விஜய் பாணியில் ஸ்டாலின் அட்டாக்: புதுசா கட்சி தொடங்குறவன் எல்லாம் திமுக அழியணும்னு நினைக்கிறாங்க..!

யார் யாரோ, வருகிறவர்கள் எல்லாம் புதிது புதிதாக கட்சித் தொடங்குபவர்கள் எல்லாம் திமுக அழிய வேண்டும், ஒழிய வேண்டும், என்று கூறி வருகின்றனர் என விஜய் பாணியில் மு.க. ஸ்டாலின் பதிலளித்து உள்ளார்.

நடிகர் விஜய் புதிதாக தொடங்கியுள்ள தவெக முதல் மாநில மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அடுத்த வி.சாலையில் கடந்த அக்டோபர் 27 ஆம் தேதி நடைபெற்றது. மாநாட்டில் பேசிய தவெக தலைவர் விஜய், பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்பது தான் எங்களின் கொள்கை. கொள்கை ரீதியாக பாஜகவும், அரசியல் ரீதியாக திமுகவும் எங்கள் எதிரிகள் என திமுக குறித்து கடும் விமர்சனங்களை விஜய் முன்வைத்டூ இருந்தார்.

மேலும் விஜய் பேசுகையில், பிளவுவாத அரசியல், ஊழல் மலிந்த அரசியல் ஆகிய இரண்டையும் எதிர்க்க போகிறோம். மக்கள் விரோத ஆட்சியை திராவிட மாடல் ஆட்சி எனக் கூறி ஏமாற்றுகின்றனர். எங்கள் கட்சி வண்ணம் தவிர வேறு வண்ணத்தை எங்கள் மீது பூச முடியாது. மதச்சார்பற்ற சமூக நீதி கொள்கையை முன்னிறுத்தி செயல்படுவோம் என விஜய் பேசினார்.

தொடர்ந்து பேசுகையில், திராவிட மாடல் என்ற பெயரில் பெரியார், அண்ணா புகைப்படங்களை வைத்து கொண்டு தமிழ்நாட்டை சுரண்டும் குடும்ப சுயநல அரசியல் செய்பவர்கள்தான் தான் தங்களது அரசியல் எதிரி இவ்வாறு ஆளுங்கட்சியான திமுகவை தாக்கி விஜய் பேசியிருந்தார்.

விஜய் மாநாட்டில் பேசியது குறித்து அண்மையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு, எல்லாவற்றுக்கும் எங்களின் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பதிலளித்துள்ளார். அதற்கு மேல் பதில் சொல்ல விரும்பவில்லை என நாசுக்காக தெரிவித்தார்.

இந்நிலையில், சென்னை கொளத்தூர் தொகுதியில் முதல்வர் படைப்பகத்தை திறந்து வைத்து, அனிதா அச்சீவர்ஸ் அகாடமியில் நலத்திட்ட உதவிகளை வழங்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார். அப்போது, திமுக அரசு சிறப்பாகச் செயல்படுவது சிலருக்கு பிடிக்கவில்லை. யார் யாரோ, வருகிறவர்கள் எல்லாம் புதிது புதிதாக கட்சித் தொடங்குபவர்கள் எல்லாம் திமுக அழிய வேண்டும், ஒழிய வேண்டும், என்று கூறி வருகின்றனர்.

அவர்களுக்கெல்லாம் நான் பணிவோடு கேட்டுக் கொள்வது, நான்கு ஆண்டுகளைத் தொடக்கூடிய நிலையில் இந்த ஆட்சி செய்திருக்கக்கூடிய சாதனைகளை எண்ணிப் பார்க்க வேண்டும். அண்ணா கூறுவதுபோல் ஒரே வார்த்தையில் சொல்வதென்றால், வாழ்க வசவாளர்கள்! அதைத்தான் நானும் சொல்ல விரும்புகிறேன். எங்களுடைய போக்கு, மக்களுக்கு செய்யக்கூடியதுதான்.

தேவையில்லாமல் எல்லோருக்கு நாங்கள் பதில் சொல்ல வேண்டிய அவசியமே இல்லை. தேவையும் இல்லை. எங்களுடைய நேரத்தை வீணடிக்க நாங்கள் விரும்பவில்லை. மக்களுக்கான பணி செய்வதற்கே எங்களுக்கு நேரம் போதவில்லை. எந்த நம்பிக்கையோடு மக்கள் இந்த ஆட்சியை எங்களிடம் ஒப்படைத்தார்களோ அந்த நம்பிக்கையைக் காப்பாற்றுவோம்” என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

 

பொன்.ராதாகிருஷ்ணன் எந்த அனுபவத்தில் ஒரு தேர்தலை கூட சந்திக்காத விஜய் குறை சொல்கிறார்..!

