சு.வெங்கடேசன்: ராஜ்பவனில் உட்கார்ந்து கொண்டு கமலாலய வேலைகளை பார்ப்பது அழகல்ல என்று சொல்லுங்க..!

“ராஜ்பவனில் உட்கார்ந்து கொண்டு “எனது கமலாலய வேலைகளை நீங்கள் பார்ப்பது கவர்னருக்கு அழகல்ல” என்று சொல்லுங்களேன் நயினார் நாகேந்திரன் அவர்களே !” என சு.வெங்கடேசன் தெரிவித்தார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு பேட்டி அளித்தார். அப்போது, தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் ஆளும் திமுக அரசுக்கும் தொடர்ந்து மோதல் நீடித்து வருகிறது.

இதுகுறித்த கேள்விக்கு, “மத்திய – மாநில அரசுகளுக்கிடையேயான உறவில் ஆளுநர் என்பவர் தபால்காரர் போன்றவர்தான். தற்போதைய உச்ச நீதிமன்ற தீர்ப்பும் இதைத்தான் கூறியிருக்கிறது. தமிழ் மொழிக்கும், தமிழ்நாடு என்ற பெயருக்கும் எதிராக ஆளுநர் செயல்படுகிறார். தன்னை ஒரு தீவிர பாஜககாரராக ஆளுநர் ஆர்.என்.ரவி காட்டிக் கொள்கிறார். பதவிக்காலம் முடிந்த பிறகும் ஆளுநர் தமிழ்நாட்டில் உள்ளார்.” என தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில், பழனி முருகன் கோவிலில் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் மற்றும் பாஜக மூத்த தலைவர் H .ராஜா ஆகியோர் சாமி தரிசனம் செய்தனர். முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த நயினார் நாகேந்திரன், ஆளுநரை தபால்காரர் என முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட்டது பற்றிப் பேசினார். மத்திய, மாநில அரசுகளுக்கு இடையே ஆளுநர் ஒரு தபால்காரர் என முதல்வர் கூறுகிறார். ஆளுநர் என்பவர் மத்திய, மாநில அரசுகளின் அங்கீகாரம். அப்படி இருக்கையில் ஆளுநரை தபால்காரர் எனக் கூறுவது தமிழக முதலமைச்சருக்கு அழகல்ல” என நயினார் நாகேந்திரன் தெரிவித்து இருந்தார்.

இந்த நயினார் நாகேந்திரனின் பேச்சுக்குக்கு மதுரை எம்.பி சு.வெங்கடேசன் பதில் கொடுத்துள்ளார். இதுதொடர்பாக சு.வெங்கடேசன் எக்ஸ் பக்கத்தில், “ராஜ்பவனில் உட்கார்ந்து கொண்டு “எனது கமலாலய வேலைகளை நீங்கள் பார்ப்பது கவர்னருக்கு அழகல்ல” என்று சொல்லுங்களேன் நயினார் நாகேந்திரன் அவர்களே !” என சு.வெங்கடேசன் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

கண்டா வர சொல்லுங்க… MP காணவில்லை..!

மதுரை பாராளுமன்ற தொகுதியில் தி.மு.க. கூட்டணி சார்பில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் சு.வெங்கடேசன் 2-வது முறையாக போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்நிலையில் அவரை காணவில்லை என மதுரை நகர் முழுவதும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்ட விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மதுரை பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட வண்டியூர், சவுராஷ்டிராபுரம் உள்ளிட்ட பகுதிகளில் சு.வெங்கடேசனுக்கு எதிராக சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. அதில், “கண்டா வர சொல்லுங்க… என்ற தலைப்பில் மதுரை பாராளுமன்ற தொகுதியில் 2 முறை எம்.பி.யாக வெற்றி பெற்றும் வண்டியூர் மக்களுக்கு நன்றி கூட சொல்ல மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் உங்களுக்கு வாக்களித்து வெற்றி பெற வைத்த வண்டியூர் மக்களுக்கு இதுவரை நீங்கள் செய்தது என்ன?” என கேள்வி கேட்டு வாசகங்கள் இடம் பெற்றிருந்தன. இந்த சுவரொட்டி தி.மு.க., கம்யூனிஸ்டு கூட்டணி கட்சியினரிடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.

அந்த பக்கம் சு.வெங்கடேசனுக்கு ராம.சீனிவாசன் … இந்த பக்கம் பிடிஆருக்கு தமிழிசை..

சென்னை – திருநெல்வேலி இடையே புதிய வந்தே பாரத் விரைவு ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி வீடியோ கான்பரன்ஸ் மூலம் இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார். திருநெல்வேலியில் இருந்து காலை 6 மணிக்கு புறப்படும் வந்தே பாரத் ரயில் 7 மணி 50 நிமிடங்களில் 652 கி.மீ தூரத்தை கடந்து சென்னையை மதியம் 1:50 மணிக்கு சென்றடையும்.

இந்த அதிவிரைவு ரயில் விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, விழுப்புரம் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். மேலும் சென்னையில் இருந்து மதியம் 2:50 மணிக்கு புறப்பட்டு இரவு 10:40 மணிக்கு திருநெல்வேலியை வந்தடையும்.

இந்நிலையில் திருநெல்வேலியில் இருந்து வந்தே பாரத் ரயிலை மத்திய அமைச்சர் எல்.முருகன், தெலுங்கானா ஆளுநரும், புதுச்சேரி துணைநிலை ஆளுநருமான தமிழிசை செளந்தரராஜன் உள்ளிட்டோர் தொடங்கி வைத்து அந்த ரயிலேயே பயணம் செய்தனர். ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் ரயில் பயணிகளுக்கு இனிப்பு வழங்கி மகிழ்ச்சியை பரிமாறிக்கொண்டார். அடுத்த சில மணி நேரத்தில் வந்தே பாரத் ரயில் மதுரை ரயில் நிலைய சந்திப்பை வந்தடைந்தது.

மதுரையில், தமிழக தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் ஆகியோர் கலந்து கொண்டு கொடியசைத்து தொடங்கி வைத்தனர். இந்த நிகழ்ச்சியில் வந்தே பாரத் ரயிலை போன்று உருவாக்கப்பட்ட கேக்கை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், எம்.பி. சு.வெங்கடேசன், ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் ஆகியோர் இணைந்து வெட்டினர்.

திடீரென கேக் துண்டை எடுத்த ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனுக்கு ஊட்டினார். திமுக அரசின் செயல்பாடுகளுக்கு எதிராக தொடர்ந்து பேசிவரும் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், திமுக அமைச்சருக்கு கேக் ஊட்டியது அங்கிருந்தோரை புருவம் உயர்த்தச் செய்தது.

இதுமட்டுமின்றி தொலைக்காட்சி விவாதங்களில் எதிரும் புதிருமாக மோதிக் கொள்ளும் பாஜகவின் ராம.சீனிவாசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த மதுரை எம்.பி சு.வெங்கடேசனுக்கு கேக் ஊட்டி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார் இந்த நிகழ்வு அங்கிருந்தவர்கள் மத்தியில் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் மதுரையில் நடந்த வந்தே பாரத் நிகழ்ச்சியில் எதிரெதிர் தரப்பினர் கேக் ஊட்டிக்கொண்ட சம்பவம் பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களிலும் ட்ரெண்டாகி வருகிறது.