ஆர்.என்.ரவி: நாட்டை துண்டா விரும்புகிற திராவிட சித்தாந்தம்..!

சென்னை ஐஐடியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி பேசுகையில், நாடு விடுதலையின் போது 77 ஆண்டுகளுக்கு முந்தைய பிரிவினை கால கொடூரங்களை நினைத்துப் பார்க்கும் போது துன்பகரமான நிகழ்வுகள் நினைவுக்கு வருகின்றன. மனிதர்களின் தவறுகளால் இந்தியா துண்டாடப்பட்டு பாகிஸ்தான் என்ற ஒரு தேசம் உருவாக்கப்பட்டது. இந்த பிரிவினையால் ஒன்றரை கோடி அப்பாவி பொதுமக்கள் அகதிகளாக்கப்பட்டனர். எத்தனையோ லட்சம் பெண்கள் பலாத்காரம் செய்யப்பட்டனர்.

நமது நாட்டின் மதச்சார்பற்ற தன்மை என்பது அனைவரும் சமம்தான் என்கிறது. ஆனால் இந்த நாட்டை 65 ஆண்டுகளாக ஆண்டவர்கள் இந்த சிந்தனையை உடைத்தனர்; மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்தினர். உலகில் வலிமை மிக்க ராணுவமாக நாம் திகழ்கிறோம். நமது நாட்டிடம் ஆயுதங்களை பிற நாடுகள் வாங்குகின்றன. சர்வதேச விவகாரங்களில் இந்தியாவின் முடிவு மிக முக்கியமானதாக இருக்கிறது. ஆனால் அமெரிக்காவில் இருக்கும் சிலர் நமது நாட்டு பொருளாதாரத்தைச் சீர்குலைக்க முயற்சிக்கின்றனர்.

1947-ல் ஏற்பட்ட பிரிவினையின் வடுக்கள் ஆறவில்லை. இந்த துயரம் இப்போதும் முடிவுக்கு வரவில்லை. பிரிவினையை ஆதரித்த சித்தாந்தங்களில் ஒன்றுதான் திராவிட சித்தாந்தம். இந்தியாவை துண்டாட விரும்புகிற சித்தாந்தம் திராவிடம். இந்த நாடு மதச்சார்பற்ற நாடு என்பதை ஏற்க மறுப்பதுதான் திராவிட சித்தாந்தம்.

தமிழ்நாட்டு மீனவர்கள் கொல்லப்பட காரணமே கச்சத்தீவை இலங்கைக்குக் கொடுத்ததுதான். பள்ளிகள், கோவில்களில் தலித்துகளுக்கு எதிரான பாகுபாடுகள் கவலை தருகின்றன என தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி பேசினார்.

ஆளுநர் வெறும் ‘நாமினி’ தான்..! ஆர்.என்.ரவிக்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம்…!

தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட பல மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் ஆர்.என்.ரவி கிடப்பில் போட்டு வைத்திருந்தார். இதையடுத்து, ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக தமிழ்நாடு அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் 2 ரிட் மனுக்கள் கடந்த மாதம் தாக்கல் செய்யப்பட்டது. அதில், ‘‘தமிழ்நாடு சட்டப்பேரவை மற்றும் அரசு அனுப்பிய மசோதாக்களுக்கு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் வழங்காமல் பல மாதங்களாக கால தாமதம் செய்து வருகிறார்.

இதனால் அரசு திட்டங்கள் அனைத்தும் பாதிக்கிறது. அதனால் ஆளுநர் விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் ஒரு காலக்கெடுவை நிர்ணயம் செய்ய வேண்டும் என கூறப்பட்டிருந்தது. இதே போன்று, மற்றொரு மனுவில், ‘‘தமிழ்நாடு ஆளுநர் தமிழ்நாடு பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர் நியமனங்களில் தேவையில்லாத குழப்பங்களை ஏற்படுத்தி, சட்டத்திற்கு புறம்பான விஷயங்களை செய்கிறார்.

