குடிநீரில் மனிதக்கழிவு கலக்கப்பட்ட கொடுமை தமிழ்நாட்டை தவிர வேறு எந்த மாநிலத்திலும் நடக்காத ஒன்று, சமத்துவம் பேசும் திமுக, சாதிவாரி கணக்கெடுப்பில் வெற்றி என கூறுவதா? என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று காங்கிரஸ் உள்பட எதிர்க்கட்சிகள் கூறி வந்த நிலையில் மத்திய அரசு செவிசாய்க்காமல் இருந்து வந்தது. இந்நிலையில் , விரைவில் மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும்போது ஜாதிவாரி கணக்கெடுப்பும் நடத்தப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மத்திய அரசின் இந்த முடிவை பாஜக கூட்டணி மற்றும் எதிர்க்கட்சிகள் வரவேற்றுள்ளன. அதுமட்டுமின்றி காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சிகள் தங்களின் தொடர் வலியுறுத்தலுக்கு கிடைத்த வெற்றி என்று தெரிவித்துள்ளன. குறிப்பாக, தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில், ” ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்தப்போவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. திமுகவுக்கும், ‘இண்டியா’ கூட்டணிக்கும் கிடைத்த வெற்றி” என்று கூறி இருந்தார்.
சென்னை அண்ணா நகரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பின்னர் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்தார். அப்போது, “ஒவ்வொரு மாநிலத்தில் இருந்த வரியையும் இணைத்து தான் GST கொண்டு வரப்பட்டுள்ளது. எனவே GST வந்த பிறகு தான் நடுத்தர மற்றும் ஏழை குடும்பத்தினர் பாதிப்பதாக சொல்வது தவறு. முன்பு இருந்த வரி விகிதத்தைவிட GST வந்த பிறகு வரி விகிதம் குறைந்து இருக்கிறது. அனைத்து நிதி அமைச்சர்களுடன் சேர்ந்து மேற்கொள்ளப்படும் ஆலோசனைகள் என்பது அதனை இன்னும் குறைக்கத்தான் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் சமத்துவம் எங்கே இருக்கிறது?- சாதிகளுடன் பெயர் பலகை உள்ளது. இன்றும் தமிழ்நாட்டு வீதிகளில் சாதி பெயர் அடங்கிய தெருக்களின் பெயர் பலகைகள் காணப்படுகிறது. சமத்துவம் பேசும் திமுக, சாதிவாரி கணக்கெடுப்பில் வெற்றி என கூறுவதா?. சாதிவாரி கணக்கெடுப்பு என்பது திமுக-வின் வெற்றி எனக் கூறுவது அரசியல் ஆதாயம் தேடும் முயற்சி. சாதிவாரி கணக்கெடுப்பு என்பதை அரசியல் ரீதியாக அணுகக் கூடாது
நிதி ஒதுக்கும்போது மறைமுகமாக எனக்கு நன்றி தெரிவித்துவிட்டு, வெளியில் வந்து எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். நீதிமன்றம் கண்டித்த பின்னர் அமைச்சர்களை நீக்கும் நிலை யாருக்கு வந்தது? திமுக கூட்டணிக்கா? இல்லை பாஜக கூட்டணிக்காக? குடிநீரில் மனிதக்கழிவு கலக்கப்பட்ட கொடுமை தமிழ்நாட்டை தவிர வேறு எந்த மாநிலத்திலும் நடக்காத ஒன்று.தங்களை விட வளர்ச்சியடையாதவை எனக் கூறும் வட மாநிலங்களில் கூட இத்தகைய அவலம் நிகழவில்லை என நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.