Udhayanidhi Stalin: நானாவது கல்லை காமித்தேன் இங்க எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டும் போது ஒருவர் பல்லை காட்டிக் கொண்டிருக்கிறார்..!

கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற I.N.D.I.A.கூட்டணியின் மக்களவைத் தேர்தல் பரப்புரையில் உதயநிதி ஸ்டாலின் கள்ளக்குறிச்சி நான்கு முனை சந்திப்பு அருகில் கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் மலையரசனை ஆதரித்து உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். அப்போது, உங்களுடைய எழுச்சியும் ஆர்வத்தையும் பார்க்கும் போது உதயசூரியன் சின்னத்தில் நிற்கும் வேட்பாளர் மலையரசன் அவர்களை பெறுவாரியாக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்து விடுவீர்கள் என்ற நம்பிக்கை இருப்பதாக தெரிவித்தார். ஏப்ரல் 19ஆம் தேதி வாக்கு செலுத்தி மோடியின் தலையில் குட்டு வைப்பீர்களா என பொதுமக்களிடம் கேட்டார்.

2019 மக்களவைத் தேர்தலில் கௌதம சிகாமணி அவர்களை 4 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் இந்த தொகுதியில் வெற்றி பெற்றார். ஆனால் இந்த முறை குறைந்தது 5 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் மலையரசன் அவர்களை வெற்றி பெற செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார். கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற தொகுதியில் உள்ள கெங்கவல்லி சட்டமன்ற தொகுதியில் மூன்று வருடத்தில் செய்யப்பட்ட திட்டங்களை பட்டியலிட்டர். திருவண்ணாமலை கள்ளக்குறிச்சி நான்கு வழி சாலையாக அமைக்கப்பட்டுள்ளது உளுந்தூர்பேட்டையில் ரூபாய் 2000 கோடி மதிப்பீட்டில் அமைந்துள்ள காலனி உற்பத்தி தொழிற்சாலை மூலம் இந்த பகுதியில் உள்ள பல்லாயிரக்கணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ரிஷிவந்தியம் மற்றும் நயினார் பாளையத்தில் புதிய தீயணைப்பு நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.

திருக்கோவிலூர் பகுதிக்கு உட்பட்ட ஆளுர் மற்றும் பூவனூரில் மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பொதுமக்கள் கோரிக்கையை ஏற்று குறுகிய காலத்தில் 53 ஆயிரம் பயனாளிகளுக்கு பட்டா வழங்கப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் கட்டப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டுள்ளது. மேலும் கள்ளக்குறிச்சியில் போக்குவரத்து நெரிசலை குறைக்க புதிய ரிங் ரோடு முடிக்கப்படும். ரிஷிவந்தியம் பகுதியில் புதிய அரசு பொறியியல் கல்லூரி திறக்கப்படும். பொது மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான கள்ளக்குறிச்சி நகரத்தின் மத்தியில் ரயில் நிலையம் அமைக்கப்படும்.

2021 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் அறிக்கையில் தெரிவித்தது நாம் நிறைவேற்றிய திட்டங்களை பட்டியலிட்டர். நாம் ஆட்சி பொறுப்பு ஏற்றதும் சட்டமன்ற தேர்தலில் திமுக கொடுத்த வாக்குறுதியை அனைத்தும் நிறைவேற்றியுள்ளோம். அதில் 4 திட்டங்களை சுருக்கமாக தெரிவித்த அவர் கட்டணம் இல்லா பேருந்தின் மூலம் 465 கோடி முறை பெண்கள் பயணம் செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மட்டும் 6 கோடி பெண்கள் கட்டணமில்லா பேருந்தில் பயணம் செய்துள்ளீர்கள். இதனால் மாதம் ரூபாய் 800 முதல் 900 முறை பெண்கள் சேமித்து வருகின்றனர்.

காலை உணவு திட்டம் 18 லட்சம் குழந்தைகள் பயனடைந்து வருகிறார்கள், இந்த திட்டத்தை கர்நாடகா தெலுங்கானா மட்டுமல்ல கனடா நாட்டின் பிரதமர் ஜஸ்டின் லுடோ அவர்கள் கனடாவில் அமல்படுத்தியுள்ளார். இந்திய நாட்டில் மட்டும் இல்ல உலகத்தில் உள்ள அனைத்து நாட்டு மக்களுக்கும் எடுத்துக்காட்டாக நம்முடைய திராவிட மாடல் அரசின் திட்டம் இருந்துள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மட்டும் 54,000 குழந்தைகள் காலை உணவு திட்டத்தில் பயன் பெற்று வருகின்றனர்.

கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம் 1 கோடியே 16 லட்சம் பெண்கள் பயனடைந்து வருகின்றனர். இதில் சில சில குறைபாடுகள் இருந்தாலும் தேர்தல் முடிந்த பிறகு அனைவருக்கும் மகளிர் உரிமைத் தொகை திட்டம் கிடைக்க வழிவகை செய்யப்படும் என்றார். புதுமைப்பெண் திட்டத்தின் மூலமாக ஏராளமான பெண் பிள்ளைகள் கல்லூரியில் சேர்ந்து வருகின்றனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மட்டும் 4 ஆயிரம் மாணவிகள் பயன்பெற்று வருகின்றனர்.

நாம் ஆட்சி பொறுப்பு ஏற்றதும் கொரோனா காலத்தில் கோவிட் தடுப்பூசியை செலுத்த வேண்டும் என்று வலியுறுத்திய ஒரே அரசு தமிழ்நாடு அரசு. கோவையில் கோவிட் பெருந்தொற்று காலத்தில் மருத்துவமனையில் உள்ள நோயாளிகளை நேரில் சந்தித்த ஒரே முதலமைச்சர் நம் தமிழ்நாடு முதலமைச்சர் தான் என்றார். நீட் தேர்வு காங்கிரஸ் ஆட்சியில் தான் வந்தது கூட இருந்தது திமுக கூட்டணி என்று. ஆமாம் 2010ல் நீட் தேர்வு இந்தியா முழுவதும் வந்தது ஆனால் தமிழ்நாட்டில் வரவில்லை ஏனென்றால் கலைஞர் அவர்கள் முதலமைச்சராக இருந்தார்கள். நீட் தேர்வு எங்களுக்கு தேவையில்லை பனிரெண்டாம் வகுப்பு மதிப்பெண் போதும் எனக் கூறினார். எனவே நுழைவு தேர்வை ரத்து செய்தார் கலைஞர்.

