வாய் பேசாம கடனை வசூல் செய்… இல்லனா 3 வருடங்கள் சிறை தான்..!

கடனை மிரட்டி கட்டாயமாக வசூலிப்பது, குடும்பத்தினரை பின் தொடர்வது உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபட்டால் 3 வருடங்கள் வரை சிறை தண்டனை விதிக்கும் சட்ட முன் வடிவை தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தமிழ்நாடு சட்டப்பேரவையில் தாக்கல் செய்துள்ளார். .

தமிழகத்தில் தற்போது தனிநபர் கடன், கடன் அட்டை எனப்படும் கிரெடிட் கார்ட், வீட்டுக் கடன், வாகன கடன், மகளிர் சுய உதவிக் குழுக்கள் ஆகியவை கடன் பெறுவது அதிகரித்து வருகிறது. அதே நேரத்தில் அவற்றை வசூலிப்பதில் அத்துமீறல் சம்பவங்கள் நடைபெறுவதாக அடிக்கடி குற்றச்சாட்டுகள் எழுகிறது. குறிப்பாக குழு லோன் எனப்படும் வங்கிகளில் மற்றும் வங்கிகள் அல்லாத சிறு நிதி நிறுவனங்களில் பெண்கள் கடன் பெறுவதும் அவர்களிடம் வசூல் செய்யும் போது மரியாதை குறைவாக பேசுவது, தாக்குவது, வீட்டின் முன் அமர்வது உள்ளிட்ட செயல்களில் கடன் வசூலிப்பாளர்கள் ஈடுபடுவதால் பொதுமக்கள் மிகுந்த இன்னலுக்கு ஆளாகின்றனர்.

மேலும் கடன் பெறுபவர்களை வெளி ஆட்களை வைத்து வலுக்கட்டாய வசூலிப்பு நடைமுறைகளில் ஈடுபடுவதாகவும் பொதுமக்கள் அடுத்தடுத்து புகார் அளித்தனர். இந்நிலையில், வலுக்கட்டாய கடன் வசூலிப்பு முறைகளில் இருந்து பொருளாதாரத்தில் பின் தங்கிய மற்றும் நலிவடைந்த பிரிவினரை பாதுகாக்கும் வகையில் சட்டத்தை திருத்துவதற்கான சட்டமுன்வடிவு தமிழக சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இன்று தமிழ்நாடு சட்டசபை சபாநாயகர் அப்பாவு தலைமையில் சபை கூடிய நிலையில், தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இந்த சட்ட முன் வடிவை தமிழ்நாடு சட்டப் பேரவையில் தாக்கல் செய்தார். இந்த சட்டத் திருத்தத்தின் படி,”தனிநபர்கள், தனி நபர்கள் குழு, சுய உதவிக்குழுக்கள் உள்ளிட்டவற்றிற்கு கடன் வழங்கும் தொழிலில் ஈடுபட்டுள்ள பணக்கடன்கள் வழங்கும் நிறுவனங்களின் வலுக்கட்டாய வசூலிப்பு முறைகளால் பொதுமக்கள் மிகுந்த இன்னல்களுக்கு உள்ளாகின்றனர்.

இந்த சட்டத் திருத்தத்தின் படி, கடன் பெறுவோருக்கும் கடன் வழங்கும் நிறுவனத்திற்கும் இடையே உள்ள பூசல்களை தீர்த்துவைக்க குறை தீர்ப்பாயரை அரசு நியமிக்கலாம். கடன் வழங்கிய நிறுவனம் கடன் பெற்றவரோ அல்லது அவரது குடும்பத்தினரையோ வலுக்கட்டாய நடவடிக்கைக்கு உட்படுத்தவோ, மிரட்டவோ, பின் தொடரவோ, அவர்களது சொத்துக்களை பறிக்கவோ கூடாது.

