மு.க. ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு: இந்திய ராணுவத்துக்கு ஆதரவு தெரிவித்து பேரணி..!

இந்திய ராணுவத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் பேரணிக்கு முன்னாள் படைவீரர்கள், அமைச்சர் பெருமக்கள், பொதுமக்கள், மாணவர்கள் பங்குகேற்க தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார். ஜம்மு -காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் அமைந்துள்ள தீவிரவாதிகளின் முகாம்களை குறி வைத்து தாக்குதல் நடத்தியது. இந்தியாவின் தாக்குதல் போர் நடவடிக்கை தான் என்றும் அதற்கு தக்க பதிலடி வழங்கப்படும் என பாகிஸ்தான் கொக்கரித்துள்ளார்.

இந்த சூழ்நிலையில் நேற்று அதிகாலையில் சீனா வழங்கிய ஏவுகணைகளை கொண்டு பாகிஸ்தான் இந்தியா எல்லை பகுதிகளில் தாக்குதல் நடத்தியது. இதற்கு ரஷ்யா வழங்கிய பாதுகாப்பு அமைப்புகளை கொண்டு இந்திய ராணுவம் பதிலடி கொடுத்தது. இதற்கிடையே நேற்று இரவு நேரத்தில் பாகிஸ்தான் திடீரென இந்திய எல்லைப் பகுதிகளில் தாக்குதலை நடத்த தொடங்கியது.

இந்நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில், தீவிரவாதத்தை வளர்த்தெடுத்து, தான் கெட்டதோடு இந்தியாவிலும் அத்துமீறல்களில் ஈடுபடுகிறது பாகிஸ்தான். நம்மைக் காக்க வீரத்துடன் போர் நடத்தும் இந்திய இராணுவத்தினருக்கு நம் ஆதரவை வெளிப்படுத்தும் நேரம் இது.

நாளை மாலை 5 மணிக்கு DGP அலுவலகத்தில் இருந்து தீவுத்திடல் போர் நினைவுச் சின்னம் வரை, எனது தலைமையில் முன்னாள் படைவீரர்கள், அமைச்சர் பெருமக்கள், பொதுமக்கள், மாணவர்கள் பங்குபெறும் பேரணி நடைபெறும். மக்கள் அனைவரும் பங்கேற்று நம் ஒற்றுமையையும் உறுதியையும் காட்டுவோம்! என மு.க.ஸ்டாலின் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

மு.க. ஸ்டாலின்: ‘ஆபரேஷன் சிந்தூர்’.. இந்திய ராணுவத்துடன் தமிழகம் நிற்க்கும்..!

ஜம்மு- காஷ்மீரின் பஹல்கம் பகுதியில் சுற்றுலாப் பயணிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு இந்தியா ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் பதிலடி கொடுத்த இந்திய ராணுவத்துடன் தமிழகம் நிற்க்கும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கடந்த மாதம் 22- ஆம் தேதி ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் இருந்த சுற்றுலாப் பயணிகள் மீது இந்திய ராணுவ உடையில் வந்த தீவிரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர்.

இந்த தாக்குதலில் இந்திய கப்பல் படை அதிகாரி உள்ளிட்ட 27-க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர். இதனால் நாடு முழுவதும் இந்த சம்பவம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. தாக்குதலுக்கு காரணமாக பாகிஸ்தானுக்கு தக்க பதிலடி கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.

இந்நிலையில் இந்தியா எப்போது வேண்டுமானாலும் பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்தலாம் என கூறப்பட்ட நிலையில் போர் பாதுகாப்பு ஒத்திகை நடத்த வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டு இருந்தது. இதை அடுத்து ராணுவம், காவல்துறை, பேரிடர் மேலாண்மை ஆணையங்கள் ஒருவேளை போர் ஏற்பட்டால் எப்படி தற்காத்துக் கொள்வது என்பது குறித்த போர் பாதுகாப்பு ஒத்திகையில் ஈடுபட தயாராக இருந்தன.

இதற்கிடையே, திடீரென நள்ளிரவில் பாகிஸ்தான் தீவிரவாத முகாம்கள் மீது இந்தியா ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் தாக்குதல் நடத்தியது. சிந்தூர் என்றால் தாலி கட்டிய பின் பெண்கள் நெற்றியில் இடும் திலகம் என்று அர்த்தம். பஹல்காம் தாக்குதலில் பல இளம் பெண்கள் தங்கள் துணையை இழந்த நிலையில் அதற்கு பதிலடியாகவே இந்தியாவின் ஆபரேஷனுக்கு இந்தப் பெயர் சூட்டப்பட்டது.

