சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி: ஏப்ரல் 21 -க்குள் கொடி கம்பங்களை அகற்று…! இல்லனா வழக்கு போடு..!

தமிழகம் முழுவதும் பொது இடங்கள், தேசிய, மாநில நெடுஞ்சாலைகள், உள்ளாட்சி இடங்களில் கொடிக்கம்பங்களை ஏப்ரல் 21 -ஆம் தேதிக்குள் அகற்ற வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் இறுதி கெடு கொடுத்துள்ளது.சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் ராகேஷ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்து இருந்த பொது நல வழக்கில் ராயபுரம் பகுதியில் நடைபாதையில் அமைக்கப்பட்டுள்ள அரசியல் கட்சியின் கொடிக்கம்பத்தையும் கல்வெட்டையும் அகற்ற உத்தரவிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டு இருந்தார்.

இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கே ஆர் ஸ்ரீராம் மற்றும் முகமதுசபீக் ஆகியோர் அடங்கி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு சார்பில் ஆஜரான அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜெ. ரவீந்திரன் ஏற்கனவே மதுரை உயர்நீதிமன்ற கிளையில் நீதிபதி ஜி.கே. இளந்திரையன், தமிழகம் முழுவதும் பொது இடங்கள், தேசிய, மாநில நெடுஞ்சாலைகள், உள்ளாட்சி இடங்களில் உள்ள கொடிக் கம்பங்களை 12 வாரங்களில் அகற்ற வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்ததாகவும், தனி நீதிபதியின் உத்தரவை நீதிபதி நிஷாபானு தலைமையிலான இரு நீதிபதிகள் அமர்வும் உறுதி செய்துள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.

இது தொடர்பாக அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் குறிப்பிட்டார். இதை பதிவு செய்து கொண்ட தலைமை நீதிபதி அமர்வு வரும் ஏப்ரல் 21 -ஆம் தேதிக்குள் தமிழகம் முழுவதும் பொது இடங்கள், தேசிய, மாநில நெடுஞ்சாலைகள், உள்ளாட்சி இடங்களில் உள்ள கொடிக்கம்படங்களை அகற்றப்பட வேண்டும். *அப்படி அகற்றவில்லயெனில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கையும் தொடரலாம் எனக்கூறி இந்த வழக்கை முடித்து வைத்தார்.

சேகர்பாபு அதிரடி: அண்ணாமலை டூப் போலீஸ்.. லஞ்சபேர்வழி..!

ஒரு டூப் போலீஸ், லஞ்சபேர்வழி என நானும் போகிற போக்கில் சொல்லலாம் என விமர்சித்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கடுமையான பதிலடி கொடுத்துள்ளார். திருச்சியில் தமிழக பாஜக சார்பில் மத்திய பாஜக அரசின் மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவாக பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக் கூட்டத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, முன்னாள் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், நயினார் நாகேந்திரன் MLA, வானதி சீனிவாசன் MLA உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இந்தப் பொதுக்கூட்டத்தில் பேசிய பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, “திமுக மேடைகளில் எல்லாம் ஆபாச பேச்சுதான் இருக்கும். அதற்கு கைதட்ட 100 பேர் இருக்கிறார்கள். இதை வைத்துக்கொண்டு, 2026 -ஆம் ஆண்டு தேர்தலில் 200 தொகுதிகளில் வெற்றி பெற்று விடலாம் என்கிற மாய உலகத்தில் திமுகவினர் இருக்கிறார்கள். வட இந்தியர்கள் யாரும் தமிழர்களைப் பற்றி இழிவாக பேசியதில்லை.