கடன் பெற்றவரிடமோ அல்லது அவரது குடும்பத்தினரிடமோ வலுக்கட்டாயமாக வசூலிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டால் மூன்று ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது ஐந்து லட்சம் ரூபாய் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம். வலுக்கட்டாய நடவடிக்கைகளால் கடன் பெறுபவர் அல்லது அவரது உறுப்பினர்கள் எவரேனும் தற்கொலை செய்து கொண்டால் கடன் கொடுத்த நிறுவனம் தற்கொலைக்கு தூண்டியதாக கருதப்படுவார்கள். இச்சட்ட முன் வடிவின் படி தண்டனைக்குரிய குற்றங்களில் கைது செய்யப்படுவோர் பிணையில் வெளி வர முடியாது என்பதும் குறிப்பிடத்தக்கது.

உதயநிதி ஸ்டாலினுக்கு அலிசா அப்துல்லா சவால்..!

என்னால் தமிழ்த்தாய் வாழ்த்தை பிழையில்லாமல் பாட முடியும். திமுகவின் இளைஞர் அணி தலைவர் உதயநிதி ஸ்டாலினால் பாட முடியுமா ? என்று பாஜக தமிழ்நாடு விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவு செயலாளரான அலிஷா அப்துல்லா கேள்வி எழுப்பியுள்ளார்.

பிஎம்ஸ்ரீ திட்டத்தை ஏற்காத காரணத்தால் மத்திய அரசு, தமிழ்நாட்டிற்கான ஒருங்கிணைந்த பள்ளி கல்வித்திட்ட நிதியை விடுவிக்க இயலாது என்று அறிவித்துவிட்டது. இந்த விவகாரத்தில் பாஜகவிற்கும், திமுகவிற்கும் சமூக வலைதளங்களில் கடந்த மூன்று நாட்களாக கடுமையான மோதல் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் பாஜக தமிழ்நாடு விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவு செயலாளரான அலிஷா அப்துல்லா தனது எக்ஸ் பக்கத்தில், “எங்கள் வீட்டில் நாங்கள் பயன்படுத்தும் மொழி உருது.

நான் ஆங்கில வழி கல்வியில் தான் படித்தேன். என்னுடைய ரேஸிங் துறையில் சிறந்து விளங்கிய இஸ்லாமிய பெண் என்பதால். நான் பாஜகவில் இணைந்தது பலருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அரசியல் புரிதல் இல்லாமல் நல்லது செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் பாஜகவில் இணைந்தேன். நான் பாஜகவில் இணைந்த ஒரே காரணத்திற்காக திமுக ஊடகங்கள் என்னை போட்டி போட்டுக் கொண்டு நேர்காணல் எடுத்தனர். அதன் சூழ்ச்சியும் திமுகவின் அரசியலும் எனக்கு அப்போது தெரியவில்லை. என்னை பாஜகவில் இருந்து வெளியேற்ற திமுக சார்பில் இருந்து என்னுடைய தொழில் என் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் பல அழுத்தங்களை கொடுத்துள்ளனர்.

ஒரு படி மேல் சென்று நீங்கள் திமுகவில் இணையுங்கள் உங்களுக்கு பெரிய பொறுப்பு கொடுக்கிறோம் என்றும் கூறினார்கள். எனக்கு இந்த அளவுக்கு முக்கியத்துவம் கொடுப்பதற்கான காரணம் என்னவென்றால் நான் ஒரு இஸ்லாமிய பெண். இஸ்லாமியர்களுடைய வாக்கு ஒன்று கூட பாஜக பக்கம் போக கூடாது என்பதில் திமுக உறுதியாக இருக்கிறார்கள்.

நான் மறுபடியும் சொல்கிறேன் நான் தமிழ் பாரம்பரிய குடும்பம் கிடையாது தமிழகத்தில் பிறந்து உருது மொழியை பேசும் இஸ்லாமிய குடும்பத்தை சேர்ந்தவள். பாரம்பரிய தமிழ் குடும்பத்தை சேர்ந்த உதயநிதிக்கு ஒரு சவால். இன்று என்னால் தமிழ்த்தாய் வாழ்த்தை பிழையில்லாமல் பாட முடியும்.திமுகவின் இளைஞர் அணி தலைவர் உதயநிதி ஸ்டாலினால் பாட முடியுமா ?” என அலிஷா அப்துல்லா எக்ஸ் பக்கத்தில்  பதிவிட்டுள்ளார்.

