நாட்டில் பாஜக ஆட்சியில் இல்லாத மாநில அரசுகளை ஆளுநர் அல்லது அமலாக்கத்துறை மூலம் அச்சுறுத்தும் நடவடிக்கைகளில் பாஜக அரசு தொடர்ந்து ஈடுபட்டு வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது. குறிப்பாக அமலாக்கத்துறையின் மூலம் மாநில அமைச்சர்களிடம் விசாரணை செய்வது, கைது செய்து விசாரிப்பது போன்ற வேலைகளில் ஈடுபட்டு வருகிறது.
அதற்காக அதிகாரிகள் அப்பழுக்கற்றவர்கள், அவர்கள் நேர்மையாகத்தான் செயல்படுவார்கள் என்ற போலியான பிம்பத்தை கட்டமைத்து அமலாக்கத்துறைக்கு வானளாவிய அதிகாரம் கொடுத்து அதன் வருவதாக உள்ளது. உண்மையில் நாடு முழுவதும் அமலாக்கத்துறை அதிகாரிகள் தங்களது அதிகாரத்தை பயன்படுத்தி லஞ்சம் வாங்குவது உள்பட பல்வேறு முறைகேடுகளில் ஈடுபடுவது தொடர்கதையாகி வருகிறது.
டெல்லி, ராஜஸ்தான், அகமதாபாத் ஆகிய இடங்களில் லஞ்சம் மற்றும் சூதாட்ட வழக்குகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் கைதாகியுள்ளனர். ஒவ்வொரு மாநிலத்தில் சோதனை என்ற பெயரில் செல்லும் அதிகாரிகள் அவர்களின் சூழ்நிலை மற்றும் சொத்து விவரங்களை எல்லாம் அறிந்து அவர்களுக்கு சம்மன் அனுப்புவதுபோல் அனுப்பி ஒரு சில அதிகாரிகளை வைத்து லஞ்சம் கொடுத்தால் வழக்குகளில் இருந்து விடுவிக்கிறேன் என்று பேரம் பேசப்படுகிறது.
அவ்வாறு கிடைக்கும் பணத்தில் மேல்மட்ட அதிகாரிகள் முதல் கீழ்மட்ட அதிகாரிகள் வரை பங்கு போட்டு கொள்வதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆனால், இந்த விவகாரத்தில் மேல்மட்ட அதிகாரிகள் யாரும் சிக்குவதில்லை. இந்நிலையில், மத்திய பிரதேசம் மாநிலம், இந்தூரைச் சேர்ந்த அங்கித் திவாரி. இவர் 2016-ம் ஆண்டு ஒன்றிய அரசு நடத்திய தேர்வில் வெற்றி பெற்று, மத்தியப்பிரதேச அமலாக்கத்துறையில் பணியில் சேர்ந்தார்.
பின்னர், மகராஷ்டிரா (நாக்பூர்), குஜராத் ஆகிய மாநிலங்களில் அமலாக்கத்துறை உதவி அதிகாரியாக பணியாற்றி வந்தார். அங்கிருந்து ஆய்வாளர் அந்தஸ்துக்கு அமலாக்கத்துறை அதிகாரியாக பதவி உயர்வு பெற்று, கடந்த ஏப்ரல் 23ல் மதுரைக்கு வந்துள்ளார். மதுரைக்கு வந்த பிறகு லஞ்ச ஒழிப்புத்துறையில் தென் மாவட்டங்களில் லஞ்ச ஒழிப்பு வழக்குகளில் சிக்கியுள்ள அரசு அதிகாரிகளின் விவரங்களையும், வழக்குகளின் தகவல்களையும் கேட்டு வாங்கியுள்ளார்.
அதில், திண்டுக்கல், நியூ அக்ரஹாரம் பகுதியை சேர்ந்த மருத்துவர் சுரேஷ்பாபு என்பவர் மீதான வழக்கு ஆவணங்களையும் வாங்கியுள்ளார். சுரேஷ்பாபு, திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் துணை கண்காணிப்பாளராக பணிபுரிந்து வருகிறார். இவர் மீது, கடந்த 2018-ம் ஆண்டு வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக புகார் எழுந்தது. இவரது மனைவி பெயரில் திண்டுக்கல்லில் மருத்துவமனை ஒன்றை நடத்தி வந்துள்ளார். இதுதொடர்பாக லஞ்ச ஒழிப்பு காவல்துறை அவரது மருத்துவமனை மற்றும் வீடுகளில் அதிரடி சோதனை நடத்தினர்.
அப்போது, ஏராளமான ஆவணங்களை அவர்கள் கைப்பற்றியதாக தெரிகிறது. இதன் அடிப்படையில் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, வழக்கு விசாரணை நிலுவையில் உள்ளது. இந்நிலையில், அங்கித் திவாரி, கடந்த 6 மாதங்களுக்கு முன்பு மருத்துவர் சுரேஷ்பாபுவை தொடர்பு கொண்டு, ‘உங்கள் மீது சொத்து குவிப்பு வழக்கு இருக்கிறது.