மதுரையில் பாஜக மாவட்ட தேர்தல் குழு பயிலரங்கம் நேற்று நடந்தது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் கலந்துகொண்டு பேசினார். அதன்பின்னர் பொன் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார்.

அப்போது, ஒரே நாடு, ஒரே தேர்தலை எதிர்த்து தமிழக வெற்றிக் கழகம் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. ஒரு தேர்தலையும் சந்திக்காத நடிகர் விஜய் எந்த அனுபவத்தின் அடிப்படையில் இதனை கூறுகிறார். ஒவ்வொரு தேர்தலிலும் அரசியல் கட்சிகளும், அரசும் பல கோடி ரூபாய் செலவு செய்கின்றனர். இதனை குறைக்க வேண்டியது அரசியல் கட்சி மற்றும் மக்களின் கடமை.

நடிகர் விஜய்யின் தீர்மானம் தவறானது. தவெக ஆட்சி அமைத்தால் ஆட்சியிலும் அதிகாரத்திலும் பங்கு எனத் தெரிவித்துள்ளது. மக்களிடையே இதற்கு எந்த வரவேற்பும் இருக்காது. அரசியல் கட்சிகள் மத்தியில் வரவேற்பை பெறலாம். கூட்டணியில் இருந்தால் கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு ஆட்சியிலும் அதிகாரத்திலும் பங்கு கொடுக்க வேண்டும். பாஜக அனைத்து மாநிலங்களிலும் ஆட்சியிலும் பங்கு என்பதை நடைமுறைப்படுத்திக் கொண்டிருக்கிறது என பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

நல்லசாமி: யாரோ எழுதிக் கொடுத்த வசனத்தையும், பாடலையும் பாடியவர் விஜய் அரசியல் புரிதல் இல்லை…!

ஜல்லிக்கட்டு போராட்டம் போல, கள்ளுக்கான போராட்டமும் நிச்சயம் வெற்றிபெறும் என்று தமிழ்நாடு கள் இயக்க கள ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி கூறினார். கரூரில் செய்தியாளர்களின் கேள்விக்கு நல்லசாமி பதிலளித்தார். அப்போது, புதுச்சேரி, கேரளா, ஆந்திரா, தெலுங்கானா போன்ற மாநிலங்களிலும், ஏன் உலகளவில் எந்த நாட்டிலும்கூட கள் விற்பனைக்கு தடையில்லை. ஆனால், தமிழகத்தில் மட்டும் அத்தகைய ஒரு நிலையை ஏற்படுத்தி உள்ளனர்.

தமிழகத்தில் வெற்றி பெற்ற, 39 எம்.பி.,க்களும், அரசியல் சாசன சட்ட புத்தகத்தை கையில் வைத்துக் கொண்டுதான் பதவி ஏற்றுக் கொண்டனர். அதில், 47-வது பிரிவில் கள் ஒரு உணவுப்பொருள் என்று சொல்லி இருக்கிறது. இதை அவர்கள் அறிந்து கொள்ளவில்லை. அரசியலமைப்புச் சட்டத்தின்படி கள் இறக்கினால், மதுவிலக்குசட்டப்படி தமிழக அரசு நடவடிக்கை எடுக்கிறது.

அரசியலமைப்புச் சட்டத்துக்கு உட்பட்டது மதுவிலக்கு சட்டமா? மதுவிலக்கு சட்டத்துக்கு உட்பட்டது அரசியலமைப்புச் சட்டமா என்பது தொடர்பாக தமிழக அரசு பதில் அளிக்க வேண்டும். மேலும் நல்லசாமி பேசிகையில், கள் தடை செய்யப்பட வேண்டிய போதைப்பொருள் தான் என, அவர்கள் எங்களிடம் உரிய தயாரிப்புகளுடன் வாதாட வரட்டும். நியாயமான வாதங்களை வைத்து, வெற்றி பெற்று விட்டால், அவர்களுக்கு, 10 கோடி ரூபாய் பரிசு தருகிறேன்.

