அஸ்வத்தாமன் கேள்வி: வெள்ளியங்கிரி மலை என்ன உங்கள் வீட்டு சொத்தா.. ?

வெள்ளியங்கிரி மலை ஏற அரசுக்கு ரூ.5353.95 கட்டணம் செலுத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் பக்தர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ள நிலையில் வெள்ளியங்கிரி மலை என்ன உங்கள் வீட்டு சொத்தா ? உதயநிதி ஸ்டாலின் அவர்களே ? என பாஜக நிர்வாகி அஸ்வத்தாமன் கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழ்நாடு மலையேற்றத் திட்டத்தில் இயற்கை ஆர்வலர்களை மகிழ்விக்கும் விதமாக நீலகிரி, கோவை, திருப்பூர், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தேனி உள்பட பல்வேறு மாவட்டங்களில் 40 தேர்ந்தெடுக்கப்பட்ட மலையேற்ற பாதைகளை வனத்துறை திறந்துள்ளது. இதில் வெள்ளியங்கிரி மலை ஏற அரசுக்கு ரூ 5353.95 கட்டணம் செலுத்த வேண்டும் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கு பக்தர்களும், இயற்கை ஆர்வலர்களும் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் வெள்ளியங்கிரி மலை என்ன உங்கள் வீட்டு சொத்தா என பாஜக நிர்வாகியான அஸ்வத்தாமன் கேள்வி எழுப்பியுள்ளார் . இதுதொடர்பாக அஸ்வத்தாமன் எக்ஸ் பக்கத்தில்,” துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் வெளியிட்டு இருக்கிற ஒரு அறிவிப்பில் தென்கைலாயமான வெள்ளியங்கிரி மலைக்கு செல்பவர்கள் ரூ. 5099 ரூபாய் தமிழக அரசுக்கு கட்ட வேண்டும் என்று சொல்லப்பட்டு இருக்கிறது. ‘மலையேற்றத்திட்டம்’ என்ற பெயரில் இந்த அநியாயத்தை திராவிட மாடல் அரசு செய்துள்ளது. நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக பக்தர்கள் வெள்ளியங்கிரி மலைக்கு சென்று சிவபெருமானை வணங்கி வருகின்றனர்.

வெள்ளியங்கிரி மலைக்கு வருகிறவர்கள் ஆன்மீக பக்தர்களே தவிர மலையேற்றத்திற்கு வருகிற சுற்றுலா பயணிகள் அல்ல. வெள்ளியங்கிரி மலைக்கு சிவராத்திரி தினத்தில் மட்டும் 3 லட்சத்திலிருந்து 4 லட்சம் பக்தர்கள் வந்து தரிசிக்கின்றனர். சித்ரா பௌர்ணமி தினத்தன்று சுமார் பத்து லட்சம் பக்தர்கள் வந்து தரிசிக்கின்றனர். சித்ரா பவுர்ணமி அன்று மலை அடிவாரத்தில் சுற்றி இருக்கிற கிராமத்து மக்கள் வில்லு வண்டியில் வந்து வள்ளி கும்மி, காவடி, ஒயிலாட்டம், மயிலாட்டம் ஆகிய நிகழ்ச்சிகளை நடத்தி காவடி ஏந்தி கொண்டு வெள்ளியங்கிரி மலையில் ஏறுவார்கள்.

இனிவரும் காலங்களில் அந்த சுற்றுவட்டார கிராமத்து மக்கள் காவடியுடன் வெள்ளியங்கிரி மலையில் ஏறுவதற்கு உதயநிதிக்கு 5099 ரூபாய் தண்டம் கட்ட வேண்டுமா !? தாணிகண்டி, முல்லாங்காடு உள்ளிட்ட சுற்றியுள்ள பல கிராம மக்கள் , வெள்ளியங்கிரியில் மீது அமர்ந்திருக்கிற சிவபெருமானை குலதெய்வமாக வணங்கி வருகின்றனர். இனிவரும் காலங்களில் அந்த கிராமங்களைச் சார்ந்த மக்கள் தன்னுடைய குலதெய்வத்தை கும்பிடுவதற்கு திராவிட மாடல் அரசுக்கு கப்பம் கட்ட வேண்டுமா!? வெள்ளியங்கிரிக்கு நாள்தோறும் லட்சக்கணக்கில் வரும் பக்தர்களை தடுப்பதற்கு உதயநிதி அவர்கள் திட்டம் தீட்டுகிறாரா !? என்ற கேள்வி எழுகிறது . சனாதன இந்து தர்மத்தை அழிப்பேன் என்று உதயநிதி தொடர்ந்து கூறி வருகிறார்.