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா உயிரோடு இருந்த வரை தமிழ்நாட்டில் நீட் தேர்வு வரவில்லை. ஆனால் ஜெயலலிதா மறைந்த பிறகு இந்த அடிமை அதிமுக கூட்டத்தை வைத்து தமிழ்நாட்டில் நீட் தேர்வு கொண்டு வந்து அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த அனிதா இறந்தார். அனிதாவில் ஆரம்பித்து சென்னையில் ஜெகதீசன் என்ற மாணவர் வரை 22 மாணவர்கள் இறந்துள்ளனர். இறுதியாக ஜெகதீசனின் தந்தையும் தற்கொலை செய்து கொண்டார். 22 குழந்தைகளின் இல்லத்திற்கும் நேரில் சென்றது நான் மட்டும் தான். அந்த உரிமையில் தான் நீட் தேர்வு வேண்டாம் என போராட்டம் செய்து வருகிறோம்.

ஒன்றிய அமைச்சர் மோடி தமிழ்நாட்டிற்கு வரும் போதெல்லாம் வேட்டி சட்டை அணிந்து ஆவாரம் பேசுவது திருக்குறளா இல்லையா என்பதை யாருக்கும் தெரியாது. அவர் தமிழ் வளர்ச்சிக்கு மற்றும் ஆராய்ச்சிக்கு 5 வருடத்தில் இதுவரை ஒரு ரூபாய் கூட நிதி ஒதுக்கவில்லை. ஆனால் ஹிந்தி மட்டும் சமஸ்கிருதம் வளர்ச்சிக்கு 1500 கோடி ரூபாய் ஒதுக்கி உள்ளார். இதுதான் அவர் தமிழ்நாட்டுக்கு செய்யக்கூடிய துரோகம். இதையெல்லாம் அதிமுக தட்டி கேட்டதா என கேள்வி எழுப்பினார்.

எடப்பாடி பழனிச்சாமி உதயநிதி ஸ்கிரிப்ட் மாற்றி பேச வேண்டும் என தெரிவித்தார். நானாவது கல்லை காமித்தேன் இங்க எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டும் போது ஒருவர் பல்லை காட்டிக் கொண்டிருக்கிறார் பாருங்கள் என்று எடப்பாடி பழனிச்சாமி நரேந்திர மோடியுடன் எடுத்த புகைப்படத்தை காண்பித்தார். தலைவர் அவர்கள் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஒரு பெயர் வைத்துள்ளார், பாதம் தாங்கி பழனிச்சாமி என்று சசிகலா காலில் விழுந்து வணங்கிய புகைப்படத்தை காண்பித்தார். உங்களைப்போல் நேரத்தை தகுந்தது போல் ஆளைத் தகுந்தார் போல் ஸ்கிரிப்ட் வைத்து பேசுபவன் நான் அல்ல என்று எடப்பாடி பழனிச்சாமிக்கு பதில் அளித்தார்.

எய்ம்ஸ் மருத்துவமனை கட்டும் வரை நான் கல்லை காட்டிக் கொண்டே தான் இருப்பேன். தமிழ்நாட்டிற்கு அடிக்கல் நாட்டிய போது தான் ஐந்து மாநிலங்களுக்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி. அங்கெல்லாம் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்பட்டு முடிந்தது. தமிழ்நாட்டில் கூட ஆட்சிக்கு வந்து இரண்டே வருடத்தில் கலைஞர் நூற்றாண்டு பல்நோக்கு சிறப்பு மருத்துவமனையை கட்டி முடித்தோம்.

கடந்த 9 வருடத்தில் அனைத்து மாநில உரிமைகளையும் இழந்துள்ளோம். முக்கியமாக மொழியுரிமை. மோடி பத்து நாள் மட்டுமல்ல தமிழ்நாட்டிலேயே தங்கியிருந்தாலும் கூட ஒரு இடத்தில் கூட ஜெயிக்க முடியாது என தெரிவித்தார். கடந்த 10 வருடத்தில் இந்தியாவை ஆண்டதில் ஏதாவது செய்தாரா என கேள்வி எழுப்பிய அவர் 2016 ஆம் ஆண்டு நடுராத்திரி எழுந்து என்ன பண்ணுவது என்று தெரியாமல் 500 மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுகளை செல்லாது என அறிவித்தார். லட்சக்கணக்கானோர் ஏடிஎம் வாசலில் நின்று இறந்தனர். ஏன் என்று கேட்டால் கருப்பு பணத்தை ஒழித்து புதிய இந்தியா பிறக்கும் என்றார். அனைவரின் வங்கி கணக்கிலும் கருப்பு பணமான 15 லட்சம் செலுத்தப்படும் என தெரிவித்தார். ஆனால் 15 பைசா கூட ஒருவர் வங்கியிலும் போடவில்லை என்றார்.

