வானதி சீனிவாசன் கோரிக்கை: முதலமைச்சர் அடிக்கடி கோயம்புத்தூர் வரவேண்டும்..!

முதலமைச்சர் வருகையையொட்டி கோயம்புத்தூரில் பல்வேறு பகுதிகளில் சாலைகள் அமைக்கப்படுகிறதென்றால் அடிக்கடி முதலமைச்சர் கோயம்புத்தூர் வரவேண்டும் என்று கோரிக்கை வைப்பேன் என பாஜக MLA வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.  கோயம்புத்தூர் காந்திபுரம் மத்திய பேருந்து நிலையம் அருகில் பேருந்து நிழற்குடை திறப்பு விழா இன்று நடைபெற்றது. கோயம்புத்தூர் தெற்கு தொகுதி MLA வானதி சீனிவாசன் நிழற்குடையை திறந்து வைத்தார்.

அதன்பின்னர் செய்தியாளர்களின் வானதி சீனிவாசன் கேள்விக்கு பதிலளித்தார். அப்போது, கோயம்புத்தூர் தெற்கு தொகுதிக்கு அதிகமான நிதி அங்கன்வாடிகளுக்குத்தான் ஒதுக்கப்பட்டுள்ளது. கோயம்புத்தூர் விமான நிலைய விரிவாக்கத்துக்கு தேவையான நிலத்தை தமிழக அரசு ஆர்ஜிதம் செய்து மத்திய அரசிடம் ஒப்படைத்துள்ள நிலையில், அந்த நிலம் முழுவதும் காலி செய்து வழங்கப்படவில்லை. இதனால் விரிவாக்க திட்ட கட்டமைப்பு பணிகள் தொடங்குவதில் சுணக்கம் ஏற்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

இதுகுறித்த விவரம் மற்றும் கோவை மெட்ரோ ரயில் திட்டம் குறித்து மத்திய அரசு கேட்கும் தகவல்களை தமிழக அரசு விரைவில் அனுப்ப வேண்டும் என முதலமைச்சரின் கோயம்புத்தூர் வருகையின் போது வலியுறுத்தப்படும். வேற்றுமையில் ஒற்றுமை என்பதுதான் பாஜகவின் லட்சியம். உணவு சார்ந்து மொழி சார்ந்து பாஜக மீது வைக்கப்படும் விமர்சனங்கள் உண்மையல்ல. கடந்த முறை முதலமைச்சர் கோயம்புத்தூர் வந்தபோது பல கோரிக்கைகள் உள்ளடக்கிய மனுவை வழங்கினேன். அவற்றில் சில நிறைவேற்றப்பட்டுள்ளன.

ஒரே நாடு, ஒரே தேர்தல் குறித்து நடிகர் விஜய் கருத்து கூறியுள்ளார். உண்மையில் சாதக பாதகங்களை யோசிக்க வேண்டும். மற்றவர்கள் கூறுகிறார்கள் என்பதற்காக எதிர்க்கக் கூடாது. முதலமைச்சர் வருகையையொட்டி கோயம்புத்தூரில் பல்வேறு பகுதிகளில் சாலைகள் அமைக்கப்படுகிறதென்றால் அடிக்கடி முதலமைச்சர் கோயம்புத்தூர் வரவேண்டும் என்று கோரிக்கை வைப்பேன்முதலமைச்சர் வருகையையொட்டி கோயம்புத்தூரில் பல்வேறு பகுதிகளில் சாலைகள் அமைக்கப்படுகிறதென்றால் அடிக்கடி முதலமைச்சர் கோயம்புத்தூர் வரவேண்டும் என்று கோரிக்கை வைப்பேன் என பாஜக MLA வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார் என வானதி சீனிவாசன் தெரிவித்தார்.

கமல்ஹாசன் சாப்பிடும் பருக்கையில் உதயநிதி ஸ்டாலின் பெயர்..

தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் நடைபெற்று வரும் “என் மண் என் மக்கள்” பாதயாத்திரை கோயம்புத்தூர் தெற்கு தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெற்றது. இந்த பாதயாத்திரையில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை உடன், கோயம்புத்தூர் தெற்கு தொகுதி பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் பங்கேற்றார். ஏராளமான பாஜக நிர்வாகிகளும், தொண்டர்களும் இதில் கலந்து கொண்டனர்.

அப்போது மக்கள் மத்தியில் உரையாற்றிய அண்ணாமலை, “பாஜக ஒரு நாள் ஆட்சிக் கட்டிலில் அமரும். கோயம்புத்தூர் தேசியம், ஆன்மிகம், உண்மையின் பக்கம் இருக்கும் என்பதற்கு, கடந்த முறை கோயம்புத்தூர் தெற்கு தொகுதியில் பாஜக பெற்ற வெற்றியே சாட்சியாக உள்ளது. கோயம்புத்தூர் நாடாளுமன்றத் தொகுதி பாஜகவின் கோட்டை என்பதை நிரூபித்துக் காட்டுவோம். விக்ரம் படத்திற்கு கூட்டம் வருவதைப் போல நாடாளுமன்றத் தேர்தலில் நமக்கு கூட்டம் சேரும் என கமல்ஹாசன் பேசியதை போல நான் பேசவில்லை.

1996-ம் ஆண்டில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, கோயம்புத்தூர் கோரமான தீவிரவாத தாக்குதலுக்குள்ளாகி 25 ஆண்டுகள் பின்னால் போனது. 2006 திமுக ஆட்சியில் வரலாறு காணாத மின்வெட்டால் தொழில்கள் பாதிக்கப்பட்டன. மீண்டும் நடக்க வேண்டியிருந்த மாபெரும் விபத்தில் இருந்து கோட்டை ஈஸ்வரன் நம்மைக் காப்பாற்றினார். அதை முதலமைச்சர் ஸ்டாலின் சிலிண்டர் விபத்து என்றார். தீவிரவாத செயலில் ஈடுபட்ட 13 பேரை என்.ஐ.ஏ கைது செய்துள்ளது. வானதி சீனிவாசன் குரல் கொடுக்கவில்லை என்றால், இதில் உயிரிழந்த நபருக்கு 10 இலட்ச ரூபாய் கொடுத்து சுதந்திர போராட்ட தியாகி என்று சொல்லியிருப்பார்கள்.

திமுக வரும் போது கோயம்புத்தூருக்கு தீய சக்தி வந்தது போலாகி விடும். செந்தில் பாலாஜி சிறைக்கு சென்றதால் மற்றொரு ஆபத்தில் இருந்தும் கோயம்புத்தூர் மக்கள் தப்பியுள்ளார்கள். நாடாளுமன்ற தேர்தலில் திமுக என்ற தீய சக்தியை அப்புறப்படுத்த வேண்டும். மத்திய அரசு மற்றும் வானதி சீனிவாசன் என்ற டபுள் இன்ஜின் கோயம்புத்தூரை அடுத்த கட்ட வளர்ச்சிக்கு இழுத்துக் கொண்டுள்ளது.

பாஜக ஆட்சிக்கு வரும்போது சட்டமன்ற உறுப்பினர்கள் எப்படி இருப்பார்கள் என்பதற்கு வானதி சீனிவாசன் உதாரணம். சில அரசியல் தலைவர்களுக்கு வானதி சீனிவாசன் மீது தான் கண். 6 மாதத்திற்கு ஒருமுறை மக்கள் நீதி மய்யம் இங்கு ஆர்ப்பாட்டம் செய்ய வந்து விடுவார்கள். ஆடல் பாடல் நடத்தியும் மக்கள் ஏமாறவில்லை என்பதால், கோயம்புத்தூர் மீது கமல்ஹாசனுக்கு கண் உள்ளது. கமல்ஹாசனுக்கு காங்கிரசில் சேர்வதா? திமுக சேர்வதா? என்ற குழப்பத்திற்கு 6 மாதமாக விடை தேடிக் கொண்டிருக்கிறார்.

