ஒரு ஐந்தாண்டு காலத்தில் திமுக, அதிமுக இரண்டு கட்சி சின்னத்திலும் தேர்தலில் நின்ற நபர் செந்தில் பாலாஜி, அவரைப் போன்று தான் அமைச்சர் சேகர் பாபு இவர்கள் இருவரும் அரசியல் வியாபாரிகள் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடுமையாக விமர்சித்துள்ளார்.
கடந்த ஒரு சில தினங்களுக்கு முன்பு அதிமுக பொதுக்கூட்டத்தில் பேசிய அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி, 2026 -ஆம் ஆண்டு நிச்சயம் அதிமுக ஆட்சியை கொண்டு வருவோம். திமுக ஆட்சி முடிவுக்கு வர இன்னும் 13 அமாவாசை தான் என பேசி இருந்தார். இந்த பழனிசாமியின் பேச்சுக்கு செந்தில் பாலாஜி பதிலடி கொடுக்கும் விதமாக அமைச்சர் செந்தில் பாலாஜி தமது எக்ஸ் பக்கத்தில், ‘‘நாம முன்னுக்கு வரணும்னா நாய் என்ன… மனுஷன் என்ன? ஏறி மிதிச்சு போயிட்டே இருக்கணும்’’ ‘அமைதிப்படை’ படத்தில் வரும் டயலாக் இது. அதில் வரும் ‘அமாவாசை’ கேரக்டர் தான் எடப்பாடி பழனிசாமி. பலரை ஏறி மிதித்து, ஊர்ந்து சென்று, பதவியைப் பிடித்த பழனிசாமி, ‘’திமுக ஆட்சிக்கு இன்னும் 13 அமாவாசைதான் இருக்கிறது’’ என பழனிசாமியை செந்தில் பாலாஜி கடுமையாக விமர்சித்து இருந்தார்.
அமைச்சர் செந்தில் பாலாஜி விமர்சனத்திற்கு, சேலம் மாவட்டம் ஓமலூரில் செய்தியாளர்களின் கேள்விக்கு பழனிசாமி பதிலளித்தார். அப்போது, செந்தில் பாலாஜிக்கு அமைதிப்படை அமாவாசை என்ற பெயர் பொருத்தமானது. ஐந்து கட்சிக்கு சென்று திமுகவிற்கு வந்துள்ளார். இனிமேல் எந்த கட்சிக்கு செல்வார் என்று தெரியாது. ஒரு ஐந்தாண்டு காலத்தில் திமுக, அதிமுக இரண்டு கட்சி சின்னத்திலும் தேர்தலில் நின்ற நபர் செந்தில் பாலாஜி. இவரைப் போன்று தான் அமைச்சர் சேகர் பாபு பேசி வருகிறார். ஒவ்வொரு மாதமும் அமாவாசை வரும்போது திமுக ஆட்சி காலத்தில் ஆட்சி காலம் கலைந்து கொண்டே இருக்கிறது.
இவர்கள் எல்லாம் அரசியல் வியாபாரிகள். உண்மையான விசுவாசி என்றால் ஒரே கட்சியில் இருக்க வேண்டும். கட்சி ஆரம்பித்த போது அதிமுகவில் சேர்ந்தேன். அந்த கட்சியை நேசித்தேன். அதனால் எனக்கு பொதுச் செயலாளர் என்று அங்கீகாரம் கிடைத்துள்ளது. சந்தர்ப்ப சூழ்நிலையை கருதி வேடந்தாங்கல் பறவைகள் போன்று அவ்வப்போது வந்து செல்பவர்கள். இவர்கள் எல்லாம் எங்களைப் பற்றி பேசுவதற்கு அருகதை கிடையாது என பழனிசாமி பதிலளித்தார்.