அனைவரும் அறிந்ததே . இது உதயநிதி முன்னெடுத்துள்ள சனாதன இந்து தர்ம ஒழிப்பு சதி திட்டத்தின் ஒரு அங்கமா என்பதை உதயநிதி தெளிவுபடுத்த வேண்டும். தென் கைலாயமான வெள்ளியங்கிரியில் தமிழ் பாட்டி அவ்வையார் அவர்கள் பிரதிஷ்டை செய்து வழிபட்ட வெள்ளை விநாயகர் கோவில் ,சீதை வனம் ,பீமன் களி உருண்டை, சித்தர் கூரை உள்ளிட்ட பல்வேறு ஆன்மீக மையங்கள் உள்ளன.வெள்ளியங்கிரி மலையின் ஆறாவது மலையான திருநீர் மலையில் உள்ள ஆண்டி சுனையில் இருந்து புனித நீரை எடுத்து வந்து கும்பாபிஷேகம் பண்ண முடியாத நிலையில் இருக்கிற திருக்கோவில்களில் அபிஷேகம் செய்தால் அந்த கோவிலில் உடனடியாக கும்பாபிஷேகம் நடக்கும் என்பது இந்துக்களின் நம்பிக்கை. கடந்த வாரம் கூட திருவண்ணாமலையில் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் ஆய்வு என்கிற பெயரில் மலையை சுற்றி வந்தார்.

வேண்டுதலுக்காக கிரிவலம் வந்திருப்பார் என்று மக்கள் பலரும் நினைத்த நிலையில், இப்பொழுது, திருவண்ணாமலையில் கிரிவலம் வரும் பக்தர்களுக்கும் கூட கட்டணம் வசூலிக்கலாம் என்ற மோசமான யோசனையில் உதயநிதி அங்கு வந்து இருப்பாரோ என்கிற சந்தேகம் எழுகிறது. ஒரு மிகப்பெரிய ஆன்மீக ஆதார ஸ்தலமான வெள்ளியங்கிரி மலையின் வழிபாட்டை வெளிப்படையாகவே குலைக்கும் நோக்கத்தோடு இந்த அறிவிப்பை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. உடனடியாக இந்த அறிவிப்பை ரத்து செய்யவில்லை என்று சொன்னால் பாரதிய ஜனதா கட்சி மிகப்பெரிய போராட்டத்தை முன்னெடுக்கும்.” என அஸ்வத்தாமன் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

சி.வி.சண்முகம் கேள்வி: இது தமிழ்நாடா அல்லது கருணாநிதியின் குடும்ப நாடா..!?

இது தமிழ்நாடா அல்லது கருணாநிதியின் குடும்ப நாடா?,” என  சி.வி.சண்முகம் கேள்வி எழுப்பினர்.  விழுப்புரம் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு சி.வி.சண்முகம் தான் அளித்த புகார்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அறிந்து கொள்வதற்காக வந்திருந்தார். அவர் வந்த சமயத்தில் அலுவலகத்தில் காவல் கண்காணிப்பாளர் இல்லாததால் அவ முன்னாள் அமைச்சரும், எம்பியுமான சி.வி.சண்முகம் இன்று காலையில் விருக்காக பார்வையாளர்கள் அறையில் காத்திருந்தார். நீண்ட நேரமாகியும் காவல் கண்காணிப்பாளரை சந்திக்க முடியாமல் போனதால் மதியம் 12 மணியளவில் விழுப்புரம் ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தின் நுழைவாயிலில் முன்பு சி.வி.சண்முகம் தர்ணாவில் ஈடுபட்டார்.

அப்போது, சி.வி.சண்முகம் செய்தியாளர்களிடம் பேசுகையில், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விசிக நடத்திய மது மற்றும் போதைப் பொருள் ஒழிப்பு மாநாட்டில் அதிமுக சார்பில் நான் கலந்துகொள்ளப் போவதாகவும் அதுகுறித்து, அதிமுகவின் அதிகாரபூர்வ தொலைக்காட்சியான நியூஸ் ஜெ சேனலில் செய்தி வெளியானதாகவும் ஒரு தவறான தகவல் சமூகவலைதளங்களில் பரப்பப்பட்டது.