தமிழ்நாட்டில் டிசம்பர் மாதம் மிக்ஜாம் புயல் வந்தது அப்போதெல்லாம் மோடி எட்டிப் பார்க்கவில்லை. அப்போது தமிழ்நாடு முதலமைச்சர் ஒவ்வொரு பாதிக்கப்பட்ட மக்களுக்கும் நிதி அளித்தார். ஒன்றிய அரசிடம் நிதி கேட்டதற்கு நிதி அமைச்சர் வந்து பார்வையிட்டு சென்றார் ஆனால் ஒரு ரூபாய் கூட கொடுக்கவில்லை என்று குற்றம் சாட்டினார். 6.30 லட்சம் கோடி ரூபாய் ஒரு வருடத்திற்கு தமிழ்நாட்டில் இருந்து வரியாக வழங்குகிறோம் ஆனால் நமக்கு ஒன்னே முக்கால் லட்சம் கோடி மட்டுமே திருப்பி வழங்குகிறார்கள். அதாவது ஒரு ரூபாய் தமிழ் நாட்டு மக்கள் வரியாக கொடுத்தால் 29 பைசா மட்டுமே நமக்கு திருப்பி தருகிறார்கள் என்றார். அதனால்தான் மிஸ்டர் 29 பைசா மோடி அவர்களை அழைக்க வேண்டும். எய்ம்ஸ் மருத்துவமனை வேண்டும் என்று ஒன்றை அரசிடம் கேட்டால் பழனிச்சாமிக்கு கோபம் வருகிறது.

தாங்கள் ஒன்றிய பிரதமரை இவ்வளவு கேள்வி கேட்டு விமர்சனம் செய்கிறோம் இதுவரை பதில் வரவில்லை. ஆனால் அதிமுக இதுவரை பிஜேபியிடம் ஒரு கேள்வியாவது கேட்டுள்ளாரா என கேள்வி எழுப்பினார். நான் பேசியது தான் பேசுவேன் ஏனென்றால் எங்கள் கொள்கையை மட்டுமே பேசுவேன், எங்களுக்கு சி ஏ சட்டம் வேண்டாம் என்று தான் பேசுவேன், எய்ம்ஸ் மருத்துவமனை வேண்டும் என்று தான் பேசுவேன், எங்களுக்கு நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று தான் பேசுவேன் எங்களின் மாநில உரிமையை வேண்டும் என்று தான் பேசுவேன். உங்களைப்போல் பச்சோந்தியாக நிறம் மாறி இடத்திற்கு தகுந்த மாதிரி பேச மாட்டேன் என்றார்.

தமிழ்நாட்டிலும் ஒருவர் இருக்கிறார் ஆடுற்கு தாடி எதற்கு என்று பேரறிஞர் அண்ணா கூறியது நினைவுக்கு வருவதாக தெரிவித்தார். அவர் ஆர்.என்.ரவி அல்ல ஆர்.எஸ்.எஸ்.ரவி என்றார். சட்டமன்றத்தில் தமிழ்நாடு அரசு எழுதிக் கொடுத்ததை படிக்க மாட்டார் பெரியார் அண்ணா பெயரை படிக்க மாட்டார். அதனால்தான் நம் முதலமைச்சர் நீங்கள் பேசியது அவை குறிப்பில் ஏறாது என தெரிவித்தார்.

சட்டமன்றத்தில் தேசிய கீதம் பாடினால் போதும் தமிழ் தாய் வாழ்த்து பாட தேவையில்லை என்று கடந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் கூறுகிறார் ஆளுநர். தமிழ்நாடு பெயரையே மாற்ற வேண்டும் என வாய் வந்த படி உளறிக் கொண்டிருக்கிறார். இந்திய கண்ட வரலாற்றிலேயே உச்ச நீதிமன்ற நீதிபதி ஆளுநருக்கு கண்டனம் தெரிவித்தது இதுவே முதல்முறை என்று கூறினார்.

ஒன்றிய பாரத ஜனதா அரசின் ஊழல்களை பட்டியலிட்டு பேசிய அவர் சிஏஜி அமைப்பு ஆறு மாதத்திற்கு ஒருமுறை அரசின் செயல்பாடுகள் குறித்து அறிக்கை வெளியிடுவார்கள். ஒன்றிய அரசு செலவு செய்த கணக்கில் ஏழரை லட்சம் கோடி கணக்கில் இல்லாமல் உள்ளதாக தெரிவித்துள்ளது. துவாரகா சாலை திட்டத்தில் ஒரு கிலோமீட்டர் சாலை இடுவதற்கு 250 கோடி ரூபாய் செலவு செய்துள்ளனர். மருத்துவ காப்பீடு திட்டத்தில் இறந்து போன 88 ஆயிரம் பேருக்கு மருத்துவ காப்பீடு திட்டம் கொடுத்து உள்ளனர். இந்த 10 வருட ஆட்சியில் பாரதிய ஜனதா பல லட்சம் கோடி ஊழல் செய்துள்ளது.

இதற்கெல்லாம் பாடம் புகட்ட வருகிற ஏப்ரல் 19ஆம் தேதி உங்களுடைய வாக்குகளை உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். அடுத்த 9 நாட்கள் இந்த பிரச்சாரத்தை மக்களிடம் வீடு வீடாக சென்று நீங்கள் தான் கொண்டு சேர்க்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். இவர்களுக்கு எல்லாம் பாடம் புகட்ட ஜூன் மூன்றாம் தேதி முத்தமிழறிஞர் கலைஞரின் பிறந்த நாள், ஜூன் நான்காம் தேதி தேர்தல் வாக்கு எண்ணிக்கை நாள். அவரின் இந்த 100ம் ஆண்டு நூற்றாண்டு விழாவில் அவருக்கு தேர்தல் வெற்றியை பரிசாக நாம் எல்லோரும் கொடுப்போம் என உதயநிதி ஸ்டாலின் பேசினார்.

Udhayanidhi Stalin: 29 பைசா மோடி என பெயர் வைத்தது ஏன் தெரியுமா..!?

