பொன் விக் அணிந்து “பொன்முடி”கைது செய்ய நூதன முறையில் ஆர்ப்பாட்டம்..!

அமைச்சர் பொன்முடியை கைது செய்ய வலியுறுத்தி அதிமுக மகளிர் அணியினர் பொன் விக் அணிந்து வந்து நூதன முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழக வனத்துறை அமைச்சர் பொன்முடி சமீபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் சைவம், வைணவம் குறித்தும், பெண்கள் குறித்தும் பேசிய கருத்துகள் சர்ச்சைக்கு உள்ளானது.

அமைச்சர் பொன்முடியின் பேச்சுக்கு அதிமுக, பாஜக உள்பட பல்வேறு கட்சிகளும் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், திமுகவின் துணை பொதுச்செயலாளர் பதவியில் இருந்து பொன்முடி நீக்கப்பட்ட நிலையில் தன்னுடைய கருத்துக்கு அமைச்சர் பொன்முடி மன்னிப்பு கோரினார். இதற்கிடையே அமைச்சர் பொன்முடிக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. சென்னை உயர் நீதிமன்றம் அமைச்சர் பொன்முடி மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டது.

அதிமுக மகளிர் அணி, இளம்பெண்கள் பாசறை சார்பில் பெண்களை பற்றி இழிவாக பேசிய அமைச்சர் பொன்முடிக்கு எதிர்ப்பு தெரிவித்து விழுப்புரம் மாவட்டத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்ற நிலையில், அமைச்சர் பொன்முடிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக கோல்டு ஹேர் விக் அணிந்து வந்தனர்.

இந்நிலையில், விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் அதிமுக சார்பில் இன்று கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் அதிமுக மகளிர் அணி, இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை சார்பில், விழுப்புரம் சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த பெண்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் அமைச்சர் பொன்முடிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக பொன்முடி என்பதை குறிக்கும் வகையில் பொன் நிற விக் அணிந்து வந்து பொன்முடியை கைது செய்ய வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சிலிண்டர் விலை உயர்வு கண்டித்து மத்திய அரசிற்கு எதிராக மகிளா காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்

சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை உயர்த்திய மத்திய அரசை கண்டித்து மகிளா காங்கிரஸ் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லியில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை உயர்த்திய மத்திய அரசை கண்டித்து திருவள்ளூர் தெற்கு மாவட்ட மகிளா காங்கிரஸ் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு திருவள்ளூர் தெற்கு மாவட்ட மகளிர் காங்கிரஸ் தலைவர் பிரியா பாரதி தலைமை தாங்கினார்.

இதில் பூந்தமல்லி நகர காங்கிரஸ் தலைவர் இமயவரம்பன், திருவள்ளூர் மாவட்ட செயலாளர் பூவை ரமேஷ், மாவட்ட பொதுச் செயலாளர் நடராஜன், வார்டு தலைவர்கள் ரவி கிருஷ்ணன், பூவை சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் மாநில தலைவர் ஹசீனா சையத் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினார்.

மேலும் பாஜக அரசின் மெத்தனப் போக்கையும் சர்வாதிகாரப் போக்கையும் கண்டித்தும், நேஷனல் ஹெரால்டு பொய் வழக்கு, கேஸ் சிலிண்டர், பெட்ரோல் டீசல் விலைவாசி உயர்வு, வக்ஃப் சட்டம், பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் அதிகரிப்பு ஆகியவற்றை கண்டித்தும் தமிழ்நாடு மகளிர் காங்கிரஸ் கட்சியினர் முழக்கங்கள் எழுப்பினர். இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் மகிளா காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஏராளமான பெண்கள், நிர்வாகிகள் கலந்து கொண்டனர். பூந்தமல்லி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

#westandforwomenharassment பேனரை பார்த்து பெண்கள் ஷாக்..!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மகளிர் தினத்தை முன்னிட்டு பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என பேரணி மற்றும் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழக வெற்றி கழகத்தினர் கைது செய்யப்பட்டு உள்ளனர். தமிழக வெற்றி கழக கண்டன ஆர்ப்பாட்டத்தில் பெண்கள் வன்கொடுமை செய்யப்படுவதற்கு நாங்கள் துணை நிற்கிறோம் என தமிழக வெற்றிக் கழகத்தினர் பேனர் வைத்திருப்பது சமூக வளைதளங்களில் விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளது.