கமல்ஹாசன் சாப்பிடும் பருக்கையில் கூட உதயநிதி ஸ்டாலின் என்ற பெயர் ஒட்டிக் கொண்டிருக்கிறது. இது தான் கமல்ஹாசனின் வீரமா? தன்மானமா? நடிப்பிற்கு இலக்கணமாக உள்ள கமல்ஹாசன், உதயநிதி ஸ்டாலினை பார்த்து பம்முகிறார். கமல்ஹாசனின் தோலை கோயம்புத்தூர் மக்கள் முழுமையாக உரித்து வெளிச்சம் போட்டு காட்டியுள்ளார்கள் என தெரிவித்தார்.

1962- ல் திமுக ஆட்சி.. அண்ணாமலைக்கு என்ன ஆச்சி …

தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் நடைபெற்று வரும் “என் மண் என் மக்கள்” பாதயாத்திரை கோவை தெற்கு தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெற்றது. இந்த பாதயாத்திரையில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை உடன், கோவை தெற்கு தொகுதி பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் பங்கேற்றார். ஏராளமான பாஜக நிர்வாகிகளும், தொண்டர்களும் இதில் கலந்து கொண்டனர்.

அப்போது பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, கோயம்புத்தூரில் கவுண்டம்பாளையம் தொகுதியில் இருந்து கொண்டு மருதமலை முருகனை பற்றி பேசாமல் போனால் தப்பாகிவிடும். 1962 வரை மருதமலை முருகனை பார்க்க வேண்டும் என்றால் கரெண்ட் கிடையாது.. சாதாரண படிக்கெட்டில் ஏற வேண்டும்.

திமுக மருதமலை முருகன் கோயிலுக்கு மின்சாரம் கொடுக்கக்கூடாது என்பதை கொள்கையாக வைத்திருந்தார்கள். அதை உடைத்து மருதமலை முருகன் கோயிலுக்கு மின்சாரத்தை கொடுத்தவர் யார் என்றால் சின்னப்ப தேவர் ஐயாதான்.. உங்களுக்கு சின்னப்ப தேவர் ஐயாவை தெரியும். தமிழகத்திலேயே முக்கியமான சினிமா படைப்புகளை தயாரித்தவர்.

அவரே போய் மருதமலைக்கு மின்சாரம் தர வேண்டும் என்று ரிஜிஸ்டர் பணத்தை கட்டி புரட்சி தலைவர் எம்ஜிஆர் அவர்கள் ஆட்சி காலத்தில் மருத மலை முருகன் கோயிலுக்கு கரெண்ட் வந்தது. மருதமலை முருகன் கோவிலுக்கு திமுக ஆட்சியில் மின்சாரம் வழங்கப்படவில்லை என்று குற்றம்சாட்டினார். ஆகவே திமுக என்பது எப்போதுமே சனாதன தர்மத்திற்கும், இந்து தர்மத்திற்கும் எதிராகவே இருக்கும் என்பதற்கு இதுஒரு உதாரணம்” என்று கூறியிருந்தார். இந்த அண்ணாமலை பேசிய பேச்சு சர்ச்சையாக மாறி இருக்கிறது.

1962-ல் திமுக ஆட்சிக்கே வராத நிலையில் திமுகதான் மருதமலை முருகன் கோயிலுக்கு மின்சாரம் தரவில்லை என்று பேசியதாக நெட்டிசன்கள் குற்றம்சாட்டி உள்ளனர். இந்த வீடியோவை சமூக வலைதளங்களில் பதிவிட்டு பதிலடி கொடுத்து வரும் திமுக ஆதரவாளர்கள் பலர், திமுக ஆட்சிக்கு வந்ததே 1967ல் தான் என்றும், எப்படி 1962-ல் மின்சாரம் தராமல் திமுக இருந்திருக்க முடியும் என்றும் கூறி வருகிறார்கள்.

