எச்.ராஜா உடல்நலம், மனநலம் சரியாக இருக்கிறதா என்று மருத்துவரை பார்த்து கொள்வது நல்லது என திராவிட இயக்க தமிழர் பேரவை தலைவர் சுப.வீரபாண்டியன் தெரிவித்துள்ளார். சென்னை தி.நகரில் நடைபெற்ற உலக பிராமணர்கள் நலச்சங்கத்தின் 11 வது ஆண்டு விழாவில் கலந்து கொண்டு எச்.ராஜா பேசுகையில், சாதி மறுப்பு திருமணம் நடந்தது என்பதற்கு புராணக் காலத்திற்கு செல்ல தேவையில்லை. கல்கி சதாசிவம், எம்எஸ் சுப்புலட்சுமி திருமணம் செய்து கொண்டனர்.
அப்போது யாராவது அரிவாள் எடுத்தார்களா? ஏன் எடுக்கவில்லை என்றால், அப்போது நீங்கள் பிறக்கவில்லை. இன்று ஆவணக் கொலைக்கு காரணமே சுப.வீரபாண்டியனும், திருமாவளவனும் தான். நீங்கள்தான் ஆணவக் கொலை செய்ய தூண்டி விடுகிறீர்கள்.அன்று நீங்கள் பிறக்காததால் யாரும் அரிவாள் எடுக்கவில்லை. இன்று நீங்கள் இருப்பதால், அரிவாள் எடுக்கிறார்கள். இந்த தீயசக்திகளுக்கு எதிரான உண்மை நிலையை, நாம் நம் மக்களுக்கு சொல்லி கொடுக்க வேண்டும் என எச்.ராஜாவின் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
எச்.ராஜாவின் பேச்சிற்கு திராவிட இயக்க தமிழர் பேரவை தலைவர் சுப.வீரபாண்டியன் பதிலடி கொடுத்துள்ளார். அதில், திருமாவளவனும், சுப.வீரபாண்டியனும் தமிழ்நாட்டில் ஆணவக் கொலைகள் நடக்க காரணம் என்று எச்.ராஜா பேசி இருக்கிறார். காரைக்குடியில் நான் படித்த கல்லூரியில் படித்தவர். அப்போது நன்றாக இருந்தார். இப்போது அவர் உடல்நலம், மனநலம் சரியாக இருக்கிறதா என்று மருத்துவரை பார்த்து கொள்வது நல்லது. ஒரு நண்பராகவே சொல்கிறேன். இவர்கள் பிறந்த பிறகு தான் அரிவாள் எடுத்தார்கள் என்பதை எவ்வளவு அபத்தம் என்பதை உணர வேண்டும். நாங்கள் பிறந்த பின்தான் மனுநீதி எழுதப்பட்டதா? அதற்கு முன் மனுநீதி இல்லையா? மனுநீதியில் இருந்துதான் சாதிய ஏற்றத் தாழ்வுகள், வர்ண பாகுபாடுகள் வருகின்றன.
அதனடிப்படையில்தான் ஆணவப் படுகொலைகள் நடந்து கொண்டிருக்கின்றன. அதற்கு எச்.ராஜா போன்றவர்கள்தான் காரணம். நாங்கள் காரணமல்ல. நாங்கள் மக்கள் சமத்துவத்துடன் வாழ வேண்டும் என்று போராடுகிறோம். இந்த சமூகமே சாதிய சமூகமாக உள்ளது. பிரிவினையே இந்து சமூகத்தின் நீதியாக உள்ளது. பிரிவினை கூடாது, சமத்துவம் வேண்டும் என்று சொல்பவர்கள் நாங்கள். எச்.ராஜாவின் பேச்சு கேலிக்கூத்தாக உள்ளது. போகிற போக்கில் எதை வேண்டுமானாலும் பேசலாம் என்பது கருத்துரிமை அல்ல. எச்.ராஜா பேசி இருப்பது அவதூறு. முடிந்தால் அவர் மீது வழக்கு போடுவது சரியாக இருக்கும். அவர் அநாகரீகமாக பேசியதில் ஆச்சரியமில்லை என சுப.வீரபாண்டியன் தெரிவித்துள்ளார்.