இந்நிலையில் முப்படைகளும் இணைந்து பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் முழுவதும் உள்ள ஒன்பது பயங்கரவாத முகாம்கள் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தியது. குறிப்பாக காஷ்மீர் தாக்குதலை தொடர்புடைய ஜெய்ஸ் – இ – முகமது தலைமையகம் உள்ளிட்ட முக்கிய தீவிரவாத தளங்கள் மீது தாக்குதல் நடத்திய நிலையில் ஏராளமான தீவிரவாதிகள் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்நிலையில் இந்திய ராணுவத்தின் நடவடிக்கைக்கு நாடு முழுவதும் பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளது. குறிப்பாக எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, அகில இந்திய மஜ்லிஸ்-இ-இடிஹதுல் முஸ்லிமின் கட்சியின் தலைவர் அசாதுதீன் ஓவைசி, பீகார் முன்னாள் முதல்வர் லல்லு பிரசாத் யாதவ் ஆகியோர் ராணுவத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில், ” தமிழ்நாடு தீவிரவாதத்திற்கு எதிரான இந்திய ராணுவத்துடன் நிற்கிறது. நமது ராணுவத்துடன் நம் நாட்டுக்காக தமிழகம் உறுதியாக இருக்கிறது” என எக்ஸ் பக்கத்தி பதிவிட்டுள்ளார்.

மு.க. ஸ்டாலின்: பாஜகவின் அடக்குமுறைக்கு எடப்பாடி பழனிசாமி பணிந்து விட்டார்..!

பாஜக தமிழ்நாட்டில் எப்படியாவது காலூன்ற நினைத்து அனைத்து விதமான அச்சுறுத்தலையும் செய்து அதிமுகவை அடக்க வேறு வழியில்லை எடப்பாடி பழனிசாமி பணிந்து விட்டார் என மு.க. ஸ்டாலின் தெரிவித்தார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்ட த்திற்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமை தாங்கினார். கூட்டத்தில் திமுக பொதுச் செய லாளர் துரைமுருகன், முதன்மை செயலாளர் கே.என்.நேரு, பொருளாளர் டி.ஆர்.பாலு, துணை பொதுச் செயலாளர்கள் ஐ.பெரியசாமி, அந்தியூர் செல்வராஜ், ஆ.ராசா, கனிமொழி, திருச்சி சிவா. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, டி.கே.எஸ். இளங்கோவன் உள்பட மூத்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர். மேலும் திமுக மாவட்ட செயலாளர்கள் 76 பேரும் கூட்டத்த்தில் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் மு.க. ஸ்டாலின் பேசுகையில், நம்முடைய பலமே, நம்முடைய கழகக் கட்டுமானம்தான்! இத்தகைய நிர்வாகக் கட்டமைப்பு எந்தக் கட்சிக்கும் கிடையாது. அந்த கட்டமைப்பை காலம் தோறும் புதுப்பித்துக் கொண்டே இருக்கிறோம்; இருக்க வேண்டும்.தடங்கல் என்பது எப்போதும் இருக்கும், அதை உங்களிடம் இருக்கும் உழைப்பால் வெல்லுங்கள் என்பதுதான் என்னுடைய வேண்டுகோள்!

பாஜக தமிழ்நாட்டில் எப்படியாவது காலூன்ற நினைக்கிறது. அதற்கு அனைத்து விதமான அச்சுறுத்தலையும் செய்து அதிமுகவை அடக்கி விட்டது. பழனிசாமிக்கும் வேறு வழியில்லை. பாஜக கூட்டணியை ஏற்றுக் கொள்ளாவிட்டால் சொந்தக் கட்சியில் அவர் தலைமைக்கே சிக்கல் வரும் என்று பயப்படுகிறார். அதனால் பாஜக கூட்டணியை ஏற்றுக்கொண்டு விட்டார்.

நாம் எல்லாக் காலக்கட்டத்திலும் இதுபோன்ற சோதனைகளை எதிர்கொண்ட இயக்கம்தான். அரசியல் ரீதியாக நம்மை வெல்ல முடியாதவர்கள், இதுபோன்ற மிரட்டல்கள் மூலமாக அசிங்கப்படுத்த நினைப்பார்கள். அவர்களது அரட்டல் – மிரட்டல் – உருட்டல் அனைத்துக்கும் உண்மையான காரணம் என்ன என்பது மக்களுக்குத் தெரியும். எனவே, பாஜகவின் அச்சுறுத்தலை, அரசியல் ரீதியாக நாம் எதிர்கொள்வோம்.

அமைச்சர்கள் அந்தந்த மாவட்டத்தில் இருந்து பகுதிகளில் உள்ள குறைகளை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். அமைச்சர்கள் இனி சென்னையில் இருப்பதைவிடவும் மாவட்டங்களில் அதிக நாட்களைச் செலவிடுங்கள். சட்டமன்ற உறுப்பினர்கள் ஒவ்வொரு ஊராட்சி, வார்டு வாரியாகச் செல்ல வேண்டும்.

