உதயநிதி ஸ்டாலினுக்கு அலிசா அப்துல்லா சவால்..!

என்னால் தமிழ்த்தாய் வாழ்த்தை பிழையில்லாமல் பாட முடியும். திமுகவின் இளைஞர் அணி தலைவர் உதயநிதி ஸ்டாலினால் பாட முடியுமா ? என்று பாஜக தமிழ்நாடு விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவு செயலாளரான அலிஷா அப்துல்லா கேள்வி எழுப்பியுள்ளார்.

பிஎம்ஸ்ரீ திட்டத்தை ஏற்காத காரணத்தால் மத்திய அரசு, தமிழ்நாட்டிற்கான ஒருங்கிணைந்த பள்ளி கல்வித்திட்ட நிதியை விடுவிக்க இயலாது என்று அறிவித்துவிட்டது. இந்த விவகாரத்தில் பாஜகவிற்கும், திமுகவிற்கும் சமூக வலைதளங்களில் கடந்த மூன்று நாட்களாக கடுமையான மோதல் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் பாஜக தமிழ்நாடு விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவு செயலாளரான அலிஷா அப்துல்லா தனது எக்ஸ் பக்கத்தில், “எங்கள் வீட்டில் நாங்கள் பயன்படுத்தும் மொழி உருது.

நான் ஆங்கில வழி கல்வியில் தான் படித்தேன். என்னுடைய ரேஸிங் துறையில் சிறந்து விளங்கிய இஸ்லாமிய பெண் என்பதால். நான் பாஜகவில் இணைந்தது பலருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அரசியல் புரிதல் இல்லாமல் நல்லது செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் பாஜகவில் இணைந்தேன். நான் பாஜகவில் இணைந்த ஒரே காரணத்திற்காக திமுக ஊடகங்கள் என்னை போட்டி போட்டுக் கொண்டு நேர்காணல் எடுத்தனர். அதன் சூழ்ச்சியும் திமுகவின் அரசியலும் எனக்கு அப்போது தெரியவில்லை. என்னை பாஜகவில் இருந்து வெளியேற்ற திமுக சார்பில் இருந்து என்னுடைய தொழில் என் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் பல அழுத்தங்களை கொடுத்துள்ளனர்.

ஒரு படி மேல் சென்று நீங்கள் திமுகவில் இணையுங்கள் உங்களுக்கு பெரிய பொறுப்பு கொடுக்கிறோம் என்றும் கூறினார்கள். எனக்கு இந்த அளவுக்கு முக்கியத்துவம் கொடுப்பதற்கான காரணம் என்னவென்றால் நான் ஒரு இஸ்லாமிய பெண். இஸ்லாமியர்களுடைய வாக்கு ஒன்று கூட பாஜக பக்கம் போக கூடாது என்பதில் திமுக உறுதியாக இருக்கிறார்கள்.

நான் மறுபடியும் சொல்கிறேன் நான் தமிழ் பாரம்பரிய குடும்பம் கிடையாது தமிழகத்தில் பிறந்து உருது மொழியை பேசும் இஸ்லாமிய குடும்பத்தை சேர்ந்தவள். பாரம்பரிய தமிழ் குடும்பத்தை சேர்ந்த உதயநிதிக்கு ஒரு சவால். இன்று என்னால் தமிழ்த்தாய் வாழ்த்தை பிழையில்லாமல் பாட முடியும்.திமுகவின் இளைஞர் அணி தலைவர் உதயநிதி ஸ்டாலினால் பாட முடியுமா ?” என அலிஷா அப்துல்லா எக்ஸ் பக்கத்தில்  பதிவிட்டுள்ளார்.

அன்பில் மகேஷ் பொய்யாமொழி: 3-வது மொழி மாணவர்களுக்கு பெரும் சுமை.. 56 மொழிகளை இந்தி அழித்துள்ளது .. !

ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டிற்கு அளிக்கப்பட வேண்டிய ரூ.2,151 கோடி கல்வி நிதியை விடுவிக்கக் கோரி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி இருந்தார். இந்த நிலையில் புதிய கல்விக் கொள்கை விவகாரத்தில் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பதில் கடிதம் எழுதி இருக்கிறார்.

அந்த கடிதத்தில், பாஜக ஆளாத மாநிலங்களிலும் தேசியக் கல்வி கொள்கை ஏற்கப்பட்டுள்ளது. அதனால் தமிழ்நாடும் ஏற்றுக் கொள்ள வேண்டும். தேசிய கல்விக் கொள்கையை ஏற்று பிஎம் ஸ்ரீ திட்டத்தை செயல்படுத்தாத காரணத்தால் தமிழ்நாடு ரூ.5 ஆயிரம் கோடி நிதியை இழக்கிறது. இந்திய கல்வி திட்டத்தின் முதுகெலும்பாக மும்மொழிக் கொள்கை உள்ளது என்று தெரிவித்திருந்தார். மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானின் கருத்துக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பதில் அளித்துள்ளார்.