மாநில அரசின் கருத்துக்களை ஏற்க மறுக்கிறார். குறிப்பாக பல்கலைக்கழகங்களுக்கான துணைவேந்தர் தேடுதல் குழு போன்றவற்றில் தேவையில்லாமல் ஆளுநர் ஆர்.என். ரவி மூக்கை நுழைத்து அரசின் பரிந்துரைகளை ஏற்காமல் காலதாமதம் செய்கிறார் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், ‘‘தமிழ்நாடு அரசால் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு அனுப்பிய முக்கிய மசோதாக்களுக்கு கடந்த மூன்று ஆண்டுகளாக எந்த முடிவும் எடுக்காமல் அலட்சியம் காட்டியது ஏன்? என்று ஆளுநர் ஆர்.என். ரவிக்கு சரமாரி கேள்வியெழுப்பி வழக்கு விசாரணையை டிசம்பர் 1-ம் தேதிக்கு ஒத்திவைத்து இருந்தது.

இந்நிலையில், மேற்கண்ட வழக்கானது உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழ்நாடு அரசின் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள் அபிஷேக் மனு சிங்வி, வில்சன் ஆகியோரின் வாதத்தில், ‘ஆளுநர் திருப்பி அனுப்பிய பத்து மசோதாக்களை சட்டப் பேரவையில் தமிழக அரசு மீண்டும் நிறைவேற்றியது. அந்த மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர், அதனை ஜனாதிபதிக்கு அனுப்பி உள்ளார். அதுகுறித்து தமிழக அரசுக்கோ, சட்ட மன்றத்துக்கோ அவர் எந்த தகவலையும் தெரிவிக்கவில்லை.

குறிப்பாக பஞ்சாப் ஆளுநர் விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் தெளிவான உத்தரவுகளை பிறப்பித்துள்ள நிலையில், தமிழக ஆளுநர் இதுபோன்று செயல்படுகிறார். தமிழக ஆளுநர் நடவடிக்கைகள் அரசியல் சாசனத்திற்கு எதிராக உள்ளது என தெரிவித்தனர். இதன் போது குறுக்கிட்ட ஒன்றிய அரசின் தலைமை வழக்கறிஞர் வெங்கட் ரமணி, ‘அரசியல் சாசனத்தின் 200-வது விதிகளின் படி ஆளுநர் மசோதாவை நிறுத்தி வைக்கும் அதிகாரம் கொண்டவர். மேலும் ஜனாதிபதிக்கோ, திருப்பி அனுப்பவோ அவருக்கு அதிகாரம் உள்ளது என கூறினார்.

அப்போது மீண்டும் குறுக்கிட்ட தலைமை நீதிபதி, ‘குடியரசு தலைவருக்கு மசோதாவை ஆளுநர் அனுப்பியது தமிழ்நாடு அரசுக்கு தெரிவிக்கப்பட்டதா? இல்லையா?’ என்றார். அதற்கு பதிலளித்த ஒன்றிய அரசின் வழக்கறிஞர், ‘தமிழ்நாடு அரசுக்கு மசோதாவை ஜனாதிபதிக்கு அனுப்பியது குறித்து முறையாக தெரிவிக்கப்பட்டது. இந்த விவகாரத்தில் ஆளுநர் முதலில் சட்டமன்ற மசோதாக்களை மறு பரிசீலனை செய்ய திரும்ப அனுப்பினார். ஆனால் சட்டமன்றம் அவரது ஆலோசனையை ஏற்கவில்லை, எனவே தற்போது மசோதாக்களை ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ளார் என்றார்.

அப்போது மீண்டும் கேள்வியெழுப்பிய தலைமை நீதிபதி, ‘மீண்டும் நிறைவேற்றப்பட்ட மசோதாவை குடியரசு தலைவருக்கு அனுப்ப ஆளுநருக்கு அதிகாரம் இல்லை. அரசியலமைப்பு சட்டத்தின் 200-வது பிரிவின்படி, சட்டப்பேரவையில் மீண்டும் நிறைவேற்றப்பட்ட மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்தே ஆகவேண்டும். முதல் முறையே குடியரசு தலைவருக்கு அனுப்பியிருக்கலாம். கிடப்பில் வைத்து திருப்பி அனுப்பிவிட்டு, சட்டமன்றத்தில் மீண்டும் மசோதாவை நிறைவேற்றிய பின்னர் குடியரசு தலைவருக்கு எப்படி அனுப்பலாம்?

