போலி ஆவணம் தயாரித்து ரூ.1 கோடி நிலம் மோசடி..!

சென்னை, ஆவடி காமராஜர் நகர் சேக்காடு மெயின் ரோட்டை சேர்ந்த ராஜசேகரன் (வயது 55). இவருக்கு சொந்தமான இடம் சேக்காடு பகுதியில் உள்ளது. இந்த நிலத்தை சென்னை சைதாப்பேட்டையில் உள்ள தனியார் வங்கியில் அடமானம் வைத்துள்ளார். இதையடுத்து ராஜசேகரன் அவரது இடத்திற்கான வில்லங்க சான்று பெற்று பார்த்தபோது, அவரது இடம் வேறு இரண்டு பேருக்கு விற்பனை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த ராஜசேகரன் இதுகுறித்து பத்திரப்பதிவு அலுவலகத்தில் விசாரித்துள்ளார்.

இந்நிலையில் இவருக்கு சொந்தமான அந்த இடத்தை ஆவடி அடுத்த சேக்காடு கிராமம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த யுவராஜ் மற்றும் அவரது நண்பர்களான பூஞ்சோலை, இன்பகுமார், சரத்குமார் ஆகிய 4 பேரும் சேர்ந்து ராஜசேகரன் பெயரில் உள்ள நிலத்தை ஆள் மாறாட்டம் செய்து போலி ஆவணங்கள் தயார் செய்து 2 நபர்களுக்கு இடத்தை பிரித்து ரூ.15 லட்சத்திற்கு விற்பனை செய்தது தெரியவந்தது. இதுகுறித்து ராஜசேகரன் ஆவடி காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுத்தார்.

புகாரின் பேரில், ஆவடி காவல் ஆணையர் சங்கர் உத்தரவின் பேரில், துணை ஆணையர் பெருமாள் ஆலோசனைப்படி, கூடுதல் துணை ஆணையர் முத்துவேல் பாண்டி மேற்பார்வையில், ஆவடி மத்திய குற்றப்பிரிவு போலி ஆவண தடுப்பு பிரிவு ஆய்வாளர் வள்ளி இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டார்.

அதன்பேரில் இந்த வழக்கில் தொடர்புடைய ஆவடி அடுத்த சேக்காடு மெயின் ரோடு காமராஜர் நகர் பகுதியை சேர்ந்த பூஞ்சோலை என்பவரை கைது செய்து விசாரித்ததில் ராஜசேகரன் இடத்தை 4 பேரும் சேர்ந்து போலி ஆவணம் தயாரித்து மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து காவல்துறை பூஞ்சோலை மீது வழக்குப்பதிவு செய்து பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். மேலும் 3 பேரை காவல்துறை வலைவீசி தேடி வருகின்றனர்.

அரசு மருத்துவமனையில் கூட்டு மருத்துவ சிகிச்சை மையம்

சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், எச்.ஐ.வி. தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏ.ஆர்.டி. கூட்டு மருத்துவ சிகிச்சை அளிக்கும் மையத்தை திறந்து வைத்து, ரூ.32.5 லட்சம் செலவில் 5 ரத்த சுத்திகரிப்பு அலகுகளுடன் புதிய ரத்த சுத்திகரிப்பு மையத்தையும் நேற்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்து வைத்தார். பின்னர் நகர்புறங்களில் சிறுநீரகம் காக்கும் சீர்மிகு மருத்துவத் திட்டத்தையும் அவர் தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில், மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கத் திட்ட இயக்குனர் ஹரிஹரன், பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத்துறை இயக்குனர் டாக்டர் செல்வவிநாயகம், ஓமந்தூரார் அரசு மருத்துவமனை டீன் டாக்டர் அரசி ஸ்ரீவத்சன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ரோந்து பணியின் போது உதவி ஆய்வாளரை சுற்றிவளைத்து தாக்கிய மாணவர்கள்

சென்னை ரோந்து பணி கொடுங்கையூர் மூலக்கடை அடுத்த அண்ணா நகர் 5-வது அவென்யூவைச் சேர்ந்த பாலமுருகன். இவர் ஆர்.கே.நகர் காவல் நிலையத்தில் குற்றப்பிரிவு உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் இவர் நேற்று முன்தினம் தண்டையார்பேட்டை சுந்தரம்பிள்ளை நகர் வைத்தியநாதன் மேம்பாலம் அருகே சாதாரண உடையில் மோட்டார் சைக்கிளில் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளார்.

