அஸ்வத்தாமன் காட்டம்: அண்ணா தோற்றுவித்த திராவிட முன்னேற்ற கழகம் தற்போது திராவிட கழகமாக மாறி வருகிறது..!

காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோயிலுக்கு, பாஜகவின் மாநில செயலாளர் அஸ்வத்தாமன் நேற்று முன்தினம் வருகை புரிந்து சாமி தரிசனம் செய்தார். பின்னர், அவர் செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்தார். அப்போது, ‘அண்ணா தோற்றுவித்த திராவிட முன்னேற்ற கழகம் தற்போது திராவிட கழகமாக மாறி வருவதாகவும், மக்களின் அன்றாட பிரச்னைகளை கவனிக்காமல் தமிழ்த்தாய் வாழ்த்தை வைத்து அரசியல் செய்கிறது.

மேலும், திருமாவளவனோடு மத்திய அமைச்சர் எல்.முருகனை ஒருபோதும் ஒப்பிட முடியாது. அவர் சட்டம் பயின்றவர். ஆனால், திருமாவளவனோ மதமாற்றம் குறித்த செய்கையில் முனைவர் பட்டம் பெற்றார் என அஸ்வத்தாமன் தெரிவித்தார்.

Udhayanidhi Stalin: எல்லோருக்கும் எல்லாமும் என்பதுதான் திராவிடம்…!

முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான பழனியில் அமைந்துள்ள அருள்மிகு தண்டாயுதபாணி கலை மற்றும் பண்பாட்டுக் கல்லூரியில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டின் இரண்டாவது நாளான இன்று விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் காணொலி வாயிலாக வாழ்த்துரை வழங்கினார். அப்போது, “சேகர்பாபுவை நமது முதலமைச்சர் எப்போதும் செயல் பாபு என்றே அழைப்பார்.

அது எவ்வளவு உண்மை என்பது இந்த மாநாட்டின் ஏற்பாடுகளைப் பார்க்கும் போதே தெரிகிறது. எப்போது பார்த்தாலும் அமைச்சர் சேகர் பாபு எதாவது ஒரு திருக்கோயிலை ஆய்வு செய்து கொண்டு தான்a இருப்பார். கோயிலில் தான் அவர் குடியிருப்பார் என்று சொல்லும் அளவுக்கு அவரது பணி இருக்கிறது. இன்று அறநிலையத்துறை தன்னுடைய பணிகளை அறத்தோடு முன்னெடுத்துச் செல்கிறது.

திராவிட மாடல் அரசு இந்த மாநாட்டை திடீரென நடத்துவதாகச் சிலர் சொல்கிறார்கள். ஆனால், இது திடீரென நடத்தப்படும் மாநாடு இல்லை. கடந்த 3 ஆண்டுகளில் இந்த திராவிட மாடல் அரசு பல சாதனைகளைச் செய்துவிட்டுத் தான் இந்த மாநாட்டை நடத்துகிறது. திமுக அரசு யாருடைய நம்பிக்கைக்கும் குறுக்கே நிற்காத அரசு. எல்லாருடைய உணர்வுக்கும் மதிப்பு கொடுக்கும் அரசு. சொல்லப்போனால் அறநிலையத் துறையின் பொற்காலம் என்றே திமுக ஆட்சியை சொல்லலாம்.

திராவிட இயக்கத்தின் தொடக்க புள்ளியான நீதி கட்சி ஆட்சியில் தான் இந்து சமய அறநிலைய துறை பாதுகாப்பு சட்டம் உருவாக்கப்பட்டு, மக்களின் வழிபாட்டு உரிமை உறுதி செய்யப்பட்டது. குற்றக்குடி அடிகளார் விபூதியை கொடுத்த போது அதை மறுக்காமல் வாங்கி நெற்றி நிறைய பூசிக்கொண்டவர் தந்தை பெரியார். ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்று முழங்கியவர் அண்ணா. பல ஆண்டுகளாக ஓடாத திருவாரூர் தேரை ஓட வைத்தவர் கருணாநிதி.

இந்த தலைவர்கள் வழியில் வந்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடந்த 3 ஆண்டுகளில் அறநிலையத் துறை சார்பில் பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். இந்த திராவிட மாடல் அரசு அமைந்த 3 ஆண்டுகளில் 1400+ கோயில்களுக்கு குடமுழுக்கு செய்யப்பட்டுள்ளது. ரூ. 5,600 கோடி மதிப்பிலான 6,000 ஏக்கர் கோயில் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளன. ரூ 3,800 கோடி மதிப்பில் 8500 கோயில்களில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. எல்லோருக்கும் எல்லாமும் என்பதுதான் திராவிடம்.