கள் என்பது போதைப் பொருள் அல்ல. நமது உணவின் ஒரு பகுதியாகும். கள் இறக்குவதும், பருகுவதும் அரசியலமைப்புச் சட்டம் மக்களுக்கு கொடுத்திருக்கும் உணவு தேடும் உரிமையாகும். இதையொட்டி, 2025 ஜனவரி 21-ம் தேதி கள் இறக்கி சந்தைப்படுத்துவோம் கள் விடுதலை போராட்டம் நடத்தப்படும். தமிழகத்தில் ஜல்லிக்கட்டுப் போராட்டம் வெற்றி பெற்றதுபோல, கள்ளுக்கான போராட்டமும் வெற்றி பெறும். தவெக மாநாட்டில் விஜய் பேசியது குறித்த கேள்விக்கு, யாரோ எழுதிக் கொடுத்த வசனத்தையும், பாடலையும் பாடியவர் விஜய். அவருக்கு அரசியல் குறித்த எவ்வித புரிதலும் இல்லை என நல்லசாமி தெரிவித்தார்.

தவெக தலைவர் விஜய் ஆட்சியில் பங்கு என்ற பேச்சுக்கு விஜய பிரபாகரன் ஆதரவு..!

ஆட்சியிலும் அதிகாரத்திலும் பங்கு தருவோம் என்று தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பேசியிருப்பதற்கு தேமுதிகவின் விஜய பிரபாகரன் வரவேற்றுள்ளார். மதுரையில் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின்னர் செய்தியாளர்களின் கேள்விக்கு தேமுதிக நிறுவனர் விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் பதிலளித்தார்.

அப்போது, பசும்பொன் முத்துராமலிங்க தேவர் குருபூஜையில் நான் முதல் முறையாக கலந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். பல ஆண்டுகளுக்கு முன்னர் நான் விஜயகாந்துடன் வந்துள்ளேன். தற்போது பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் ஆணைக்கு இணங்க நான் வந்துள்ளேன்.விருதுநகர் லோக்சபா தொகுதி வேட்பாளராகப் போட்டியிட்ட போது ஒவ்வொரு ஊரிலும் முத்துராமலிங்க தேவரை வணங்கிவிட்டுதான் பிரசாரம் செய்தேன். இன்று அவரது பிறந்த நாள், இறந்த நாளில் தரிசிக்க வந்தது நிறைவாக இருக்கிறது.

தொடர்ந்து பேசிய விஜய பிரபாகரன், நீண்டநாள் போராட்டத்துக்கு பின் விஜய் மாநாடு நடத்தி உள்ளார். அதற்கு என் வாழ்த்துகள். அதிகாரத்தில் உள்ள கட்சியானது அனைவருக்கும் சரி சமமாக பகிர்ந்து தர வேண்டும். அதிகாரப் பகிர்வை அனைத்து கட்சிகளும் வலியுறுத்துகின்றன. நாங்களும் அதைப் பற்றி பேசுகிறோம். தமிழ்நாட்டில் ஒரு மாநாடு நடைபெறும் போது எங்களுடைய நினைவுகளை சுட்டிக்காட்டுவதும் வழக்கம்.

அதுபோலதான் விஜய் மாநாட்டின் போது தேமுதிகவின் முதல் மாநாடு தொடர்பான வீடியோ பகிர்ந்து கொள்ளப்பட்டது. நான் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தைச் சேர்ந்தவன். அண்ணன் விஜய் ஒரு கட்சியை ஆரம்பித்து ஒரு கருத்தைச் சொல்கிறார். அவர் ஒரு மாநாட்டைத்தான் நடத்தி முடித்துள்ளார் என விஜய பிரபாகரன் தெரிவித்தார்.

விஜய் அறிக்கை: விமர்சனங்களில் ஆக்கபூர்வ ஆலோசனைகளை கருத்தில் கொள்வோம்..!

நம்முடைய அரசியல் பயணத்தை, நாம் தொடங்கும் முன்னரே நம்மை விமர்சித்தவர்கள். இனி இன்னும் கடுமையாக விமர்சிப்பார்கள். அத்தகைய விமர்சனங்களில் ஏதேனும் ஆக்கபூர்வமான ஆலோசனைகள் தெரிந்தால், அவற்றை மட்டுமே கருத்தில் கொள்வோம் என தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில், “வணக்கம். மாநாடு குறித்து உங்களுடன் பேச, இது நான்காவது கடிதம். வாஞ்சையில் நனைந்த வார்த்தைகளில் ஒரு நன்றிக் கடிதம். அரசியலில், கடித முறை என்பது ஆகப்பெரும் ஆயுதம். பேரறிஞர் அண்ணா தந்த ஆயுதம். தமிழக மக்கள், நம் அனைவருக்கும் சொந்தமானது. அந்த உணர்வின் அடிப்படையில்தான் நாமும் அதைக் கையில் எடுத்தோம். இந்தக் கடிதம் எழுதும்போது, என்னென்னவோ எண்ண அலைகள் இதயத்தில் அலைமோதுகின்றன. என் நெஞ்சம் நிறைந்ததில் எதைச் சொல்வது? எதை விடுப்பது? மாநாடு நடத்த, பல்வேறு காரணங்களால், நமக்குக் கிடைத்தது மிகக் குறைந்த கால இடைவெளிதான். அதிலும் அடைமழை வேறு குறுக்கிட்டது. இருந்தும், எல்லாவற்றையும் சமாளித்து, சூறாவளியாகச் சுழன்று நம் கட்சியின் முதல் மாநில மாநாட்டை வெற்றிபெறச் செய்த உங்கள் அனைவருக்கும் என் மனம் நிறைந்த நன்றி.