தமிழகத்தில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 30-க்கும் மேற்பட்ட பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் நடைபெற்று இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென எதிர்க்கட்சிகளும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில் சர்வதேச மகளிர் தினம் இன்று கொண்டாடப்படும் நிலையில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அந்த வீடியோவில்,” உங்களுக்கு மகளிர் தின வாழ்த்துக்கள் சொல்ல ஆசை தான்.

ஆனால் பாதுகாப்பே இல்லாமல் எப்படி மகளிர் தின வாழ்த்துக்கள் சொல்வது. நாம் அனைவரும் சேர்ந்து தான் திமுக அரசை தேர்ந்தெடுத்தோம். ஆனால் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. எனவே இந்த அரசை 2026-ல் வீட்டுக்கு அனுப்புவோம்” என பேசி இருந்தார்.

இதற்கிடையே தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் பெண்களுக்கு பாதுகாப்பு அளிப்பது தொடர்பான விழிப்புணர்வு பேரணி மற்றும் தமிழக அரசை கண்டித்து போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு உரிய அனுமதி பெறவில்லை என தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் தமிழக வெற்றிக் கழகத்தினர் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில், வேலூர் கிழக்கு மாவட்ட தமிழக வெற்றிக் கழகத்தினர் வைத்த பேனர் தான் தற்போது பேசுபொருளாக மாறி இருக்கிறது. we stand against women harassment என்பதற்கு பதிலாக we stand for women harassment என ஆங்கில வாசகத்தோடு வேலூர் கிழக்கு மாவட்ட தமிழக வெற்றிக் கழகத்தினர் பேனர் வைத்திருக்கின்றனர். அதில் கையெழுத்திட வேண்டும் எனவும் பெண்களிடம் கோரிக்கை விடுத்தனர்.

சில படித்த பெண்கள் அதனை படித்து பார்த்துவிட்டு we stand against women harassment என்றால் தான் பாலியல் வன்கொடுமைக்கு எதிராக நாங்கள் இருக்கிறோம் என்று அர்த்தம். we stand for women harassment என நீங்கள் பேனர் வைத்திருப்பது பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளுக்கு நாங்கள் ஆதரவாக இருக்கிறோம் என்பது போல இருக்கிறது என கூறி கையெழுத்திட மறுத்துவிட்டனர். தற்போது இந்த பேனர் சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு விமர்சனங்களை சந்தித்து வருகிறது.

பி.கே. சேகர்பாபு: இரும்பு மனிதர் போல் உறுதியாக இருப்பவர் தமிழ்நாடு முதலமைச்சர்..!

எடுத்த நடவடிக்கையில் இரும்பு மனிதர் போல் உறுதியாக இருப்பவர் தமிழ்நாடு முதலமைச்சர். அதேபோல் புதிய கல்விக் கொள்கையிலும் உறுதியாக இருப்பார் என பி.கே. சேகர்பாபு தெரிவித்தார். சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மும்மொழிக் கொள்கைக்கு எதிராக ஒன்றிய அரசை கண்டித்து திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் சார்பில் இன்று மாலை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறும் இடத்தில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரும் சென்னை கிழக்கு மாவட்ட செயலாளருமான பி.கே. சேகர்பாபு ஆய்வு செய்தார்.

அப்போது செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர்பாபு பேசுகையில், “ஒன்றிய அரசை கண்டித்து இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இதில் கூட்டணி கட்சித் தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள். தமிழ்நாடு துணை முதலமைச்சர் கலந்து கொண்டு கண்டன உரை ஆற்றவுள்ளார். இந்த ஆர்ப்பாட்டத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு ஒன்றிய அரசுக்கு எதிராக தங்களது எதிர்ப்பை பதிவு செய்ய உள்ளனர்.” என பி.கே சேகர்பாபு தெரிவித்தார்.

புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்தியே தீருவோம் என்ற தர்மேந்திர பிரதான் பேச்சுக்கு பி.கே சேகர்பாபு பதில் அளிததார். அப்போது, “தமிழ்நாட்டை வேறு கோணத்தில் பார்த்து விடாதீர்கள் என்று தமிழ்நாடு முதலமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு தன்னுடைய கண்டனத்தை தெரிவித்துள்ளார். ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களும் ஒன்றிணைந்து தமிழக முதல்வர் தலைமையில் வெகுண்டு எழக்கூடிய சூழ்நிலையை உருவாக்க முயற்சித்துக் கொண்டு இருக்கிறார்கள். எடுத்த நடவடிக்கையில் இரும்பு மனிதர் போல் உறுதியாக இருப்பவர் தமிழ்நாடு முதலமைச்சர். அதேபோல் புதிய கல்விக் கொள்கையிலும் உறுதியாக இருப்பார்.” என பி.கே சேகர்பாபு தெரிவித்தார்.

பாமகவினர் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் பேருந்து கண்ணாடி உடைப்பு..!

தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை கண்டித்து தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாமகவினரை காவல்துறையினர் கைது செய்தனர். தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை கண்டித்து சிதம்பரத்தில் பாமக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டு இருந்தது.

அதன்படி இன்று காலை சுமார் 11 மணி அளவில் சிதம்பரம் காந்தி சிலை அருகே மாநில வன்னியர் சங்க தலைவர் பு. தா. அருள்மொழி, பாமக மாவட்ட செயலாளர் செல்வ மகேஷ் தலைமையில் ஏராளமான பாமகவினர் குவிந்தனர். ஆனால் காவல்துறையினர் போராட்டத்துக்கு அனுமதி இல்லை என்று பாமக நிர்வாகிகளிடம் கூறினர்.

ஆனாலும் பாமகவினர் தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் 100-க்கும் மேற்பட்டவர்களை காவல்துறையினர் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். மேலும் ஆர்ப்பாட்டத்தின் போது ஒரு தனியார் பேருந்தின் கண்ணாடி உடைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

பி.தங்கமணி கேள்வி: மக்களின் வரிப்பணம் எங்கே செல்கிறது..!?

குப்பை வரி, சொத்து வரி, மின்கட்டணத்தை உயர்த்தியும், மக்களுக்கான அடிப்படை வசதிகள் செய்ய முடியவில்லை, அப்படியென்றால் மக்கள் செலுத்தும் வரிப்பணம் எங்கே செல்கிறது,” என முன்னாள் அமைச்சர் பி.தங்கமணி கேள்வி எழுப்பியுள்ளார்.

மதுரை மாநகராட்சியில் பெரியார் கூட்டுக் குடிநீர் திட்டம், பாதாளசாக்கடை திட்டத்தை நிறைவேற்றாததை கண்டித்தும், மோசமான சாலைகள், வண்டில் மண் என்ற போர்வையில் கனிம கொள்ளையை கண்டித்தும் புறநகர் கிழக்கு மாவட்ட அதிமுக சார்பில் திருப்பரங்குன்றத்தில் முன்னாள் அமைச்சர் பி.தங்கமணி தலைமை கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் கலந்துக்கொண்டு பேசிய முன்னாள் அமைச்சர் பி.தங்கமணி, அதிமுக சட்டமன்ற தொகுதி என்பதால் முதல் படை வீடான திருப்பரங்குன்றத்தில் மக்கள் பாதுகாப்பாக பயணம் செய்ய பழுதடைந்த சாலையை சீரமைக்கவில்லை.