உண்மையை சொல்ல வேண்டும் என்றால் தமிழ்நாடு அரசின் மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்கும் விவகாரத்தில், ஆளுநர் தரப்பு குழப்பத்தில் உள்ளது. அதனால் இந்த விவகாரத்தில் ஆளுநர் தரப்பு தான் பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும். இதில் அரசியல் சாசன பதவியில் இருப்பவரை கையாளுகிறோம் என்பது எங்களுக்கு நன்றாக தெரியும். இருப்பினும் எதிலும் சட்ட நடைமுறைகள் அனைவருக்கும் சமமானதாகும். அதனால் தமிழ்நாடு அரசு – ஆளுநர் இடையிலான பிரச்னையை தீர்க்க, ஒன்றிய அரசு உடனடியாக தலையிட்டு தீர்வு காண வேண்டும்.

எனவே இந்த விவகாரம் தொடர்பாக ஒன்றிய அரசு ஆளுநரிடம் கலந்து ஆலோசனை நடத்த வேண்டும். ஆளுநருக்கு சட்டத்தை செயலழிக்க செய்யவோ, முடக்கி வைக்கவோ அதிகாரமில்லை என்பதை புரிந்து கொள்ளாமல் செயல்பட்டு வருகிறீர்கள். ஆளுநர் மக்களாலோ, மக்கள் பிரதிநிதிகளாலோ தேர்ந்தெடுக்கப்பட்டவர் கிடையாது; ஒன்றிய அரசால் நியமிக்கப்பட்டவர். அரசியலமைப்பு சட்டப்படிதான் அவர் செயல்பட வேண்டும். இந்தியாவின் ஜனாதிபதி மக்கள் பிரதிநிதிகளால் தேர்ந்தெடுக்கப்படுபவர்.

இதனால் அவருக்கான அதிகாரங்கள் விரிவானது. ஆனால், மாநிலங்களின் ஆளுநர்கள் ஒன்றிய அரசின் நாமினி தான். இதனை ஆளுநர்கள் புரிந்துகொள்ள வேண்டும். ஆளுநருக்கும் முதலமைச்சருக்கும் தனிப்பட்ட கருத்து வேறுபாடுகள் இருக்கலாம், அதற்காக சட்ட மசோதாக்கள் முடக்கி வைக்க முடியாது. தமிழ்நாடு ஆளுநர் ரவி, தமிழ்நாடு முதலமைச்சரை அழைத்து மசோதாக்கள் தொடர்பாக ஆலோசனை நடத்தி முடிவெடுக்க வேண்டும் என்று தலைமை நீதிபதி உத்தரவிட்டார்.

நீட் தேர்வு பயிற்சிக்காக 20 லட்சம் செலவு… வசதியில்லாத பெற்றோர்களால் அதனை செய்ய முடியுமா..?

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் தமிழ்நாடு அரசுக்கும் இடையே தொடர்ந்து மோதல் போக்கு நீடித்து வருகிறது. 2016 -ம் ஆண்டில் அமல்படுத்தப்பட்ட நீட் எனப்படும் மருத்துவப் படிப்புக்கான நுழைவுத் தேர்வுக்கு எதிராக பாஜகவை தவிர்த்து தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கட்சிகளும் செயல்பட்டு வருகின்றன. நீட் தேர்வுக்கு விலக்கு கோரி முந்தைய அதிமுக ஆட்சியிலும், தற்போதைய திமுக ஆட்சியிலும் மசோதா நிறைவேற்றப்பட்டது.

தற்போது திமுக அரசு கொண்டு வந்த மசோதாவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி இன்னும் ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்தி வருகிறார். இந்நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன் வெளியான நீட் தேர்வு முடிவுகளில் சாதித்த மாணவர்கள், பெற்றோருடன் ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்துரையாடிய நிகழ்ச்சி ஆளுநர் மாளிகையில் நடைபெற்றது. இதில் சேலத்தை சேர்ந்த மாணவியின் தந்தை நீட் தேர்வு பயிற்சிக்காக தனது மகளுக்கு 20 லட்சம் ரூபாய் வரை செலவு செய்ததாகவும், வசதி இருக்கும் தன்னால் அந்த செலவை செய்ய முடிந்தது.

அதேவேளையில் மருத்துவக் கல்வி கனவுடன் இருக்கும் மாணவர்களின் வசதியில்லாத பெற்றோர்களால் அதனை செய்ய முடியுமா? எப்போது நீட் விலக்கு மசோதாவில் கையெழுத்திடுவீர்கள் என்று அம்மாசியப்பன் கேட்க, இந்த கேள்வியை சற்றும் எதிர்பாராத ஆளுநர் மாளிகை அதிகாரிகள் அந்த பெற்றோரிடமிருந்து மைக்கை வலுக்கட்டாயமாக பறித்துள்ளனர். இதற்கு பதிலளித்து பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி ஒருபோதும் தான் நீட் விலக்கு மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க மாட்டேன் என தெரிவித்தார்.