குறிப்பாக, மாநாட்டுப் பணிகளுக்காக, இடம் தேர்வில் இருந்து திடல் பணிகள் வரை மட்டுமல்லாது, மாநாடு வெற்றிகரமாக நிறைவுறும் வரையிலும், கழகத்தின் நிர்வாகிகள் அனைவரையும் ஒருங்கிணைத்து, அதி சிரத்தையுடன் பணியாற்றிய பொதுச் செயலாளர் என்.ஆனந்த் திடல் வடிவமைப்புப் பணிகளை மேற்பார்வையிட்டு, பொதுச் செயலாளருடன் பணிகளைப் பகிர்ந்துகொண்ட பொருளாளர் பி.வெங்கட்டராமன் கட்சியின் மீதான உறுதியான பற்றை இதயத்தில் தாங்கி மாநாட்டிற்காகக் கடுமையாக உழைத்த ஆர்.பரணிபாலாஜி, (கள்ளக்குறிச்சி மாவட்ட தலைவர் மற்றும் விழுப்புரம் மாவட்ட பொறுப்பாளர்), என்.மோகன்ராஜ் (விழுப்புரம் மாவட்ட நிர்வாகி), ஜி.பி.சுரேஷ் (விழுப்புரம் மாவட்ட நிர்வாகி), ஏ.வடிவேல் (விழுப்புரம் மாவட்ட நிர்வாகி), ஈ.ரமேஷ் (விழுப்புரம் மாவட்ட நிர்வாகி), கே.அரவிந்தன் (விழுப்புரம் மாவட்ட வழக்கறிஞர்) மற்றும் அனைத்து மாவட்ட நிர்வாகிகள், அணி நிர்வாகிகள், தற்காலிகத் தொகுதிப் பொறுப்பாளர்கள், மாநகர, ஒன்றிய, நகர, பேரூர், கிளை, பகுதிக் கழக நிர்வாகிகள், மாநாட்டுக் குழுக்களின் தலைவர்கள், ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் அனைத்துக் குழுக்களின் உறுப்பினர்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தலைமை நிலையச் செயலகத்தின் வழிகாட்டுதலைப் பின்பற்றி, திடல் வடிவமைப்புப் பணிகளால், வெற்றிக் கொள்கைத் திருவிழாவிற்கான இடமாகத் திடலை மாற்றிக் காட்டிய பந்தல் வடிவமைப்பாளர் ஜே.பி.விஸ்வநாதனுக்கும் நன்றி. மாநாட்டில். நாம் அனைவரும், மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் ஆற்றிய பணியை மறக்கவே இயலாது. அவசர கால உதவியில் அசத்திய இவர்கள் அனைவருக்கும் அளப்பரிய நன்றி. கட்டுப்பாட்டு அறை சார்ந்த கண்காணிப்புப் பணிகளைச் செய்தவர்கள் அனைவருக்கும் சிறப்பு நன்றி. எப்போதும் விவசாயப் பெருமக்களை வணங்கிப் போற்றும் இயக்கமாக இருக்கும் நம் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு நடத்த இடம் வழங்கிய விவசாயிகளை நேரில் சந்தித்து, அவர்கள் கரம் பற்றி நன்றி சொல்லவே எனக்கு விருப்பம். இருந்தும், இப்போது நெஞ்சம் நெகிழ அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் அதே வேளையில், வி.சாலை. விக்கிரவாண்டி, விழுப்புரம் மாவட்ட மக்களுக்கும் நன்றி சொல்லத் தோன்றுகிறது. அவர்கள் அனைவருக்கும் நன்றி.