நாட்டின் பதினெட்டாவது மக்களவைத் தேர்தல் 2024 -ஆம் தேர்தல் ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி அதாவது 7 கட்டமாக நடைபெற்று ஜூன் 4 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதன் விளைவாக அரசியல் கட்சித்தலைவர்கள், வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில், தர்மபுரி தி.மு.க. வேட்பாளர் ஆ.மணியை ஆதரித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது, தர்மபுரி தொகுதியில் ஆ.மணி வெற்றி பெறுவது உறுதி என்பதை, உங்கள் எழுச்சியை பார்த்து தெரிந்து கொண்டேன். மோடி தமிழ்நாட்டு மக்களுக்கு வேட்டு வைக்கிறார். வரும் 19-ம் தேதி நடைபெறும் தேர்தலில் நாம் மோடிக்கு வேட்டு வைக்க வேண்டும். அப்பொழுதுதான் தமிழ்நாட்டு மக்களின் மனநிலை, சுயமரியாதை என்ன என்பதை தெரிந்து கொள்வார்.

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க பா.ஜ.க.,வும், பழனிசாமியும் செங்கல் நட்டார்கள். ஆனால் இன்று வரை வரவில்லை. அதனால் அந்த செங்கல்லை நான் பிடிங்கிட்டு வந்துட்டேன். நட்டது ஒரே செங்கல். அதை நான் எடுத்துட்டு வந்துட்டேன். இப்பொழுது செங்கல்லை காணோம் என்று தேடுகிறார்கள். நான் மருத்துவமனை கட்டினால் மட்டுமே செங்கல்லை கொடுப்பேன் என சொல்லிவிட்டேன்.

எய்ம்ஸ் மருத்துவமனை கட்டவில்லை என்று கேட்டால், பிரதமர்தான் பதில் சொல்ல வேண்டும். ஆனால் பழனிசாமி பதில் தருகிறார். ஏனென்றால் இவர்கள் இருவரும் கள்ளக்கூட்டணி. பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்பட்டுள்ளது.

நாம் 1 ரூபாய் வரி கட்டினால், நமக்கு 29 பைசா கொடுக்கிறார். ஆனால் பா.ஜ.க. ஆளும் மாநிலங்களுக்கு 3 ரூபாய் கொடுக்கிறார்கள். அதனால்தான் அவருக்கு 29 பைசா மோடி என பெயர் வைத்துள்ளேன். பா.ஜ.க.,வுடன் கூட்டணி வைத்துக்கொண்டு தமிழ்நாட்டின் நிதியுரிமை, மொழியுரிமை, மாநில உரிமைகள் அனைத்தையும் அடகு வைத்த அ.தி.மு.க., தமிழ்நாட்டை வஞ்சிக்கும் பா.ஜ.க. இரு கட்சிகளுக்கும் வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் பாடம் புகட்டுவோம் என உதயநிதி ஸ்டாலின் பேசினார்.

Udhayanidhi Stalin: சேலம் உருக்காலையை தனியாருக்கு தாரை வார்த்தவர் பிரதமர் மோடி..!

சேலம் திமுக வேட்பாளர் செல்வகணபதிக்கு ஆதரவாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் செய்தார். அப்போது, “திமுகவுக்கு போடும் ஓட்டுதான் பிரதமர் மோடிக்கு வைக்கிற வேட்டு. ஏனென்றால், பிரதமர் மோடிதான் தமிழக மக்களுக்கு அடிக்கடி வேட்டு வைக்கிறார். தமிழக மக்களை கண்டுகொள்வதில்லை.

சேலத்தில் நடந்த திமுக இளைஞரணி மாநாடு 100 சதவீத வெற்றி கிடையாது. சேலம் திமுக வேட்பாளர் செல்வகணபதியை 3 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற வைத்தால்தான் திமுக இளைஞரணி மாநாடு 100 சதவீத வெற்றியை பெறும். 2021-ல் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு மு.க.ஸ்டாலின் முதல்வரானார். ஆனால், தவழ்ந்து முதல்வரானவர் ஒருவர் இருக்கிறார். தவழ்ந்து சென்ற புகைப்படத்தை காட்டியதால் எடப்பாடி பழனிசாமிக்கு என் மீது கோபம் வருகிறது. உதயநிதிக்கு வேறு வேலையே இல்லை என்கிறார். சசிகலாவுக்கு துரோகம் செய்தவர் இபிஎஸ். அவருக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த தமிழக மக்களுக்கும் துரோகம் செய்தவர் பழனிசாமி. அவரை போல திமுககாரர்கள் பச்சோந்தி கிடையாது.

பிரதமர் மோடி தமிழகம் வருவதில்லை. ஆனால், இப்போது தேர்தல் நேரம் என்பதால் அடிக்கடி தமிழகம் வருகிறார். இன்றுகூட சென்னை வருகிறார். 2026 வரை தமிழகத்தில் வீடு எடுத்து தங்கினாலும் பிரதமர் மோடியால் வெற்றிபெற முடியாது. நான் சவால் விடுகிறேன், அவரால் வெற்றிபெற முடியாது. அந்த அளவுக்கு தமிழகத்தின் கல்வி, மொழி, நிதி உரிமைகளை பறித்துவிட்டார் மோடி. தமிழக வெள்ள பாதிப்புகளை நேரடியாக பார்வையிடவில்லை. ஆனால், இப்போது தேர்தல் நேரம் என்பதால் அடிக்கடி தமிழகம் வருகிறார்.

பிரதமர் மோடியால் வாழுகிற ஒரே குடும்பம் அவரின் நண்பர் அதானி குடும்பம். அனைத்து பொதுத் துறையையும் அதானிக்கு கொடுத்துவிட்டார் மோடி. சேலம் உருக்காலையை தனியாருக்கு தாரை வார்த்தவர் பிரதமர் மோடி. திமுக ஆட்சியில் ஒரு குடும்பம்தான் வாழ்கிறது என்று மோடி சொல்கிறார். ஆமாம், ஒட்டுமொத்த தமிழகமும் திமுகவின் குடும்பம்தான். கருணாநிதியின் குடும்பம்தான். எங்களின் ஒரே லட்சியம் பாஜக அரசை ஓரங்கட்டுவதே.

