உத்தவ் தாக்கரே: மகாராஷ்டிராவை காப்பாற்றும் கூட்டணி கட்சி முதலமைச்சர் வேட்பாளரை ஆதரிப்பேன்..!

மகாராஷ்டிராவை காப்பாற்ற கூட்டணி கட்சிகள் தேர்வு செய்யும் முதலமைச்சர் வேட்பாளருக்கு முழு ஆதரவு வழங்குவேன் என உத்தவ் சிவசேனா கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.

உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா கட்சி, காங்கிரஸ் மற்றும் சரத்பவார் கட்சிகள் மகா விகாஸ் அகாடி கூட்டணியில் அங்கம் வகிக்கின்றன. இந்த 3 கட்சிகளும் இணைந்து வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ள இருக்கின்றன. இக்கூட்டணியில் இருக்கும் மூன்று கட்சிகளுமே பெரிய கட்சிகள் என்பதால், முதலமைச்சர் வேட்பாளரை தேர்வு செய்வதில் சிக்கல் நீடிக்கிறது. தன்னை முதலமைச்சர் வேட்பாளராக்க வேண்டுமென உத்தவ் தாக்கரே கடந்த ஆகஸ்ட் மாதம் விருப்பம் தெரிவித்தார். ஆனால் காங்கிரஸ் மற்றும் சரத்பவார் கட்சிகள் அதனை ஏற்கவில்லை.

தேர்தல் முடிந்த பிறகு, எந்த கட்சி அதிக இடங்களில் ஜெயிக்கிறதோ அந்த கட்சியை சேர்ந்தவரே முதலமைச்சர் வேட்பாளராக தேர்வு செய்யப்படுவார் என அவர்கள் திட்டவட்டமாக தெரிவித்துவிட்டனர். இந்நிலையில் நேற்று நிகழ்ச்சி ஒன்றில் பேசிய உத்தவ் தாக்கரே, காங்கிரஸ் மற்றும் சரத்பவார் கட்சிகள் தேர்வு செய்யும் எந்த முதலமைச்சர் வேட்பாளராக இருந்தாலும் நான் முழு ஆதரவு வழங்குவேன் என தெரிவித்துள்ளார். மகாராஷ்டிராவை காப்பாற்றுவதற்காக தான் இந்த முடிவை எடுத்ததாக என உத்தவ் தாக்கரே தெரிவித்தார்.

Uddhav Thackeray: சிவாஜி சிலை உடைந்தது மகாராஷ்டிராவின் ஆன்மாவுக்கான அவமதிப்பு..!

மகாராஷ்டிரா மாநிலம், சிந்துதுர்க் மாவட்டம், மால்வான் தாலுகாவில் உள்ள ராஜ்கோட் கோட்டையில் 17-ஆம் நூற்றாண்டின் மராட்டிய பேரரசர் சிவாஜியின் 35 அடி சிலை பிரதமர் நரேந்திர மோடியால் கடந்த ஆண்டு டிசம்பர் 4, கடற்படை தினத்தன்று திறந்து வைக்கப்பட்டது. இந்தச் சிலை ஆகஸ்ட் 26-ம் தேதி பலத்த காற்றினால் இந்தச் சிலை இடிந்து விழுந்ததாக மாநில முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தெரிவித்திருந்தார்.

இந்தச் சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து எதிர்க்கட்சிகளின் மகா விகாஸ் அகாதியினர் அரசுக்கு எதிராக ஞாயிற்றுக்கிழமை பேரணி நடத்தினர். இதில் தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவார், சிவசேனா (யுடிபி) தலைவர் உத்தவ் தாக்கரே, காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் நானா படோல் மற்றும் கட்சியின் மும்பை தலைவர் வர்ஷா கெய்க்வாட் உள்ளிட்டோர் சம்யுக்த மகாராஷ்டிரா போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