மாநாட்டிற்கான நெறிமுறைகளை செவ்வனே செயல்படுத்திட அனுமதி மற்றும் ஒத்துழைப்பு நல்கிய, சம்பந்தப்பட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த அனைவருக்கும் நன்றி. கடிதங்கள் வாயிலாக வெளியிட்ட என் வேண்டுகோள்களை ஏற்று, தங்கள் வீடுகளில் இருந்தே வெற்றிக் கொள்கைத் திருவிழாவைக் கண்டு களித்த அனைத்துத் தாய்மார்களுக்கும், முதியோர்களுக்கும் என் மனப்பூர்வமான நன்றி. இதனிடையே, மாநாட்டில் கலந்து கொள்வதற்காக, நீங்கள் ஒவ்வொருவரும் எவ்வளவு தூரம் பயணம் மேற்கொண்டீர்கள் என்பதும் எனக்குத் தெரியும். இரவெல்லாம் கண்விழித்து, தூக்கமின்றி, அயற்சியைப் பொருட்படுத்தாமல், மதியம் வரை சுட்டெரித்த வெயிலையும் தாங்கிக்கொண்டீர்கள். சிலர் உடல் உபாதைகளைக்கூட பொறுத்துக்கொண்டு கலந்துகொண்டீர்கள். இதயங்கள் இடையேயான அன்பின் முன், இன்னல்கள் பெரிதில்லை என்பதை உணரச் செய்தீர்கள். உங்களை எப்படி ஏற்றிப் போற்றுவதென்றே எனக்குத் தெரியவில்லை.

இப்படித் தன்னெழுச்சியாக, பொங்குமாங்கடலென மாநாட்டிற்குத் திரண்டு வந்த கட்சி தோழர்கள் என் மீது கொண்டுள்ள பாசத்திற்கு ஈடாக, இந்த உலகத்தில் வேறு எதுவும் இருப்பதாகவே தெரியவில்லை. அதேபோல, தமிழக அரசியல் களத்தில் நமக்காக நம் தோளோடு தோள் சேர்ந்து நிற்பதை உறுதி செய்வதுபோல, தங்களின் பேரன்பையும் பேராதரவையும் தெரிவிக்கும் வகையில், நமது மாநாட்டிற்குப் பேரலைகளாக எழுந்து வந்த பொதுமக்களுக்கு நன்றி சொல்ல, வார்த்தைகளைத் தேடித் தேடி, கண்டுபிடிக்க இயலாமல் மவுனமொழி பேசி. கண்கள் கலங்க நிற்கிறேன். எதைப் பற்றியும் யோசிக்காமல், இந்த மண்ணைச் சேர்ந்த ஒற்றை மகனுக்காக, இத்தனை லட்சம் மனங்கள் திரண்டு நின்றது என் மனதை நெகிழச் செய்துவிட்டது.

உங்களை உறவுகளாகப் பெற்றது என் பாக்கியமன்றி வேறென்ன? நாடே வியக்கும் வகையில் நம் மாநாட்டை மாபெரும் வெற்றிபெறச் செய்த உங்கள் ஒவ்வொருவரின் மனதையும் கோடிப்பூக்களைத் தூவி, போற்றி மனம் நிறைகிறேன். உங்கள் ஒவ்வொருவரின் அன்பிலும் மனம் நெகிழ்ந்து, கண்களில் ஆனந்தக் கண்ணீர் தேங்க, அரசியல் வெற்றிப் பயணத்தைத் தொடங்கி இருக்கிறோம். இப்பயணத்தின் இலக்கை, நம் தமிழ்நாட்டு மண் இனிவரும் நாள்களில் பார்க்கும். அது உறுதி. நம் தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாட்டில் கண்ட காட்சிகள் எல்லாம், கண்களிலும் மனதிலும் கல்வெட்டுகளாகவே பதிந்துவிட்டன.

தமிழக அரசியல் வரலாற்றில், காலாகாலத்திற்கும் அழிக்கவே இயலாத பதிவுகள் அவை. ஆம். நமது மாநாட்டில், அலைகள் கை தட்டும் ஆர்ப்பரிக்கும் கடலைக் கண்டேன். கதிர்கள் வெடித்துவிழும் ஒளிப்பிழம்புகளைக் கண்டேன். தமிழக வெற்றிக் கழகத்தின் வெற்றியோடு. தமிழகத்தின் வெற்றிக்கான வெள்ளோட்டத்தையும் கண்டேன். தீர்க்கமான அரசியல் வெற்றிக்கான திசைகள் திறக்கக் கண்டேன். இப்படிச் சொல்லிக்கொண்டே போகலாம். ஆனாலும், மனம் திளைத்ததை. மகிழ்ச்சியில் தித்தித்ததை இதற்குமேல் எப்படிச் சொல்ல? இவை எல்லாவற்றையும். அப்படியே வார்த்தைகளில் வடித்தெடுக்க நானொன்றும் கவிஞன் இல்லை. உணர்வுகளை இயல்பாக வெளிப்படுத்த மட்டுமே தெரிந்த சாதாரண மனிதன்.