இது முழுக்க முழுக்க பொய்யான தகவல். திட்டமிட்டு எனது பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் பரப்பப்பட்ட பொய்ச் செய்தி என்பதால் நியூஸ் ஜெ சேனலும் மறுப்புச் செய்தி வெளியிட்டது. இந்தச் சம்பவத்தை குறிப்பிட்டு, சமூக வலைதளங்களில் பரப்பப்படும் வதந்திகள் குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகாரளித்தேன்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தல், விக்கிரவாண்டி இடைத் தேர்தல் சமயங்களிலும் இதுபோல எனக்கு எதிராக அவதூறு பரப்பினர். இது தொடர்பாக திமுக ஆட்சி பொறுப்பேற்றது முதல் இதுவரை தொடர்ந்து 23 புகார்கள் அளித்துள்ளேன். எந்த புகாரின் மீதும் நடவடிக்கையில்லை. என் மீது இந்த அரசு வழக்குப் பதிவுசெய்வதில் காட்டும் முனைப்பை, நான் அளிக்கும் புகார் மீது நடவடிக்கை எடுப்பதில் காட்டுவதில்லை. நான் காவல் கண்காணிப்பாளரை சந்திக்க முன்கூட்டியே அனுமதி வாங்கி இருந்தும் அவர் திட்டமிட்டு என்னைச் சந்திக்காமல் தவிர்த்துள்ளார்.

முன்னாள் அமைச்சரும், வழக்கறிஞரும், மாநிலங்களவை உறுப்பினருமான நான் அளிக்கும் புகார்கள் மீதே நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றால் பொதுமக்களின் நிலை என்ன? இது தமிழ்நாடா அல்லது கருணாநிதியின் குடும்ப நாடா?,” என்று அவர் கேள்வி எழுப்பினர். பின்னர், விழுப்புரம் தாலுகா ஆய்வாளர் செல்வவிநாயகம், மாவட்ட குற்றப்பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் ராமலிங்கம் ஆகியோர் சி.வி.சண்முகத்திடம் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தினர்.

ஆனால், அந்த சமாதானத்தை எல்லாம் ஏற்காத அவர், “காவல் கண்காணிப்பாளரை நேரில் வரும் வரை தர்ணா போராட்டம் தொடரும்,” எனக்கூறி போராட்டத்தை தொடர்ந்தார். இதனை தொடர்ந்து பிற்பகல் 1 மணிக்கு விழுப்புரம் தாலுகா காவல்துறை அனுமதியின்றி தர்ணா போராட்டம் நடத்தியதாக சி.வி.சண்முகம் கைது செய்யப்பட்டார்.

டிடிவி தினகரன் கேள்வி: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தற்போது என்ன பதில் சொல்லப் போகிறார்?

துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அரசு நிகழ்வில் தமிழ்த்தாய் வாழ்த்து அவமதிக்கப்பட்டுள்ளது. ஆளுநருக்கு எதிராக கொந்தளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தற்போது என்ன பதில் சொல்லப் போகிறார்? என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது குறித்து டிடிவி தினகரன் தனது எகஸ் பக்கத்தில், துணை முதல்வர் திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்கள் தலைமையில் நடைபெற்ற அரசு நிகழ்வில் தமிழ்த்தாய் வாழ்த்து அவமதிப்பு – மாண்புமிகு ஆளுநர் அவர்களுக்கு எதிராக கொந்தளித்த முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் தற்போது என்ன பதில் சொல்லப் போகிறார்?

சென்னைத் தலைமைச் செயலகத்தில் துணை முதல்வர் திரு.உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து இரண்டு முறை தவறாக பாடப்பட்டிருப்பதாக வெளியாகியிருக்கும் செய்திகள் அதிர்ச்சியளிக்கிறது.

சென்னை தொலைக்காட்சி நிலையத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக நடைபெற்ற நிகழ்வில் தமிழ்த்தாய் வாழ்த்து அவமதிக்கப்பட்டதாக கூறி அந்நிகழ்ச்சியில் பங்கேற்ற மாண்புமிகு ஆளுநர் அவர்கள் மீது இனவாத கருத்துக்களை முன்வைத்த முதலமைச்சர் அவர்களும், ஆளுநர் அவர்களின் வயது மற்றும் பொறுப்பைக் கூட உணராமல் பொதுவெளியில் தரக்குறைவான விமர்சனங்களை முன்வைத்த துணை முதலமைச்சர் அவர்களும் தற்போது நடைபெற்றிருக்கும் தமிழ்த்தாய் அவமதிப்புக்கு என்ன பதில் சொல்லப் போகிறார்கள்?