அதில், தமிழ்நாடு ஏற்கனவே தரமான கல்வியை கொடுக்கிறது. பிஎம்ஸ்ரீ மூலம் கல்வித் தரத்தை உயர்த்த போகிறீர்கள் என்றால், அப்படி அந்த திட்டத்தில் என்ன மாற்றம் செய்ய போகிறீர்கள்? புதிய கல்விக் கொள்கையை பிஎம்ஸ்ரீ மூலம் கொண்டு வருவதை ஏற்கனவே அறிந்து கொண்டுவிட்டோம். மும்மொழிக் கொள்கை, 3, 5 மற்றும் 8 ஆகிய வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு போல் ஒன்றை கொண்டு வருவது என்று திட்டமிட்டு இருக்கிறார்கள்.

இது அதிகளவில் மாணவர்களின் இடைநிற்றலை அதிகரிக்கும். ஆட்சி மாற்றம் ஏற்பட்ட போது மாணவர்கள் இடைநிற்றலை குறைத்திருக்கிறோம். மீண்டும் ஒரு மொழிப்போரை கொண்டு வரக்கூடாது என்ற வகையில் தமிழக அரசு கண்டனத்தை தெரிவித்து வருகிறோம். மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு உருவாக்கி உள்ளோம் என்று கூறியிருக்கிறார்.

இளைய சமுதாயத்தை மனதில் வைத்து திட்டத்தை உருவாக்கி இருந்தால், புதிதாக கட்டுப்பாடுகள் விதிக்கக் கூடாது. சாதாரணமாக அமர்ந்து கையெழுத்திடுங்கள்.. பேசிக் கொள்ளலாம் என்ற ரீதியில் வலியுறுத்தி இருக்கிறார். இருமொழிக் கொள்கையில் படித்துள்ள மாணவர்கள் அனைத்து துறைகளிலும் முன்னிலையில் இருக்கிறார்கள். மருத்துவர்கள், தொழில்நுட்பம், இஸ்ரோ, ஐடி என்று பல்வேறு துறைகளிலும் இருமொழிக் கொள்கையின் கீழ் படித்தவர்களே முதன்மையாக இருக்கிறார்கள்.

தேசிய கல்விக் கொள்கை குறித்து யாரிடமும் கருத்து கேட்கவில்லை. தூண்டிலை போட்டுவிட்டு மீன் சிக்காதா என்ற ரீதியில் மத்திய அரசு செயல்படுகிறது. தமிழின் பெருமையை நீங்கள் சொல்லி அறிய வேண்டியதில்லை. தமிழ்நாட்டில் மும்மொழிக் கொள்கையை ஏற்க மாட்டோம். மும்மொழிக் கொள்கை மாணவர்களிடையே அறிவாற்றல் சுமையை உருவாக்கும். இந்தி இல்லாமல் 3-வது வேறு மொழியை பயிற்றுவிக்க போதிய ஆசிரியர்கள் இல்லை.

பாடத்திட்டத்திற்கு வெளியே இந்தி மொழியை கற்றுக்கொள்ள ஊக்குவிக்கத்தான் செய்கிறோம். கட்டாயம் என்று சொல்லி ஒரு மொழியை கொண்டு வரும் போதுதான், தேவையில்லாத மன அழுத்தத்தை மாணவர்களுக்கு கொடுக்கும். மும்மொழி கொள்கை மாணவர்களின் கால்களில் சங்கிலியை போட்டு இழுப்பதை போன்றதாகும். இந்தியாவில் 56 மொழிகள் இந்தி மொழியால் விழுங்கப்பட்டுள்ளது.

மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானின் சொந்த மொழியாக ஒரியா மொழி உட்பட 56 மொழிகள் முழுமையாக இந்தி திணிப்பால் அழிக்கப்பட்டுள்ளது. அதுபோன்ற நிலை தமிழுக்கும் வந்துவிடக் கூடாது. தமிழ்நாடு மாடலை பின்பற்ற வேண்டும் என்று சொல்வதற்கு பதிலாக, நாங்கள் சொல்வதை நீங்கள் கேளுங்கள் என்ற சொல்லைதான் எதிர்க்கிறோம் என அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

பிரகாஷ் ராஜ் ‛Get Out Modi’.. ஏன்யா இந்தி பேச சொல்லி கட்டாயப்படுத்துறீங்க..!

உங்களுக்கு இந்தி தெரியும்.. நீங்க இந்தியில் பேசுறீங்க.. எங்களையும் இந்தியில் பேச சொல்லி கட்டாய படுத்துகிறீங்க. ஏன்னா உங்களுக்கு இந்தி மட்டும் தான் தெரியும் இந்த அபத்தமான விளையாட்டு எங்களிடம் செல்லாது என்று நடிகர் பிரகாஷ் ராஜ் தமிழில் பதிவிட்டு மத்திய அரசை விமர்சனம் செய்துள்ளார்.

மத்திய அரசின் ஒருங்கிணைந்த கல்வி திட்டத்தில் சமக்ர சிக்ஷா அபியான் திட்டத்தின் கீழ் தமிழகத்துக்கு தர வேண்டிய ரூ.2,152 கோடியை மத்திய அரசு நிதி ஒதுக்கவில்லை. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உள்பட அமைச்சர் அன்பில் மகேஷ் கேட்டும் மத்திய அரசு வழங்காமல் உள்ளது. தேசிய கல்வி கொள்கையின்படி மும்மொழி கொள்கையை அமல்படுத்தினால் மட்டுமே அந்த நிதி விடுவிக்கப்படும். இல்லாவிட்டால் தமிழகத்துக்கான ரூ.2,152 கோடி நிதி விடுவிக்கப்படாது என்று மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெளிவாக கூறிவிட்டார்.