வேட்பாளர் யார் என்பதை தலைமைக் கழகம் முடிவு செய்யும். வெற்றி பெறுபவரே வேட்பாளராக நிறுத்தப்படுவார். திறமை வாய்ந்தவர் நிறுத்தப்படுவார். அவரை சட்டமன்றத்துக்கு தகுதியுள்ளவராக தேர்வு செய்ய உழைக்க வேண்டியது உங்களது கடமை! பவள விழாவைக் கொண்டாடிய கழகம், ஆறாவது முறையாக ஆட்சியில் அமர்ந்திருக்கக் காரணம், கோடிக்கணக்கான திராவிட முன்னேற்றக் கழகத் தொண்டர்கள்தான் என்பதை நான் அனைத்து இடங்களிலும் சொல்லி வருகிறேன்.

கடந்த ஏழு ஆண்டுகளாக நாம் எதிர்கொண்ட அனைத்துத் தேர்தல்களிலும் வெற்றியை பெற்று வருகிறோம். இந்த வெற்றிக்குக் காரணம், கழக நிர்வாகிகளும், தொண்டர்களும்தான். இத்தகைய நன்றி உணர்வோடுதான் நாம் செயல்பட்டு வருகிறோம்.” என மு.க. ஸ்டாலின் தெரிவித்தார்.

மே தின பூங்காவில் உழைப்பாளர் தின உறுதிமொழி ஏற்ற மு.க. ஸ்டாலின்

சென்னை, சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள மே தின பூங்காவில் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தி மே தின உறுதிமொழியை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஏற்றார். மே தினத்தில் மு.க. ஸ்டாலின் பேசுகையில், தொழிலாளர்கள் தங்கள் உரிமையை வென்றெடுத்த மே நாளில் அனைவருக்கும் நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். தமிழ்நாட்டில் தொழில் வளர்ச்சி பெருகி வருகிறது. திராவிடர்கள் என்றாலே தொழிலாளர்கள் என்று பெரியார் குறிப்பிட்டு காட்டினார். மே 1ம் தேதி ஊதியத்துடன் விடுமுறை அளித்தவர் பேரறிஞர் அண்ணா. அதன் பிறகு மே 1 விடுமுறையை சட்டமாக்கி தந்தார் கலைஞர் என மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.

மேலும் பேசுகையில்,, தொழிலாளர் வளர்ச்சிக்கும் இலக்கு வைத்து திமுக அரசு செயல்பட்டு வருகிறது. திமுக அரசு தொழிலாளர் நலன் காக்கும் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. 28 லட்சம் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு ரூ.2400 கோடிக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கியுள்ளோம் என மே தின பூங்காவில் நினைவுச்சின்னத்துக்கு மலரஞ்சலி செலுத்திய பிறகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.

மு.க. ஸ்டாலின்: “திமுக 200+ தொகுதிகளில் வெல்லும்..” மகிழ்ச்சியில் சேகர்பாபு..!

2026 சட்டசபைத் தேர்தலில் திமுக 200+ தொகுதிகளில் நிச்சயம் வெல்வோம்” என மு.க. ஸ்டாலின் தெரிவிக்க, சட்டென முதலமைச்சரின் பேச்சைக் கேட்டதும் மகிழ்ச்சியில் கைதட்டி கொண்டாடிய சேகர்பாபு. தமிழ்நாட்டில் அடுத்தாண்டு தான் சட்டசபைத் தேர்தல் நடைபெறுகிறது. இருப்பினும், இப்போதே பல்வேறு கட்சிகளும் அரசியல் பணிகளைத் தீவிரப்படுத்தி உள்ளனர். இதற்கிடையே சட்டசபைத் தேர்தல் குறித்த கேள்விக்கு திமுக 200+ தொகுதிகளில் நிச்சயம் வெல்லும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்தார்.

தமிழ்நாட்டில் சட்டசபைக்கு அடுத்தாண்டு மே மாதம் தேர்தல் நடைபெற உள்ளது. இருப்பினும், இப்போதே பல்வேறு கட்சிகளும் அரசியல் பணிகளைத் தீவிரப்படுத்தி உள்ளனர். தேர்தலை மனதில் வைத்துக் கொண்டே இங்கு அரசியல் கட்சிகள் காய்களை நகர்த்தி வருகின்றன. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் எப்போதும் மாதம் ஒரு முறையாவது தனது தொகுதியான கொளத்தூருக்குச் செல்வதை வாடிக்கையாக வைத்து இருக்கிறார். இன்று சட்டசபை கூட்டத்தொடர் நிறைவடைந்த நிலையில், கொளத்தூரில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. அதில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் , அமைச்சர் சேகர்பாபு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அனைவருக்கும் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அப்போது முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்தார். 2026 சட்டசபைத் தேர்தல் குறித்து கேள்விக்கு, “அடுத்த தேர்தலில் திமுக 200+ தொகுதிகளில் நிச்சயம் வெல்வோம்” என மு.க. ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்தார். அப்போது அருகே இருந்த சேகர்பாபு, சட்டென முதல்வரின் இந்தப் பேச்சைக் கேட்டதும் மகிழ்ச்சியில் கைதட்டி சபாஷ் என்பது போலக் கொண்டாடினார்.