நமது திராவிடம் யாரையும் ஒடுக்காது, அனைவரையும் இணைக்கவே செய்யும். அதற்கு மிக சிறந்த ஒரு உதாரணமாகவே அனைத்து சாதியினர் மற்றும் பெண்கள் அர்ச்சகராகலாம் என்ற திட்டம் கொண்டு வரப்பட்டது. இப்போது மாநிலத்தில் உள்ள அனைத்து கோயில்களிலும் அன்னைத் தமிழில் அர்ச்சனை திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் மற்ற துறைகளை எப்படி இந்தியாவிற்கே வழிகாட்டியாக இருக்கிறதோ.. அதேபோல தான் அறநிலைய துறையும் இந்தியாவுக்கு வழிகாட்டி வருகிறது.

இப்படி பல சாதனைகளை செய்த தமிழக அரசு இப்போது முருகன் மாநாட்டை நடத்துகிறது. முருகன் மாநாடு ஆன்மீக மாநாடு மட்டும் இல்லை. தமிழர் பண்பாட்டு மாநாடாகவும் நடைபெறுகிறது. இந்த அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு வரலாற்றில் எப்போதும் நிலைத்து நிற்கும்” என உதயநிதி ஸ்டாலின் உரையாற்றினார்.

அண்ணாவின் 55 -வது நினைவு நாளையொட்டி திமுகவினர் அண்ணாவின் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை..!

பெரியாரின் சீடராக இருந்து பெரியாரின் தளபதியாக மாறிய அண்ணா “திராவிட முனேற்ற கழகம்” என்ற தனி கட்சி தொடங்கி பெரியாரை என் வாழ்க்கையில் நான் கண்டதும் கொண்டதும் ஒரே தலைவர் என்று மகுடம் சூட்டி தலைவர் நாற்காலியை அவருக்காக ஒதுக்கி வைத்தார். அண்ணா ஆட்சிக்கு வந்த உடன், சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் ‘தமிழ்நாடு அரசு தலைமைச் செயலகம்’ என்ற பெயர்ப்பலகை வைக்கப்பட்டது.

தமிழக அரசின் இலச்சினையான கோபுரச் சின்னத்தில் இருந்த ‘கவர்ன்மென்ட் ஆஃப் மெட்ராஸ்’ என்ற வாக்கியம் நீக்கப்பட்டு, ‘தமிழக அரசு’ என்று மாற்றப்பட்டது. அந்தச் சின்னத்தில் இடம்பெற்றிருந்த ‘சத்யமேவ ஜயதே’ என்ற வடமொழி வாக்கியம், ‘வாய்மையே வெல்லும்’ என்று தமிழில் மாறியது.

சி.என்.அண்ணாதுரை என்ற பெயர் பின்னாளில் சி.என்.எ என்ற மூன்று எழுத்தால் அறிமுகமான அண்ணா. 1967-ல் முதலமைச்சராக பொறுப்பேற்ற அவர், அப்பதவிக்காலம் முடிவதற்கு முன்னரே இவ்வுலகை விட்டு பிரிந்தார். இவரது தியாகத்தையும், பணிகளையும் நினைவுகூரும் விதமாக அவரது நினைவு தினத்தன்று ஆண்டு தோறும் சென்னையில் திமுக அமைதி பேரணியை நடத்தி வருகிறது. இன்று காலை 8 மணிக்கு தமிழ்நாடு அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் மற்றும் திமுக உறுப்பினர்கள் அண்ணாசாலையில் உள்ள அறிஞர் அண்ணா சிலையிலிருந்து மெரினா கடற்கரை அருகே அண்ணா நினைவிடத்திற்கு மவுன ஊர்வலம் சென்று மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

அண்ணாமலை பொய் மூட்டை…! அண்ணாமலைக்கு பதில் அளித்து நேரத்தை வீணடிக்கக்கூடாது பிடிஆர்!

சென்னையில் அண்மையில் நடந்த போராட்டத்தில் பங்கேற்றுப் பேசிய தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, “1956-ம் ஆண்டு மதுரையில் நடந்த விழாவில் பகுத்தறிவுக் கருத்துகளைப் பேசிய அறிஞர் அண்ணாவை, பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் மிகக்கடுமையாக எதிர்த்தார். மன்னிப்பு கேட்காவிட்டால், மீனாட்சி அம்மனுக்கு பால் அபிஷேகத்துக்கு பதில் ரத்த அபிஷேகம் நடக்கும் என்று எச்சரித்தார். அதற்கு பயந்து அண்ணாவும், பிடி ராஜனும் ஓடிவந்து மன்னிப்பு கேட்டனர்” என்று கூறியிருந்தார்.