பாதுகாப்பான குடிநீர் வழங்க அதிமுக ஆட்சியில் கொண்டு வந்த பெரியார் கூட்டுக் குடிநீர் திட்டத்தை மூன்றை ஆண்டு காலமாக முடக்கி வைத்துள்ளனர். பாதாளசாக்கடை அமைக்கவில்லை. 10 ஆண்டு சொத்து வரி, குடிநீர் கட்டணம் உயரவில்லை. ஆனால், திமுக அரசு குப்பை வரி, சொத்து வரி, மின் கட்டணத்தை உயர்த்திவிட்டனர். அதிமுக ஆட்சியில் வரியை உயர்த்தாமலே மக்குளுக்கு தேவையான அடிப்படை வசதிகளை நிறைவேற்றிக் கொடுத்தது. மக்களுக்கான பல்வேறு திட்டங்களை கொண்டு வந்துள்ளது. ஆனால், திமுக ஆட்சியில் வரியை உயர்த்திவிட்டு அடிப்படை வசதிகளை கூட செய்து கொடுக்க மறுக்கிறது. அப்படியென்றால் மக்கள் வரிப்பணம் எங்கே செல்கிறது?

அதிமுக இல்லாவிட்டால் பெண்களுக்கு தற்போது ரூ.1,000 உரிமைத்தொகை கூட வந்திருக்காது. அனைத்து பெண்களுக்கும் ரூ.1,000 உரிமை தொகையை வழங்குவதாக வாக்குறுதி அறிவித்துவிட்டு ஆட்சிக்கு வந்ததும் திமுக அரசு அதனை நிறைவேற்றவில்லை. அதிமுக பொதுச்செயலாளர் கே.பழனிசாமி, தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தியதால் தகுதியுள்ளவர்களுக்கு என்று மட்டும் கூறி பாராபட்டசமாக 1 கோடியே 13 லட்சம் பேருக்கு மட்டும் வழங்குகிறார்கள். தகுதியானவர்களுக்கு வழங்கப்படும் என்று தேர்தல் பிரச்சாரத்திலே அவர்கள் அறிவித்து இருந்தால் பொதுமக்களும் தகுதியானவர்களுக்கே வாக்களித்து இருப்பார்கள்.

வாக்குறுதிகள் என்பது மக்கள் வாழ்வாதாரம், பொருளாதாரத்தை உயர்த்தக்கூடியதாக இருக்க வேண்டும் என்று ஜெயலலிதா சொல்வார். அந்த அடிப்டையில் அவர், பெண்கள், மாணவர்கள், முதியவர்கள், இளைஞர்களுக்கு ஏராளமான திட்டங்களை கொண்ட வந்தார். 10 ஆண்டு அதிமுக ஆட்சியில் கள்ளச்சாராயம், போதைப்பொருள் விற்பனை நடக்கவில்லை. அதே காவல் துறைதான் தற்போதும் உள்ளது.

ஆனால், அவர்கள் கைகள் கட்டப்பட்டுள்ளதால் போதைப்பொருள், கள்ளச்சாராயம் விற்பனை தாராளமாக நடக்கிறது. பள்ளிகள், கல்லூரிகளுக்கு குழந்தைகளை பாதுகாப்பாக அனுப்பி வைக்க முடியவில்லை. அதிமுக ஆன்மீகத்தில் நம்பிக்கை உள்ள இயக்கும். அதனால், திருப்பரங்குன்றத்தில் நடக்கும் இந்த ஆர்ப்பாட்டம், அதிமுகவிற்கும் திருப்புமுனையை ஏற்படுத்தும்” என பி.தங்கமணி தெரிவித்தார்.

தமிழகம் முழுவதும் மருத்துவர்கள் ஆர்ப்பாட்டம்..! நோயாளிகள் பெரிதும் பாதிப்பு..!

புற்றுநோய் சிகிச்சை பிரிவின் தலைவராக மருத்துவர் பாலாஜி மீதான தாக்குதலைக் கண்டித்து தமிழகம் முழுவதும் மருத்துவர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். புற்றுநோய் சிகிச்சை பிரிவின் தலைவராக மருத்துவர் பாலாஜிமீதான தாக்குதலைக் கண்டித்து தமிழகம் முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவர்கள் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்திருந்தனர்.