மேலும், திமுக அரசு மக்கள் வரிப் பணத்தைச் சூறையாடுவதாக பாஜகவின் தமிழிசை சவுந்தரராஜன் விமர்சனத்தது குறித்த கேள்விக்கு, “அவர்களுக்கு வேற வேலை இல்லை.. அதனால் இப்படித் தான் பேசிக் கொண்டு இருப்பார்” என்றார். தமிழ்நாட்டில் மக்கள் தொகை குறையும் நிலையில், மூன்றாவது குழந்தையைப் பெறும் குடும்பத்தினருக்குச் சலுகைகள் அறிவிக்க வேண்டும் எனக் கோரிக்கை திமுக MLA பர்கூர் மதியழகன் சட்டசபையில் கோரிக்கை விடுத்த கேள்விக்கு, “மக்கள் தொகை சரிவால் அதற்கு அவசியம் ஏற்படலாம்.. அதேநேரம் 3-வது குழந்தை என்பது கட்டாயம் இல்லை” என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்தார்.

மு.க.ஸ்டாலின் சூளுரை 2026 -ல் தமிழகத்தில் திமுக தான் மீண்டும் ஆட்சி 7-வது முறையாக அமைக்கும்..!

‘உழைப்பு உழைப்பு உழைப்பு’ என கலைஞர் கூறுவார். ஆனால் கலைஞர் இப்போது இருந்திருந்தால் ஸ்டாலின் என்றால் ‘சாதனை சாதனை சாதனை’ என கூறியிருப்பார். ஆகையால் 7-வது முறையும் திமுகதான் ஆட்சி அமைக்கும். என மு.க.ஸ்டாலின் சூளுரைதார்.

தமிழக சட்டசபைக் கூட்டத் தொடர் கடந்த மாதம் 14-ந்தேதி தொடங்கியது. அன்றைய தினம் பட்ஜெட்டும், அதற்கு மறுநாள் வேளாண் பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட்டது. அதன் பிறகு இரு பட்ஜெட் மீதான விவாதம் 5 நாட்கள் நடைபெற்றது. இதன் தொடர்ச்சியாக மார்ச் 24-ந் தேதி முதல் சட்டசபைக் கூட்டம் தொடர்ந்து நடந்து வருகிறது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு துறை மானியக் கோரிக்கை தாக்கல் செய்யப் பட்டு அதன் மீது விவாதமும் அமைச்சர்களின் பதிலுரையும் நடைபெற்று வருகிறது.

அந்த வகையில் தமிழக சட்டசபைக் கூட்டத் தொடரின் கடைசி நாளான இன்று காவல் துறை, தீயணைப்பு மீட்பு பணிகள் துறைக்கான மானியக் கோரிக்கைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்து இருந்தார். தமிழக சட்டசபையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது, இதுவரை நிறைவேற்றப்பட்ட திட்டங்கள், செய்துள்ள சாதனைகளால் 7-வது முறையும் திமுகதான் ஆட்சி அமைக்கும். ஸ்டாலின் என்றால் ‘உழைப்பு உழைப்பு உழைப்பு’ என கலைஞர் கூறுவார். ஆனால் கலைஞர் இப்போது இருந்திருந்தால் ஸ்டாலின் என்றால் ‘சாதனை சாதனை சாதனை’ என கூறியிருப்பார். கலைஞர் இருந்தால் என்ன செய்திருப்பாரோ அதனைதான் நான் செய்து வருகிறேன்.

தமிழ்நாட்டின் சமூக பொருளாதார வளர்ச்சியில் 63.33 புள்ளிகள் பெற்று தேசிய அளவில் முதலிடத்தில் உள்ளோம். இந்தியாவில் 11.2% வருமை கோட்டிற்குக் கீழ் உள்ள நிலையில், தமிழ்நாட்டில் 1.4% பேர் மட்டுமே வறுமைக்கோட்டிற்கு கீழ் இருந்து வருகின்றனர். கல்வித்துறையில் அரசின் திட்டங்கள் காரணமாக நடுநிலைப் பள்ளிகளில் இடைநிற்றல் இல்லை. மிகச்சிறந்த 100 பல்கலைக்கழகங்கள் பட்டியலில் 25 பல்கலைக்கழகங்கள் தமிழகத்தில் தான் இருந்து வருகிறது.