அப்போது மேம்பாலம் கீழே சந்தேகத்திற்கு இடமாக சுற்றித்திரிந்த 4 பேரை உதவி ஆய்வாளர் பாலமுருகன் அழைத்து விசாரணை நடத்தியபோது, போதையில் இருந்த அந்த கும்பல் பாலமுருகனிடம் ஒருமையில் பேசி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். பின்னர் அந்த 4 பேரும் சேர்ந்து சுற்றிவளைத்து உதவி ஆய்வாளர் பாலமுருகனை திடீரென கற்களாலும், கைகளாலும் சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது.

இதில் பாலமுருகனுக்கு முகத்தில் பலத்த ரத்த காயம் ஏற்பட்டதில், மூக்கு தண்டு எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. இந்தத் தகவல் அறிந்த காவல்துறை சம்பவ இடத்துக்கு சென்று அவரை மீட்டு அதே பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதுகுறித்து வண்ணாரப்பேட்டை காவல் துணை ஆணையர் சக்திவேல் நேரில் சந்தித்து உதவி ஆய்வாளர் பாலமுருகனுக்கு ஆறுதல் கூறினார்.

பின்னர் ஆர்.கே.நகர் காவல்துறை தனிப்படை அமைத்து அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து, விசாரணை நடத்தி தாக்குதலில் ஈடுபட்ட அதே பகுதியைச் சேர்ந்த 4 சிறுவர்களை கைது செய்தனர். விசாரணையில், அவர்கள் 4 பேரும் 18 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் என்பதும், 10-ம் வகுப்பு மற்றும் பிளஸ்-2 படிக்கும் மாணவர்கள் என்பதும் தெரியவந்தது.

ரூ.3,000 லஞ்சம் வாங்கிய மின்வாரிய கண்காணிப்பாளர் கைது

சென்னை செங்குன்றத்தை சேர்ந்த கிருஷ்ணகுமார். மின்வாரிய ஒப்பந்ததாரரான இவர் தனது செம்புகுட்டி அசோசியேசன் என்ற மின் நிறுவனத்தின் ஏ கிரேட் லைசன்ஸை புதுப்பிப்பதற்காக கிண்டியில் உள்ள மின்வாரிய ஒப்பந்தத்தாரர்களுக்கான லைசென்ஸ் வழங்கும் பிரிவு அலுவலகத்தில் கடந்த மே 5 -ம் தேதி விண்ணப்பத்திருந்தார்.

மூன்று மாதங்களுக்கு பிறகு கிருஷ்ணகுமார் கடந்த 10 -ம் தேதி கிண்டி மின்வாரிய அலுவலகத்திற்கு சென்று தனது லைசன்ஸ் புதுப்பிப்பது தொடர்பாக ஊழியர்களிடம் கேட்டப்போது லைசன்ஸ் தயாராகி விட்டதாகவும், கண்காணிப்பாளர் ஸ்ரீதரிடம் சென்று வாங்கிக் கொள்ளுமாறும் கூறினார்.