சென்னையில் இருந்து நான் கிளம்பி 15 நாட்கள் ஆகிவிட்டது. எனது வீட்டுக்கு போனால் என்னை அடையாளம் தெரியாது. அந்த அளவுக்கு எனது குரல் மாறிவிட்டது. தேர்தலுக்கு இன்னும் 9 நாட்கள்தான் உள்ளன. கடந்த முறை 39 தொகுதிகளை வென்றோம். இந்த முறை 40 தொகுதிகளையும் வெல்ல வேண்டும்.

கடந்த சட்டப்பேரவை தேர்தலில் சேலத்தில் இருந்து ஒரே ஒரு எம்எல்ஏவை தான் திமுக சார்பில் தேர்ந்தெடுத்தீர்கள். எடப்பாடியில் நான் தெரு தெருவாக பிரச்சாரம் செய்தேன். எனினும் எங்களுக்கு பெரிய நாமத்தை போட்டீர்கள். இனியும் அந்த தவறை செய்ய மாட்டீர்கள் என நம்புகிறேன்” என உதயநிதி ஸ்டாலின் பேசினார்.

அரசு பள்ளிக்கு 1.52 ஏக்கர் நிலம் வழங்கிய பூரணம் அம்மாளின் வீட்டுக்குச் சென்று உதயநிதி ஸ்டாலின் பாராட்டு

மதுரை ஒத்தக்கடை அருகே உள்ள கொடிக்குளம் கிராமத்தைச் சேர்ந்த பூரணம் அம்மாள். இவரது கணவர் உக்கிரபாண்டியன் இறந்ததால் வாரிசு அடிப்படையில் மதுரை தல்லாகுளம் கனரா வங்கியில் எழுத்தராகப் பணியாற்றி வருகிறார். இவர்களது மகள் ஜனனி இரண்டு ஆண்டுக்கு முன்பு காலமானார். இந்நிலையில், மகள் ஜனனி நினைவாக, பிறந்த ஊரான கொடிக்குளம் அரசு நடுநிலைப் பள்ளியை தரம் உயர்த்துவதற்காக தனது பெயரில் இருந்த ரூ.7 கோடி மதிப்புள்ள ரூ.1.52 ஏக்கர் நிலத்தை ஜனவரி 5-ம் தேதி பள்ளியின் பெயரில் பத்திரப் பதிவு செய்து அரசுக்குத் தானமாக வழங்கினார்.

இவரது இச்செயலை அறிந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்ததோடு, அவரை கவுரவிக்கும் வகையில் குடியரசு தின விருதும் அறிவித்துள்ளார். மேலும் மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் வங்கிக்கு சென்று பாராட்டியது மட்டுமின்றி பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்தார்.

இந்நிலையில், அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியைத் தொடங்கிவைக்க வந்திருந்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், பூரணம் அம்மாளின் வீட்டுக்கு சென்று பூரணம் அம்மாளின் மகள் ஜனனியின் உருவப்படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்த பின்னர் பூரணம் அம்மாளைப் பாராட்டியதோடு திருவள்ளுவர் சிலையைப் பரிசாக வழங்கினார்.

சென்னை வெள்ளத்தில் பாடுபட்ட தன்னார்வலர்கள்.. நேரில் அழைத்து பாராட்டிய உதயநிதி ஸ்டாலின் !

மிக்ஜாம் புயல் காரணமாக ஏற்பட்ட மழை வெள்ளத்தில் சென்னை உட்பட 4 மாவட்டங்கள் தத்தளித்தன. தமிழக அரசு, வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்க பல்வேறு முயற்சிகளை முன்னெடுத்தது. அதேசமயம், தொலைத்தொடர்பு சேவைகள் முடங்கியதால் ஏராளமானோர் தொடர்பு கொண்டு அரசின் உதவிகளைப் பெற முடியவில்லை. சென்னையின் பல்வேறு பகுதிகளிலும் தன்னார்வலர்கள் ஏராளமானோர், மீட்பு பணிகளை ஒருங்கிணைத்தனர்.

மேலும், உதவி கோரி வரும் கோரிக்கைகளை, அதிகாரிகள், அமைச்சர்கள், தொண்டு நிறுவனங்களின் கவனத்திற்கு எடுத்துச் சென்று உதவிகளைப் பெற்றுத் தரவும் ஏராளமானோர் செயலாற்றினர். மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் தன்னார்வலர்களின் முயற்சிகள் பெரும் பாராட்டைப் பெற்றன. இந்நிலையில், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தன்னார்வலர்களை நேரில் அழைத்து பாராட்டியுள்ளார்.

இது தொடர்பாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் டிசம்பர் முதல் வாரத்தில் பெய்த கனமழை, பல்வேறு இடங்களில் வெள்ள பாதிப்புகளை ஏற்படுத்தியது. அத்தகைய பேரிடர் நேரத்தில், மக்களை காக்க அரசுடன் கைகோர்த்து களத்தில் இறங்கி மீட்பு – நிவாரணப் பணிகளை மேற்கொண்ட தன்னார்வலர்களை இன்று நேரில் சந்தித்து பாராட்டினோம்.

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் டிசம்பர் முதல் வாரத்தில் பெய்த கனமழை, பல்வேறு இடங்களில் வெள்ள பாதிப்புகளை ஏற்படுத்தியது.

அத்தகையப் பேரிடர் நேரத்தில், மக்களை காக்க அரசுடன் கைகோர்த்து களத்தில் இறங்கி மீட்பு – நிவாரணப் பணிகளை மேற்கொண்ட தன்னார்வலர்களை இன்று நேரில் சந்தித்து பாராட்டினோம்.

தங்களின் உயிரைப் பணயம் வைத்து வெள்ள நிவாரணப் பணிகளை செய்த போது, களத்தில் அவர்கள் பெற்ற அனுபவங்களை நம்மோடு பகிர்ந்து கொண்டனர். அவர்களுக்கு என் வாழ்த்துகள்.