இந்நிலையில், தமிழகத்தின் பல்வேறு அரசு மருத்துவமனை முன்பாக மருத்துவர்கள், மருத்துவ மாணவர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் மருத்துவமனைகளுக்கு புறநோயாளிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். சென்னை கிண்டியில் கிங் இன்ஸ்டிடியூட் வளாகத்தில் ரூ 230 கோடியில் பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை தரை தளம் மற்றும் 6 மேல் தளங்களுடன் 51,429 சதுர மீட்டர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது. இந்த பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் 1000 படுக்கை வசதிகள் கொண்டு இதயம், நுரையீரல், நரம்பியல், சிறுநீரகவியல், புற்றுநோய் உள்ளிட்ட பல்துறை சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.

இந்த மருத்துவமனை தொடங்கப்பட்டதில் இருந்தே புற்றுநோய் சிகிச்சை பிரிவின் தலைவராக மருத்துவர் பாலாஜி என்பவர் பணியாற்றி வருகிறார். தாம்பரம் பெருங்களத்தூர் பகுதியிலுள்ள காமராஜர் முதல் குறுக்கு தெருவை சேர்ந்த விக்னேஷின் தந்தை 3 மாதத்துக்கு முன்பு இறந்து விட்டார். தாய் மற்றும் 2 சகோதரருடன் விக்னேஷ் வசித்து வருகிறார். இவரது தாய் உடல்நலக்குறை ஏற்பட்டுள்ளது. முதலில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் தாயின் சிகிக்சைக்கு பணம் தடையாக இருந்ததால் தாயை கிண்டி கிங் இன்ஸ்டிடியூட் வளாகத்திலுள்ள பன்னோக்கு உயர் சிறப்பு மருத்தவமனையில் சேர்த்துள்ளார். இங்கு விக்னேஷின் தாயாருக்கு 6 முறை கீமோ தெரபி சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. அதன்பின்னர் தாயாரை விக்னேஷ் வீட்டுக்கு அழைத்து சென்றுள்ளார்.

இதற்கிடையே தான் தாயாருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதால் மீண்டும் தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். அங்குள்ள மருத்துவர்கள் உன்னுடைய தாயாருக்கு முதலில் சரியாக வழங்கப்படவில்லை. அதனால், தற்போதைய உடல்நல பிரச்சனைக்கு ஏற்கனவே வழங்கப்பட்ட சிகிச்சை சரியாக கொடுக்காதது தான் காரணம் என்று கூறியுள்ளதாக சொல்லப்படுகிறது. இதனால் கோபமடைந்த விக்னேஷ் சுமார் 10 மணி அளவில் புறநோயாளிகள் பிரிவில் ஓ.பி. சீட்டு வாங்கிக் கொண்டு, புற்றுநோய் மருத்துவ நிபுணர் பாலாஜியின் அறைக்குச் சென்றார்.

பின்னர் விக்னேஷ் அறையின் கதவை மூடிவிட்டு, “எதற்காக எனது தாயாருக்கு சிறந்த முறையில் சிகிச்சை அளிக்கவில்லை” எனக்கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். ஒருகட்டத்தில் ஆத்திரமடைந்த விக்னேஷ், தான் மறைத்து வைத்திருந்த வீட்டில் காய்கறிகள் வெட்டும் கத்தி எடுத்து மருத்துவர் பாலாஜியின் தலை, கழுத்து, முதுகு, காதின் பின்பகுதி, நெற்றி உள்ளிட்ட 7 இடங்களில் சரமாரியாக குத்தியுள்ளார்.