இந்தியாவில் நம்பர் 1 மாநிலமாக, 9.6 விழுக்காடு பொருளாதார வளர்ச்சி அடைந்துள்ளது தமிழ்நாடு. தமிழ்நாட்டுக்கு ஓரவஞ்சணையுடன் செயல்படும் மத்திய அரசுதான் இதை கூறி உள்ளது. இதுவரை இல்லாத உச்சமாக 15 மில்லியன் டாலர் அளவுக்கு மின்னணு பொருட்கள் ஏற்றுமதியில் தமிழ்நாடு சாதனை படைத்துள்ளது. கடந்த அரசின் நிர்வாக சீர்கேட்டால் கட்டாந்தரையில் ஊர்ந்து கொண்டிருந்தது தமிழ்நாடு.

கடந்த ஆட்சியின் இருளை போக்கி தலைநிமிர்ந்து நடக்கிறது தமிழ்நாடு அரசு. திராவிட மாடல் ஆட்சியில் தமிழ்நாடு அடைந்த வளர்ச்சி இந்தியாவில் எந்த மாநிலமும் காணாதது தமிழ்நாட்டில் தனிநபர் வருமானம் ரூ.3.58 லட்சம்; தேசிய சராசரி ரூ.2.06 லட்சம்தான். மேலே பாம்பு.. கீழே நரிகள்.. குதித்தால் அகழி.. ஓடினால் தடுப்பு சுவர் என்று ஒரு பக்கம் மத்திய அரசு மறு பக்கம் கவர்னர்.. நிதி என்று எல்லா தடைகளை தாண்டி செய்த சாதனை படைத்து வருகிறோம். இது தனி மனித சாதனைகள் இல்லை, அமைச்சர், அதிகாரிகள் என கூட்டு உழைப்புக்கு கிடைத்த சாதனை” என மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

நாளை வரை சட்டசபை கூட்டத்தொடர் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இன்றுடன் சட்டசபை கூட்டத் தொடர் நிறைவடைந்தது. கடைசி நாளான இன்று உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு நேரடி பிரதிநிதித்துவம் சட்ட முன்வடிவு, கட்டாய கடன் வசூல் தடுப்பு மசோதா நிறைவேற்றப்பட்டன. கும்பகோணத்தில் கலைஞர் பல்கலைக்கழகம் அமைப்பதற்காக சட்ட மசோதாவும் நிறைவேற்றப்பட்டு சட்டசபை கூட்டத்தொடர் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.

மு.க.ஸ்டாலின் அறிவிப்பு: ‘காலனி’ என்ற சொல் அரசு ஆவணங்கள்… பொதுப்புழக்கங்களில் இருந்தும் நீக்கப்படும்

ஆதி குடிகளை இழிவுபடுத்தும் ‘காலனி’ என்ற சொல் அரசு ஆவணங்களில் இருந்தும், பொதுப்புழக்கத்தில் இருந்தும் நீக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். தமிழக சட்டசபைக் கூட்டத் தொடர் கடந்த மாதம் 14-ந்தேதி தொடங்கியது. அன்றைய தினம் பட்ஜெட்டும், அதற்கு மறுநாள் வேளாண் பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட்டது.

அதன் பிறகு இரு பட்ஜெட் மீதான விவாதம் 5 நாட்கள் நடைபெற்றது. இதன் தொடர்ச்சியாக மார்ச் 24-ந் தேதி முதல் சட்டசபைக் கூட்டம் தொடர்ந்து நடந்து வருகிறது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு துறை மானியக் கோரிக்கை தாக்கல் செய்யப் பட்டு அதன் மீது விவாதமும் அமைச்சர்களின் பதிலுரையும் நடைபெற்று வருகிறது.  அந்த வகையில் தமிழக சட்டசபைக் கூட்டத் தொடரின் கடைசி நாளான இன்று சட்டசபையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.

அப்போது, காலனி’ என்ற சொல் அரசு ஆவணத்தில் இருந்து நீக்கப்படும். ஆதிக்கம், தீண்டாமையின் அடையாளமாக உள்ள காலனி என்ற சொல் பொதுவழக்கத்தில் இருந்தும் நீக்கப்படும். ‘காலனி’ என்ற சொல்லை நீக்க வேண்டும் என VCK எம்.எல்.ஏ. சிந்தனை செல்வம் கோரிக்கை வைத்திருந்த நிலையில், ஆதி குடிகளை இழிவுபடுத்தும் ‘காலனி’ என்ற சொல் அரசு ஆவணங்களில் இருந்தும், பொதுப்புழக்கத்தில் இருந்தும் நீக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு: செப்டம்பர் 6-ந் தேதி காவலர் நாளாக கொண்டாடப்படும்