இது பிரதமர் அலுவலகம் மூலம் அமலாக்கத்துறையின் கவனத்துக்கு வந்துள்ளது. நாங்கள் விசாரணைக்கு எடுக்க போகிறோம். விசாரணைக்கு எடுத்தால் உங்களுடைய சொத்துகள் அனைத்தும் முடக்கி பறிமுதல் செய்வோம். இதை தவிர்த்து வழக்கில் இருந்து முழுமையாக விடுவிக்க வேண்டுமென்றால் ரூ.3 கோடி லஞ்சம் தர வேண்டும்.
இது எனக்கு மட்டும் இல்லை. உயர் அதிகாரிகள் வரை கொடுக்க வேண்டும். பணம் தராவிட்டால், உங்களை மட்டுமல்லாமல் மருத்துவமனை உங்கள் மனைவி பெயரில் இருப்பதால் அவரையும் கைது செய்ய வேண்டியது வரும்’ என்று பேரம் பேசி உள்ளார். இதற்கு மருத்துவர் சுரேஷ்பாபு மறுத்து உள்ளார். இருப்பினும் விடாமல் அவரை தொடர்பு கொண்டு அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி லஞ்சம் கேட்டு தொடர்ந்து பேரம் பேசி வந்து உள்ளார்.
இறுதியாக ரூ.51 லட்சம் கொடு என்று அங்கித் திவாரி மருத்துவர் சுரேஷ்பாபுவை மிரட்டியுள்ளார். கடந்த மாதம் ரூ.20 லட்சத்தை அங்கித் திவாரி, மருத்துவரின் வீட்டுக்குச் சென்று வாங்கியுள்ளார். அதன் பின்னர் மேலும் ரூ.31 லட்சம் கேட்டு மிரட்டி வந்துள்ளார்.
அமலாக்கத்துறை அதிகாரியின் டார்ச்சரால் திண்டுக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறையில் மருத்துவர் சுரேஷ்பாபு புகார் கொடுத்து உள்ளார். இதையடுத்து, லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குனர் அபய் குமார் சிங், இணை இயக்குனர் சந்தோஷ்குமார் உத்தரவின்பேரில், காவல் கண்காணிப்பாளர் சரவணகுமார் விசாரணை நடத்தினார். இதில் மருத்துவர் சுரேஷ்பாபுவை அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி மிரட்டியது உறுதியானது. இதையடுத்து திண்டுக்கல் லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி நாகராஜன், ஆய்வாளர் கீதா ரூபராணி ஆகியோர் கொண்ட தனிப்படைஅமைக்கப்பட்டு, அங்கித் திவாரியை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
அதன்படி, மருத்துவர் சுரேஷ்பாபு அங்கித் திவாரியை தொடர்பு கொண்டு ரூ.20 லட்சத்தை தருவதாக கூறி உள்ளார். உடனே அங்கித் திவாரி திண்டுக்கல் – மதுரை தேசிய நெடுஞ்சாலையில் திண்டுக்கல் நகரின் பேகம்பூரை அடுத்துள்ள தோமையார்புரம் அருகே உள்ள மருத்துவரின் வீட்டுக்கு நேற்று அதிகாலை மருத்துவர் சுரேஷ்பாபுவை வர சொல்லி உள்ளார்.
அதன்படி, லஞ்ச ஒழிப்புத்துறையினர் தந்த ரசாயனம் தடவிய ரூ.20 லட்சம் பணத்துடன் அங்கித் திவாரி சொன்ன இடத்துக்கு மருத்துவர் சுரேஷ்பாபு சென்று உள்ளார். அங்கு காரில் அங்கித் திவாரி காத்திருந்தார். மருத்துவரை பார்த்ததும், பணத்தை கார் டிக்கியில் வைக்க சொல்லி உள்ளார். உடனே, ரசாயனம் தடவிய ரூ.20 லட்சத்தை அங்கித் திவாரியின் கார் டிக்கியில் மருத்துவர் வைத்து உள்ளார்.
அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறை அவரை மடக்கி பிடிக்க சென்றனர். காவல்துறை சாதாரண உடையில் இருந்ததால், என்ன நடக்கிறது என்று புரியாமல், அங்கித் திவாரி காரை படுவேகமாக மதுரை நோக்கி ஓட்டி சென்றார். உடனே, திண்டுக்கல் லஞ்ச ஒழிப்பு காவல் துணை கண்காணிப்பாளர் நாகராஜன், ஆய்வாளர் கீதா ரூபராணி ஆகியோர் கொண்ட தனிப்படையினர் அங்கித் திவாரியின் காரை விரட்டிச்சென்றனர்.
சுமார் 15 கி.மீ சென்ற அங்கித் திவாரியின் கார் கொடைரோடு சுங்கச்சாவடி டிராபிக்கில் மாட்டி நின்றபோது, லஞ்ச ஒழிப்புத்துறையினர் சுற்றி வளைத்து பிடித்தனர். காரில் இருந்த லஞ்சப்பணம் ரூ.20 லட்சம், அவரது கார் ஆகியவற்றையும் பறிமுதல் செய்து அங்கித் திவாரியை கைது செய்து பின்னர், திண்டுக்கல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.