அண்ணாமலை: டிஐஜி விஜயகுமார் கடைசியாக யாருடன் பேசினார்…?

கோயம்புத்தூர் சரக டி.ஐ.ஜியாக பணியாற்றி வந்த விஜயகுமார் ஐ.பி.எஸ் இன்று காலை 6.45 மணியளவில் வழக்கம் போல டிஐஜி விஜயகுமார் நடைபயிற்சி மேற்கொண்டு பின்னர் கேம்ப் அலுவலகத்திற்கு வந்துள்ளார். அதன் பிறகு தனது பாதுகாப்பு அதிகாரியிடம் துப்பாக்கியை பெற்றுக்கொண்டு அவரது அறைக்கு சென்ற விஜயகுமார் தற்கொலை செய்து கொண்டதாக முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது.

2009 ஐ.பி.எஸ் அதிகாரியான விஜயகுமார் காஞ்சிபுரம், கடலூர், நாகை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் காவல் கண்காணிப்பாளராக பணியாற்றி உள்ளார். நேர்மையான அதிகாரி என பெயர் பெற்றுள்ள விஜயகுமார் கடந்த ஜனவரி மாதம் டி.ஐ.ஜியாக பதவி உயர்வு பெற்று கோயம்புத்தூர் சரக டி.ஐ.ஜியாக நியமிக்கப்பட்டு பணிப்புரிந்து வந்துள்ளார்.

கடந்த சில நாட்களாகவே டி.ஐ.ஜி விஜயகுமார் மன அழுத்தத்தில் இருந்து வந்ததால் உயரதிகாரிகள் மூலம் அவருக்கு கவுன்சிலிங் வழங்கப்பட்டு வந்ததாக காவல்துறை தரப்பில் தெரிவித்துள்ளது. சென்னையில் உள்ள அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்கள் விஜயகுமாருடன் கடந்த மூன்று நாட்களாக இருந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என்.ரவி, எதிர்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை ஆகியோர் விஜயகுமாரின் மரணத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ளனர். மேலும் பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை தனது அறிக்கையில் விஜயகுமாருக்கு மரணத்திற்கு விசாரணை தேவை என்று தெரிவித்துள்ளார். எதிர்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

இதனிடையே சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை, விஜயகுமார் மரணத்திற்கு காரணம் ஆயிரம் இருந்தாலும் முக்கியமான இரண்டு காரணங்கள் உள்ளன. காவல்துறையில் பணியில் நிறைய மன அழுத்தங்கள் உள்ளன. தமிழகத்தில் காலியாக உள்ள 10 ஆயிரம் பணியிடங்களை நிரப்ப வேண்டும். அதிகாரிகளுக்கு உச்ச பட்ச மன அழுத்தம் உள்ளது. காவல்துறையினருக்கு வாரம் ஒருநாள் கட்டாய விடுப்பு அளிக்க வேண்டும்.

வேலைப்பளு அதிகம் இருக்கும். குடும்பம் ஓரிடத்திலும் அதிகாரிகள் ஓரிடத்திலும் பணியாற்றுவார்கள். அதுவே மன அழுத்தத்திற்கு ஒரு காரணமாக இருக்கும். காவல்துறையில் நிறைய சீர்திருத்தங்களை செய்ய வேண்டும். கோவை சரக டிஐஜி விஜயகுமார் ஐபிஎஸ் அதிகாரி நேர்மையான அதிகாரி சிறப்பாக பணியாற்றியவர். அவர் காலையில் வாக்கிங் சென்று விட்டு வந்து தற்கொலை செய்து கொண்டார். தற்கொலை செய்வதற்கு முன்பாக அவர் யாரிடம் பேசினார்? என்பது பற்றி விரிவான விசாரணை நடத்த வேண்டும். விஜயகுமார் மரணம் தற்கொலையாக இருந்தாலும் சிறப்பு புலனாய்வு குழு விசாரணை நடத்த வேண்டும் என்றும் அண்ணாமலை கேட்டுக்கொண்டார்.