2026 ஜூன் வரை பாஜகவினர் ஒவ்வொருவரின் நாடி, நரம்பு, ரோமங்கள் கூட தேர்தல் வெற்றியை நோக்கித்தான் இருக்க வேண்டும் என பாஜக தமிழக அமைப்பு பொதுச் செயலாளர் கேசவ விநாயகம் தெரிவித்துள்ளார். திண்டுக்கல் கிழக்கு மாவட்ட பாஜக அலுவலகம் திறப்பு விழா இன்று திண்டுக்கல் குள்ளனம்பட்டியில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் பாஜக மாநில அமைப்பு பொதுச் செயலாளர் கேசவவிநாயகம் கலந்து கொண்டு பேசுகையில், “மாவட்ட அளவில் பாரதிய ஜனதா கட்சிக்கு அலுவலகங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அரசியல் கட்சியின் வெற்றிக்கு அழகே தேர்தலில் வெற்றி பெறுவதுதான்.
ஒரு காலத்தில் பாஜக கை ஊன்ற முடியாது, கால் ஊன்ற முடியாது, கண்ணுக்கு எட்டிய தூரம் காணவில்லை என்று பேசியவர்கள் மத்தியில் இன்று பாஜக வளர்ந்துள்ளது. தமிழகத்தில் திமுகவுக்கும் பாஜகவுக்கும்தான் போட்டி என்ற நிலை உருவாகியுள்ளது. பாஜக மிகப் பெரிய சக்தி வாய்ந்த கட்சி என்று காங்கிரஸ் மூத்த தலைவர் சிதம்பரம் கூறியுள்ளார். தமிழகத்தில் பாஜக மிகப் பெரிய வளர்ச்சி பெறவேண்டும்.
இன்று பாஜக தமிழகத்தில் அனைத்து தொகுதிகளிலும் வெற்றிபெறும் வகையில் வலிமையாக இருக்கவேண்டும். 2026 ஜூன் வரை நமது ஒவ்வொருவரின் நாடி, நரம்பு, ரோமங்கள் கூட தேர்தல் வெற்றியை நோக்கித்தான் இருக்க வேண்டும்,” என கேசவ விநாயகம் தெரிவித்தார்.