எடப்பாடி பழனிசாமி: நயினார் நாகேந்திரன் விரும்பினால் என்ன செய்வது..! தன்மானம் தான் முக்கியம்..!

‘அதிமுகவுடன் இணக்கம் ஏற்பட்டால் மகிழ்ச்சி தான் என்று நயினார் நாகேந்திரன் விரும்பினால் மட்டும் என்ன செய்வது, எங்களுக்கு தன்மானம்தான் முக்கியம்’ என எடப்பாடி பழனிசாமி தெவிரித்துள்ளார். சுதந்திர போராட்ட தியாகி கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின் 153-வது பிறந்தநாளை முன்னிட்டு நேற்று நெல்லையில் உள்ள அவரது மணிமண்டபத்தில் நயினார் நாகேந்திரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

பின்னர் செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளிக்கையில், அதிமுக, பாஜக இடையே இணக்கம் ஏற்பட்டால் மகிழ்ச்சிதான் என நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று செய்தியாளர்களிடம் பேசுகையில், அதிமுகவுடன் இணக்கம் ஏற்பட்டால் மகிழ்ச்சி தான் என பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் கூறியிருப்பது குறித்து நிருபர்கள் கேட்டதற்கு பதிலளித்த எடப்பாடி பழனிசாமி, ‘அவர் விரும்பினால் மட்டும் என்ன செய்வது.

அதிமுக தலைமையை விமர்சிப்பதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும். அதிகாரத்துக்கு நாங்கள் என்றுமே அடிமையாக இருந்ததில்லை. எங்களுக்கு என மரியாதை, தனித்துவம் உள்ளது. தலைவர்களைப்பற்றி அவதூறாக பேசுகிறார்கள். மனசாட்சி உள்ளவர்கள் யாரும் இதனை ஏற்க மாட்டார்கள். வெற்றி தோல்வி என்பது வேறு, தன்மானம் தான் முக்கியம்’ என எடப்பாடி பழனிசாமி பதிலளித்தார்.

 

நயினார் நாகேந்திரன்: பாஜக – அதிமுக இடையே இணக்கம் ஏற்பட்டால் மகிழ்ச்சி..!

சுதந்திர போராட்ட தியாகி கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின் 153-வது பிறந்தநாளை முன்னிட்டு நேற்று நெல்லையில் உள்ள அவரது மணிமண்டபத்தில் நயினார் நாகேந்திரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளிக்கையில், தமிழக பாஜக பணிகளை கண்காணிப்பது தொடர்பாக கட்சித்தலைமை முடிவு செய்து ஒருங்கிணைப்பு குழுவை அமைத்திருக்கிறது. அதில் எனது பெயர் இடம்பெறவில்லை. தமிழகத்தில் என்ன செய்ய வேண்டும் என்பதை கேட்டு அறிவதற்காக அந்த குழு தலைவர் டெல்லி சென்றுள்ளார்.

விஜயதரணி எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து விட்டு பாஜகவுக்கு வந்துள்ளார். ஆகையால் அவருக்கு பாஜக வில் ஏதாவது ஒரு பதவி கொடுத்திருக்க வேண்டும். அதில் தற்போது காலதாமதம் ஏற்பட்டுள்ளது. எனினும் அவர் வருத்தப்பட வேண்டாம். வரும் காலத்தில் அவருக்கு உரிய பதவி கொடுக்கப்படும். கட்சியில் எனக்கும் பதவி இல்லை. அதிமுகவில் பல உயர்ந்த பதவிகளில் இருந்து விட்டு பாஜகவுக்கு வந்தேன். பின்னர் மாநில துணைத்தலைவர் பதவி கொடுத்தார்கள். தற்போது சட்டமன்ற குழு தலைவராக மட்டும் இருக்கிறேன். அதிமுக, பாஜக இடையே இணக்கம் ஏற்பட்டால் மகிழ்ச்சிதான் என நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.

கே.என்.நேரு: “கூட்டணியை எங்கள் தலைவர் விட்டுக் கொடுக்க மாட்டார்..!”

சுதந்திர போராட்ட தியாகி கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின் 153-வது பிறந்தநாளை முன்னிட்டு திருச்சி நீதிமன்றம் அருகே உள்ள அவரது உருவச்சிலைக்கு திமுக முதன்மை செயலாளரும், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் கே.என்.நேரு பேசுகையில், திமுக தலைமையிலான கூட்டணி மிகச் சரியான கூட்டணி. நான் லால்குடியில் நேற்று பேசியதை சிலர் தவறாக திரித்து வெளியிட்டுள்ளனர். என்றைக்கும் இப்போதைய கூட்டணியை எங்கள் தலைவர் விட்டுக்கொடுக்க மாட்டார். நான் பேசியதன் கருத்து என்னவென்றால், 38 ஆண்டுகளுக்கு பின் தொடர்ந்து இரண்டாம் முறையாக ஆட்சியைப் பிடித்ததை சட்டமன்றத்தில் ஜெயலலிதா பெருமையாக பேசினார்.