ஆனால் திமுகவினர் வடமாநிலத்திலுள்ள ஒவ்வொரு மாநில முதலமைச்சர்களையும் இழிவாக பேசுகிறார்கள். இதற்கு அவர்களது பயம்தான் காரணம். பள்ளிக் கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, உதயநிதி ரசிகர் மன்ற தலைவராக இருக்கிறார். இவருக்கு இந்த பணியை தாண்டி கொஞ்சம் நேரம் இருந்தால் கல்வியைப் பற்றி பேசுவார். அமைச்சர்கள் காந்தி, செந்தில் பாலாஜி, சேகர்பாபு, ரகுபதி உள்ளிட்டோர் மீதும் வழக்குகள் உள்ளன. இவர்கள் எல்லாம் சேர்ந்து தான் தமிழகத்தின் கல்வி கொள்கை குறித்து பேசுகிறார்கள். சென்னையில் ரவுடி சரித்திர பதிவேட்டில் இருந்தவர் அமைச்சர் சேகர்பாபு இப்படிப்பட்டவர்கள் அமைச்சர்களாக இருந்தால் தமிழ்நாடு விளங்குமா?” என ஆவேசமாகப் அண்ணாமலை பேசியிருந்தார்.

சென்னையில் இன்று அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்தார். அப்போது, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு 73 நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறோம். இன்றைக்கு 33-வது நாளாக காலை சிற்றுண்டி வழங்கி வருகிறோம். இதனைத் தொடர்ந்து ஓராண்டுக்கு காலை சிற்றுண்டி திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்துவோம் என்பதை உறுதி அளிக்கிறோம்.

குற்றப்பின்னணியில் இருக்கும் அமைச்சர்கள் என அண்ணாமலை சொல்வது, பாஜக ஆளும் மாநிலங்களைச் சேர்ந்தவர்களை மனதில் வைத்துதான் சொல்லி இருப்பார். படிக்காதவர்கள் எப்படி பள்ளியை பற்றி பேசலாம் என்கிறார் அண்ணாமலை.. ஒருவேளை காமராஜரை களங்கப்படுத்துகிறாரா அண்ணாமலை? அண்ணாமலை ஒரு தற்குறி படிப்பு, மனம், சேவைக்கு தொடர்பு இல்லை. மனிதாபிமானத்தைக் கொண்டவர்கள் உயர் பதவிக்கு வந்தால் மக்கள் சேவையை தலையாய கடமையாக ஏற்று செயல்படுவார்கள். இது அண்ணாமலை போன்ற தற்குறிகளுக்கு தெரியாது. என்னை சரித்திரப் பதிவு குற்றவாளி என சொல்லும் அண்ணாமலை, கர்நாடகாவில் டூப் போலீஸ்; லஞ்சம் வாங்கிய பேர்வழி என நான் கூட சொல்கிறேன். ஆதாரம் இல்லாமல் வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ என பேசுவது நியாயமில்லை. ஆதாரத்தை காட்டிதான் அண்ணாமலை குற்றச்சாட்டை முன்வைக்க வேண்டும்.

போகிற போக்கில் ஏதாவது வாரித்தூற்றி விட்டு போனால் எப்படி முறையாகும்? ஆதாரத்தைக் காட்ட சொல்லுங்கள். ஊசிப் போன பண்டம் பாஜக அண்ணாவால் வளர்க்கப்பட்ட திமுகவினர் கூண்டுக் கிளிகள் அல்ல; கூவும் குயில்கள். இந்த இயக்கம் விதையாக, விருட்சமாக, மரமாக வளர்க்கப்பட்டு பல கோடி மக்களுக்கு நிழல் தரும் இயக்கம். ஊசிப் போன பண்டமாக இருக்கும் பாஜகவை 2026-ல் மக்கள் தூக்கி எறியவும் தயாராக இருக்கின்றனர்.

திமுகவில் இருப்பவர்கள் சிறைக்கு அஞ்சாத சிங்கங்கள். நீதிபதிகளையே தலைக்கு மேலே இருப்பதற்கு ஒப்பானவர்கள் என பேசுகிறவர்கள் நாங்கள் அல்ல. எங்களுக்கு கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என கற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது. சிறை என்றாலும் சிரித்த முகத்துடன் எதிர்கொள்ள தயாராக் இருப்பதுதான் திமுக. இந்தியாவே திரும்பிப் பார்க்கிறது இந்தியாவின் வரைபடத்தில் கீழே இருக்கிற தமிழ்நாட்டை, வரைபடத்தில் மேலே இருக்கிற அத்தனை பேரையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளார் முதல்வர் ஸ்டாலின். லோக்சபா தேர்தலில் 40 இடங்களையும் கைப்பற்றி அலற்விட்டுள்ளோம். 2026 தேர்தலிலும் 200 தொகுதிகள் என்பது நிச்சயம்; 234 தொகுதிகளில் வெற்றி என்பது லட்சியம் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.