கண்காணிப்பாளர் ஸ்ரீதரிடம் சென்று கேட்டதற்கு, 10,000 ரூபாய் லஞ்சம் கொடுத்து விட்டு வாங்கிச் செல்லுமாறு தெரிவித்துள்ளார். அதற்கு கிருஷ்ணகுமார் தன்னால் 10,000 ரூபாய் லஞ்சம் தர இயலாது என கூறியிருக்கிறார். அதற்கு ஸ்ரீதர், இரண்டு நாட்கள் கழித்து வந்து 3,000 ரூபாய் கொடுத்து விட்டு லைசென்ஸை பெற்றுச் செல்லுங்கள் என கறாராக கூறியுள்ளார். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான கிருஷ்ணகுமார் இது குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை காவல் துறையில் புகார் அளித்தார்.

லஞ்ச ஒழிப்புத்துறை ஆலோசனையின்படி ரசாயன பவுடர் தடவிய 3,000 ரூபாயை எடுத்துக் கொண்டு நேற்று மாலை கிண்டி அலுவலத்திற்கு சென்ற கிருஷ்ணகுமார், அங்கிருந்த கண்காணிப்பாளர் ஸ்ரீதரிடம் கொடுத்துள்ளார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறை கண்காணிப்பாளர் ஸ்ரீதரை பாய்ந்து சென்று ஸ்ரகையும் களவுமாக கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நீட்டில் தோல்வியை விடுங்க.. நீட் தேர்வே தோற்றுவிட்டது.. !

சென்னை குரோம்பேட்டையை சேர்ந்த ஜெகதீஸ்வரன் என்ற மாணவன் தனியார் நீட் கோச்சிங் சென்டருக்கும் அவர் சென்று படித்துள்ளார். இந்நிலையில், நடப்பாண்டு நீட் தேர்வு எழுதியும் ஜெகதீஸ்வரன் தோல்வி அடைந்தார். தொடர்ந்து இரண்டு முறை நீட் தேர்வில் தோல்வி அடைந்ததால் தன்னால் இனி மருத்துவரே ஆக முடியாது என்ற எண்ணம் அவருக்கு ஏற்பட்டுள்ளது.  இதனால் விரக்தியில் இருந்த மாணவன் ஜெகதீஸ்வரன், சனிக்கிழமையன்று தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தொடர் தோல்வி அடைந்ததில் இருந்து யாரிடமும் பேசாமல் இருந்ததாக மாணவனின் பெற்றோர்களும் உறவினர்களும் தெரிவித்தனர். இந்நிலையில் மூன்றாவது முறை முயற்சி செய்யலாம் என அண்ணா நகரில் இருக்கக்கூடிய தனியார் நீட் தேர்வு பயிற்சி மையத்திற்கு அழைத்துச் சென்ற தந்தை செல்வ சேகர், விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்துவிட்டு முன்பணமும் செலுத்தி இருக்கிறார். அவரை பயிற்சி மையத்திற்கு மீண்டும் அழைத்துச் செல்ல இருந்த நிலையில் மாணவன் ஜெகதீஸ்வரன் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இந்நிலையில், ஜெகதீஸ்வரனின் தந்தை, ” என் பிள்ளை போன்ற மாணவர்கள் தொடர் தற்கொலையில் ஈடுபட்டு வருகிறார்கள் அது நிறுத்தப்பட வேண்டும் என்றால் இந்த நீட் தேர்வை உடனடியாக தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். நேற்றைய தினம் ஊடகங்களுக்கு பேட்டியளித்த நிலையில் நள்ளிரவில் செல்வ சேகர் தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

நீட் தேர்வால் மாணவன் தற்கொலைதந்தையும் தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியளிக்கிறது. நீட்டிலிருந்து விலக்கு பெறுவதற்கான நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என பா.ம.க. தலைவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், மருத்துவப் படிப்பில் சேருவதற்கான நீட் தேர்வு தமிழ்நாட்டில் தாங்கிக் கொள்ள முடியாத பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை குரோம்பேட்டையைச் சேர்ந்த மாணவர் ஜெகதீஸ்வரன் நீட் தேர்வை இருமுறை எழுதியும் மருத்துவப் படிப்பில் சேர முடியாத நிலையில் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். மகனை இழந்த சோகத்தை தாங்கிக் கொள்ள முடியாமல் அவரது தந்தை செல்வசேகரும் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். நீட் தேர்வால் தந்தையும், மகனும் தற்கொலை செய்து கொண்ட நிகழ்வு பெரும் அதிர்ச்சியை அளிக்கிறது.