இந்த விவகாரம் பெரும் சர்ச்சையாக வெடித்தது. திமுக, அதிமுக, திராவிட இயக்கத்தினர் என பலரும் அண்ணாமலை சொன்ன விஷயம் பொய் எனக் கூறினர். அண்ணா பற்றி தவறாகப் பேசியதற்காக அதிமுக இரண்டாம் கட்டத் தலைவர்கள் அண்ணாமலையை கடுமையாக விமர்சித்தனர். முடிவில் அதிமுக – பாஜக இடையே கூட்டணி இல்லை என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அறிவிக்கும் அளவுக்கு இந்த விவகாரம் பூதாகரமானது.

இதற்கிடையே செய்தியாளர்களைச் சந்தித்த அண்ணாமலை, “தி இந்து ஆங்கில நாளிதழ் 1956 ஜூன் 1,2,3 தேதியிட்ட நாளிதழ்கள் என்னிடம் உள்ளது. யார் வேண்டுமானாலும் படிக்கலாம். 10 நாட்கள் நடந்த தமிழ்ச்சங்க விழாவில் முதல் நாள் ராஜாஜி பேசினார். நான்காவது நாள் பி.டி.ராஜன் பேசினார். அன்றுதான் அண்ணா பேசினார். அண்ணா பேசிய ஒவ்வொரு வார்த்தைகளையும் நாளிதழ்கள் பதிவு செய்துள்ளன. நான் இரண்டரை ஆண்டுகள் தமிழகத்தின் பாஜக தலைவராக உள்ளேன். நான் ஒரு விஷயத்தை சொன்னால் சரியாகத்தான் சொல்லுவேன்” எனத் தெரிவித்தார்.

ஆனால் அதன் பிறகு தி இந்து, தினமணி உள்ளிட்ட பல்வேறு நாளிதழ்கள் அண்ணாமலை குறிப்பிட்ட அந்த நிகழ்ச்சி நடந்தது தொடர்பான செய்திகளை வெளியிட்டு, அண்ணா மன்னிப்பு கேட்டதாக எந்தவொரு செய்தியும் வெளியாகவில்லை என்று தெளிவுபடுத்தியுள்ளன. ஆனால் தான் ஆதாரத்துடன் தான் பேசுவதாகவும் தனது பேச்சுக்கு மன்னிப்பு கேட்கப்போவதில்லை என்றும் அண்ணாமலை கூறி வருகிறார்.

இந்நிலையில், செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனிடம் அண்ணாமலையின் பேச்சுகளுக்கு பதில் அளித்தார், “எனது தாத்தா மெட்ராஸ் மாகாணத்தின் முதலமைச்சர், பேரறிஞர் அண்ணா எங்கள் கட்சியைத் தொடங்கியவர், தமிழ்நாட்டின் முதலமைச்சராகவும் இருந்தவர். தேவர் ஐயா ஒரு இயக்கத்திற்கு தலைவராக இருந்தவர், மிகவும் புலமை வாய்ந்தவர். தமிழில் மட்டுமல்ல ஆங்கிலத்திலும் மிகவும் புலமை வாய்ந்தவர். இவர்களுக்குள் இருந்த நல்ல உறவை, அவர்கள் வாழ்ந்த காலத்தில் பிறக்காத அண்ணாமலை சொல்லும் அவதூறு கருத்துகளை பொய் என நிரூபிக்க பலர் உண்மையை எடுத்துக்கூறி வருகின்றனர்.

1956-ல் நடந்தது என சொல்லி, எங்கேயோ படித்தேன் என சொல்லி அதற்கு எந்த ஆதாரமும் கொண்டு வராமல் ஏதோ ஒரு கருத்தை முன் வைக்கிறார். இதற்கெல்லாம் நாம் பதில் சொல்லக்கூடாது. யாரிடம் என்ன கருத்து வருகிறது என்பதை தெரிந்து கொண்டு எதற்கு பதில் சொல்ல வேண்டும் கூடாது என்பதை சிந்திக்க வேண்டும். அண்ணாமலை போன்றவர்களின் பொய்யான கருத்து ஜனநாயகத்திற்கே கேடு.

எதை ஏற்றுக்கொள்ள வேண்டும், எதை புறம்தள்ள வேண்டும் என சிந்திப்பது தான் ஜனநாயகத்திற்கு நல்லது. இந்த மாதிரியான கருத்துகளுக்கு சாதாரண நபர்கள் பதில் பேசவே கூடாது. நாம் ஏன் இதற்கு பதில் சொல்ல வேண்டும். தொடர்ந்து ஒருவர் பொய் சொல்லிக் கொண்டே இருந்தால் நாம் விளக்கம் சொல்லிக்கொண்டே இருந்தால் என்ன அர்த்தம்? அவர் பாட்டுக்கு பொய் சொல்லிக் கொண்டே இருக்கட்டும். தமிழ்நாட்டு மக்கள் எல்லாவற்றையும் புரிந்து கொள்வார்கள்” எனத் தெரிவித்துள்ளார்.