இந்த விஷயத்தில் தமிழக அரசுக்கும், மத்திய அரசுக்கும் இடையே கடும் மோதல் போக்கு உள்ளது. இதற்கிடையே கரூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, ‛‛நேற்று முன்தினம் உதயநிதி ஸ்டாலின் சொல்கிறார்.. பிரதமர் மோடி மட்டும் தமிழ்நாட்டிற்கு வந்தார் என்றால், நாங்கள் முதலில் கோ பேக் மோடி என்று சொன்னோம்.. நாங்கள் இனி கெட் அவுட் மோடி என்று சொல்வோம் என்று உதயநிதி சொல்கிறார்.. உதயநிதி ஸ்டாலினுக்கு நான் சொல்கிறேன்.. நீ சரியான ஆளாக இருந்தால்.. உன் வாயில் இருந்து கெட் அவுட் மோடின்னு சொல்லிப்பாரு..” என்று சவால் விட்டார்.

இதையடுத்து எக்ஸ் பக்கத்தில், ‛GetOutModi’ என்ற ஹேஷ்டேக்கை நேற்று திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் எக்ஸ் பக்கத்தில் டிரெண்ட் செய்தனர். அதோடு பிரதமர் மோடி, மத்திய அரசு மற்றும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு எதிராக அந்த ஹேஷ்டேக்கில் அவர்கள் பதிவுகளை வெளியிட்டனர்.

இந்நிலையில் தான் தமிழக அரசுக்கு ஆதரவாக நடிகர் பிரகாஷ் ராஜ் தனது எக்ஸ் பக்கத்தில், ‛‛உங்களுக்கு இந்தி தெரியும்.. நீங்க இந்தியில் பேசுறீங்க.. எங்களையும் இந்தியில் பேச சொல்லி கட்டாய படுத்துகிறீங்க. ஏன்னா உங்களுக்கு இந்தி மட்டும் தான் தெரியும்.. இந்த அபத்தமான விளையாட்டு எங்களிடம் செல்லாது..” என பிரகாஷ் ராஜ் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

மா.சுப்பிரமணியன்: அண்ணாமலையை பார்த்து உலகமே சிரிக்குது ..!

செருப்பில்லாமல் நடப்பேன் என்று சொல்லிவிட்டு, தற்போது ஷூ அணிந்து வலம் வருவது , தன்னைத்தானே சாட்டையால் அடித்து கொள்வது உள்ளிட்ட செயல்களால் உலகமே அவரை கண்டு எள்ளி நகையாடுகிறது என அமைச்சார் மா.சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார். முதலமைச்சர், துணை முதலமைச்சரை ஒருமையில் பேசுவது அநாகரீகத்தின் உச்சம் என்று தெரிவித்துள்ள அவர், அண்ணாமலையின் கேலி கூத்து நடவடிக்கைகள் அளவில்லாமல் சென்று கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளார்.

மத்திய அரசின் 2025 பட்ஜெட் விளக்க பொதுக் கூட்டம் கரூரில் நடைபெற்றது. இந்த பட்ஜெட் விளக்க பொதுக் கூட்டத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு பேசினார். அப்போது, தற்குறிகள் திமுகவின் உதயநிதி, அன்பில் மகேஷ் போன்ற தற்குறிகளை போல் அதே பாணியில் நான் பேச போகிறேன். நீ சூரியனை 11.30 மணிக்கு பார்க்கிறவன், நாங்கள் அதிகாலை 3 மணிக்கு பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்து குளித்துவிட்டு 5 மணிக்கு கோப்புகளை எடுத்து பார்ப்பவர்கள். பிரதமர் மோடியை பார்த்து குற்றம்சாட்டுகிறார்கள். உதயநிதி ஸ்டாலின் சொல்கிறார்..

பிரதமர் மோடி முன்பு தமிழ்நாடு வந்தால், நாங்கள் கோ பேக் மோடி என்றோம். இனி கெட் அவுட் மோடி என்று சொல்வோம் என்கிறார்.. உதயநிதி ஸ்டாலினுக்கு நான் சொல்கிறேன்.. நீ சரியான ஆளாக இருந்தால்.. உன் வாயில் இருந்து கெட் அவுட் மோடினு சொல்லிப் பாரு.. எங்க அப்பா முதலமைச்சர்.. எங்க தாத்தா முதலமைச்சர்னு சொல்லி பாரு.. பார்க்கலாம் என தெரிவித்து இருந்தார்.

அண்ணாமலை பேசிய வீடியோ ட்ரெண்டான நிலையில், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார். அதில், என்னை ஒருமையில் அண்ணாமலை பேசியிருக்கிறார். அவர்களது தரம் அதுதான். என் வீட்டில் போஸ்டர் ஒட்டுவதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியிருந்தார். ஏற்கெனவே அண்ணா அறிவாலயத்தை ஏதோ செய்வதாக தெரிவித்திருந்தார். தைரியமிருந்தால் அண்ணாமலையை அண்ணா சாலை பக்கம் வரச் சொல்லுங்கள். உதயநிதி, அண்ணாமலையின் தனிப்பட்ட பிரச்சினை இல்லை. கல்வி நிதி தொடர்பானது. நிதியை பெற்றுத் தர துப்பில்லாதவர்கள் பேசுகிறார்கள்.