அதேபோல, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி அடுத்த முறையும் தொடர எந்த நிலை வந்தாலும் பாடுபடுவோம் என்ற அர்த்தத்தில் தான் பேசினேன். அதை தவறாக திரித்து வெளியிட்டுள்ளனர். கூட்டணி கட்சி தலைவர்கள் எங்களோடு சுமுகமாக பழகுகின்றனர். எங்கள் கூட்டணி அருமையாக உள்ளது. எங்கள் கூட்டணி மிகச் சரியான கூட்டணி. என கே.என்.நேரு தெரிவித்தார்.

கப்பலோட்டிய தமிழன் நினைவு நாள்… செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் மலர் தூவி அஞ்சலி

வ.உ.சிதம்பரனார் தூத்துக்குடி மாவட்டம், ஒட்டப்பிடாரத்தில் உலகநாதன் பிள்ளை – பரமாயி அம்மையார் தம்பதியருக்கு 02.09.1872- ம் ஆண்டு மகனாகப் பிறந்தார். வ.உ.சிதம்பரனார் அடிப்படைக் கல்வியை ஒட்டப்பிடாரத்திலும், உயர்நிலைக் கல்விப் படிப்பை தூத்துக்குடியிலும், சட்டக் கல்வியை திருச்சியிலும் பயின்று 1894 -ம் ஆண்டு வழக்கறிஞர் ஆனார். மேலும், வ.உ.சிதம்பரனார் சமூக சேவையிலும், அரசியல் பணியிலும் படிப்படியாகத் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார்.

வ.உ.சிதம்பரனார் தாய் நாட்டின் விடுதலைக்காகத் தமிழகத்திலிருந்து பங்கேற்ற தலைவர்களில் முதன்மையானவர். அரசியல் வாழ்க்கையில் பாலகங்காதர திலகரைத் தனது குருவாக ஏற்றுக் கொண்டு, ஆங்கிலேயர்களின் ஆதிக்கத்தை, அடியோடு ஒழித்திட, அரசியல் ரீதியாகவும், வணிக ரீதியாகவும் “சுதேசி நாவாய்ச் சங்கம்” என்ற கப்பல் நிறுவனத்தைத் தொடங்கினார். இதனாலேயே கப்பலோட்டிய தமிழன் என்று பெயர் பெற்றார்.

வ.உ.சிதம்பரனாரின் சுதந்திரப் போராட்ட நடவடிக்கைகளால் ஆத்திரமடைந்த ஆங்கிலேயர்கள், அரசாங்கத்தை அவமதித்ததாகவும், சுதந்திரத்திற்காக பொதுமக்களைத் தூண்டியதாகவும் இவர் மீது வழக்கு பதிவு செய்து, இரட்டை ஆயுள் தண்டனை விதித்தனர். இதன் காரணமாக 1908-ம் ஆண்டு கோயம்புத்தூர் சிறையில் அடைக்கப்பட்டு, செக்கிழுக்க வைக்கப்பட்டார்.

தமிழக மக்களால் பெரிதும் போற்றப்படும் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி, பல்வேறு இன்னல்களுக்கு இடையிலும், தாய்மொழி, தமிழ்மொழி மீது கொண்டிருந்த தணியாத தாகத்தின் காரணமாக பல அரிய நூல்களையும், சுயசரிதையையும் கவிதை வடிவில் எழுதியுள்ளார்.

வ.உ.சிதம்பரனாரும் பாரதியாரும் அருகருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர்கள். இருவரின் தந்தையரும் நெருங்கிய நண்பர்கள். வ.உ.சிதம்பரனார் சென்னைக்குச் செல்லும் போது பாரதியாரைச் சந்திப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார். இருவரும் சந்தித்துக் கொண்ட பொழுது இருவரின் கருத்துகளும் ஒன்றாக இருப்பதை அறிந்தனர். இருவரும் எப்பொழுதும் நாட்டைப்பற்றியே பேசிக்கொண்டிருப்பார்கள். இந்நிலையில் வ.உ.சிதம்பரனார் 1936-ஆம் ஆண்டு நவம்பர் 18-ம் நாள் மறைந்தார்.

“மேலோர்கள் வெஞ்சிறையில் வீழ்ந்து கிடப்பதுவும் நூலோர்கள் செக்கடியில் நோவதுவும் காண்கிலையோ” என மகாகவி பாரதி மனம் நொந்து பாடும் அளவுக்குக் கோயம்புத்தூர் சிறையில் கொடுமைக்குள்ளான வீரர் வ.உ.சிதம்பரனாரின் நினைவு நாளை முன்னிட்டு செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ராஜன் மற்றும் துணை மேயர் மகேஷ் குமார் ஆகியோர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.