போராட்டத்திற்கு முன்னதாக நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். அங்கிருந்து கேட் வே ஆஃப் இந்தியாவில் உள்ள சிவாஜி சிலை வரை சென்ற பேரணிக்கு ‘சப்பல் ஜோட் மாரோ யாத்ரா” என்று பெயரிடப்பட்டிருந்தது. கேட்வே ஆஃப் இந்தியாவில் நடந்த கூட்டத்தில் உத்தவ் தாக்கரே பேசுகையில், “நீங்கள் அந்த மன்னிப்பில் இருந்த ஆணவத்தை கவனித்தீர்களா? அது ஆணவத்தால் அடிக்கப்பட்டது.

அப்போது ஒரு துணை முதலமைச்சர் சிரித்துக் கொண்டிருந்தார். கீர்த்தி மிகுந்த வீரம்நிறைந்த மன்னர் அவமதிக்கப்பட்டிருப்பதை மகாராஷ்டிரா மக்கள் ஒருபோதும் மன்னிக்கமாட்டார்கள். ராமர் கோயில் மற்றும் புதிய நாடாளுமன்றத்தின் கூரைகள் ஒழுகுவது மோடியின் பொய்யான உத்தரவாதத்துக்கு உதாரணங்கள்.

பிரதமர் எதற்காக மன்னிப்புக் கேட்டார்? எட்டு மாதங்களுக்கு முன்பு அவர் அந்த சிலையைத் திறந்து வைத்ததற்காகவா? அதில் நடந்துள்ள ஊழலுக்காகவா? சிவாஜி மகாராஜாவை அவமதித்த சக்திகளை எம்விஏ கூட்டணி ஒன்றிணைந்து தோற்கடிக்க வேண்டும். அந்தச் சிலை உடைந்தது மகாராஷ்டிராவின் ஆன்மாவுக்கான அவமதிப்பு” என உத்தவ் தாக்கரே பேசினார்.

பத்லாபூர் விவகாரத்தில் வீதியில் இறங்கும் உத்தவ் தாக்கரே..! ஒரு நாள் பந்திற்கு அழைப்பு..!

மகாராஷ்டிர மாநிலம் மும்பைக்கு அருகே 50 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள பத்லாப்பூர் காவல் நிலையத்துக்குட்பட்ட பகுதியைச் சேர்ந்த ஒரு பள்ளியில் படித்து வந்த நான்கு வயதே நிரம்பிய 2 சிறுமிகளை பள்ளியில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் எழுந்தது. பாலியல் துன்புறுத்தலை யாரிடமும் தெரிவிக்கக் கூடாது என்றும் அவர் மிரட்டியுள்ளதாக தெரிகிறது. குழந்தைகளின் உடல்நலன் குன்றியதால் விவரமறிந்த பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இதை அறிந்த பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை பத்லாப்பூர் ரயில் நிலையத்தில் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், பலர் ரயில் தண்டவாளத்தில் இறங்கி ரயிலை மறித்துப் போராட்டம் நடத்தினர். பத்லாபூரின் பல்வேறு பகுதிகளிலும் போராட்டம் நடந்தது.

இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய உத்தவ் தாக்கரே, “ஆகஸ்ட் 24-ம் தேதி சனிக்கிழமை எதிர்க்கட்சி கூட்டணிகளான மகா விகாஸ் அகாடி ஏற்பாடு செய்துள்ள மகாராஷ்டிரா முழு அடைப்பு போராட்டத்தில் அரசியல் இல்லை. மாறாக, அது வக்கிரத்துக்கு எதிரானது. சாதி, மத, பேதங்களைக் கடந்து மக்கள் அதில் பங்கேற்க வேண்டும் என்று நான் வலியுறுத்துகிறேன். பத்லாபூரில் இன்னும் கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பத்லாபூரில் போராடியவர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை திரும்பப் பெற வேண்டும். இல்லையென்றால் நாங்கள் வீதிகளில் இறங்கிப் பேராட்டம் நடத்த வேண்டி இருக்கும்.