உதயநிதி ஸ்டாலின்: யார் அரசியல் செய்கிறார்கள்..!? அது எக்காலத்திலும் நடக்காது..!

கல்வி விவகாரத்தில் யார் அரசியல் செய்கிறார்கள், எக்காலத்திலும் மும்மொழி கொள்கையை ஏற்க மாட்டோம் என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டிற்கு அளிக்கப்பட வேண்டிய கல்வி நிதியை விடுவிக்கக் கோரி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி இருந்தார். இந்நிலையில் புதிய கல்விக் கொள்கை விவகாரத்தில் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பதில் கடிதம் எழுதி இருக்கிறார்.

அதில், புதிய கல்விக் கொள்கையை ஏற்று பிஎம் ஸ்ரீ திட்டத்தை செயல்படுத்தாத காரணத்தால் தமிழ்நாடு ரூ.5 ஆயிரம் கோடி நிதியை இழக்கிறது. 1968-ல் தொடங்கி இந்திய கல்வி திட்டத்தின் முதுகெலும்பாக மும்மொழிக் கொள்கை உள்ளது. மும்மொழிக் கொள்கையை இதுவரை முறையாக நடைமுறைப்படுத்தாதது துரதிர்ஷ்டவசமானது.

இதனால் காலப்போக்கில் வெளிநாட்டு மொழிகளை நாம் நம்பியிருக்க வேண்டிய சூழல் வந்துவிட்டது. பாஜக ஆட்சி செய்யாத பல மாநிலங்கள் புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்தியுள்ளது. அதனால் தமிழ்நாடும் அமல்படுத்த வேண்டும். கல்வியில் அரசியலை புகுத்தாதீர்கள். அரசியல் கருத்து வேறுபாடுகளை தாண்டி மாணவர்களின் நலன் கருதி முடிவு எடுக்க வேண்டும். காலத்தால் அழிக்க முடியாத தமிழ் மொழியை உலகம் முழுவதும் பிரதமர் மோடி பரப்பி வருகிறார்.

சமூக மற்றும் கல்வி முன்னேற்றங்களில் தமிழ்நாடு முன்னோடி மாநிலமாக திகழ்கிறது. அனைவரையும் உள்ளடக்கிய கற்றல் சூழலை வளர்த்ததில் தமிழ்நாடு முன்னணியில் உள்ளது. எந்த மாநிலத்திலும் மொழியை திணிக்கும் பேச்சிற்கே இடமில்லை என்று தெரிவித்திருந்தார். தற்போது மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானின் கடிதத்திற்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதில் அளித்துள்ளார்.

அதில், தமிழக கல்விக்கான ரூ.2,151 கோடி நிதியை கேட்டுள்ளோம். அதற்கு மத்திய அரசு தரப்பில் தேசிய கல்விக் கொள்கை, மும்மொழியை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று கட்டுப்பாடு விதிக்கிறார்கள். தமிழ்நாடு எப்போதும் மும்மொழிக் கொள்கைக்கு எதிராகதான் இருந்திருக்கிறது. அதனை எந்த காலத்திலும் ஏற்றுக் கொள்ள மாட்டோம் என்பதை தெளிவாக கூறிவிட்டோம். இதில் என்ன அரசியல் இருக்கிறது? மொழிப்போரில் உயிர்த்தியாகம் செய்த மாநிலம் தமிழ்நாடு. அதனால் தமிழ்நாட்டின் கல்வி உரிமையில் யார் அரசியல் செய்கிறார்கள் என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும் என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

பிரகாஷ் ராஜ் ‛Get Out Modi’.. ஏன்யா இந்தி பேச சொல்லி கட்டாயப்படுத்துறீங்க..!

உங்களுக்கு இந்தி தெரியும்.. நீங்க இந்தியில் பேசுறீங்க.. எங்களையும் இந்தியில் பேச சொல்லி கட்டாய படுத்துகிறீங்க. ஏன்னா உங்களுக்கு இந்தி மட்டும் தான் தெரியும் இந்த அபத்தமான விளையாட்டு எங்களிடம் செல்லாது என்று நடிகர் பிரகாஷ் ராஜ் தமிழில் பதிவிட்டு மத்திய அரசை விமர்சனம் செய்துள்ளார்.