அவர்களின் உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் ஆறுதல் சொல்ல என்னிடம் வார்த்தைகள் இல்லை. நீட் தேர்வு அறிமுகம் செய்யப்பட்ட நாளில் இருந்தே மாணவர்களின் உயிர்களை பலி வாங்கிக் கொண்டிருக்கிறது. இப்போது மாணவனின் தந்தையையும் பலி வாங்கியிருக்கிறது. தமிழ்நாட்டில் மட்டும் தான் இந்த நிலை என்று கூற முடியாது. இந்தியா முழுவதும் இதே நிலை தான் காணப்படுகிறது.

நீட் பயிற்சி அளிப்பதற்கான சிறந்த பயிற்சி மையங்களைக் கொண்ட இராஜஸ்தான் மாநிலம் கோட்டா நகரில் நடப்பாண்டில் மட்டும் 19 மாணவர்கள் நீட் தேர்வு குறித்த அச்சம் மற்றும் மன அழுத்தத்தால் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். வெளிமாநிலம் சென்று பணம் செலுத்தி பயிற்சி பெறும் வசதி படைத்தவர்களுக்கே இது தான் நிலை என்றால், சாதாரணமான கிராமப்புற ஏழை மாணவர்களின் நிலை எவ்வளவு மோசமானதாக இருக்கும்.

மன அழுத்தத்தை ஏற்படுத்தக்கூடிய, தற்கொலை உணர்வை ஏற்படுத்தக்கூடிய ஒரு தேர்வு, எந்த வகையில் சமூகத்திற்கு பயன்படக் கூடிய தேர்வாக இருக்க முடியும்? நீட் தேர்வு அனைத்து வழிகளிலும் தோல்வியடைந்து விட்ட தேர்வு. அதை தொடருவதற்கு நியாயமான காரணங்கள் எதுவும் இல்லை. நீட் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டு பத்தாண்டுகள் நிறைவடைந்து விட்ட நிலையில், அதனால் ஏற்பட்ட சாதக, பாதகங்கள் குறித்து ஆய்வு செய்ய வேண்டும்.

அதனடிப்படையில் நீட் தேர்வை ரத்து செய்வது குறித்து முடிவெடுக்க வேண்டும். நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு பெறுவதற்கான சட்டம் தமிழக சட்டப்பேரவையில் இரண்டாவது முறையாக நிறைவேற்றப்பட்டு, ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாகி விட்ட நிலையில், அதற்கு மத்திய அரசு இன்னும் ஒப்புதல் அளிக்கவில்லை. அதற்கு தமிழக அரசும் அழுத்தம் கொடுக்கவில்லை. மாணவர்களின் உயிர்களைக் காப்பதற்காக நீட் விலக்கு சட்டத்திற்கு மத்திய அரசின் ஒப்புதலைப் பெறுவதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு தீவிரப்படுத்த வேண்டும்.

அதே நேரத்தில் மாணவச் செல்வங்களுக்கு ஓர் அன்பு வேண்டுகோள்….. நீட் சிக்கலுக்கு தற்கொலை தீர்வல்ல என்பதையும், மருத்துவம் மட்டுமே படிப்பல்ல என்பதையும் மாணவர்களும், பெற்றோரும் உணர வேண்டும். நீட்டுக்கு அஞ்சி மாணவச் செல்வங்கள் தற்கொலை செய்து கொள்ள வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன் என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

லாட்ஜூக்கு பெண்களை அழைத்து செல்லும் ஆண்களை குறி வைத்து மிரட்டி பணம் பறிப்பு..!

அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த மணிகண்டன் சென்னை கிழக்கு முகப்பேர் பகுதியில் தங்கி, தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகிறார். இவர், கடந்த மாதம் 27-ந்தேதி பெண் ஒருவரை அரும்பாக்கம் பகுதியில் உள்ள லாட்ஜிக்கு அழைத்து சென்றார். அப்போது அவரிடம் காவல்துறை என்று கூறி ஒருவர் ‘கூகுள் பே’ மூலம் ரூ.15 ஆயிரம் பெற்றார். பின்னர், மணிகண்டனிடம் அந்த நபர், விசாரணைக்கு அழைக்கும் போது காவல் நிலையத்துக்கு வர வேண்டும் என்று கூறி சென்றார்.

அதன்படி, மணிகண்டனை அந்த நபர் 28-ந்தேதி அன்று செல்போனில் அழைத்து ஆணையர், ஆய்வாளருக்கு பணம் தரவேண்டும் என்று கூறி மீண்டும் அவரிடம் ‘கூகுள் பே’ மூலம் ரூ.65 ஆயிரம் பெற்றார். பின்னர் மணிகண்டனிடம் இதே பாணியில் ரூ.12 ஆயிரத்து 500 பணமும், அவர் அணிந்திருந்த 4 பவுன் மோதிரத்தையும் கடந்த 2-ந்தேதி பறித்துள்ளார். அந்த நபர் பணம் கேட்டு மணிகண்டனை தொடர்ந்து மிரட்டி வந்துள்ளார். இதுபற்றி சூளைமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அதன்பேரில் காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது அரும்பாக்கம் லாட்ஜ் அருகே உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். இதில் அந்த நபர் வந்திருந்த ‘போலீஸ்’ என்று ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருந்த மொபட் வாகனத்தின் எண்ணை வைத்து காவல்துறை விசாரணை நடத்தினார்கள். இதில் அந்த வாகனம் கோடம்பாக்கம் காவல் நிலையத்தில் பணியாற்றும் பெண் காவலர் ஒருவருக்கு சொந்தமானது என்று தெரிய வந்தது. பின்னர் அந்த பெண் காவலரிடம், காவல்துறை விசாரணை நடத்தினார்கள். இதில் அவர், தன்னுடன் தங்கி இருக்கும் பாலாஜி என்பவர்தான் அன்றைய தினம் எனது மொபட் வாகனத்தை ஓட்டி சென்றார் என்று கூறினார்.

இதையடுத்து பாலாஜியை காவல்துறை கைது செய்தனர். இதில்,  தியாகராயநகர் முத்துரங்கம் சாலை பகுதியை சேர்ந்த பாலாஜி என தெரியவந்தது. பாலாஜி 2016-ம் ஆண்டு முதல் 2021-ம் ஆண்டு வரை ஊர்க்காவல் படை வீரராக பணியாற்றி உள்ளார். இந்நிலையில் படிப்புக்கு ஏற்ற வேலை தனக்கு கிடைக்காததால் மோசடியில் ஈடுபட்டு வந்ததாகவும், மணிகண்டனை மிரட்டி பறித்த ரூ.92 ஆயிரத்து 500 பணத்தை ‘ஆன்லைன்’ சூதாட்டத்தில் இழந்து விட்டதாகவும், 4 கிராம் தங்க மோதிரத்தை அடகு வைத்து செலவு செய்து விட்டதாகவும் காவல்துறையினரிடம் தெரிவித்தார்.

நீட் தேர்வு தோல்வி.. மாணவன் தற்கொலை.. மகன் இறந்த சோகத்தில் தந்தை எடுத்த விபரீதம்

மருத்துவம், பல் மருத்துவம் ஆகிய படிப்புகளுக்கு முதலில் ப்ளஸ் 2 தேர்வு கட் ஆப் மதிப்பெண் அடிப்படையில் கிடைத்து வந்த மருத்துவக் கல்லூரி இடங்கள், தற்போது நீட் தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற்றால் மட்டுமே கிடைக்கும் என மாறிவிட்டது. இந்த நீட் தேர்வால் கிராமப்புற மற்றும் அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் மருத்துவக் கனவு தகர்ந்து போவதாக திமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றன.