காவல் ஆணையர் அருன் அதிரடி: போதைபொருள் கடத்தல் கும்பல் தலைவி கைது..!

தமிழகத்தில் கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்களை குறி வைத்து நாளுக்கு நாள் போதை பழக்கம் அதிகரித்து காணப்படுகிறது. இதனால் காவல்துறை அதிரடி சோதனையில் போதைபொருள் கைப்பற்றப்பட்டு கைது நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னை பெருநகர காவல் எல்லையில் போதைப்பொருட்களை முற்றிலும் ஒழிக்கும் வகையில் காவல் ஆணையர் அருண் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அதன்படி போதை பொருட்களை விற்பனை மற்றும் கடத்தும் நபர்களை கைது செய்யும் வகையில் உதவி காவல் ஆணையர் ஒருவர் தலைமையில் போதைப்பொருள் நுண்ணறிவு தடுப்பு பிரிவு ஒன்று புதிதாக பெருநகர காவல்துறையில் தொடங்கப்பட்டுள்ளது. இந்த பிரிவினர் போதை பொருட்களை விற்பனை மற்றும் கடத்தும் நபர்கள் மீது மட்டுமே கண்டுபிடித்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

அந்தவகையில், நேற்று இரவு சென்னை உயர் நீதிமன்றம் அருகே பிரகாசம் சாலையில், இருசக்கர வாகனத்தில் வந்த ஆறு பேரை சுற்றி வளைத்தனர். அப்போது 2 மோட்டார் சைக்கிளில் 6 பேரில், 2 பேர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். மற்ற நான்கு பேரும் காவல்துறையினரிடம் சிக்கினார். வாகனத்தில் சோதனை செய்தபோது 2 கிராம் மெத்தப்பட்டமைன் என்னும் போதை பொருள் வைத்திருந்தது தெரிந்தது.

இது தொடர்பாக எஸ்பிளனேடு காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்தனர். விசாரணையில் புழல் பகுதியை சேர்ந்த பிரவீன், உணவகத்தில் வேலை பார்த்து வந்த கொடுங்கையூர் பகுதியை சேர்ந்த தினேஷ், அலுவலகத்தில் உதவியாளரான பழைய வண்ணாரப்பேட்டை பகுதியை சேர்ந்த சிறுவன், 12-ம் வகுப்பு படித்து வரும் தண்டையார்பேட்டை பகுதியை சேர்ந்த சிறுவன் எனத் தெரிந்தது. அவர்களிடம் மெத்தம்பட்டமைன் எப்படி கிடைத்தது? எங்கு வாங்கினீர்கள்? என்று கேட்டபோது மணலி பகுதியைச் சேர்ந்த மவுபியா என்ற பெண்ணிடம் வாங்கியதாக தெரிவித்தனர்.

இதையடுத்து காவல்துறை அந்த பெண்ணின் வீட்டை சோதனை செய்தபோது 5 கிராம் மெத்தப்பட்டமைன் சிக்கியது. அவர்களிடமிருந்து லட்சக்கணக்கில் மதிப்புள்ள மொத்தம் 7 கிராம் மெத்தப்பட்டமைன் பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணையில் கைது செய்யப்பட்ட பெண் மவுபியா மெத்தம்பெட்டமைன் போதை பொருளை மொத்தமாக வாங்கி இளைஞர்கள் சிறுவர்களை வைத்து கல்லூரி மாணவர்களுக்கும் மதுபான விடுதி, பப்புகளுக்கும் சப்ளை செய்து வந்தது தெரியவந்துள்ளது.