மத்திய அரசின் ஒருங்கிணைந்த கல்வி திட்டத்தில் சமக்ர சிக்ஷா அபியான் திட்டத்தின் கீழ் தமிழகத்துக்கு தர வேண்டிய ரூ.2,152 கோடியை மத்திய அரசு நிதி ஒதுக்கவில்லை. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உள்பட அமைச்சர் அன்பில் மகேஷ் கேட்டும் மத்திய அரசு வழங்காமல் உள்ளது. தேசிய கல்வி கொள்கையின்படி மும்மொழி கொள்கையை அமல்படுத்தினால் மட்டுமே அந்த நிதி விடுவிக்கப்படும். இல்லாவிட்டால் தமிழகத்துக்கான ரூ.2,152 கோடி நிதி விடுவிக்கப்படாது என்று மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெளிவாக கூறிவிட்டார்.

இந்த விஷயத்தில் தமிழக அரசுக்கும், மத்திய அரசுக்கும் இடையே கடும் மோதல் போக்கு உள்ளது. இதற்கிடையே கரூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, ‛‛நேற்று முன்தினம் உதயநிதி ஸ்டாலின் சொல்கிறார்.. பிரதமர் மோடி மட்டும் தமிழ்நாட்டிற்கு வந்தார் என்றால், நாங்கள் முதலில் கோ பேக் மோடி என்று சொன்னோம்.. நாங்கள் இனி கெட் அவுட் மோடி என்று சொல்வோம் என்று உதயநிதி சொல்கிறார்.. உதயநிதி ஸ்டாலினுக்கு நான் சொல்கிறேன்.. நீ சரியான ஆளாக இருந்தால்.. உன் வாயில் இருந்து கெட் அவுட் மோடின்னு சொல்லிப்பாரு..” என்று சவால் விட்டார்.

இதையடுத்து எக்ஸ் பக்கத்தில், ‛GetOutModi’ என்ற ஹேஷ்டேக்கை நேற்று திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் எக்ஸ் பக்கத்தில் டிரெண்ட் செய்தனர். அதோடு பிரதமர் மோடி, மத்திய அரசு மற்றும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு எதிராக அந்த ஹேஷ்டேக்கில் அவர்கள் பதிவுகளை வெளியிட்டனர்.

இந்நிலையில் தான் தமிழக அரசுக்கு ஆதரவாக நடிகர் பிரகாஷ் ராஜ் தனது எக்ஸ் பக்கத்தில், ‛‛உங்களுக்கு இந்தி தெரியும்.. நீங்க இந்தியில் பேசுறீங்க.. எங்களையும் இந்தியில் பேச சொல்லி கட்டாய படுத்துகிறீங்க. ஏன்னா உங்களுக்கு இந்தி மட்டும் தான் தெரியும்.. இந்த அபத்தமான விளையாட்டு எங்களிடம் செல்லாது..” என பிரகாஷ் ராஜ் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

பொன்.ராதாகிருஷ்ணன் கேள்வி: அறிவாலயம் ‘ரெட்லைட் ஏரியா’வா..!?

“அறிவாலயம் என்ன ரெட்லைட் ஏரியா”வா? என பாஜக மூத்த தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் பேசியது பெரும் சர்ச்சையாகி இருக்கிறது. இது தொடர்பாக பொன்.ராதாகிருஷ்ணன் பேசுகையில், அண்ணாமலைக்கு உதயநிதி ஸ்டாலின் சவால் விட்டிருக்கிறார். அண்ணாமலை இருக்கட்டும்.. நானே வருகிறேன்.. எங்கே வரனும் என சொல்லுங்க? என்னைக்கு வரனும் என சொல்லுங்க? டைமை குறிங்க.. தமிழக முதல்வர் அவர்களே! இது தமிழ்நாடு. எட்டு கோடி மக்களுக்கும் சொந்தமானது தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த பகுதிகளும்.