தமிழ்நாட்டின் அமைதிக்கு காவல்துறைதான் காரணம். அவர்களுக்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம். ஆகையால் அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாக ஆண்டுதோறும் செப்டம்பர் 6-ந் தேதி காவலர் நாள் கொண்டாடப்படும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

தமிழக சட்டசபைக் கூட்டத் தொடர் கடந்த மாதம் 14-ந்தேதி தொடங்கியது. அன்றைய தினம் பட்ஜெட்டும், அதற்கு மறுநாள் வேளாண் பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட்டது. அதன் பிறகு இரு பட்ஜெட் மீதான விவாதம் 5 நாட்கள் நடைபெற்றது. இதன் தொடர்ச்சியாக மார்ச் 24-ந் தேதி முதல் சட்டசபைக் கூட்டம் தொடர்ந்து நடந்து வருகிறது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு துறை மானியக் கோரிக்கை தாக்கல் செய்யப் பட்டு அதன் மீது விவாதமும் அமைச்சர்களின் பதிலுரையும் நடைபெற்று வருகிறது.

அந்த வகையில் தமிழக சட்டசபைக் கூட்டத் தொடரின் கடைசி நாளான இன்று காவல் துறை, தீயணைப்பு மீட்பு பணிகள் துறைக்கான மானியக் கோரிக்கைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்து இருந்தார். தமிழக சட்டசபையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது, பல்வேறு தடைகளையும் தாண்டிதான் திராவிட மாடல் ஆட்சி சாதித்து வருகிறது. சட்டம் ஒழுங்கு சீர்குலைய இது மணிப்பூரும் அல்ல, காஷ்மீரும் அல்ல.

தமிழ்நாட்டின் அமைதிக்கு காவல்துறைதான் காரணம். அவர்களுக்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம். குற்றச்சம்பவங்களுக்கு உடனடியாக தடுப்பு நடவடிக்கை எடுக்கப்படுவதால் அமைதி நிலவுகிறது. குடியிருப்புகளை சுற்றி சந்தேக நடமாட்டம் இருந்தால் காவல்துறையினருக்கு தகவல் கூறுங்கள். ஆண்டுதோறும் செப்டம்பர் 6-ந் தேதி காவலர் நாள் கொண்டாடப்படும்.

காவலர் நாள் கொண்டாடப்படும் தினத்தில் சிறந்த காவலர்களுக்கு பதக்கம் வழங்கப்படும். அங்கீகரிக்கப்பட்ட அனைத்து மருத்துவமனைகளிலும் காவலர்களுக்கு மருத்து பரிசோதனை செய்துகொள்ள வழிவகை செய்யப்படும். காவல்துறை சிறப்பாக செயல்பட்டால் மட்டும் போதாது, ஒட்டுமொத்த சமூகமும் பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும். குற்றம் நடந்த உடன் காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கும் நபர்களை பாராட்டுகிறேன் என மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.

மு.க. ஸ்டாலின் பதிலடி: பொல்லாத ஆட்சிக்கு பொள்ளாச்சியும்..! துயரங்களுக்கு தூத்துக்குடி சாட்சி..!

அதிமுக ஆட்சியின் பொல்லாத ஆட்சிக்கு பொள்ளாச்சியே சாட்சி. “அவமான ஆட்சிக்கும், துயரமான ஆட்சிக்கும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். தமிழக சட்டசபைக் கூட்டத் தொடர் கடந்த மாதம் 14-ந்தேதி தொடங்கியது. அன்றைய தினம் பட்ஜெட்டும், அதற்கு மறுநாள் வேளாண் பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட்டது. அதன் பிறகு இரு பட்ஜெட் மீதான விவாதம் 5 நாட்கள் நடைபெற்றது.

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு துறை மானியக் கோரிக்கை தாக்கல் செய்யப் பட்டு அதன் மீது விவாதமும் அமைச்சர்களின் பதிலுரையும் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இன்று காவல் துறை, தீயணைப்பு மீட்பு பணிகள் துறைக்கான மானியக் கோரிக்கைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்து இருந்தார். இதன் மீது சட்டசபையில் ஒவ்வொரு கட்சி MLA-க்களும் பேசினார்கள். அவ்வப்போது குறுக்கிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்தார்.

சட்டசபையில் பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சரியில்லை. கடந்த 3 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் கொள்ளை, கொலை அதிகரித்துக்கொண்டே செல்கிறது என்று திமுக அரசு மீது குற்றம் சாட்டினார். இதற்கு பதில் அளித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், “பொத்தாம் பொதுவாக எதிர்க்கட்சித் தலைவர் குற்றம் சாட்டக்கூடாது. “அதிமுக ஆட்சியின் பொல்லாத ஆட்சிக்கு பொள்ளாச்சியே சாட்சி. “அவமான ஆட்சிக்கும், துயரமான ஆட்சிக்கும் அதிமுக ஆட்சியே சாட்சி.