ஆர்.கே.சண்முகம் செட்டியின் உருவச்சிலை மத்திய அமைச்சர் திறந்து வைப்பு

கோயம்புத்தூர் ரேஸ்கோர்சில் உள்ள தென் இந்திய நூற்பாலைகள் சங்கத்தின் 90-வது ஆண்டு விழாவையொட்டி, சங்க நிறுவனர் ஆர்.கே.சண்முகம் செட்டியின் உருவச்சிலை மத்திய ஜவுளித்துறை அமைச்சர் பியூஷ்கோயல் கலந்து கொண்டு சிலையை திறந்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் மத்திய ரெயில்வே மற்றும் ஜவுளித்துறை இணை மந்திரி தர்ஷனா விக்ரம் ஜர்தோஷ், பா.ஜ.க. தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ., பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை, தென்னிந்திய பஞ்சாலைகள் சங்க தலைவர் ரவிஷாம், இந்திய தொழில்கூட்டமைப்பு தலைவர் ராஜ்குமார் ஆகியோர் கலந்துகொண்டனர்.

காவல் நிலையத்தை பொதுமக்கள் முற்றுகை..!

கோயம்புத்தூர் மாவட்டம், பொள்ளாச்சி அருகே மரபேட்டையில் உள்ள பொட்டு மேடு பகுதியில் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் அங்கு நாட்டுக்கல்பாளையத்தை சேர்ந்த சக்திநாராயணனுக்கு சொந்தமான நிலத்தை சுத்தம் செய்ய அவரது டிரைவர் கலைபிரபு சென்றார்.

அவர், பொக்லைன் எந்திரம் மூலம் மண்ணை கொட்டியபோது, குடியிருப்புகளின் வழித்தடத்தை மறைத்து கொட்டியதாக கூறப்படுகிறது.இதை கண்ட அப்பகுதி பொதுமக்கள், அவரை தடுத்து நிறுத்தினர். உடனே அவர்களுடன், கலைபிரபு வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது சாதி பெயரை சொல்லி திட்டியதாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் அவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மகாலிங்கபுரம் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. உடனே காவல்துறை, அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் அந்த நபர் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளிக்கப்பட்டது. இதை ஏற்று போராட்டத்தை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

நண்பர் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதி… முதியவரிடம் ரூ.1½ லட்சம் மோசடி

நண்பர் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாகவும், மருத்துவ சிகிச்சை செலவுக்கு அவசர மாக பணம் தேவை என்றும் கூறி நம்ப வைத்து பணமோசடி செய்வது தற்போது அதிகரித்து வருகிறது. அந்த வகையில் கோயம்புத்தூரை சேர்ந்த 60 வயது முதியவர் ஒருவ ரின் நண்பர் லண்டனில் வசித்து வருகிறார். அவரின் புகைப்படத்தை செல்போனில் முகப்பு படமாக வைத்த எண்ணில் இருந்து முதியவருக்கு இரவு 10 மணி அளவில் குறுஞ்செய்தி வந்தது.

அதில், உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளேன். உடனே ரூ.1½ லட்சம் அனுப்பி வைத்தால், மருத்துவமனையில் இருந்து வெளியே வந்ததும் பணத்தை தந்து விடுவதாகவும் குறிப்பிடப்பட்டு இருந்தது. அதை பார்த்த முதியவர், உடனே தனது நண்பரின் செல்போனுக்கு தொடர்பு கொண்டார். ஆனால் அவர் செல்போனை எடுக்கவில்லை. இதனால் அவர், தனக்கு குறுஞ்செய்தி வந்த செல்போன் வாட்ஸ்அப்பில் தனது நண்பரின் முகப்புபடம் இருந்ததால் அதை நம்பி அந்த எண்ணுக்கு ரூ.1½ லட்சத்தை அனுப்பி உள்ளார். மறுநாள் அவரது நண்பரிடம் பேசிய போது தான் தன்னிடம் யாரோ பணத்தை மோசடி செய்தது தெரிய வந்தது.