இதில் அண்ணா அறிவாலயத்துக்கு முன்னால் வரக் கூடாது என சொன்னால், அது ரெட்லைட் ஏரியாவா அது ரெட்லைட் ஏரியாவா? அங்க வரக்கூடாதுன்னு சொல்றதுக்கு உங்களுக்கு என்ன தைரியம் இருக்க முடியும்? கேவலமான ஒன்று. உதயநிதி ஸ்டாலின் தம்முடைய வார்த்தைகளை திரும்பப் பெற வேண்டும்; ஒரு பக்கத்தில் குழந்தைகளை அப்பா என கூப்பிட சொல்றாங்க..சரி சந்தோஷப்படுவோம். அது தப்பு கிடையாது.. ஆனால் எங்க பகுதிக்கு வரக்கூடாது என சொன்னால்…. ஜெயலலிதா அம்மாவை இவர்கள் நினைவு கொள்ள வேண்டும்.

மதிமுகவின் துவக்க காலத்தில் அண்ணா அறிவாலயப் பக்கத்தில் ஒரு பெரிய ஊர்வலமாக வந்து இதே அறிவாலயம் மீது தாக்குதல் வரும் என்ற நிலை இருந்தது. அன்றைக்கு ஜெயலலிதாதான் பாதுகாப்பு கொடுத்தார். இன்றைக்கு வேற ஏதாவது மாற்றி எங்க பகுதிக்கு வந்துடாதீங்க என சொல்கிறார்கள் எனில் ஒன்று அவர்கள் அறிவாலயத்தை தவறாக நடத்துகிறார்கள் என்கிற பொருளில் முடியும். அது வேறு ஒரு விஷயம்.. சவால் விடுகிறீர்கள் எனில் நாங்கள் வருகிறோம்.

நாங்கள் ரெட்லைட் ஏரியா என சொன்னதால் அதற்குதான் வருகிறீர்களா? என அடுத்த கேள்வி கேட்பார்கள்.. இந்த குசும்பு வேலை எல்லாம் செய்வாங்க.. நீங்க சவால்விடுங்க.. நாங்க வருகிறோம். உங்களால் என்ன செய்ய முடியுமோ செய்.. இவ்வாறு பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

உதயநிதி ஸ்டாலின் சவால்: அண்ணாமலைக்கு தைரியம் இருந்தால் அண்ணா சாலைக்கு வரச் சொல்லுங்கள்..!

அண்ணாமலையை முடிந்தால் அண்ணா சாலை பக்கம் வரச் சொல்லுங்கள் என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் சவால் விடுத்துள்ளார். இதுகுறித்து உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசுகையில், என்னை ஒருமையில் அண்ணாமலை பேசியிருக்கிறார். அவர்களது தரம் அதுதான். என் வீட்டில் போஸ்டர் ஒட்டுவதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியிருந்தார்.

ஏற்கெனவே அண்ணா அறிவாலயத்தை ஏதோ செய்வதாக தெரிவித்திருந்தார். தைரியமிருந்தால் அண்ணாமலையை அண்ணா சாலை பக்கம் வரச் சொல்லுங்கள். உதயநிதி, அண்ணாமலையின் தனிப்பட்ட பிரச்சினை இல்லை. கல்வி நிதி தொடர்பானது. நிதியை பெற்றுத் தர துப்பில்லாதவர்கள் பேசுகிறார்கள். தமிழகத்தின் நிதி உரிமையை திசை திருப்பவே இப்படி செய்கிறார்கள். தனியார் பள்ளி தனியார் பள்ளிகளை யாராவது சட்டவிரோதமாக நடத்துகிறார்களா என்ன? மத்திய அரசிடம் போதிய அனுமதியை பெற்றுத்தானே நடத்துகிறார்கள்.

தனியார் பள்ளிகளில் யாராவது இலவச உணவையோ இலவச சீருடையையோ தருகிறார்களா என்ன? தனியார் பள்ளிகளில் இந்தி தனியார் பள்ளியில் இந்தி கற்றுக் கொடுக்கிறார்கள் என மும்மொழிக் கொள்கையுடன் தொடர்புபடுத்த வேண்டாம். மும்மொழி கொள்கை என்பது அரசுப் பள்ளியோடு தொடர்புடையது. உ.பி. கும்பமேளாவில் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் பாஜக திணறி வருகிறது. எத்தனை பேர் பலியானார்கள், எத்தனை பேர் காயமடைந்தனர் என்பது குறித்து அறிக்கையேதும் வெளியிடப்படவில்லை.