துயரங்களை கொடுக்கக்கூடிய ஆட்சிக்கு தூத்துக்குடி துப்பாக்கிச்சூடே சாட்சி.  இந்த ஆட்சியை பற்றி குறை சொல்வது இந்த ஆண்டின் சிறந்த நகைச்சுவை. தமிழ்நாட்டை புலம்ப வைத்ததுதான் அதிமுக ஆட்சியுடைய சாதனை திமுக ஆட்சியில் கொலை, கொள்ளைகள் குறைந்துள்ளது. 3,643 ரவுடிகள் சிறையில் குறைக்கப்பட்டுள்ளது.  திமுக ஆட்சி குறித்து பேச அதிமுகவிற்கு எந்த விதமான தகுதியும் இல்லை என  மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

பஹல்காம் தாக்குதலில் பலியான சுற்றுலாப் பயணிகளுக்கு தமிழக சட்டப்பேரவையில் மவுன அஞ்சலி..!

ஜம்மு காஷ்மீர் மாநிலத்திலுள்ள பஹல்காமில் அப்பாவி சுற்றுலாப் பயணிகள் மீது நடத்தப்பட்ட மனிதாபிமானமற்ற, பயங்கரவாத தாக்குதலுக்கு.தமிழக சட்டப்பேரவையில் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. தமிழக சட்டப்பேரவையில் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசுகையில், ஜம்மு -காஷ்மீர் மாநிலத்திலுள்ள பஹல்காமில் அப்பாவி சுற்றுலாப் பயணிகள் மீது நேற்று நடத்தப்பட்டுள்ள மனிதாபிமானமற்ற, பயங்கரவாத தாக்குதலுக்குக் கடும் கண்டனத்தையும், அதில் உயிரிழந்த அனைவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் இப்பேரவையின் வாயிலாகத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஜம்மு காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் உள்ள சுற்றுலா தலத்தில் நேற்றைய தினம் பயங்கரவாதிகள் மிகக் கொடூரமான ஒரு தாக்குதலை நடத்தி இருக்கிறார்கள். இதில் இதுவரை 26 சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்ட தகவல் நமக்கெல்லாம் கடும் அதிர்ச்சியையும் துயரத்தையும் அளித்துள்ளது. காஷ்மீர் மாநிலத்தின் மிகப் பிரபலமான சுற்றுலாத் தலமான பஹல்காமுக்கு இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து மட்டுமல்ல; உலகின் பல்வேறு நாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருகின்றார்கள்.

நேற்றைய தினம் அங்கு பைசாரன் என்ற மலைப்பகுதியில் இருந்து திடீரென நுழைந்த தீவிரவாதிகள் சுற்றுலாப் பயணிகள் மீது இரக்கமற்ற வகையில் கொடூரமான தாக்குதலை நடத்தி இருக்கிறார்கள். அப்பாவி மக்கள் மீது நடத்தப்படும் இதுபோன்ற பயங்கரவாத தாக்குதல் கடுமையாக கண்டிக்கத்தக்கதாகும். சமீபத்திய ஆண்டுகளில் பொதுமக்கள் மீது நடத்தப்பட்ட மிகப்பெரிய தாக்குதல் என்று அம்மாநில முதலமைச்சர் உமர் அப்துல்லா குறிப்பிட்டுள்ளார்.

இந்தத் தாக்குதலுக்கு பயங்கரவாத அமைப்பு ஒன்று பொறுப்பேற்றுள்ளது. அங்கு எத்தகைய மோசமான, கொடூரமான, பயங்கரமான சூழல் நிலவுகிறது என்பதற்கு இது எடுத்துக்காட்டு ஆகும். பயங்கரவாத – தீவிரவாத அமைப்புகள் எத்தகைய எண்ணம் கொண்டவையாக இருந்தாலும் அவற்றை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்.இந்தத் தாக்குதலில் இதுவரை மொத்தம் 26 பேர் கொல்லப்பட்டுள்ளதாகத் தகவல் கிடைத்துள்ளது.