தன்னார்வலர்களின் நற்பணிகள் தொடரட்டும்! மனிதநேயம் தழைக்கட்டும்! எனத் தெரிவித்துள்ளார்.

நாங்கள் என்ன அவங்க அப்பா வீட்டு காசவா கேட்டோம்…! அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மத்திய அமைச்சருக்கு தரமான பதிலடி..!

கடந்த வாரம் வங்கக்கடலில் உருவான மிக்ஜாம் புயல் ஆந்திராவில் கரையை கடந்தாலும் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் , திருவள்ளூர் மாவட்டங்களை சூறையாடிவிட்டு சென்று விட்டது. சென்னையில் பேயாக பெருமழை கொட்டித்தீர்த்துள்ளது. இதனால் எங்கும் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. நகர் பகுதிகளில் வெள்ளம் வடிந்தாலும் பல பகுதிகளில் மரங்கள் முறிந்து விழுந்துள்ளன.

பள்ளிகள், கல்லூரிகளை வெள்ளநீர் சூழ்ந்துள்ளன. இந்நிலையில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழக அரசு சார்பாக நிவாரண உதவி நிதி அறிவிக்கப்பட்டுள்ளது. புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நியாயவிலை கடைகள் மூலமாக வெள்ள நிவாரணமாக 6,000 ரூபாய் ரொக்கமாக வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். வெள்ள நிவாரணம் வழங்குவதற்கான டோக்கன் விநியோக்கும் பணி வரும் 16-ம் தேதி தொடங்குகிறது.

சென்னையில் உள்ள அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும், நியாயவிலை அட்டைக்கு விண்ணப்பித்தவர்களுக்கும் நிவாரணம் வழங்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் நேற்று பல்வேறு இடங்களில் நிவாரண உதவிகளை வழங்கி விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்களிடம் பேசுகையில், நன்றாக வேலை பார்த்துள்ளீர்கள். கடந்த மழை வெள்ளத்தை விட இந்த முறை சிறப்பாக நடவடிக்கை எடுத்துள்ளீர்கள் என்று மத்தியக்குழு ஆய்வு செய்து பாராட்டியுள்ளனர்.

கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தில் வங்கிகளில் பணத்தை எடுத்துக் கொள்கிறார்கள் என்று கூறுகின்றனர். கோவிட் பாதிப்பின் போது வழங்கப்பட்ட நிவாரண தொகை ரூ.2000 அனைவருக்கும் முழுமையாக சென்றடைந்தது. அதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். அதைப்போன்று பாதிக்கப்பட்டவர்கள் யாரும் விட்டு போய்விடக் கூடாது என்பதற்காக தான் தலைவர் முடிவு எடுத்து ரூ.6000 ரொக்கமாக கொடுக்க முடிவு செய்துள்ளார் என தெரிவித்தார்.

மேலும் நிவாரண தொகையை நியாயவிலை கடைகள் மூலம் வழங்குவதற்கு பதிலாக உரிமைத்தொகை போல வங்கிக் கணக்குகளிலேயே செலுத்தலாமே எனக் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு உதயநிதி ஸ்டாலின், “உரிமைத் தொகை வழங்கப்பட்டபோது முதல் மாதம் மினிமம் பேலன்ஸ் இல்லை என்பதால், வங்கியில் பணம் போட்டதை ஏராளமானோருக்கு பிடித்தம் செய்யப்பட்டு விட்டது. பாதிக்கப்பட்ட மக்கள் யாரும் விடுபட்டு விடாமல் அனைவருக்கும் சென்று சேரும் வகையிலே ரொக்கமாக வழங்கப்பட உள்ளது. கொரோனா காலத்தில் பணம் வழங்கப்பட்டது போல இப்போது வெள்ள நிவாரணம் நியாயவிலை கடைகள் மூலமாக வழங்கப்படும்.” என தெரிவித்தார்.

அப்போது ஒரு நிருபர், மத்திய அமைச்சர் இது என்ன ஏடிஎம்மா? கேட்ட உடன் பணத்தை கொடுக்க முடியும் என்று கூறியுள்ளாரே என்று கேட்டதற்கு, ‘‘நாங்கள் என்ன அவங்க அப்பா வீட்டு காசவா கேட்டோம். தமிழ்நாட்டு மக்கள் கொடுத்த வரிப்பணம் தானே? மற்ற மாநிலங்களுக்கெல்லாம் கேட்காமல் கொடுக்கிறீர்கள் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.

உதயநிதி ஸ்டாலின் குறித்து ஆபாசமாக திட்டி ஆடியோ வெளியிட்ட பாஜக முன்னாள் கவுன்சிலர் கைது

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் மாணிக்கவாசபுரம் தெருவைச் சேர்ந்த பேரூராட்சி முன்னாள் கவுன்சிலர் எட்வர்ட் ராஜதுரை. பாஜக சிறுபான்மை அணி முன்னாள் மாவட்ட செயலாளராகவும் இருந்துள்ளார். இவர் சாத்தான்குளத்தில் எட்வர்ட் அன் கோ என்ற பெயரில் சமூக வலைதள குழு நடத்தி வந்தார்.

இந்நிலையில் அவர் அட்மினாக இருக்கும் வாட்ஸ் அப் குழு ஒன்றில் தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு நலத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் குறித்து அவதூறாகவும், ஆபாசமாகவும், திட்டி விமர்சித்து ஆடியோ வெளியிட்டதாக கூறப்படுகிறது. இந்த ஆடியோ வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாகி மிகவும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதனால் சாத்தான்குளம் திமுக நகரத் துணைத் செயலாளர் வெள்ள பாண்டியன் என்பவர் அளித்த புகாரின் பேரில் சாத்தான்குளம் காவல்துறை 294 (B), 153, 504, 505 உள்ளிட்ட ஒருவரை திட்டுதல், அரசுக்கு எதிராக களங்கம் விளைவிக்கும் விதமாக கருத்துக்களை பரப்புதல், நிந்தித்தல், பேச்சில் ஒருவரை தரக்குறைவாக பேசுதல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து ஆடியோ வெளியிட்ட எட்வர்ட் ராஜதுரை என்பவரை சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் முத்து தலைமையிலான காவல்துறைய எட்வர்ட் ராஜதுரை கைது செய்தனர்.