காசியில் தமிழக வீரர்கள் காசியில் தமிழக வீரர்கள் சிக்கி வரும் சம்பவம் குறித்து இன்று காலை எனக்கு தகவல் கிடைத்தது. அவர்கள் தமிழகம் திரும்ப போதிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.

பெரியார், அண்ணா, கலைஞர் நினைவிடங்களில் உதயநிதி ஸ்டாலின் மரியாதை..!

உதயநிதி ஸ்டாலின் தமிழ்நாட்டின் துணை முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு முதன்முறையாக இன்று பிறந்தநாள் கண்டிருக்கிறார். “இந்நாளை கொள்கை நாளாக கொண்டாட வேண்டும்” என்ற துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கோரிக்கையை ஏற்று, தமிழ்நாடு முழுக்க கழக தொண்டர்கள் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கியும், கொள்கைகளை பரப்பியும் வருகின்றனர்.

அவ்வகையில், உதயநிதி ஸ்டாலின் முதலாக சென்னை முகாம் அலுவலகத்திற்கு சென்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களிடம் வாழ்த்து பெற்றார். அதன் தொடர்ச்சியாக திராவிட இயக்கத்தின் தூண்களாகவும், சமூக நீதி பாதைக்கு வித்திட்டவர்களாகவும் இருந்து, தங்களது வாழ்நாளை பொதுவாழ்விற்காக அர்ப்பணித்த தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா மற்றும் முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோரின் நினைவிடங்களுக்கு சென்று, உதயநிதி ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்

உதயநிதி ஸ்டாலின் ஆவேசம்: சர்வாதிகாரத்தின் ஆயுள் நீண்ட நாள் நீடிக்காது..!

உதயநிதி ஸ்டாலின் ஆவேசம் சர்வாதிகாரத்தின் ஆயுள் நீண்ட நாள் நீடிக்காது என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். பாஜக ஆட்சிக்கு வந்ததில் இருந்து தொடர்ந்து மக்கள் விரோத போக்கினை கடைபிடித்து வருகின்றது. கறுப்புப் பணம் ஆரம்பித்த பாஜக அரசின் சர்வாதிகார போக்கு இன்று ‘ஒரே நாடு ஒரே மொழி’ என்ற கொள்கையைத் தீவிரமாக அமல்படுத்தி வருகிறது. மத்திய அரசின் திட்டங்கள் அனைத்தையும் இந்தியில் பெயர் வைக்கும் பாஜக அரசு, பிற மொழிகளைத் தொடர்ந்து புறக்கணித்தே வருகிறது.

இந்நிலையில், பொது நிறுவனமான LIC-இலும் இந்தி திணிப்பை பாஜக முன்னெடுத்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தயுள்ளது . அரசின் LIC இணையதளப் பக்கத்தின் முதன்மை மொழி, ஆங்கிலத்தில் இருந்து வந்த நிலையில், தற்போது முகப்பு பக்கத்தில் இந்தி மொழி மட்டுமே இருக்கும் வகையில் மாற்றப்பட்டுள்ளது.

மத்திய அரசின் இந்த செலுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் கடும் எதிர்ப்புகள் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சர்வாதிகாரத்தின் ஆயுள் நீண்ட நாள் நீடிக்காது என பாஜக அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில், ஒட்டுமொத்த நாட்டு மக்களின் பங்களிப்போடு செயல்பட்டு வரும் LIC -யின் இணையதளம், முழுக்க, முழுக்க இந்தி மயமாக்கப்பட்டுள்ளதை வன்மையாகக் கண்டிக்கிறோம். அந்த இணையதளத்தை ஆங்கிலத்தில் பார்ப்பதற்கான வசதியைக் கூட இந்தியில் உள்ள சுட்டியின் மூலம் தான் பெற முடியும் என்பது மத்திய அரசின் இந்தித் திணிப்பு மோகத்தையே அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