இந்தத் தாக்குதலில் தமிழ்நாட்டைச் சேர்ந்த சிலரும் பாதிக்கப் பட்டுள்ளனர் என்ற தகவல் எனக்குக் கிடைத்தவுடன் உடனடியாக டெல்லியிலுள்ள தமிழ்நாடு இல்லத்தில் 24 மணி நேரமும் செயல்படும் சிறப்பு உதவி மையம் தொடங்குவதற்கு உத்தரவிட்டேன். இச்சம்பவம் குறித்து பொது மக்கள் தொடர்பு கொண்டு விவரங்கள் அறிய உதவி மையம் தொடங்கப்பட்டு, 011-24193300 (Landline), 9289516712 (Mobile Number with Whatsapp) என்ற எண்ணில் தொடர்பு கொள்ள வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

மேலும், டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்ல உறைவிட ஆணையரை இது தொடர்பான அனைத்து நடவடிக்கைகளையும் ஒருங்கிணைந்து செயல்பட உத்தரவிட்டேன். காஷ்மீர் மாநில அரசுடன் இணைந்து பணியாற்றி, இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களுக்கு உரிய உதவியைச் செய்யுமாறு உத்தரவிட்டு இருக்கிறேன். புதுக்கோட்டை மாவட்டத்தில் பணியாற்றி வரும் கூடுதல் ஆட்சியரர் அப்தாப் ரசூலை நேரடியாக ஜம்மு காஷ்மீர் அனந்தநாக் மாவட்டம் பஹல்காம் பகுதிக்குச் சென்று ஒருங்கிணைப்புப் பணிகளை உடனடியாக மேற்கொள்ளவும் தேவையான மருத்துவ வசதிகளை வழங்கவும் அறிவுறுத்தியுள்ளேன்.

இந்தத் தாக்குதலில் பாதிக்கப்பட்ட தமிழ்நாட்டைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் அனைவருக்கும் தேவையான சிகிச்சைகள் வழங்கப்படுவதை உறுதி செய்து பத்திரமாக அழைத்து வர தமிழக அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. காஷ்மீரில் நடந்துள்ள இந்தத் தாக்குதல் நம் அனைவரது மனச்சாட்சியையும் உலுக்குவதாக அமைந்துள்ளது. 2017-ஆ ம் ஆண்டு குல்காமில் அமர்நாத் பயணம் சென்ற மக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 8 பேர் கொல்லப்பட்டார்கள். 2019-ஆம் ஆண்டு புல்வாமா தாக்குதலில் 40 சிஆர்பிஎஃப் வீரர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். இதன் தொடர்ச்சியாக இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

மனிதாபிமானமற்ற வகையில் அப்பாவி மக்களின் மீதான இது போன்ற தீவிரவாதத் தாக்குதலுக்கு இந்திய மண்ணில் குறிப்பாக, நமது இந்திய ஜனநாயகத்தில் அறவே இடமில்லை. இதனைக் கண்டிப்பதோடு நமது கடமை முடிந்துவிடவில்லை. இது போன்ற செயல்கள் நடப்பதை அறவே தடுத்தாக வேண்டும். கொடூரமாகக் கொல்லப்பட்ட அப்பாவி மக்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக அனைவரும் எழுந்து இரண்டு நிமிட மவுன அஞ்சலியைச் செலுத்த கோருகிறேன் என மு.க. ஸ்டாலின் தெரிவித்தார்.

முதலமைச்சரின் வேண்டுகோளுக்கிணங்க, உறுப்பினர்கள் அனைவரும் இரண்டு நிமிடம் எழுந்து நின்று அஞ்சலி செலுத்தினர். பின்னர் அனைத்துக் கட்சியின் சார்பில் உறுப்பினர்கள் தங்களது ஆழ்ந்த இரங்கலையும், கண்டனங்களையும் தெரிவித்து உரையாற்றினர். அதன் பின்னர் மீண்டும் பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், “காஷ்மீரில் நடைபெற்ற துயர சம்பவம் குறித்து இந்த அவையில் இருக்கக்கூடிய அனைத்துக் கட்சித் தலைவர்களும், உறுப்பினர்களும் தங்களுடைய வருத்தத்தையும், கண்டனத்தையும் தெரிவித்து இருக்கிறார்கள்.

நமது நாட்டையே பெரும் துயரத்தில் ஆழ்த்தி இருக்கக்கூடிய இந்தக் கொடூரமான சம்பவத்திலே பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நமது அனுதாபங்களைத் தெரிவிப்பதோடு, இதுபோன்ற நிகழ்வுகள் எதிர்காலத்தில் நிகழாமல் தடுத்திட மத்திய அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்திட வேண்டுமென்று இந்த அவையின் மூலமாக நான் கேட்டுக் கொள்கிறேன். அத்தகைய அனைத்து நடவடிக்கைகளை எடுக்கிற நேரத்தில் தமிழ்நாடும், தமிழ் மக்களும் என்றும் துணை நிற்பார்கள் என்று உறுதியை உங்கள் அனைவரின் சார்பிலும் நான் தெரிவித்துக் கொள்கிறேன்.” என மு.க. ஸ்டாலின் தெரிவித்தார்.