தமிழகத்தின் நிதி உரிமையை திசை திருப்பவே இப்படி செய்கிறார்கள். தனியார் பள்ளி தனியார் பள்ளிகளை யாராவது சட்டவிரோதமாக நடத்துகிறார்களா என்ன? மத்திய அரசிடம் போதிய அனுமதியை பெற்றுத்தானே நடத்துகிறார்கள். தனியார் பள்ளிகளில் யாராவது இலவச உணவையோ இலவச சீருடையையோ தருகிறார்களா என்ன? தனியார் பள்ளிகளில் இந்தி தனியார் பள்ளியில் இந்தி கற்றுக் கொடுக்கிறார்கள் என மும்மொழிக் கொள்கையுடன் தொடர்புபடுத்த வேண்டாம். மும்மொழி கொள்கை என்பது அரசுப் பள்ளியோடு தொடர்புடையது.

இதனைத் தொடர்ந்து திமுகவினர் தரப்பில் அண்ணாமலைக்கு பதிலடி கொடுக்கப்பட்டு வருகிறது. சோசியல் மீடியா தொடங்கி அனைத்திலும் திமுகவினர் அண்ணாமலையை கடுமையாக சாடி வருகின்றனர். இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசுகையில், முதலமைச்சர், துணை முதலமைச்சரை ஒருமையில் பேசுவது அநாகரீகத்தின் உச்சம். திராவிட மாடல், முதலமைச்சர், துணை முதலமைச்சர் பற்றி பேசுவதற்கு அண்ணாமலைக்கு எந்தவித அருகதையும் இல்லை. நீட் தேர்வு, புதிய கல்விக் கொள்கை, இந்தி திணிப்பு உள்ளிட்ட மாநில உரிமைகளுக்கு எதிராக செயல்படுவது என்று அனைத்திலும் தமிழக மக்கள் விரோத அரசியல் செய்யும் அண்ணாமலை தொடர்ந்து செய்யும் கேலிக்கூத்து நடவடிக்கைகளுக்கு அளவில்லாமல் போகிறது.

திடீரென செருப்பில்லாமல் நடப்பேன் என்று சொல்லிவிட்டு, தற்போது ஷூ அணிந்து வலம் வருவது , தன்னைத்தானே சாட்டையால் அடித்து கொள்வது உள்ளிட்ட செயல்களால் உலகமே அவரை கண்டு எள்ளி நகையாடுகிறது. அமைச்சர்கள் பதவிகளில் இருப்பவர்களை தற்குறி என்று சொல்லும் அளவிற்கு தற்குறித்தனமாக செயல்படும் அண்ணாமலை கண்ணாடி முன் நின்றால், அவரின் தற்குறித்தனங்கள் வரிசைக் கட்டி நிற்கும்.

மேலும், விஜய்யை தொடர்ந்து திருமா மீது அண்ணாமலை அட்டாக்” அநாகரீகமானவர் என்பதை இடைவெளி இல்லாமல் தொடர்ந்து நிரூபித்து கொண்டிருக்கும் அண்ணாமலை, ஒவ்வொரு நாளும் தமிழ்நாட்டு மக்களிடம் அம்பலப்பட்டு கொண்டே இருக்கிறார் என்பது நிதர்சனம். எதையும் சகித்து கொள்ள முடியாத ஒரு அரைவேக்காடு என மா.சுப்பிரமணியம் தெரிவித்தார்.

அண்ணாமலை சவால்: தற்குறிகள் உதயநிதிக்கு தைரியம் இருந்தால் கெட் அவுட் மோடி என சொல்லட்டும் பார்ப்போம் ..!!

தற்குறிகள் உதயநிதிக்கு தைரியம் இருந்தால் கெட் அவுட் மோடி கெட் அவுட் மோடி என சொல்லட்டுமே! உலகத் தலைவரை மதிக்கத் தெரியாத நபராக உதயநிதி இருக்கிறார் என அண்ணாமலை தெரிவித்தார். மத்திய அரசின் 2025 பட்ஜெட் விளக்க பொதுக் கூட்டம் கரூரில் நடைபெற்றது. இந்த பட்ஜெட் விளக்க பொதுக் கூட்டத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு பேசினார்.

அப்போது, சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது. எப்போதும் இல்லாத அளவுக்கு இந்த முறை மக்கள் தெளிவாக இருக்கிறார்கள். தீயசக்தி திமுகவை வேரோடு அகற்ற வேண்டும் என்ற முடிவில் மக்கள் இருக்கிறார்கள். கள்ளை குடித்த குரங்கு திமுகவின் ஆட்சி எப்படி இருக்கிறது என்றால் ஒரு பானையில் இருந்த கள்ளை குரங்கு குடித்து விடுகிறது. இதனால் தடுமாடிக் கொண்டிருந்த போது அதனை தேள் கொட்டி விடுகிறது. கள்ளை குடித்த குரங்கை தேள் கடித்துவிட்டால் அந்த குரங்கு எப்படி நடந்து கொள்ளுமோ அப்படித்தான் திமுக ஆட்சி இருக்கிறது.

