முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ செல்லும் இடமெல்லாம் போராட்டம் நடத்தப்படும் என பாஜக மதுரை மாவட்ட தலைவர் எச்சரித்துள்ளார்.
மதுரையில் நடைபெற்ற அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, நிர்வாகிகளை ஊக்கப்படுத்தும் விதமாக பேசினார். பேச்சை முடிக்கும்போது நான் பேசுவதற்கெல்லாம் தலையாட்டக் கூடாது, ஆடு மாதிரி ஆட்ட கூடாது ஏனென்றால் ஆடு லண்டன் சென்று விட்டது என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை மறைமுகமாக சுட்டிக் காட்டிய செல்லூர் ராஜு தலையை ஆட்டி கொண்டு இல்லாமல் உண்ணாவிரதத்திற்கு குறைந்தபட்சம் 200 நபர்கள் ஆவது ஒவ்வொருவரும் அழைத்து வர வேண்டும் என செல்லூர் ராஜு பேசியிருந்தார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதத்தில், மதுரை மாநகர் மாவட்ட பாஜக தலைவர் மகா.சுசீந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘தெர்மாகோல் விஞ்ஞானி, அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, தொடர்ந்து தரம் தாழ்ந்து எங்களது மாநிலத் தலைவர் அண்ணாமலையை விமர்சித்து வருகிறார். அண்ணாமலையிடம், செல்லூர் ராஜூ மன்னிப்பு கேட்க வேண்டும்.
இல்லையென்றால், எந்தவொரு தனித் தகுதியும் இல்லாத நிலையில், ஜெயலலிதாவின் பாதம் பிடித்து அமைச்சர் பதவி பெற்று இன்று வரை, செல்லூர் ராஜூவாகிய நீ வகித்த பதவிகளில் பல கோடிகள் ஊழல் செய்து, தன்னை ஒரு அரசியல்வாதியாக அடையாளம் காட்டிக் கொள்ளும் உனக்கு, மிக விரைவில் பாஜக சார்பில், நீ செல்லும் இடம் எல்லாம் உனக்கு எதிராக பிரமாண்டமான ஆர்ப்பாட்டம், போராட்டங்கள் அறிவிக்கப்படும்’’ என்று தெரிவித்துள்ளார்.