இருந்தும் நினைவுகளைப் பகிர்வதும்கூட ஓர் அழகிய கவிதைதானே. அதனால்தான், மனதிலும் நினைவிலும் சேகரமானதில் சிலவற்றை மட்டுமே பகிர்ந்தேன். இந்த வேளையில், உங்கள் ஒவ்வொருவரையும் எண்ணி மனம் நெகிழ்கிறேன். உங்களை என் தோழர்களாக, தூய குடும்ப உறவுகளாகப் பெற்றது என் வாழ்நாள் வரம். வழியெங்கும் வசந்தத்தை விதைக்கிற வைரநெஞ்சங்கள் நீங்கள். நம் மக்களோடு சேர்த்து, உங்களையும் உயரத்தில் வைத்து அழகு பார்க்கவே இந்த அரசியல் பயணம்.

என் எல்லா வார்த்தைகளுக்கும் நீங்கள் உயிர் கொடுத்தீர்கள். அதனால்தான், நமது மாநாட்டின் வாயிலாக, பொறுப்புணர்வுடன் கூடிய கடமையுடன், கட்டுப்பாடான. கண்ணியமான, ஆரோக்கியமான உத்வேகமான, உரிமைகளை மீட்டெடுக்கும் அரசியலை இந்த மண்ணிலே விதைத்திருக்கிறோம். மாநாட்டில் நம்மைக் கண்ட நம் தமிழக மக்களும் அதை உணர்ந்திருப்பர். நம்முடைய அரசியல் பயணத்தை, நாம் தொடங்கும் முன்னரே நம்மை விமர்சித்தவர்கள். இனி இன்னும் கடுமையாக விமர்சிப்பார்கள். அத்தகைய விமர்சனங்களில் ஏதேனும் ஆக்கபூர்வமான ஆலோசனைகள் தெரிந்தால், அவற்றை மட்டுமே கருத்தில் கொள்வோம். மற்றவற்றை மறந்தும்கூட மனதில் ஏற்றிவிடாமல் கடந்து செல்லப் பழகிக் கொள்வோம்.

அனைத்து மக்களின் அத்தியாவசியத் தேவைகளை நோக்கிய உழைப்பு மட்டுமே இனி நம் அரசியல். அதைச் சாத்தியப்படுத்துதல் மட்டுமே நம் ‘தீவிர அரசியல் செய்தலாக இருக்கும். நம்மைத் தாயுள்ளத்தோடு வரவேற்கும் நம் தமிழ்நாட்டு மக்களுக்காக, இன்னும் அதி தீவிரமாக, தீர்க்கமாக, தீர்மானமாக உழைப்போம். தங்கள் மண்ணைச் சேர்ந்த மகன்களான, மகள்களான நம்மைத் தக்க இடம் நோக்கி, தகுதியான அங்கீகாரம் நோக்கி மக்களே அழைத்துச் செல்வர். ஆகவே, அவர்களின் மனதில் நிறையும் அளவிற்கு, அதிக நம்பிக்கையுடனும் நன்றியுடனும் ரெட்டைப் போர்யானைகளின் பலத்துடன் உழைப்போம்.

வாகைப் பூக்கள் நமக்காகவே நாடெங்கும் பூத்துக் குலுங்கப் போகின்றன. நமது மாநாட்டின் மூலம், வி.சாலை நமது வியூகச் சாலையாகவும், விவேக சாலையாகவும் மற்றும் வெற்றிச் சாலையாகவும் ஆனது. போலவே, நம்மை யாராலும் வெல்ல இயலாத வித்தியாசமான, யதார்த்த அரசியல் சாலைக்கும் நம்மை அழைத்துச் செல்லும். எப்போதும் ஆக்கபூர்வமான அரசியலையே கையிலெடுப்போம். 2026-ல் நம் இலக்கை அடைவோம். வெற்றி நிச்சயம்” என அந்த அறிக்கையில் விஜய் தெரிவித்துள்ளார்.

தவெக நிர்வாகிகள் மறைவு.. இவ்வளவு நாள் உழைத்து என்ன பயன்.. ஒரு போன், மெசேஜ் கூட வரவில்லை..!