தற்குறிகள் திமுகவின் உதயநிதி, அன்பில் மகேஷ் போன்ற தற்குறிகளை போல் அதே பாணியில் நான் பேச போகிறேன். நீ சூரியனை 11.30 மணிக்கு பார்க்கிறவன், நாங்கள் அதிகாலை 3 மணிக்கு பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்து குளித்துவிட்டு 5 மணிக்கு கோப்புகளை எடுத்து பார்ப்பவர்கள். பிரதமர் மோடியை பார்த்து குற்றம்சாட்டுகிறார்கள். உதயநிதி ஸ்டாலின் சொல்கிறார்..

பிரதமர் மோடி முன்பு தமிழ்நாடு வந்தால், நாங்கள் கோ பேக் மோடி என்றோம். இனி கெட் அவுட் மோடி என்று சொல்வோம் என்கிறார்.. உதயநிதி ஸ்டாலினுக்கு நான் சொல்கிறேன்.. நீ சரியான ஆளாக இருந்தால்.. உன் வாயில் இருந்து கெட் அவுட் மோடினு சொல்லிப் பாரு.. எங்க அப்பா முதலமைச்சர்.. எங்க தாத்தா முதலமைச்சர்னு சொல்லி பாரு.. பார்க்கலாம் என தெரிவித்தார்.

இதுவரையில் எந்த மேடையிலும் நான் யாரையும் அவமரியாதையாக பேசியதே இல்லை. ஆங்கிலத்தில் பேசிய மோடி 2026 -ஆம் ஆண்டு தமிழக சட்டசபை தேர்தலில் மீண்டும் திமுக வென்று ஆட்சி அமைத்தால் பஞ்சம் பிழைப்பதற்காக நாம் எல்லாரும் மாநிலத்தை விட்டு வெளியே செல்ல வேண்டிய நிலை ஏற்படும். பிரதமர் மோடி இந்தியை எங்கே திணிக்கிறார், தமிழகத்திற்கு அவர் வந்தால் ஆங்கிலத்தில்தான் பேசுகிறார்.

விஜய் வித்யாஸ்ரம் பள்ளி உங்கள் குழந்தையின் எதிர்காலத்திற்கு மூன்று மொழிகளை படிக்க வையுங்கள் என்பதைத்தான் மோடி சொல்கிறார். அவர் இந்தியை திணிக்கவில்லை. அன்பில் மகன் பிரெஞ்ச் படிக்கிறார். நடிகர் விஜய், படூரில் சொந்தமாக விஜய் வித்யாஸ்ரம் நடத்தி வருகிறார் என அண்ணாமலை தெரிவித்தார்.

மத்திய அரசு வேலை வாங்கித்தருவதாக பல லட்சம் மோசடி.. பாஜக பிரமுகர் மனைவியுடன் தலைமறைவு..!

விளையாட்டுத்துறை ஒதுக்கீட்டில் மத்திய அரசு வேலை வாங்கித்தருவதாக பல லட்சம் வசூல் செய்து மோசடி செய்த பாஜக பிரமுகர் ஜெயராம் என்பவர் மனைவியுடன் தலைமறைவான நிலையில், காவல்துறையினர் தேடி வருகின்றனர். வேலூர் மாவட்டத்தை சேர்ந்த 32 வயதான லோகேஷ்குமார் என்பவர் முதுகலை பட்டதாரி விளையாட்டில் ஆர்வம் கொண்ட லோகேஷ்குமார், மாநில, மத்திய அரசின் விளையாட்டு துறைக்கான ஒதுக்கீட்டில் அரசு வேலை பெற விரும்பியுள்ளார். அதற்காக கடந்த 2022-ஆம் ஆண்டு ஆன்லைன் மூலம் ‘யங் ஸ்போர்ட்ஸ் ஆப் இந்தியா’ என்ற நிறுவனத்தை தொடர்பு கொண்டார்.

அப்போது பேசிய யங் ஸ்போர்ட்ஸ் ஆப் இந்தியா நிறுவனத்தின் உரிமையாளர் ஜெயராம் என்பவர், சென்னை பம்மலை அடுத்த பொழிச்சலூர் பாலாஜி நகரில் தனக்கு அலுவலகம் இருப்பதாகவும் அங்கு நேரில் வந்து விவரத்தை கேட்டு தெரிந்துக் கொள்ளுமாறு கூறினார். இதை உண்மை என்று நம்பிய லோகேஷ்குமார் அந்த அலுவலகத்திற்கு நேரில் சென்றபோது, அங்கு பணியில் இருந்த பெண் ஊழியர் விவரங்களை கூறியுள்ளார்.

பின்னர் லோகேஷ்குமார் அந்த நிறுவனத்தில் இணைந்து சிலம்பம் கற்று சான்றிதழும் பெற்றுள்ளார் அந்த சமயத்தில், தான் செங்கல்பட்டு வடக்கு மாவட்ட விளையாட்டு பிரிவு துணை தலைவர் பொறுப்பில் உள்ளதாக கூறிய ஜெயராம், தனக்கு தெரிந்த மத்திய அமைச்சர்கள் இருப்பதாகவும் லோகேஷ் குமாரிடம் கூறியுள்ளார். அவர்கள் மூலம் விளையாட்டு துறை ஒதுக்கீட்டில், மத்திய அரசு வேலை வாங்கி தருவதாகவும் ஆசை வார்த்தை கூறியுள்ளதாக தெரிகிறது.