மத்திய பாஜக அரசு, ஆளுநரை கண்டித்தும்….நீட் தேர்வை ரத்து செய்யக் கோரியும் திமுகவின் உண்ணாவிரதப் போராட்டம் தொடங்கியது

தமிழக மாணவர்களின் மருத்துவராகும் கனவைச் சிதைத்து, அவர்களின் உயிரைப் பறிக்கின்ற உயிர்க்கொல்லியாக உருவெடுத்துள்ள நீட் தேர்வைத் திணிக்கும் மத்திய பாஜக அரசு நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு மசோதா தற்போது ஜனாதிபதியின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி வருகின்றார்.

இந்நிலையில் மத்திய பாஜக அரசு, ஆளுநரை கண்டித்தும், நீட் தேர்வை ரத்து செய்யக் கோரியும் திமுக இளைஞர் அணி, மாணவர் அணி, மருத்துவ அணி சார்பில் தமிழகம் முழுவதும் மாவட்டத் தலைநகரங்களிலும், புதுச்சேரி, காரைக்காலிலும் மதுரை தவிர மாநிலம் முழுவதும் இன்று உண்ணாவிரதம் நடைபெறுகிறது.மதுரையில் திமுகவினரின் உண்ணாவிரதப் போராட்டம், வரும் 23-ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.

காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறவுள்ள இந்தப் போராட்டத்தில், மாணவ – மாணவிகள், அவா்களின் பெற்றோா்கள், கல்வியாளா்கள், சமூகச் செயற்பாட்டாளா்கள் உட்பட பலா் கலந்து கொள்ளவுள்ளனா். சென்னையில் வள்ளுவா் கோட்டம் அருகே நடைபெறும் உண்ணாவிரதப் போராட்டத்தில் அமைச்சா்கள் உதயநிதி ஸ்டாலின், மா.சுப்பிரமணியன், பி.கே.சேகா்பாபு, சென்னையைச் சோந்த எம்.பி.,க்கள், எம்.எல்.ஏ.,க்கள் பங்கேற்றுள்ளனர் .இந்தப் போராட்டத்தை திமுக பொதுச் செயலா் துரைமுருகன் தொடங்கி வைத்தார்.

இனி சுய உதவிக் குழுக்களுக்கு நல்ல காலம் பொறக்குது…

தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் செயல்பாடுகளை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடர்ச்சியாக ஆய்வு செய்து முக்கிய உத்தரவுகளை பிறப்பித்துக்கொண்டு இருக்கிறார். ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் செயல்படும் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் வழிகாட்டுதலில், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், தீனதயாள் உபாத்தியாய ஊரகத் திறன் பயிற்சித் திட்டம், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் மற்றும் வாழ்ந்து காட்டுவோம் திட்டம் ஆகியவை சிறப்பாக செயல்பட்டு வருகின்றன.

இந்த அமைப்புகளின் சார்பில் தமிழ்நாட்டின் ஊரக மற்றும் நகர்ப்புறப் பகுதிகளில் சுய உதவிக் குழுக்கள், கிராம வறுமை ஒழிப்புச் சங்கங்கள், ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகள் மற்றும் நகர்ப்புர பகுதி அளவிலான கூட்டமைப்புகள் போன்றவை அமைக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகின்றன. வறுமை ஒழிப்புத் திட்டங்கள் சுய உதவிக் குழுக்களின் முன்னேற்றத்திற்காக தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் அறிவிக்கப்பட்ட பல்வேறு திட்டங்களை தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் செயல்படுத்தி வருகிறது.

அத்திட்டங்களின் செயல்பாடுகள், அவற்றில் அடைந்துள்ள இலக்குகள், மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் போன்றவை குறித்து இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அன்று ஆய்வு மேற்கொண்டார். இந்நிலையில்தான் தமிழ்நாட்டில் உள்ள நகர்ப்புற சுய உதவிக் குழுக்களில் உள்ள மகளிர் பயன் பெறும் வகையில் பல்வேறு நலத்திட்டம் வழங்கும் விழா அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மூலம் நடத்தப்பட உள்ளது.

இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் நகர்ப்புற சுய உதவிக் குழுக்களில் உள்ள மகளிர் பயன் பெறும் வகையில் வங்கிக் கடன் இணைப்பு, நகர்ப்புர சாலையோர வியாபாரிகளுக்கு உணவுத்தரச் சான்றிதழ். திறன் பயிற்சி பெற்ற இளைஞர்களுக்கு ஓட்டுநர் உரிமம் / பணி நியமன ஆணைகள், சுய உதவிக் குழுக்களைச் சார்ந்த சிறு தொழில் முனைவோர்களுக்கு கடனுதவிகள், நகர்ப்புற சுய உதவிக் குழுக்களுக்கு சிறப்பான முறையில் வங்கிக் கடன் வழங்கிய வங்கிகளுக்கு வங்கியாளர் விருதுகள் மற்றும் தொழில் பயிற்சி நிறுவனங்களுக்கு சான்றிதழ்கள் வழங்கும் விழா 14.08.2023 அன்று சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெறுகிறது.

முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால், மகளிரின் முன்னேற்றத்திற்காக, 1989-ம் ஆண்டு முதன்முறையாக தர்மபுரி மாவட்டத்தில் துவங்கப்பட்ட மகளிர் திட்டம் இன்று தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது சமூக, பொருளாதார மேம்பாட்டை அடைவதற்கு சுய உதவிக் குழுக்கள் மற்றும் இத்திட்டத்தின் மூலம் சுய உதவிக் குழுக்கள் மற்றும் கூட்டமைப்புகளை உருவாக்கி, முறையான பயிற்சிகள் வழங்கி, வருமானம் ஈட்டும் தொழில்களைத் தொடங்க வங்கிக் கடன் இணைப்புகள் ஏற்படுத்தி சுய உதவிக் குழு இயக்கத்தை வலுப்படுத்தி வருகிறது.

மகளிரின் முன்னேற்றத்திற்கான அரசு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வரும் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் அங்கமான தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் நகர்ப்புறங்களில் சுய உதவிக் குழு இயக்கத்தின் வளர்ச்சிக்காக முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. இந்த இயக்கத்தின் கீழ் நகர்ப்புறங்களில் சுய உதவிக் குழுக்கள் மற்றும் கூட்டமைப்புகள் அமைக்கப்பட்டு, அவற்றின் உறுப்பினர்களுக்கு தொழிற்பயிற்சிகள், வங்கிக் கடன் இணைப்புகள், சுய தொழில் வாய்ப்புகள் போன்றவை உருவாக்கித் தரப்படுகின்றன.

இதன் தொடர்ச்சியாக, தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் நகர்ப்புற சுய உதவிக் குழுக்களில் உள்ள மகளிர் பயன் பெறும் வகையில் வங்கிக் கடன் இணைப்பு. நகர்ப்புற சாலையோர வியாபாரிகளுக்கு உணவுத்தரச் சான்றிதழ், திறன் பயிற்சி பெற்ற இளைஞர்களுக்கு ஓட்டுநர் உரிமம் / பணி நியமன ஆணைகள், சுய உதவிக் குழுக்களைச் சார்ந்த சிறு தொழில் முனைவோர்களுக்கு கடனுதவிகள், நகர்ப்புற சுய உதவிக் குழுக்களுக்கு சிறப்பான முறையில் வங்கிக் கடன் வழங்கிய வங்கிகளுக்கு வங்கியாளர் விருதுகள் மற்றும் தொழில் பயிற்சி நிறுவனங்களுக்கு சான்றிதழ்கள் ஆகியவற்றை மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் வழங்கவுள்ளார்.

இந்நிகழ்ச்சியில், அமைச்சர் பெருமக்கள், நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், வங்கிகளின் அலுவலர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளனர், என்று கூறப்பட்டு உள்ளது.

”பாஜக ஆட்டம் இன்னும் சில மாதங்கள் தான்..! கவுண்ட் டவுன் சொன்ன மு.க. ஸ்டாலின்..!

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக இளைஞர் அணி கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட முதல்மைச்சர் மு.க. ஸ்டாலின், ”ஒன்றியத்தில் ஆட்சியில் இருப்பது மூலமாக தாங்கள் ஏதோ வெல்ல முடியாத கட்சி என்பது போல பயம் காட்டிக்கொண்டு இருக்கிறார்கள். தம்பி உதயநிதி ஸ்டாலின் பேசுகிறபோது சொன்னாரே, நேற்று உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழ்நாட்டுக்கு வந்தார். நாடாளுமன்றத் தேர்தல் வருகிறது அல்லவா? இனிமேல் இதுபோல் ஒன்றிய அமைச்சர்கள் அடிக்கடி வருவார்கள்.

பா.ஜ.க. தன்னுடைய அரசியல் எதிரிகளை சலவை செய்கிற வாஷிங் மிஷினாக அமலாக்கத்துறையை பயன்படுத்தி வருகிறது என்பது இந்தியா முழுவதும் தெரிந்த ரகசியம். புலனாய்வு அமைப்புகளை வைத்து, தங்களுக்கு எதிரானவர்களை மிரட்டுவதும், அவர்கள் பா.ஜ.க. பக்கம் மாறினால் அவர்கள் எல்லோரும் பரிசுத்தமானவர்களாக மாறிவிடுவார்கள் என்பதும் பா.ஜ.க.வின் அசிங்கமான அரசியல் பாணி.

அதனால்தான், உச்சநீதிமன்றமே அமலாக்கத்துறை இயக்குநரின் பதவி நீட்டிப்பை ரத்து செய்து, ஜூலை 31-க்கு பிறகு நீட்டிக்கக் கூடாது என்று கூறிய பிறகு, திரும்ப அதே உச்சநீதிமன்றத்திற்கு ஓடிச்சென்று அவருக்கு மேலும் இரு மாதங்களுக்கு பணி நீட்டிப்பு வாங்கியிருக்கிறது என்றால், என்ன காரணம்? ஏன் நாட்டில் அமலாக்கத்துறை இயக்குநர் பதவிக்கு தகுதியான IRS அதிகாரிகளே இல்லையா? இதே கேள்வியை உச்சநீதிமன்றம் எழுப்பியிருக்கிறது.

ஒன்றிய பா.ஜ.க. அரசின் ஆட்டம் எல்லாம் இன்னும் சில மாதங்கள் தான். ஜனநாயகம் – சமூக நீதி – மதச்சார்பின்மை – அரசியல் சட்டம் என்று அனைத்தையும் அழிக்க முயற்சிக்கும் பா.ஜ.க. ஆட்சி முடியப் போகிறது. இந்தியாவிற்கு விடியல் பிறக்கப் போகிறது. தமிழை – தமிழினத்தை – தமிழ்நாட்டு மக்களைக் காக்க வேண்டும் என்றால், இந்தியாவின் ஜனநாயகக் கட்டமைப்பை காப்பாற்றியாக வேண்டும். இந்தியாவைக் காப்பாற்ற INDIA-விற்கு வாக்களியுங்கள் என்பதுதான் நம்முடைய தேர்தல் முழக்கமாக அமையப் போகிறது.” என தெரிவித்தார்.