இவ்வளவு நாள் உழைத்து என்ன பயன். தலைமையில் இருந்து ஒரு போன், மெசேஜ் கூட வரவில்லை என இளைஞரணி நிர்வாகிகள் உயிரிழந்த உறவினர்கள் வருத்தம். விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அடுத்த வி.சாலையில்,  விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநில மாநாடு நேற்று நடைபெற்றது. இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக திருச்சியைச் சேர்ந்த இளைஞரணி நிர்வாகிகள் காரில் செல்லும்போது ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தவெக மற்றும் நிர்வாகிகளின் உறவினர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியது.

இந்த சம்பவத்துக்கு விஜய் இரங்கல் தெரிவிக்கவில்லை. இதனால் கோபமடைந்த சீனிவாசனின் உறவினர்கள், உயிரே பறிபோகியும் கட்சியில் இருந்து ஒரு அறிக்கை கூட வெளியிடவில்லை. நாங்கள் இழப்பீடு எல்லாம் கேட்கவில்லை. ஒரு ஆறுதல் தான் எதிர்பார்க்கிறோம். இவ்வளவு நாள் உழைத்து என்ன பயன். தலைமையில் இருந்து ஒரு போன், மெசேஜ் கூட வரவில்லை. சீனிவாசன் உயிருடன் இருந்தபோது விஜய்காக அவ்வளவு செலவு செய்துள்ளார் அவரின் மறைவுக்கு கூட கண்டுகொள்ளாமல் இருப்பது வருத்தமளிக்கிறது என உறவினர்கள் பேசியிருந்தார்.

இதற்கு கண்டனங்கள் எழுந்த நிலையில், தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் திருச்சிக்கு நேரில் சென்று, நிர்வாகிகளின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்தார். அப்போது நிர்வாகிகளின் உறவினர்கள், ஆனந்துடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

தவெக மாநாட்டில் டன் கணக்கில் தேங்கிய குப்பையால் துர்நாற்றம்..!

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அடுத்த வி.சாலையில், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநில மாநாடு நேற்று நடைபெற்றது. விஜய்யின் தமிழக வெற்றிக் கழக மாநாடு நேற்று பிரம்மாண்டமாக நடந்து முடிந்த நிலையில் மாநாட்டுக்கு வந்த வாகனங்களால் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசல் இன்று அதிகாலை 3 மணியளவில் தான் சரியானது. அதேபோல், மாநாட்டு திடலில் சுமார் 3 டன் அளவுக்கான குப்பைகள் சேர்ந்ததாலும், மீதமான உணவுகளை பொதுமக்கள் வீசிச் சென்றதாலும் அப்பகுதியில் துர்நாற்றம் வீசத் தொடங்கியுள்ளது.

விஜய்: கொள்கை ரீதியாக பாஜக, அரசியல் ரீதியாக திமுக எங்கள் எதிரிகள்…!

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அடுத்த வி.சாலையில், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநில மாநாடு நேற்று நடைபெற்றது. இதில் ஏராளமான தொண்டர்களும், விஜய் ரசிகர்களும் கலந்து கொண்டனர். அதில் தவெக கட்சியின் கொள்கை, கோட்பாடு, திட்டம் உள்ளிட்டவை அறிவிக்கப்பட்டன. மேலும் தவெகவின் கொள்கை வெளியிடப்பட்டது.

மாநாட்டில் பேசிய தவெக தலைவர் விஜய், பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்பது தான் எங்களின் கொள்கை. கொள்கை ரீதியாக பாஜகவும், அரசியல் ரீதியாக திமுகவும் எங்கள் எதிரிகள். ஒரு முடிவோடு தான் அரசியலுக்கு வந்திருக்கிறேன். இனி திரும்பி பார்க்க மாட்டேன். என் கேரியரின் உச்சத்தையும், ஊதியத்தையும் விட்டு, உங்களை மட்டுமே நம்பி வந்துள்ளேன் என விஜய் பேசினார்.

தவெக முதல் மாநில மாநாடு ஆரவாரம் தொடங்கியது..! தொண்டர்கள் உற்சாகம் ..!

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அடுத்த வி.சாலையில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநில மாநாடு தொடங்கியது. விஜய் மாநாட்டு திடலுக்கு வருகை தந்ததை பார்த்ததும், மாநாட்டு திடலில் கூடியிருந்த தொண்டர்கள், நடிகர் விஜய்யின் ரசிகர்கள் ஆரவாரம் செய்தனர்.

