்டியை அமல்படுத்த முடியும்” என்று முதலமைச்சராக எதிர்த்த நரேந்திர மோடி, பிரதமரானதும், “ஜிஎஸ்டி பொருளாதாரச் சுதந்திரம்” என்று ‘ஒரே நாடு ஒரே வரி’ கொண்டு வந்தார்.

பேச நா இரண்டுடையாய் போற்றி!

ஹோட்டல் முதல் டூ வீலர் பழுதுபார்ப்பது வரை அத்தனைக்கும் ஜிஎஸ்டியா?.

ஒரு நடுத்தரக் குடும்பம் மகிழ்ச்சியாக இருக்க ஹோட்டலுக்குச் சென்றால், பில்லில் உள்ள ஜிஎஸ்டி வரியைப் பார்த்து கப்பார் சிங் டேக்ஸ் எனப் புலம்புகின்றனர்!. அடுத்து என்ன செல்ஃபி எடுத்தாலும் ஜிஎஸ்டி கட்ட வேண்டுமா?.

1.45 லட்சம் கோடி ரூபாய் கார்ப்பரேட் வரியைத் தள்ளுபடி செய்யும் பாஜகவால், ஏழைகளுக்குக் கருணை காட்ட முடியாதா?

ஜிஎஸ்டியில் கிடைக்கும் தொகையில் 64 விழுக்காடு 50 சதவிகித அடித்தட்டு மக்களிடம் இருந்து வசூலிக்கப்படுகின்றது. 33 விழுக்காடு ஜிஎஸ்டி 40 சதவிகித நடுத்தர மக்களிடம் இருந்து பெறப்படுகின்றது. வெறும் 3 விழுக்காடு ஜிஎஸ்டி மட்டுமே 10 சதவிகித பெரும் பணக்காரர்களிடம் இருந்து கிடைக்கிறது. இந்திய மக்கள் தொகையில் 50 சதவிகிதத்தினர் 6 மடங்குக்கும் அதிகமாக மறைமுக வரியைக் கட்டுகிறார்கள்.” என கடுமையாக விமர்சித்துள்ளளார்.