மருத்துவர் பாலாஜி ரத்தவெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே சரிந்து விழுந்துள்ளார். இதன்பின்னர் அங்கிருந்த பணியாளர்கள், பொதுமக்கள் அவரை பிடித்து சரமாரியாக அடித்து உதைத்தனர். தகவல் அறிந்துவந்த கிண்டி போலீஸாரிடம் அவரை ஒப்படைத்தனர். போலீஸார் விக்னேஷை கைது செய்து, அவர் மீது 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த சம்பவத்தை கண்டித்து மருத்துவர்கள் கிண்டி மருத்துவமனையில் நேற்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து மருத்துவர் மீதான தாக்குதலைக் கண்டித்து, இன்று தமிழகம் முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவர்கள் ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்படிருந்தது. அதன்படி, சென்னை, திருச்சி, மதுரை, சேலம், கோயம்புத்தூர், திண்டுக்கல், புதுக்கோட்டை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில், அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் கருப்பு பட்டை அணிந்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இஸ்ரேல் ஆதரவு நிலைபாட்டை மத்திய அரசு மாற்ற வேண்டும் என நாளை விசிக ஆர்ப்பாட்டம்..!

இஸ்ரேல் ஆதரவு நிலைப்பாட்டை மத்திய அரசு மாற்றிக் கொண்டு, பாலஸ்தீன மக்களின் கோரிக்கையை அங்கீகரிக்க வலியுறுத்தி சென்னையில் நாளை விசிக ஆர்ப்பாட்டம் நடத்துகிறது.

சென்னையில் 10-ம் தேதி விசிக தலைவர் தொல் திருமாவளவன் தலைமையில் உயர்நிலைக் குழுகூட்டம் நடைபெற்றது. இதில் பொதுச் செயலாளர்கள் துரை.ரவிக்குமார், சிந்தனைச் செல்வன், முதன்மைச் செயலாளர் பாவரசு உள்ளிட்டோர் பங்கேற்றனர். இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள், மது மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு மகளிர் மாநாட்டின் தீர்மானங்களின் அடிப்படையில், தமிழகத்தில் மதுவிலக்கை நடைமுறைப்படுத்த தமிழக அரசும், மதுவிலக்கு விசாரணை ஆணையம் அமைக்க மத்திய அரசும் முன்வர வேண்டும்.

ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா, கேரளா மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களிலும் மாநாடு ஒருங்கிணைக்கப்படும். ஒன்றியம் உள்ளிட்ட நிலைகளில் மது மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பிரச்சாரம் முன்னெடுக்கப்படும். ‘சாம்சங்’ நிறுவனத் தொழிலாளர்கள் தொழிற்சங்கம் அமைக்க அரசு அனுமதிப்பதோடு, அவர்கள் மீதான வழக்குகளைத் திரும்பப் பெற வேண்டும்.

இஸ்ரேல் ஆதரவு நிலைப்பாட்டை மத்திய அரசு மாற்றிக்கொண்டு, பாலஸ்தீன மக்களின்கோரிக்கையை அங்கீகரிக்க வலியுறுத்தி சென்னையில் நாளை ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். இலங்கை கடற்படையால் கைதான மீனவர்கள், படகுகள் போன்றவற்றை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு வேலைவாய்ப்பு வெகுவாகக் குறைந்து வரும் நிலையில் SC, ST, OBC பிரிவினருக்குத் தனியார் துறையில் இடஒதுக்கீடு வழங்குவதற்கான சட்டத்தை தமிழக அரசு இயற்ற வேண்டும்.

மாநில SC, ST ஆணையம் அமைத்தது மற்றும் SC, ST துணைத் திட்டத்துக்கான சட்டம் இயற்றியது போன்றவற்றுக்காக தமிழக அரசுக்கு நன்றி. பதவி உயர்வில் இடஒதுக்கீட்டை உறுதி செய்ய வேண்டும். ஆணவக் கொலைகளைத் தடுக்க சட்டம் இயற்ற வேண்டும். அரசுத் துறைகளில் பின்னடைவுக் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும். எஸ்சி இடஒதுக்கீட்டின் அளவை 24 சதவீதமாக உயர்த்த வேண்டும். SC பட்டியலில் உள்ள சாதிகளின் பெயர்களில் இழிவைக் குறிக்கும் வகையிலுள்ள ‘ன்’ விகுதியை பிற்படுத்தப்பட்டோருக்கு மாற்றப்பட்டது போல ‘ர்’ என முடியும் வகையில் மாற்ற வேண்டும் போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

நிர்மலா சீதாராமனை கண்டித்து விஸ்வகர்மா கைவினைஞர்கள் சங்கம் ஆர்ப்பாட்டம்..!