கடந்த பிப்ரவரி 19 -ஆம் தேதி தமிழக அரசியலில் களமிறங்குவதாக அறிவித்த நடிகர் விஜய் அதன் பிறகு கட்சியின் கொடி மற்றும் கட்சி பாடலை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டார். இதைத் தொடர்ந்து மாநாடு தொடர்பான அறிவிப்பு வெளியானது. தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு இன்று பிற்பகல் 3 மணிக்கு விஜய் திரைப்படங்களில் இடம்பெற்ற அரசியல் பேசும் பாடல்கள் இசைக்கப்பட்டன. பின்னர் தவெக கட்சியின் கொடிப் பாடல் இசைக்கப்பட்டது. அத்தனை தொடர்ந்து, விஜய், மாநாட்டில் கட்சிக் கொடியை ஏற்றி வைத்தார்.

மேலும் மாநாட்டுப் பந்தலில் இருந்த மேடையில் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர், தாய் சோபனா அமர்ந்திருக்க, மாநாடு துவக்கத்தில் 41 கலைஞர்கள் சேர்ந்து பறையாட்டம், தேவராட்டம், ஒயிலாட்டம் மயிலாட்டம் உள்ளிட்ட தமிழ்நாடு நாட்டுப்புற கலைஞர்களின் சிறப்பு நிகழ்ச்சிகளுடன் மாநாடு தொடங்கியது. மேலும் கோயம்புத்தூரைச் சேர்ந்த 27 பேர் அடங்கிய குழு வள்ளிக்கும்மி ஆட்டம் ஆடுகின்றனர். இதனை தொடர்ந்து மாலை 4 .03க்கு மேடைக்கு வந்த கட்சியின் தலைவர் விஜய் மேடைக்கு உற்சாகமாக வந்து தொண்டர்களைப் பார்த்து கையசைத்தார்.

தவெக கொடி கட்டிய கார்.. எங்க கிட்டயே காசு கேக்குறியா..!?

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற இருக்கும் நிலையில், தவெக கட்சி தொண்டர்கள், சுங்கச்சாவடியில் மோதலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே வி.சாலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு வரும் 27 -ஆம் தேதி மாலை தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு நடைபெறவுள்ளது.

‘வெற்றிக் கொள்கை திருவிழா’ என்கிற வாசகத்துடன் மாநாடு நுழைவாயிலில் கோட்டையின் மதில் சுவர் போல செட் அமைக்கப்பட்டு அதில் 2 யானைகள் முன்னங் கால்களை உயர்த்தி பிளிரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் மாநாட்டு திடலில் காமராஜர், பெரியார், அம்பேத்கர் ஆகியோருக்கு நடுவே விஜய் கட்-அவுட் ஜொலித்து கொண்டுள்ளது. மாநாட்டுக்கு இன்னும் 4 நாட்களே உள்ள நிலையில் மாநாட்டு ஏற்பாடுகளை ஒப்பந்ததாரர்கள் இரவு பகலாக செய்து வருகின்றனர்.

தற்போது மாநாட்டுக்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. கிட்டத்தட்ட அனைத்து பணிகளும் நிறைவடைந்து விட்டதாகத் தெரிகிறது. மாநாட்டிற்கு வருபவர்கள் அனைவருக்கும் தேவையான கழிப்பிட வசதி, தேவையான அளவுக்கு குடிநீர் வசதி ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. தவெக மாநாட்டு பந்தல் பகுதியில் 700-க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த கரியமங்கலம் சுங்கச்சாவடியில், தவெக கட்சிக் கொடி கட்டிய காரில் வந்த நிர்வாகிகள், சுங்கக் கட்டணம் செலுத்தாமல் ஊழியர்களுடன் வாக்குவாதம் செய்ததாக கூறப்படுகிறது.

தவெக கொடி பொருத்தப்பட்ட காரில் ஃபாஸ்டேக் இல்லாத நிலையில், சுங்கக் கட்டணம் செலுத்தாமல் செல்ல முயன்றதாகவும், டோல்கேட் ஊழியர்கள் காரை மறித்ததால் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. விக்கிரவாண்டி மாநாட்டு பணிகளை பார்வையிட்டுவிட்டு வரும் எங்களிடம் டோல்கேட் கட்டணம் கேட்கிறாயா என தவெக நிர்வாகி ஒருவர் ஊழியர்களிடம் ஆவேசமாக கேட்டதாகவும் கூறப்படுகிறது.

தவெக நிர்வாகிகளுக்கும், சுங்கச்சாவடி ஊழியர்களுக்கும் ஏற்பட்ட மோதலை தொடர்ந்து, அங்கு ஏராளமான தவெக தொண்டர்கள் திரண்டு, சுங்கச்சாவடி ஊழியர்களை மிரட்டியதாகவும், ரோடே சரியில்லை, எதற்கு சுங்கக்கட்டணம் செலுத்த வேண்டும் எனக் கூறியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.