இது குறித்து அவர் சைபர் கிரைம் காவல்துறையில் புகார் அளித்தார். இதுபோன்ற நண்பரின் மருத்துவ சிகிச்சை பணம் தேவை என்று குறுஞ்செய்தி வந்தால் உடனே சம்மந்தப்பட்ட நபரிடம் பேசி உறுதி செய்து கொண்டே பிறகு பணம் அனுப்ப வேண்டும். அறிமுகம் இல்லாத நபர் மற்றும் தெரியாத எண்ணில் இருந்து வரும் தகவல்களை நம்பி ஏமாறாமல் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதே முக்கியம்.

கோயம்புத்தூர் மாவட்ட முதன்மை நீதிமன்றத்திற்கு முதல் பெண் நீதிபதி

கோயம்புத்தூர் மாவட்ட முதன்மை நீதிமன்றம் நீதிபதியாக பணியாற்றி வந்த ராஜசேகர் பதவி உயர்வு பெற்று சென்னை உயர்நீதி மன்றத்திற்கு நீதிபதியாக நியமிக்கப்பட்டார். இதனால் டான்பிட் நீதி மன்ற நீதிபதி செந்தில்குமாருக்கு, மாவட்ட முதன்மை நீதிபதியாக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் கோயம்புத்தூர் மாவட்ட முதன்மை நீதி மன்றத்திற்கு புதிய நீதிபதியாக ராமநாதபுரம் மாவட்ட முதன்மை நீதிபதியாக பணியாற்றிய ஜி.விஜயா நியமிக்கப்பட்டு உள்ளார்.

கோயம்புத்தூர் மாவட்ட நீதிமன்றம் தோற்றுவிக்கப்பட்டு 1880-ம் ஆண்டுகளில் இருந்து இதுவரை மாவட்ட முதன்மை நீதிபதியாக பெண் நீதிபதி ஒருவர் கூட நியமிக்கப்பட வில்லை. தற்போது அந்த பெருமையை கோவை மாவட்ட நீதிபதியாக நியமிக்கப் பட்டு உள்ள ஜி.விஜயா பெற்று உள்ளது குறிப்பிடத்தக்கது.

மணப்பெண்ணின் பேச்சை கேட்டு முகத்தை லேசாக டிரிம் செய்து கொண்ட மணமகன்… திருமணத்தை நிறுத்திய தந்தை..!

கோயம்புத்தூரை அடுத்த சூலூர் பகுதியை சேர்ந்த தொழில் அதிபர் ஒருவர் தனது மகனுக்கு பெண் பார்த்து வந்த நிலையில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு, தனது மகனுக்கு பெரிய இடத்தில் பெண் பார்த்தார். அதன்பிறகு இருவீட்டாரும் பேசி சம்பந்தம் செய்து திருமண ஏற்பாடுகளில் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர். நேற்றுமுன்தினம் திருமணம் நடைபெற இருந்தது. இதற்கிடையே புதுமணப்பெண்ணும், புதுமாப்பிள்ளையும் செல்போனில் அடிக்கடி பல்வேறு விஷயங்கள் குறித்து பேசி மகிழ்ந்தனர்.

இதற்கிடையே தொழில் அதிபர் தனது மகனிடம், திருமணம் நடைபெற இருப்பதால் முகத்தில் தாடியை சவரம் செய்தால் நன்றாக இருக்கும் என்று கூறிய நிலையில், மணமகளை செல்போனில் தொடர்பு கொண்டு முகச்சவரம் செய்ய சலூனுக்கு செல்ல உள்ளதாக கூறி உள்ளார். அதை கேட்ட மணமகள், உங்களுக்கு தாடி தான் அழகாக உள்ளது. எனவே முகச்சவரம் செய்ய வேண்டாம். லேசாக டிரிம் செய்து கொள்ளுங்கள் என்று கூறி உள்ளார்.