அவரது ஆசை வார்த்தைகளை உண்மை என நம்பிய லோகேஷ்குமார், தனக்கும் வேலை வாங்கி தருமாறு கேட்டதுடன், தன்னுடைய சான்றிதழ்களை, ஜெயராமனிடம் கொடுத்துள்ளார். அப்போது மத்திய அரசு வேலை வாங்கித்தர ரூ.17 லட்சம் ரூபாய் செலவாகும் என ஜெயராம் கூறியுள்ளார். இதை நம்பிய லோகேஷ்குமார், பல தவணைகளாக வங்கி கணக்கு மூலம், 16 லட்சம் ரூபாய், செல்போன் செயலி மூலம் 1 லட்சம் ரூபாய் என, 17 லட்சம் ரூபாய் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், சொன்னபடி ஜெயராம் வேலை வாங்கி தராமல் ஏமாற்றி வந்துள்ளார்.

இதையறிந்த பின்னர் ஏமாற்றப்பட்டதாக உணர்ந்த லோகேஷ்குமார் கடந்த ஜனவரி மாதம், தாம்பரம் காவல் ஆணையரிடம் புகார் அளித்தார். அப்புகாரை சங்கர் நகர் காவல் நிலையத்திற்கு மாற்றம் செய்யப்பட்டு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த தாம்பரம் மாநகரா காவல் துறை துணை கமிஷனர் பவன் குமார் ரெட்டி உத்தரவிட்டார். இதனைத்தொடர்ந்து சங்கர் நகர் காவல்துறை ஜெயராம், அவரது மனைவி அஸ்வினி உள்ளிட்ட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி, அவர்களை தேடி வருகிறார்கள்.

பி.கே. சேகர்பாபு: எல்.முருகனின் கனவு பகல் கனவாக மாறும், தமிழ் கடவுள் முருகர் எங்களோடு தான் உள்ளார்..!

இது ராமானுஜரின் மண். ஒற்றுமைக்கு விலை மதிப்பு தர முடியாத மண், எல்.முருகனின் கனவு பகல் கனவாக மாறும், தமிழ் கடவுள் முருகர் எங்களோடு தான் உள்ளார் தமிழ்நாடு முதலமைச்சர்ரோடு உறுதியாக உள்ளார் என பி.கே. சேகர்பாபு தெரிவித்தார். சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மும்மொழிக் கொள்கைக்கு எதிராக ஒன்றிய அரசை கண்டித்து திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் சார்பில் இன்று மாலை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறும் இடத்தில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரும் சென்னை கிழக்கு மாவட்ட செயலாளருமான பி.கே. சேகர்பாபு ஆய்வு செய்தார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர்பாபு, திருப்பரங்குன்றம் விவகாரம் தொடர்பாக ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் பேசிய கேள்விக்கு பதில் அளிததார். அப்போது, “எல்.முருகன் பாஜக தலைவராக இருந்த பொழுது வேல் யாத்திரை நடத்தி புரட்சியை ஏற்படுத்த வேண்டும் என்று நினைத்தார். அவர் வேல் யாத்திரைக்கு பிறகு தான் தமிழ்நாட்டு மண்ணில் திராவிட மாடல் ஆட்சியை உருவாக்கி காண்பித்தார் நம்முடைய முதல்வர்.

அண்ணாமலை ஆன்மீகத்தை கையில் எடுத்து ஏதாவது ஒரு வகையில் தமிழ்நாட்டை கைப்பற்றி விடலாம் என்று காவடி கூட எடுத்துப் பார்த்தார். காலில் செருப்பு அணியாமல் நடந்து பார்த்தார். ஆனால் தமிழ்நாடு மக்கள் 40 தொகுதிகளையும் திமுகவிற்கு என்று விடை அளித்தார்கள். தமிழ் கடவுள் முருகனுக்கு பெருமை சேர்க்கின்ற ஆட்சி இந்த ஆட்சி. இந்த ஆட்சியைப் போல் வேறு எந்த ஆட்சியிலும் தமிழ் கடவுள் முருகனுக்கு பெருமை சேர்த்தது கிடையாது.

அறுபடை வீடுகளை புனரமைக்கும் பணிக்கு ரூ.817 கோடி ஒதுக்கீடு செய்து, தமிழ் கடவுள் முருகனுக்கு பெருமை சேர்த்துக் கொண்டிருக்கிறோம். திருப்பரங்குன்ற சம்பவத்தை கையில் எடுத்து அரசியலாக்க முயற்சித்துக் கொண்டிருக்கிறார்கள். இனத்தால், மொழியால், மதத்தால் தமிழ்நாட்டு மக்களை பிளவு படுத்தி பார்க்க முடியாது. மதுரை மண்ணில் மக்கள் ஒற்றுமையாக உள்ளனர். மாமன் – மச்சானாக சகோதரத்துவத்துடன் வாழ்ந்து வருகிறார்கள்.