தமிழ், ஆங்கிலம் உட்பட அனைத்து மாநில மொழிகளிலும் LIC இணையதளத்தை மக்கள் பயன்படுத்தும் வகையில் உடனே மாற்றி அமைக்க ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்தி உட்பட எந்த ஒன்றையும் வலுக்கட்டாயமாக திணிப்பதன் மூலம் வளர்த்துவிட முடியாது என்பதை ஒன்றிய அரசு இன்னும் புரிந்துகொள்ளவில்லை. சர்வாதிகாரத்தின் ஆயுள் நீண்ட நாள் நீடிக்காது” என உதயநிதி ஸ்டாலின் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

உதயநிதி ஸ்டாலின்: பெண்கள் தான் தாலி கட்டிக்கொள்ள வேண்டும் என்று அவசியமில்லை..!

“திருமண பதற்றத்தில் ஒரு மணமகன் தனக்கு தானே தாலி கட்டிக் கொள்ள முயற்சி செய்தார். இது தவறு கிடையாது. பெண்கள் தான் தாலி கட்டிக்கொள்ள வேண்டும் என்று அவசியமில்லை.” பெரியார் சொன்னதுதான் என உதயநிதி ஸ்டாலின் பேசினார்.

சென்னை ஆர்.கே.நகரில் சென்னை வடக்கு மாவட்ட திமுக சார்பில், ‘எளியோர் எழுச்சி நாள்’ என்ற பெயரில் இன்று 48 ஜோடிகளுக்கு திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. இந்த திருமணத்தை தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமை தாங்கி 48 ஜோடிகளுக்கு திருமணம் நடத்தி வைத்தார். இந்த திருமண விழாவில், 48 ஜோடிகளுக்கு தலா ரூ. 25 ஆயிரம் மொய், கட்டில், மெத்தை, பீரோ மற்றும் மிக்சி என 30 வகையான பொருட்கள் அடங்கிய சீர் வரிசைகளும் வழங்கப்பட்டன.

இந்த நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலகலப்பாகப் பேசினார். உதயநிதி பேசுகையில், “இன்று அண்ணன் ஆர்டி சேகர் ஏற்பாட்டில் 48 ஜோடிகளுக்கு திருமணம் நடத்தி வைக்கப்பட்டுள்ளது. எனக்கு 48 வயதாகிவிட்டது என மீண்டும் மீண்டும் நினைவுபடுத்திக் கொண்டே இருக்க வேண்டுமென்று அவசியமில்லை.

இங்கு நடைபெற்றுள்ள சில திருமணங்கள் காதல் திருமணங்கள் என்று சொன்னார்கள். இதற்காகவே ஆர்டி சேகர் அண்ணனை பாராட்ட வேண்டும். சரி காதல் பண்ணிட்டீங்க.. திருமணத்தை சிறப்பாக நடத்தி வைத்துவிட்டோம். இனிமேல் தான் நீங்கள் அதிகமாக காதலிக்க வேண்டும். ஒவ்வொருவரும் விட்டுக்கொடுத்து, நண்பர்களாக இருந்து வாழ வேண்டும். ஒரு மணமகன் 5 முடிச்சுகளைப் போட்டார்.

“என்னப்பா கட்டிக்கிட்டே இருக்க..?” எனக் கேட்டேன். ஸ்ட்ராங்கா கட்டடணும்ணே என்றார். திருமண பதற்றத்திலா, அவசரத்திலா எனத் தெரியவில்லை. இங்கு ஒரு சில மணமகன்கள் தனக்குத்தானே மாலை போட்டுக் கொண்டார்கள். ஒரு மணமகன் தனக்கு தானே தாலி கட்டிக் கொள்ள முயற்சி செய்தார். இது தவறு கிடையாது. பெண்கள் தான் தாலி கட்டிக்கொள்ள வேண்டும் என்று அவசியமில்லை. பெரியார் சொன்னதுதான்.