மதியம் 2 மணி வரை பந்த் கடைபிடிக்கப்பட வேண்டும். அத்தியாவசிய சேவைகள் கிடைப்பதை உறுதிப்படுத்த வேண்டும். மக்கள் தேர்தல் நேரத்தில் மட்டும் தங்களின் கோபத்தை வெளிப்படுத்த வேண்டும் என்பதில்லை. அனைத்து வழிகளும் மூடப்பட்டிருக்கும் போது மக்கள் நீதிமன்றத்தில் நீதி கேட்கப்படுகிறேது. அரசு தனது கடமையை தீவிர முயற்சியுடன் கடைபிடிக்க வேண்டும் என்பதை உணர்த்தவே இந்த பந்த்” என்று தெரிவித்தார்.

Uddhav Thackeray: ‘காங்கிரஸ்., என்சிபி அறிவிக்கும் மகா விகாஸ் அகாதி முதல்வர் வேட்பாளருக்கு ஆதரவு..!’

மகாராஷ்டிராவின் எதிர்க்கட்சிகளான மகா விகாஸ் கூட்டணிக் கட்சிகளின் நிர்வாகிகள் கூட்டத்தில் சிவ சேனா தலைவர் உத்தவ் தாக்கரே உரையாற்றினார். அப்போது, இந்தச் சட்டப்பேரவைத் தேர்தல் என்பது மகாராஷ்டிராவின் சுயமரியாதையை காப்பதற்கான போராட்டம் என்றார். நாட்டுக்கும், மாநிலத்துக்கும் நீங்கள் (மகாயுதி) என்ன செய்தீர்கள், நாங்கள் (மகா விகாஸ் அகாதி) என்ன செய்தோம் என்று விவாதிப்போம். அவர்கள் மாநகராட்சி தேர்தலை நடத்தவில்லை, வரும் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தேதியை இன்னும் முடிவு செய்யவில்லை.

பாஜகவுடனான எங்களின் கூட்டணி அனுபவத்துக்கு பின்னர், கூட்டணியில் அதிக எம்எல்ஏக்களைக் கொண்டுள்ள கட்சிக்கு முதல்வர் பதவி என்ற கொள்கையை பின்பற்றக்கூடாது என்று நாங்கள் முடிவு செய்துள்ளோம். கடந்த பல தேர்தலில் பாஜகவுடனான கூட்டணி அனுபவம், அதிக எம்எல்ஏக்களைப் பெற கூட்டணியில் உள்ள பிற கட்சி வேட்பாளர்களை வீழ்ச்சியடைய செய்கின்றனர் என்பதை நாங்கள் உணர்ந்திருக்கிறோம். அதனால் அதிக எம்எல்ஏகள் கொண்ட கட்சிக்கு முதல்வர் பதவி என்ற கொள்கைக்கு ஆதரவளிக்கப் போவதில்லை.

காங்கிரஸ் கட்சியும், தேசியவாத காங்கிரஸ் கட்சியும் (சரத் பவார்) அவர்களின் முதல்வர் வேட்பாளரை அறிவிப்பர். நான் அவர்களுக்கு ஆதரவு அளிப்பேன். ஏனென்றால் நாங்கள் மகாராஷ்டிராவின் முன்னேற்றத்துக்காக உழைக்கிறோம். மேலும் நான் 50 கோகாக்கல் மற்றும் கத்தார் என்பதற்கு பதில் சொல்ல விரும்புகிறேன். மக்கள் விரும்புவது எங்களைத் தான்; உங்களை அல்ல என உத்தவ் தாக்கரே பேசினார்.

மகாராஷ்டிரா தேர்தல்: உத்தவ் தாக்கரேவுக்கு காங்கிரஸ், சரத் பவார் நெருக்கடி..!

மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தல், அக்டோபர் மாதம் நடைபெற இருக்கிறது. இத்தேர்தலுக்கான தொகுதிப் பங்கீடு அரசியல் கட்சிகளிடையே தீவிரம் அடைந்துள்ளது. மக்களவைத் தேர்தலில் தொகுதிப் பங்கீட்டை விரைந்து முடித்ததுபோல், இப்போதும் விரைந்து முடிக்க எதிர்க்கட்சிக் கூட்டணியான மகாவிகாஷ் அகாடி முயன்று வருகிறது. சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு மீண்டும் முதலமைச்சராகும் ஆசையில் இருக்கிறார் உத்தவ் தாக்கரே. இதற்காக சமீபத்தில் டெல்லி சென்று காங்கிரஸ் தலைவர்களைச் சந்தித்து, தனது விருப்பத்தைத் தெரிவித்துவிட்டு வந்தார்.

ஆனால் முதலமைச்சர் விவகாரத்தில் காங்கிரஸ் இறங்கி வர மறுத்துவிட்டது. அதே போன்று சரத் பவாரும் இவ்விவகாரத்தில் இறங்கி வர மறுக்கிறார். தேர்தலில் எந்த கட்சி அதிக தொகுதிகளில் வெற்றி பெறுகிறதோ, அந்த கட்சிக்கு முதலமைச்சர் பதவி என்பதில் காங்கிரஸும், சரத் பவாரும் உறுதியாக இருக்கின்றனர். அதோடு மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் (சரத் பவார்) கட்சிகள் சிவசேனா (உத்தவ்)வை விட கூடுதல் இடங்களில் வெற்றி பெற்று, உத்தவ் தாக்கரேயிக்கு நெருக்கடி கொடுத்து இருக்கின்றன. மேலும் உத்தவ் தாக்கரே மற்றும் சரத் பவார் கட்சிகளில் இருந்த எம்.எல்.ஏ-க்களில் பெரும்பாலானவர்கள் கட்சி உடைந்த பிறகு எதிரணிக்குச் சென்றுவிட்டனர்.

இதனால் சிவசேனா (உத்தவ்) மற்றும் தேசியவாத காங்கிரஸ் (சரத் பவார்) கட்சிகள் பலவீனமடைந்துவிட்டதாகக் கூறி, காங்கிரஸ் தங்களுக்கு அதிக தொகுதிகள் ஒதுக்கவேண்டும் என்று கூறி வருகிறது. இதே போன்று சரத் பவாரும் தங்களது கட்சி மக்களவைத் தேர்தலில் அதிக தொகுதிகளில் வெற்றி பெற்று இருப்பதாகக் கூறி, சட்டமன்றத் தேர்தலில் கூடுதல் தொகுதிகள் கேட்டுக்கொண்டிருக்கிறார். இதனால் உத்தவ் தாக்கரே விழி பிதுங்கிக்கொண்டிருக்கிறார். சட்டமன்றத் தேர்தலில் கூடுதல் தொகுதிகளில் போட்டியிட்டு அதிக தொகுதிகளில் வெற்றி பெற்று முதலமைச்சர் பதவியை கைப்பற்றிவிடலாம் என்று உத்தவ் தாக்கரே நினைத்தார். ஆனால் கூட்டணிக் கட்சிகள் இரண்டும் அதற்கு வாய்ப்பு கொடுக்காமல் கூடுதல் தொகுதிகள் கேட்டு வருகின்றன.

2019-ம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் ஒன்றுபட்ட சிவசேனா 56 தொகுதிகளிலும், தேசியவாத காங்கிரஸ் 54 தொகுதிகளிலும், காங்கிரஸ் 44 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன. இந்த 154 தொகுதிகளை அந்தந்த கட்சிகளுக்கு ஒதுக்குவது என்று மூன்று கட்சிகளும் முடிவு செய்துள்ளன. மொத்தமுள்ள 288 தொகுதிகளில் வெற்றி பெற்ற 154 தொகுதிகள் போக எஞ்சியுள்ள 134 தொகுதிகளை மூன்று கட்சிகளும் உள்ளூரில் இருக்கும் செல்வாக்கின் அடிப்படையில் பகிர்ந்து கொள்ள முடிவு செய்துள்ளன.