சங்கிகள்தான் திருப்பரங்குன்ற சம்பவத்தை பெரிதாக்க நினைக்கிறார்கள். இது ராமானுஜரின் மண். ஒற்றுமைக்கு விலை மதிப்பு தர முடியாத மண், எல்.முருகனின் கனவு பகல் கனவாக மாறும், தமிழ் கடவுள் முருகர் எங்களோடு தான் உள்ளார் தமிழ்நாடு முதலமைச்சர்ரோடு உறுதியாக உள்ளார்.” என பி.கே சேகர்பாபு தெரிவித்தார்.

தமிழிசை சௌந்தரராஜன் கேள்வி: படங்களை மட்டும் 3 மொழிகளில் வெளியிடும் விஜய், மும்மொழிக் கொள்கையை எதிர்க்கலாமா..?

மூன்று மொழிகளில் படங்களை வெளியிடும் நடிகர் விஜய், மும்மொழிக் கொள்கையை எதிர்க்கக்கூடாது என பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கேள்வி எழுப்பியுள்ளார். செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், “நாங்கள் இந்தியை திணிக்கவில்லை. மூன்றாவதாக வேறு எந்த ஒரு மொழியாவது கற்றுக் கொள்ளுங்கள் என்றுதான் சொல்கிறோம். ஆனால், திமுகவினர்தான் இந்தி திணிப்பை மக்கள் மீது திணிக்கின்றனர்.

நடிகர் விஜய்யின் திரைப்படம் தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் கூட வெளியாகிறது. உங்கள் வியாபாரத்திற்கு மட்டும் மும்மொழிக் கொள்கை தேவை. ஆனால் மாணவர்கள் மூன்று மொழிகளை கற்றுக் கொள்ளக் கூடாதா? குழந்தைகளின் வருங்காலத்துக்கு பலமொழிக்கொள்கை தேவைப்படும். மும்மொழிக் கொள்கை குறித்து எல்லாம் நடிகர் விஜய் கருத்து சொல்லக்கூடாது.

அப்படி சொல்வதென்றால் தனது படங்களை தமிழில் மட்டும்தான் வெளியிடுவேன் என விஜய் முதலில் சொல்ல வேண்டும். ஒரு சாதாரண அரசாங்க பள்ளி மாணவ மாணவியர் இந்தி மட்டுமில்லாமல் தெலுங்கு அல்லது மலையாளமும் கற்றுக் கொண்டால் ஆந்திராவிலோ அல்லது கேரளாவிலோ ஒரு வேலையை பெற முடியும். மாணவர்களுக்கு கிடைக்க வேண்டிய நிதியை தடுப்பது மத்திய அரசு அல்ல தமிழ்நாடு அரசுதான்.

மாறி வரும் சவால் நிறைந்த உலகில் கூடுதல் மொழியை குழந்தைகள் படிக்கிறோம் என கூறுகின்றனர். உங்களுக்கு என்ன பிரச்சினை? திமுகவுக்கும் திராவிடத்தை சார்ந்தவர்களுக்கு படிப்பு என்றாலே பிரச்சினைதான். சாமானிய மக்களை படியுங்கள் என்று கூறுவது ஆணவமா?” என தமிழிசை சௌந்தரராஜன் விமர்சித்துள்ளார்.

வானதி சீனிவாசன்: பொங்கல் வைக்காத இஸ்லாமியர், கிறிஸ்தவர்களை வைத்து ஏமாற்றும் முதல்வர்

பொங்கல் வைக்காத இஸ்லாமியர், கிறிஸ்தவர்களை வைத்து ஏமாற்றும் முதல்வர் என கோயம்புத்தூர் தெற்குத் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். கோயம்புத்தூர் தொடர் குண்டு வெடிப்பில் உயிரிழந்த 58 பேருக்கு 27 ஆம் ஆண்டு புஷ்பாஞ்சலி நிகழ்ச்சி ஆர்எஸ் புரம் தபால் நிலையம் அருகே நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பாஜக மகளிர் அணி தேசிய தலைவர் வானதி சீனிவாசன் பங்கேற்று பேசினார்.

அப்போது, 27 -வது ஆண்டு அஞ்சலி கூட்டத்திற்காக இங்கு சேர்ந்துள்ளோம். 27 ஆண்டுகளாக எதற்கு திரும்ப திரும்ப மக்களுக்கு இதை கூற வேண்டியது ஏன் என கேட்கின்றனர். நமது சமூகத்தை பிளக்க நினைக்கும் வரலாறை அவ்வளவு எளிதாக மறக்க முடியாது. இந்த கொடுஞ்செயல் மக்களுக்கு இன்னமும் ஆழமாக இருக்கின்றது. கோயம்புத்தூரின் வளர்ச்சிக்கு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்திவிட்டது.

இந்த குண்டுவெடிப்புச் சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் அனைவரும் பாஜகவினர், இந்துத்துவா அமைப்பினர் அல்ல. மத பயங்கரவாதத்திற்கு அதிக இழப்புகளை அடைந்த கட்சி பாஜக இந்து கலாச்சாரத்திற்கு தர்மத்திற்கு பாதிப்பு வந்தால் அதை காக்க நாங்கள் இருக்கின்றோம். இதை ஒவ்வொரு தலைமுறைக்கும் எடுத்துக் செல்லாமல் இருக்க மாட்டோம்.