மேலும், தமிழக அரசு சார்பில் நீட் விலக்கு மசோதாவும் இயற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. கோச்சிங் சென்டர்களில் சென்று படித்தால் மட்டுமே நீட் தேர்வில் தேர்ச்சி பெற முடியும் என்ற சூழல் நிலவுவதாக கூறப்படுகிறது. அதனால் வசதி இல்லாத மாணவர்களால் கோச்சிங் சென்டர்களுக்கு செல்ல முடியாததால் அவர்களுக்கு மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைப்பதில்லை என பரவலான குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது.மேலும் நீட் தேர்வில் தோல்வியடைந்த மாணவர்கள் ஆங்காங்கே தற்கொலை செய்து கொள்ளும் சம்பவமும் அரங்கேறி வருகிறது.

சென்னை குரோம்பேட்டையை சேர்ந்த ஜெகதீஸ்வரன் என்ற மாணவன் தனியார் நீட் கோச்சிங் சென்டருக்கும் அவர் சென்று படித்துள்ளார். இந்நிலையில், நடப்பாண்டு நீட் தேர்வு எழுதியும் ஜெகதீஸ்வரன் தோல்வி அடைந்தார். தொடர்ந்து இரண்டு முறை நீட் தேர்வில் தோல்வி அடைந்ததால் தன்னால் இனி மருத்துவரே ஆக முடியாது என்ற எண்ணம் அவருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் விரக்தியில் இருந்த மாணவன் ஜெகதீஸ்வரன், சனிக்கிழமையன்று தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தொடர் தோல்வி அடைந்ததில் இருந்து யாரிடமும் பேசாமல் இருந்ததாக மாணவனின் பெற்றோர்களும் உறவினர்களும் தெரிவித்தனர். இந்நிலையில் மூன்றாவது முறை முயற்சி செய்யலாம் என அண்ணா நகரில் இருக்கக்கூடிய தனியார் நீட் தேர்வு பயிற்சி மையத்திற்கு அழைத்துச் சென்ற தந்தை செல்வ சேகர், விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்துவிட்டு முன்பணமும் செலுத்தி இருக்கிறார். அவரை பயிற்சி மையத்திற்கு மீண்டும் அழைத்துச் செல்ல இருந்த நிலையில் மாணவன் ஜெகதீஸ்வரன் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இந்நிலையில், ஜெகதீஸ்வரனின் தந்தை, ” என் பிள்ளை போன்ற மாணவர்கள் தொடர் தற்கொலையில் ஈடுபட்டு வருகிறார்கள் அது நிறுத்தப்பட வேண்டும் என்றால் இந்த நீட் தேர்வை உடனடியாக தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். நேற்றைய தினம் ஊடகங்களுக்கு பேட்டியளித்த நிலையில் நள்ளிரவில் செல்வ சேகர் தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தமிழ்நாடு ஆளுநர் ஆர் என் ரவி, “கடந்த ஒரு வருடமாக எந்த மாணவரும் நீட் தேர்வுக்காக தற்கொலை செய்துகொள்ளவில்லை” என பேசியிருந்தார். இந்நிலையில் நீட் தேர்வில் தோல்வியடைந்த மாணவனும் அவரது தந்தையும் தற்கொலை செய்து கொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மாட்டின் வெறித்தனம்… 9-வயது சிறுமி காயம்.. பதைபதைக்க வைக்கும் வீடியோ காட்சிகள்..!