நாகப்பட்டினத்தில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை கண்டித்து விஸ்வகர்மா கைவினைஞர்கள் சங்கம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த வாரம் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக கோயம்புத்தூர் வருகை புரிந்திருந்தார். அப்போது செய்தியாளர் சந்திப்பில் பேசிய நிர்மலா சீதாராமன், “விஸ்வகர்மா குலத்தொழில் இல்லை” எனக் கூறியதாகவும், “விஸ்வகர்மாவில் 18 தொழில்காரர்களை சேர்ப்பதாக” தெரிவித்திருந்தார்.

நிர்மலா சீதாராமனின் இந்த கருத்திற்கு தமிழகம் முழுவதும் உள்ள விஸ்வகர்மா சமுதாயத்தை சேர்ந்தவர்கள் தொடர்ந்து எதிரிப்பும் போராட்டங்களும் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், நாகப்பட்டினத்தில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை கண்டித்து விஸ்வகர்மா கைவினைஞர்கள் சங்கம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஏந்த ஆர்ப்பாட்டத்தில் 300- கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

செல்வப்பெருந்தகை காட்டம்: இரு பெண்கள் சேர்ந்து, கோவை மக்களை ஒரே நாளில் சிதைத்து விட்டார்கள்..!

கோயம்புத்தூர் வடக்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில், ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை கண்டித்து, கோயம்புத்தூர் காந்திபார்க் ரவுண்டானா பகுதியில் நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில், காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, பன் மாலை அணிந்து பேசினார். அப்போது, ‘இரு பெண்கள் சேர்ந்து, கோவை மக்களை ஒரே நாளில் சிதைத்து விட்டார்கள். கோவையின் அடையாளமாக விளங்கும் இங்குள்ள மிகப்பெரிய உணவக உரிமையாளரை மன்னிப்பு கேட்கவைத்து, அவமானப்படுத்தி, வீடியோ வெளியிட்டுள்ளனர்.

இதன்மூலம், கோவை மக்களின் நம்பிக்கையை சிதைத்து விட்டார்கள். இது, கோவை மக்களுக்கு மிகப்பெரிய அவமானம். பாஜகவின் இந்த பாசிச ஆட்சியை, தமிழக மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அதிகாரத்தில் இருப்பவர்கள் பொதுமக்களிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும்?, எதிர்கட்சிகளிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும்?, சாமானிய மக்களிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்கிற குறைந்தபட்ச நாகரிகம்கூட இல்லாமல், இப்படி எல்லோரையும் வருந்த செய்திருப்பது கடும் கண்டனத்துக்குரியது. அற்ப விளம்பரத்துக்காக வீடியோ வெளியிட்டு, ஒட்டுமொத்த தமிழ் மக்களின் விரோதத்தை சம்பாதித்துக்கொண்டார். அவர், தமிழக மக்களிடம், நிபந்தனையற்ற மன்னிப்பு கோர வேண்டும் என செல்வப்பெருந்தகை பேசினார்.

ஆர்ப்பாட்டத்தில், செல்வப்பெருந்தகை தலைமையில் மத்திய அரசையும், நிர்மலா சீதாராமனையும் கண்டித்து தொண்டர்கள் கோஷம் எழுப்பினர். ஆர்ப்பாட்டம் நிறைவுபெற்றதும் அனைவருக்கும் பன் வழங்கினார். அப்போது செல்வப்பெருந்தகை இது, கிரீம் இல்லாத பன்… ஜி.எஸ்.டி கிடையாது… தைரியமாக சாப்பிடுங்கள் என உற்சாக மூட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.