துணை முதலமைச்சர் தலைமை தாங்கிய நிகழ்வில் அன்னைத் தமிழின் பெருமையை உலகறியச் செய்யும் தமிழ்த்தாய் வாழ்த்து தவறாக பாடப்பட்டிருப்பதன் மூலம், தமிழ்ப்பற்று மற்றும் தாய்மொழிப்பற்று எனும் திமுக அரசின் கபட நாடகம் அம்பலமாகியுள்ளது.

மாமியார் உடைத்தால் மண்குடம் மருமகள் உடைத்தால் பொன்குடம் என்ற வரிகளுக்கு ஏற்ப தமிழ்த்தாய் வாழ்த்திற்கு ஏற்பட்டிருக்கும் அவமதிப்பை சாதாரண நிகழ்வாக கடந்து செல்லாமல், அதற்கு காரணமானவர்கள் யாராக இருப்பினும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதோடு, இனிவரும் காலங்களில் தமிழ்த்தாய் வாழ்த்திற்கு கூடுதல் முக்கியத்துவம் அளித்து முறையான பயிற்சி பெற்றவர்களை வைத்து பாடப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களை வலியுறுத்துகிறேன் என டிடிவி தினகரன் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

எல்.முருகன் கேள்வி: உதயநிதி ஸ்டாலின் பதவி விலகுவாரா..!? மு.க.ஸ்டாலின் உதயநிதி ஸ்டாலினை பதவி நீக்கம் செய்வாரா..!?

உதயநிதி ஸ்டாலின் பங்கேற்ற அரசு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து தவறாக பாடப்பட்டுள்ளதே அதற்கு மு.க.ஸ்டாலின் என்ன பதில் சொல்லப்போகிறார்? தான் கலந்து கொண்ட அரசு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து தவறாக பாடப்பட்டதற்கு பொறுப்பேற்று உதயநிதி ஸ்டாலின் பதவி விலகுவாரா..!? அல்லது உதயநிதி ஸ்டாலினை மு.க.ஸ்டாலின் பதவி நீக்கம் செய்து விடுவாரா..!?” என மத்திய இணை அமைச்சர் எல். முருகன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுதொடர்பாக எல். முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் தமிழ்நாடு அரசின் புத்தாய்வுத் திட்டப் பயிற்சியை நிறைவு செய்தோருக்கான சான்றிதழ்களை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று வழங்கினார். இந்த நிகழ்ச்சியின் தொடக்கத்தில் அங்கிருந்த அரசு ஊழியர்கள் தமிழ்த்தாய் வாழ்த்தைப் பாடினர். அப்போது கண்டமிதில் என்பதை கண்டமதில் என்றும், புகழ் மணக்க என்பதை ‘திகழ்’ மணக்க என்றும் பாடினர். மேலும் மைக் சரியாக வேலை செய்யாததால் , திராவிட நல் திருநாடும் என்ற வரியில் ‘ திருநாடும் ‘ என்ற வார்த்தை ஒலிபெருக்கியில் ஒலிப்பதில் இடைவெளி ஏற்பட்டது.

தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை பிழையுடனும் , தடுமாற்றத்துடனும் அரசு ஊழியர்கள் பாடியதைக் கண்ட துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தனது அருகில் அமர்ந்திருந்த சிறப்புத்திட்ட செயலாக்கத்துறை செயலாளர் தாரேஸ் அகமதுவிடம் நிகழ்ச்சியின் நிறைவில் பிழையின்றி ஒருமுறை தமிழ்த்தாய் வாழ்த்தை பாடச் செல்லுமாறு கூறினார் . துணை முதலமைச்சர் அறிவுறுத்தல்படி இரண்டாம் முறை தமிழ்த்தாய் வாழ்த்தை பாடிய அரசு ஊழியர் குழுவினர் மீண்டும் அதே பிழையுடன் பாடினர். இம்முறை மைக் சரியாக வேலை செய்ததால், பிழைகள் அனைத்தும் தெளிவாகத் தெரிந்தன.

டிடி தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தவறுதலாக தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டு, அதற்கு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த தொலைக்காட்சி சார்பில் மன்னிப்பு கேட்டது. ஆனாலும் கூட, அதை வைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் திமுகவினர் எவ்வாறு கீழ்த்தரமான அரசியலை செய்தனர் என்பதை தற்போது நினைவுபடுத்த விரும்புகிறேன். நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தனராக ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டதற்காக அவர் மீது இனவாத கருத்துக்களை அள்ளித் தெளித்து பதவி விலகுமாறு வற்புறுத்தியவர் மு.க.ஸ்டாலின். மத்திய அரசு ஆளுநரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.