பொங்கல் வைக்காத இஸ்லாமியர், கிறிஸ்தவர்களை வைத்து ஏமாற்றும் முதல்வர் இங்கு இருக்கின்றார். தமிழகத்தில் பெரும்பான்மை மக்கள் கொண்டாடும் விழாக்களுக்கு வாழ்த்து சொல்லாதவர் முதல்வர். இந்து கோவில்களுக்கும் வழிபாட்டிற்கும் ஏதாவது பிரச்சினை வந்தால் எந்த அரசியல் கட்சியும் வாயை திறப்பதில்லை. பாஜக பிரிவினை வாதத்தினை தூண்டுகின்றது என்கின்றனர். இதை வெளிநாடுகளில் யாரும் நம்ப மாட்டார்கள். நாட்டை பிரிப்பார்கள், மத கலவரம் செய்ய போகின்றனர் என பேசுகின்றனர். அரசியலில் வெற்றி பெற மத வாதத்திற்காக கையில் எடுப்பதாக சொல்கின்றனர்.

பாஜக பிரிவினைவாதம் செய்கின்றது என பேசும் கட்சிகள் எனது தொகுதிக்கு வாருங்கள். ஒரு சட்டமன்ற உறுப்பினரால் என்னவெல்லாம் செய்ய முடியும் என்பதை காட்டுகின்றோம். சிறுபான்மை மக்களுக்கு எந்த வேறுபாடு, மாறுபாடு காட்டுவதில்லை. பாஜக மத கலவரத்திற்காக அல்ல. தமிழகமும் ஒரு நாள் நமது கைக்கு வரும். அதுவரை தொடர்ந்து உழைப்போம் என வானதி சீனிவாசன் தெரிவித்தார்.

அண்ணாமலை 27 ஆண்டுகளுக்கு பின் டெல்லியில் பாஜக ஆட்சி..! 2026 -ல் தமிழ்நாட்டில் ஆட்சியமைப்போம்..!

அண்ணாமலை: 27 ஆண்டுகளுக்கு பின் டெல்லியில் பாஜக ஆட்சி..! 2026 -ல் தமிழ்நாட்டில் ஆட்சியமைப்போம்..!

27 ஆண்டுகளுக்கு பின் தலைநகர் டெல்லியில் பாஜக ஆட்சிக்கு வந்ததை போல் தமிழ்நாட்டில் ஆட்சியமைப்போம் என மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். கோயம்புத்தூர் தொடர் குண்டு வெடிப்பில் உயிரிழந்த 58 பேருக்கும் 27-ஆம் ஆண்டு புஷ்பாஞ்சலி நிகழ்ச்சி ஆர்எஸ் புரம் தபால் நிலையம் அருகே நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தேஜஸ்வி சூர்யா , வானதி சீனிவாசன் மற்றும் மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அப்போது செய்தியாளர்களை சந்தித்து அண்ணாமலை பேசுகையில், எல்லோருக்குமான கல்வி திட்டத்தில் கடந்த 3 ஆண்டுகளில் ரூ.1,500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் ஐசிடி பாடத்திட்டம் தனியாக நடத்தப்பட்டு வருகிறது. ஆனால் தமிழ்நாட்டில் மட்டும்தான் ஐசிடி அறிவியல் பாடத்தில் ஒரேயொரு சேப்டராக கற்பிக்கப்பட்டு வருகிறது.

இதுதொடர்பாக மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு கடிதம் எழுதியுள்ளோம். மிகப்பெரிய திட்டத்தில் குளறுபடி செய்துவிட்டு, நாங்கள் செய்வது சரி என்று தமிழக அரசு பேசிக் கொண்டிருக்கிறது என்று தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அண்ணாமலை, அதேபோல் பாஜகவை பொறுத்தவரை தலைவர்கள் மாறிக் கொண்டே இருப்பார்கள். அறிவாலயத்தில் ஒவ்வொரு செங்கல்லையும் எடுக்கும் வரை இங்குதான் இருப்பேன் என்று கூறினேன். அதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று பதில் அளித்திருக்கிறார்.

இதனை நான் தேர்தல் களத்தில் எதிர்கொள்வேன். 2026-ல் திமுகவின் அரசியல் பாரம்பரியத்தில் கடைசியாக ஆட்சியில் இருந்த நாளாக இருக்கும். நாங்கள் எல்லோரும் தாமரை வேஷத்தில் மட்டுமே இருக்கிறோம்.  தமிழக பாஜகவின் நிலைப்பாடு ஒன்றுதான். எங்களின் இலக்கு பாஜகவின் வளர்ச்சி மட்டும்தான். தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு இருக்கும் நிலையில், காலம் இருக்கிறது.

2026-ல் தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் இருக்கும். பிரதமர் மோடி தலைமையில் தமிழ்நாட்டில் பாஜக ஆட்சிக்கு வரும். பாஜக ஒரு விஷயத்தை கையில் எடுத்தால், அரை நூற்றாண்டு ஆனாலும் செய்து முடிக்கும். 27 ஆண்டுகளுக்கு பின் டெல்லியில் பாஜக ஆட்சிக்கு வந்ததை போல், 2026ல் தமிழ்நாட்டில் ஆட்சிக்கு வரும் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.