ஒரு ஜோடிக்கு திருமணம் செய்து வைக்கும்போது மணப்பெண் கண் கலங்கினார். “இப்பதானம்மா கல்யாணம் ஆச்சு.. ஏன்மா கண் கலங்குற என்று கேட்டேன். ” உடனே கலாநிதி வீராசாமி, “இதுதான் இந்தப் பெண் அழும் கடைசி நாள்.. இனி அந்தப் பையன் தான் அழப்போகிறார்” என்று நகைச்சுவையாகச் சொன்னார்” என கலகலப்பாக உதயநிதி ஸ்டாலின் பேசினார்.

உதயநிதி ஸ்டாலின்: இன்னும் ஒரு ரெய்டு போதும்.. அதிமுகவையே பாஜகவுடன் பழனிசாமி இணைத்து விடுவார்..!

எந்த நேரத்திலும் பாஜகவுடன் கூட்டணி இல்லை என கூறி வந்த எடப்பாடி பழனிசாமி, சேலத்தில் ஐ.டி ரெய்டு நடந்த மறுநாளே ‘தேர்தல் நேரத்தில் கூட்டணி குறித்து பேசிக் கொள்ளலாம்’ எனச் சொல்லிவிட்டார். இன்னும் ஒரு ரெய்டு நடந்தால் போதும்.. அதிமுகவையே பாஜகவுடன் இணைத்தாலும் இணைத்து விடுவார். என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சென்னை வடக்கு மாவட்ட திமுக சார்பில் சென்னை ஆர்.கே.நகர் பகுதியில், எளியோர் எழுச்சி நாள் எனும் பெயரில் 48 ஜோடிகளுக்கு திருமணம் நடத்தி வைத்து மணமக்களுக்கு சீர்வரிசை பொருட்களை வழங்கி உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார்.

அதைத்தொடர்ந்து பேசிய உதயநிதி ஸ்டாலின், “திமுக அரசின் திட்டங்களை மக்கள் கொண்டாடுவதைப் பார்த்து எடப்பாடி பழனிசாமிக்கு கோவம் வருகிறது. வரத்தான் செய்யும். மக்கள் நமது திட்டங்களை கொண்டாடுவதைப் பார்த்து அவருக்கு எரிச்சல் வருகிறது. முதலமைச்சரை மக்கள் வாழ்த்துவதால் எடப்பாடி பழனிசாமிக்கு வயிற்றெரிச்சல். அரசின் திட்டங்களுக்கு கலைஞர் பெயரை வைப்பது பற்றி எடப்பாடி பழனிசாமி கேள்வி கேட்கிறார். தனது 96-வது வயது வரை தமிழ்நாட்டுக்காக, தமிழ்நாட்டு மக்களுக்காக ஓயாது உழைத்த கலைஞர் பெயரை மக்கள் நல திட்டங்களுக்கு சூட்டாமல் வேறு யார் பெயரை வைப்பது?

கூவத்தூரில் ஊர்ந்து போன கரப்பான் பூச்சி பெயரை வைக்கலாமா? இல்லை மறைந்த தலைவர்கள் பெயர்களையோ வைக்கலாமா? எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரின் பெயரை வைத்தாலும் எடப்பாடி பழனிசாமி ஏற்றுக்கொள்ள மாட்டார். அவருக்கு இப்போது அமித்ஷா, மோடி பெயரை வைக்க வேண்டும்.

எந்த நேரத்திலும் பாஜகவுடன் கூட்டணி இல்லை என 3 மாதங்களுக்கு முன்பு கூறி வந்த எடப்பாடி பழனிசாமி, சேலத்தில் அண்மையில் ஐ.டி ரெய்டு நடந்த மறுநாளே ‘தேர்தல் நேரத்தில் கூட்டணி குறித்து பேசிக் கொள்ளலாம்’ எனச் சொல்லிவிட்டார். இன்னும் ஒரு ரெய்டு நடந்தால் போதும்.. அதிமுகவையே பாஜகவுடன் இணைத்தாலும் இணைத்து விடுவார். அந்தளவுக்குத்தான் இன்றைக்கு அதிமுக நிலைமை இருக்கிறது” என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.