அதை ஏற்றுக் கொண்ட மணமகன், தனது தந்தை கூறியபடி முகச்சவரம் செய்யாமல், மனைவியாக வர உள்ள மணப்பெண் கூறியபடி சலூனுக்கு சென்று தாடியை லேசாக டிரிம் மட்டும் செய்து விட்டு வீட்டிற்கு சென்று உள்ளார். அதை பார்த்த தொழில் அதிபர் அதிர்ச்சி அடைந்து, தனது மகனிடம் ஏன் நான் கூறியபடி முகச்சவரம் செய்ய வில்லை என்று கேட்டு உள்ளார். அவருக்கு உரிய பதில் அளிக்காமல் புதுமாப்பிள்ளையான மகன் தடுமாறிய நிலையில் தொழில் அதிபர் விடாமல் கேட்டதால், வருங்கால மனைவி கூறியபடி கேட்டு தாடியை டிரிம் செய்ததாக கூறினார்.

மகன் சொன்னதை கேட்டு ஆத்திரத்தின் உச்சிக்கே சென்ற தொழில் அதிபர், பெற்று வளர்த்து ஆளாக்கிய என் பேச்சை கேட்காமல் நாளைக்கு வரப்போகும் மனைவியின் பேச்சை கேட்டு நடக்கிறாய். எனது வார்த்தைகளை மதிக்க தவறி விட்டாய் என்று கூறி கண்டித்து உள்ளார். இதனால் நிலைகுலைந்து போன மகன், தனது தந்தையை சமாதானப்படுத்த எவ்வளவோ முயற்சி செய்தார். ஆனால் அதை ஏற்க தொழில் அதிபரின் மனம் மறுத்து விட்டது. மேலும் ஆவேசம் அடைந்த தொழில் அதிபர், தனது மகனை வீட்டை விட்டு வெளியே தள்ளி கதவை பூட்டி விட்டார்.

இதனால் புதுமாப்பிள்ளை இரவு முழுவதும் வீட்டின் வாசலில் படுத்துக் கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டது. திருமணம் நிறுத்தம் அப்போது மணமகன் தனக்கு நேர்ந்த நிலை பற்றி மணமகளிடம் கூறி உள்ளார். அதை கேட்டு அதிர்ச்சி அடைந்த புதுப்பெண், நிலைமையை சரி செய்ய முயன்றார். இதற்காக அவர் தனது தந்தையிடம் நடந்ததை கூறி, மணமகனின் தந்தையான தொழில் அதிபரிடம் பேசி சமாதானம் செய்யுமாறு கூறி உள்ளார்.

மகளின் நிலையை நினைத்து கலங்கிய தந்தை, மணமகனின் தந்தையான தொழில் அதிபரை நேரில் சந்தித்து சமாதான பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் அவர் கூறிய எந்த ஒரு சமாதானத்தையும் ஏற்க தொழில் அதிபர் மறுத்து விட்டதாக தெரிகிறது. நிலைமை கைமீறிப் போனதால் மணமகளின் தந்தை அங்கிருந்து சோகத்துடன் வெளியேறி உள்ளார். உறவினர்கள் சோகம் இதற்கிடையே மணமகனின் தந்தையான தொழில் அதிபர் சமூக வலைத்தளத்தில் ஒரு பதிவை வெளியிட்டார். அதில், எனது மகனின் திருமணம் நின்று விட்டது. எனவே திருமண மண்டபத் துக்கு யாரும் வர வேண்டாம் என்று குறிப்பிட்டு இருந்தார். அதை பார்த்த மணமகள் வீட்டினர் அதிர்ச்சியில் உறைந்து போனார்கள்.