தற்போது தனது புதல்வர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்ற அரசு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து தவறாக பாடப்பட்டுள்ளதே அதற்கு மு.க.ஸ்டாலின் என்ன பதில் சொல்லப் போகிறார்? தான் கலந்து கொண்ட அரசு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து தவறாக பாடப்பட்டதற்கு பொறுப்பேற்று உதயநிதி ஸ்டாலின் பதவி விலகுவாரா? அல்லது தனது புதல்வர் உதயநிதி ஸ்டாலினை மு.க.ஸ்டாலின் பதவி நீக்கம் செய்து விடுவாரா? தமிழ்த்தாய் வாழ்த்து தவறாக பாடப்பட்ட விஷயத்தில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட ஆளுநர் மீதே பழி சொல்லும் தந்தையும் மகனும், தாங்கள் வழிநடத்தும் தமிழக அரசின் நிகழ்ச்சியில், அவர்கள் தலைமையில் நடக்கும் கூட்டத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து தவறாக பாடப்பட்டால் பொறுப்பேற்க மாட்டார்களா?

இதை வைத்து அவர்கள் மீது இனவாத கருத்துக்களை அள்ளி தெளித்தால் அது சரியானதாக இருக்க முடியுமா? நிகழ்ச்சிக்கு பின்னர் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில், செய்தியாளர்கள் இதுபற்றி கேள்வி எழுப்பியதற்கு, “இந்த விவகாரத்தை பெரிய பிரச்சினையாக்கி விடாதீர்கள்” என மழுப்புகிறார் உதயநிதி ஸ்டாலின். ஆளுநர் பங்கேற்ற நிகழ்ச்சியை பெரும் பிரச்சினையாக்கி எவ்வாறு அரசியல் செய்தோம் என்பதை தந்தையும் மகனும் இப்போதாவது உணர்ந்து பார்க்க வேண்டும்.

ஆளுநர் நிகழ்ச்சியை வைத்து தொடர்ந்து விவாதங்கள் நடத்திய ஊடகங்கள் இதுபற்றி பேசுமா? ஆளுநருக்கு ஒரு அளவுகோல்- உதயநிதி ஸ்டாலினுக்கு ஒரு அளவுகோலா? சாதாரணமாக நடந்த தவறை சுட்டிக்காட்டி திருத்தச் சொல்வது தான் நல்ல தலைவர்களுக்கு அழகு. இந்த விவகாரத்தை பூதாகரமாக்கி இனவாத அரசியல் செய்வது தான் போலி திராவிட மாடல். இதனை அரசியல் கட்சித் தலைவர்கள் மட்டுமல்லாமல் ஊடகங்களும் உணர வேண்டும்.” என அந்த அறிக்கையில் தெரிவிக்கபட்டுள்ளன.

ஜெயக்குமார் கேள்வி: தமிழக மீனவர்களை மத்திய-மாநில அரசுகள் கண்டும் காணாமலும் இருப்பது ஏன்..!

இலங்கைக் கடற்படையினரால் தொடர்ந்து தாக்கப்படும் சிறைபிடிக்கப்படும் தமிழக மீனவர்களை மத்திய-மாநில அரசுகள் கண்டும் காணாமலும் இருப்பது ஏன்? என ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார். வங்கக் கடலில் மீன் பிடிப்பதற்காக செல்லும் தமிழக மீனவர்கள் அடிக்கடி படகுகள் பறிமுதல் செய்யப்படுவதும், கைது செய்யப்படுவதும், தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது.

இதனிடையே ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 16 மீனவர்கள் நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அவர்களை எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி இலங்கைக் கடற்படையினர் கைது செய்தனர். இந்த சம்பவம் குருடு முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் தனது எக்ஸ் பக்கத்தில், இலங்கைக் கடற்படையினரால் தொடர்ந்து தாக்கப்படும் சிறைபிடிக்கப்படும் தமிழக மீனவர்களை மத்திய-மாநில அரசுகள் கண்டும் காணாமலும் இருப்பது ஏன்?

தேர்தல் வரும் போது மட்டும் தான் உங்களுக்கு மீனவர்கள் நியாபகம் வருமா? கூணங்குப்பம் முதல் நீரோடி வரை 1060கி.மீ தொலைவிற்கு பரவி வாழும் மீனவர்கள் பல்வேறு இன்னல்களையும் அரசின் அச்சுறுத்தல்களையும் சந்தித்து வருகின்றனர்! மிக்சர் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் மீன்வளத்துறை அமைச்சர், இனியாவது மீனவர்கள் மீது கவனம் செலுத்துவாரா? என எக்ஸ் பக்கத்தில் ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.