Uddhav Thackeray எங்கள் கட்சி உங்கள் கல்விப் பட்டத்தைப் போல போலியானது என்று நினைக்கிறீர்களா..!

நாட்டின் பதினெட்டாவது மக்களவைத் தேர்தல் 2024 -ஆம் தேர்தல் ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி அதாவது 7 கட்டமாக நடைபெற்று ஜூன் 4 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தேர்தலுக்கு இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், வேட்பாளர்கள் வாக்கு வேட்டையில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்கள்.

இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, “உத்தவ் தாக்கரே தலைமையிலான போலி-சிவசேனா, சரத் பவாரின் போலி-என்சிபி மற்றும் மகாராஷ்டிராவில் எஞ்சியிருக்கும் காங்கிரஸ் உள்ளது. இந்த மூன்று கட்சிகளும் பொருந்தாத உதிரி பாகங்களைக் கொண்ட ஆட்டோரிக்ஷாவைப் போன்றது. அது எப்படி மகாராஷ்டிராவுக்கு நல்லது செய்யும், எப்படிச் செய்யும்” கூறி இருந்தார். அமித் ஷாவின் இந்த கருத்து மகாராஷ்டிரா அரசியலில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

இந்த அமித் ஷாவின் கருத்திற்கு, பால்காரில் நடந்த ஒரு பொதுக்கூட்டத்தில் உத்தவ் தாக்கரே, “எங்கள் கட்சி உங்கள் கல்விப் பட்டத்தைப் போல போலியானது என்று நினைக்கிறீர்களா… நான் தெளிவாகச் சொல்கிறேன். மோடியை மகாராஷ்டிரா ஏற்காது. தாக்கரேவும், பவார்களும்தான் இங்கு சத்தம் போடுவார்கள்” என்றார். எந்தக் கட்சி போலி, எது உண்மையானது என்பதை மகாராஷ்டிரா மக்கள் முடிவு செய்வார்கள் உத்தவ் தாக்கரே அமித் ஷாவை கடுமையாக சாடினார்.

Uddhav Thackeray: ஏக்நாத் ஷிண்டே தலைமையில் செயல்படுவது சிவசேனா கட்சியா? ‘சீன’சேனா கட்சியா?

மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரே தலைமையில் செயல்பட்டு வந்த சிவசேனா கட்சியில் இருந்து வெளியேறிய ஏக்நாத் ஷிண்டே, பெரும்பான்மை எம்பி, எம்எல்ஏக்களை வளைத்து போட்டார். மாநிலத்தின் முதல்வரான ஏக்நாத் ஷிண்டே தலைமையில் செயல்படும் சிவசேனா கட்சி தான் உண்மையான சிவசேனா கட்சி என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது.

பின்னர் உத்தவ் தாக்கரே தனது தலைமையில் ஒரு சிவசேனா கட்சியை உருவாக்கினார். இதற்கிடையே உத்தவ் தலைமையிலான சிவசேனாவை ‘போலியான சிவசேனா’ என்று பிரதமர் மோடி விமர்சித்து இருந்தார். இதற்கு பதிலடி கொடுத்த உத்தவ் தாக்கரே, ஏக்நாத் தலைமையிலான சிவசேனாவை ‘சீன சேனா’ என்று கிண்டலாக கூறினார்.

உத்தவ் தாக்கரே: எங்கள் தங்கைகள் சர்வாதிகார அரசுக்கு எதிராக போராடுகின்றனர்…! அவர்களின் பின்னால் அண்ணன்களாக நாங்கள் அணிதிரண்டு இருக்கிறோம்..!

டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் முதலமைச்சர் அர்விந்த் கேஜ்ரிவால் கடந்த 21-ம்தேதி கைது செய்யப்பட்டார். இதைகண்டித்து எதிர்க்கட்சிகளின் இண்டியா கூட்டணி சார்பில் டெல்லி ராம்லீலா மைதானத்தில் இண்டியா கூட்டணியை சேர்ந்த 28 கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்ற பொதுக்கூட்டம் நடைபெற்றது.

பொதுக் கூட்டத்தில் சிவசேனா (உத்தவ் பிரிவு)தலைவர் உத்தவ் தாக்கரே பேசுகையில், சுனிதாவும் கல்பனாவும் எங்கள் தங்கைகள். சர்வாதிகார அரசுக்கு எதிராக அவர்கள் போராடுகின்றனர். அவர்களின் பின்னால் அண்ணன்களாக நாங்கள் அணிதிரண்டு இருக்கிறோம் என உத்தவ் தாக்கரே தெரிவித்தார்.

உத்தவ் தாக்கரே: “நாட்டை சூழ்ந்திருக்கும் சர்வாதிகார ஆபத்தில் இருந்து காக்க, சாதி, மதத்தை விட்டுவிட்டு ஒன்றிணைய வேண்டும் ”

மகாராட்டிரா, ரத்னகிரி மாவட்டம், சிப்லுன் நகரங்களில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உத்தவ் தாக்கரே உரையாற்றினார். அப்போது, இந்த பொதுக்கூட்டத்துக்கு காவிநிற தொப்பி அணிந்தவர்கள் மட்டுமல்ல இஸ்லாமியர்களும் வந்திருப்பதைப் பார்க்கிறேன். இங்கே சத்ரபதி சிவாஜியின் சிலையும் இருக்கிறது, இஸ்லாமியர்கள் வழிபடக்கூடிய தர்காவும் இருக்கிறது. சமீபத்தில் நான் ராய்காட் வந்தபோது, இஸ்லாமிய சமூகத்தவர்கள் எனக்கு மராத்தியில் மொழிபெயர்க்கப்பட்ட குரானை பரிசாக அளித்தார்கள். எங்கள் இந்துத்துவா எது என்பதை அவர்கள் புரிந்து கொண்டிருக்கிறார்கள்.

நான் மீண்டும் சொல்கிறேன். எங்கள் இந்துத்துவா மதங்களுக்கு இடையே முரண்பாடுகளை ஏற்படுத்தக்கூடியதோ, சமூகங்களுக்கு இடையே உள்ள உறவில் தீயைப் பற்ற வைப்பதோ அல்ல. இது அனைவரையும் உள்ளடக்கியது. எனக்குப் பின்னால் இந்து சமூகம் நின்றதைப் போல, தற்போது இஸ்லாமிய, கிறிஸ்தவ சமூகங்களும் என்னோடு இணைந்துள்ளார்கள்.

நாட்டை சூழ்ந்திருக்கும் சர்வாதிகார ஆபத்தில் இருந்து காக்க, சாதி, மதத்தை விட்டுவிட்டு நாம் அனைவரும் நாட்டுப்பற்றோடு ஒன்றிணைய வேண்டும் என கோரிக்கை விடுக்கிறேன். நாட்டுக்காக போராடி மடிந்த அனைவருக்கும் ஆதரவாக நிற்கக்கூடியதே எங்கள் கட்சியின் இந்துத்துவா என உத்தவ் தாக்கரே உரையாற்றினார்.

ராமர் கோயில் கட்டப்பட்டதற்கு உச்ச நீதிமன்றத் தீர்ப்பே காரணம்… மத்திய அரசுக்கு எந்த பங்கும் இதில் இல்லை..!