தேங்காய் வியாபாரியிடம் தேங்காய் வாங்கி ரூ.11 லட்சம் மோசடி

நாகர்கோவில் பார்வதிபுரத்தை சேர்ந்த விஷால் கிருஷ்ணன் ஒரு தேங்காய் வியாபாரி. இவரிடம் கோயம்புத்தூர் காந்திபுரம் 100 அடி ரோடு ராஜூ நாயுடு தெருவை சேர்ந்த அன்வர் சதாத் என்பவர் கடந்த ஆகஸ்டு மாதம் 17 ஆயிரம் கிலோ தேங்காய் வாங்கினார். அந்த தேங்காய்க்கு அன்வர் சதாத் முதல்கட்டமாக ரூ.3 லட்சம் கொடுத்தார்.

பின்னர் ரூ.10 லட்சத்து 26 ஆயிரத்து 846, ரூ.1 லட்சத்து 40 ஆயிரத்து 75 என 2 காசோலைகளை கொடுத்தார். அந்த காசோலைகளை விஷால் கிருஷ்ணன் வங்கியில் செலுத்தினார். ஆனால் அன்வர் சதாத்தின் வங்கி கணக்கில் போதிய பணம் இல்லாததால் காசோலைகள் திரும்பி விட்டன. ஆகையால், விஷால் கிருஷ்ணன், அன்வர் சதாத்தை தொடர்பு கொண்டு பணம் கொடுக்கும்படி கூறினார். உடனே அவர் ரூ.74 ஆயிரம் மட்டும் கொடுத்தார். மீதி ரூ.11 லட்சத்தை கொடுக்க வில்லை.

அதைத்தொடர்ந்து விஷால் கிருஷ்ணன், பலமுறை தொடர்பு கொண்டு கேட்டும் அன்வர் சதாத் உரிய பதில் அளிக்காமல் காலம் கடத்தி உள்ளார். இதனால் ஏமாற்றம் அடைந்த விஷால் கிருஷ்ணன், ரத்தினபுரி காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் தேங்காய் வாங்கி ரூ.11 லட்சம் மோசடி செய்த அன்வர் சதாத் மீது மோசடி, நம்பிக்கை மோசடி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் காவல் துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ஆழியாற்றில் கழிவுநீர் கலப்பதால்… சுத்திகரிப்பு நிலையம் அமைக்க பொதுமக்கள் வலிவுறுத்தல்

கோயம்புத்தூர் ஆனைமலை அருகே 120 அடி கொள்ளளவு கொண்ட ஆழியாறு அணை உள்ளது. இந்த அணையில் இருந்து வரும் தண்ணீர் ஆனைமலை, கோட்டூர்,  மணக்கடவு, அம்பராம்பாளையம் வழியாக கேரளாவை சென்றடைகிறது. இதில் ஆனைமலை பேரூராட்சி குடிநீர் திட்டம் உள்பட 8 குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

ஆனைமலை ஆழியாற்றில் கழிவுநீர் கலப்பதால் நீர் மாசுபடும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. அதனால் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளார்கள்.  இந்நிலையில் ஆனைமலை பேரூராட்சி அலுவலகம் பின்புறம் உள்ள கால்வாய் வழியாக உப்பாறும், ஆழியாரும் ஒன்று சேரும் இடத்தில் தினசரி 6 லட்சம் லிட்டர் கழிவு நீர் ஆற்றில் கலக்கிறது.

இதனால் தண்ணீர் மாசுபடும் அபாயம் நிலவுகிறது. மேலும் அந்த தண்ணிரை குடிக்கும் பொதுமக்களுக்கு பல்வேறு உபாதைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. மேலும் 6 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட சுத்திகரிப்பு நிலையமும் பயன்பாட்டில் இல்லை. இதனால் கழிவுநீர் நீர் நேரிடையாகவே ஆற்றில் கலக்கிறது. எனவே அங்கு கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.