சென்னை, சூளைமேட்டைச் சேர்ந்தவர் ஹர்ஷின் பானு, இவர் தனது 9 வயது மகள் ஆயிஷா மற்றும் 5 வயது ஆண் குழந்தையை அழைத்துக் கொண்டு ஆர் பிளாக் இளங்கோ தெருவில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, அவர்களுக்கு எதிரே வந்து கொண்டிருந்த இரண்டு பசு மாடுகள் யாரும் எதிர்பாராத நேரத்தில் திடீரென்று சிறுமி ஆயிஷாவை தன் கொம்புகளால் தூக்கி கீழே வீசி தரையில் போட்டு தொடர்ந்து தாக்கியது.

இந்நிலையில் அதை பார்த்த சிறுமியின் தாயார் கூச்சலிட்டு கதறியபடி சத்தம் போட்டதால் அருகில் இருந்தவர்கள் செங்கல் உள்ளிட்ட பொருட்களை எடுத்து அடித்து மாட்டை விரட்ட முயற்சித்தனர். நீண்ட நேரம் சிறுமியை விடாமல் மீண்டும், மீண்டும் முட்டியதால் சிறுமி பலத்த காயமடைந்தார். ஒரு கட்டத்தில் அங்கிருந்தவர்கள் அந்த மாட்டினை விரட்டியடித்து சிறுமி ஆயிஷாவை காப்பாற்றினர். இதனை அடுத்து சிறுமியை அவசர சிகிச்சை பிரிவில் மருத்துவமனையில் அனுமதித்தனர். மாடு சிறுமியை வெறியோடு தாக்கும் சிசிடிவி காட்சி வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தொழிலதிபரை மிரட்டி பணம் கேட்ட காங்கிரஸ் நிர்வாகி துப்பாக்கியுடன் கைது..!

சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்த அஸ்வத்தாமன் என்பவர்,தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸின் மாநில முதன்மை பொதுச்செயலாளராக இருந்து வருகிறார். கடந்தசில நாட்களுக்கு முன் திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் பகுதியைச் சேர்ந்த ஜெயபிரகாஷ் என்ற தொழிலதிபரை துப்பாக்கி காட்டி மிரட்டி பணம் கேட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து தொழிலதிபர் ஜெயபிரகாஷ், மீஞ்சூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். காவல்துறை தனிப்படை அமைத்து அஸ்வத்தாமனை தேடி வந்தனர்.

இந்நிலையில், பெங்களூரில் இருந்து காரில் வந்த அஸ்வத்தாமனை, திருவள்ளூர் மாவட்டம், பூந்தமல்லி காவல் துறையினர் நசரத்பேட்டையில் கைது செய்து அவரிடமிருந்து ஒரு துப்பாக்கி மற்றும் 7 தோட்டாக்களை பறிமுதல் செய்தனர். பின்னர், பொன்னேரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். துப்பாக்கி காட்டி தொழிலதிபரை மிரட்டிய அஸ்வத்தாமன், சென்னையின் பிரபல ரவுடி நாகேந்திரனின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.

கலைஞர் கருணாநிதி 5-ம் ஆண்டு நினைவு நாள்: முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணி

சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் உள்ள கருணாநிதி சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்திய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், பின்னர் அங்கிருந்து பேரணியை தொடங்கினார். முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான இந்த பேரணியில் தமிழக அமைச்சர்கள் துரைமுருகன், நேரு, பொன்முடி, எ.வ.வேலு, உதயநிதி ஸ்டாலின், மஸ்தான், தங்கம் தென்னரசு, சேகர் பாபு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

மக்களவை உறுப்பினர் டி.ஆர்.பாலு, தயாநிதி மாறன், கனிமொழி உட்பட திமுக அமைச்சர்கள், மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், திமுக மூத்த நிர்வாகிகள் என ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இந்த பேரணியில் பங்கேற்றனர். சுமார் ஒன்றரை கிலோ மீட்டர் தூரம் சென்ற இந்த பேரணி, சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள கருணாநிதி நினைவிடத்தில் நிறைவடைந்தது. அங்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உட்பட அனைவரும் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.