உத்தர பிரதேச மாநிலம் அயோத்தி… இந்தியாவின் புனித நகரில் ஒன்று. இங்கு இருந்த பாபர் மசூதிக்கு பதில் ராமர் கோவில் கட்ட 1990-ல் ரதயாத்திரையை தற்போதைய பாஜக மூத்த தலைவர் அத்வானி துவங்கினார். அதன்பிறகு உத்தர பிரதேசத்தில் 1991-ல் பாஜக ஆட்சி அமைந்த நிலையில் 1992 டிசம்பர் 6-ல் பாபர் மசூதி இடிக்கப்பட்டது. இதையடுத்து பிரச்சனைகள் பெரிய அளவில் நாடு முழுவதும் பரவிய நிலையில் 2 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டனர். இந்த அயோத்தி சர்ச்சைக்குரிய இடம் தொடர்பாக நீதிமன்றங்களில் வழக்கு தொடரப்பட்டன.

நீண்டகாலம் இழுத்து வந்த இந்த வழக்கில் 2019-ம் ஆண்டில் சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் கோவில் கட்ட உத்தரவு உச்சநீதிமன்றம் பிறப்பித்தது. இதையடுத்து அயோத்தியில் ராமர் கோவிலை பிரமாண்டமாக கட்ட முடிவு செய்யப்பட்டது. கோவில் கட்டும் பணிக்காக ஸ்ரீ ராம் ஜென்மபூமி தீர்த்த சேத்ரா அறக்கட்டளை உருவாக்கப்பட்டது. மொத்தம் 3 அடுக்குகளாக ரூ.1000 கோடி செலவில் கோவில் கட்டும் பணிக்கு 2020 ஆகஸ்ட் மாதம் ராமர் கோவில் கட்ட பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.

இந்நிலையில் இந்தியாவின் பல்வேறு இடங்களில் இருந்து காணிக்கையாக பெறப்பட்ட செங்கற்கள், நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருந்து வெட்டி எடுத்து வரப்பட்ட கற்கள் உதவியுடன் நாகரா கட்டகலைக்கலை நுட்பத்தில் கட்டப்பட்டு வருகிறது. இதையடுத்து ராமர் கோவில் கும்பாபிஷேகம் 2024 ஜனவரி மாதம் 22ம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகம் ஜனவரி 22-ம் தேதி நடைபெற உள்ளதை முன்னிட்டு, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, சோனியா காந்தி உள்ளிட்ட நாட்டின் முக்கிய பிரமுகர்களுக்கும், அரசியல் தலைவர்களுக்கும் ஸ்ரீ ராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்ர அறக்கட்டளை அழைப்பு விடுத்து வருகிறது. இந்நிலையில், அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேக விழாவுக்கான அழைப்பிதழ் வந்துள்ளதா, அதில் பங்கேற்பீர்களா என உத்தவ் தாக்கரேவிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த அவர், “இதுவரை எனக்கு அழைப்பு வரவில்லை. அயோத்தி செல்வதற்கு அழைப்பு தேவையில்லை.

குழந்தை ராமர் அனைவருக்குமானவர். அவர் எந்த ஒரு கட்சிக்கும் சொந்தமானவர் அல்ல. ராம பக்தி என்பது கோடிக்கணக்கான மக்களின் நம்பிக்கை. எப்போதெல்லாம் அயோத்திக்கு செல்ல வேண்டும் என்று தோன்றுகிறதோ அப்போதெல்லாம் நான் செல்கிறேன். மகாராஷ்டிரா முதலமைச்சராக இருந்தபோதும் நான் அயோத்திக்கு சென்றிருக்கிறேன். அயோத்தி ராமர் கோயில் இயக்கத்துக்காக சிவ சேனா மிகப் பெரிய பங்களிப்பை அளித்துள்ளது.

ராமர் கோயில் இயக்கத்தில் ஈடுபட்டதற்காக ஒரு இடைத் தேர்தலில் வாக்களிக்கும் உரிமையையே எனது தந்தை பால் தாக்கரே இழந்தார். அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்பட்டதற்கு உச்ச நீதிமன்றத் தீர்ப்பே காரணம். மத்திய அரசுக்கு எந்த பங்கும் இதில் இல்லை” என உத்தவ் தாக்கரே தெரிவித்தார்.