நம்ம பாசிசமும், பாயாசமும், அதாவது நம் அரசியல் எதிரியும், கொள்கை எதிரியும் LKG பிள்ளைகளை போல சண்டை போட்டுக் கொண்டு இருக்கின்றனர் என தவெக தலைவர் விஜய் மறைமுகமாக விமர்சித்தார். மாமல்லபுரத்தில் நடைபெறும் தவெக இரண்டாம் ஆண்டு தொடக்க விழாவில் அக்கட்சியின் தலைவர் விஜய் பேசுகையில், “2026 தேர்தலை நாம் சந்திக்கப் போகிறோம். அதற்கு பூத் ஏஜென்டுகள் மிகவும் முக்கியம்.
ஆனால் அது பெரிய கட்சிகளுக்குதான் அதிகமாக இருப்பதாக சொல்கிறார்கள். கூடிய சீக்கிரமே பூத் கமிட்டி மாநாடு நடத்தப் போகிறோம். தவெக எந்தவொரு பெரிய கட்சிக்கும் சளைத்ததல்ல என்று அன்றைக்கு தெரியவரும். இப்போது புதிதாக ஒரு பிரச்சினையை கிளப்பி விட்டு இடிருக்கிறார்கள். இங்கே அதை செயல்படுத்தவில்லையென்றால் நம் மாநில அரசுக்கு நிதி கொடுக்க மாட்டார்களாம். கொடுக்க வேண்டியது அவர்களின் கடமை. வாங்க வேண்டியது இவர்களின் உரிமை. ஆனால் LKG பிள்ளைகளை போல சண்டை போட்டுக் கொண்டு இருக்கின்றனர்.
இங்கே எவ்வளவு பிரச்சினை நடந்து கொண்டு இருக்கிறது. நம்ம பாசிசமும், பாயாசமும், அதாவது நம் அரசியல் எதிரியும், கொள்கை எதிரியும் பேசிவைத்துக் கொண்டு மாற்றி மாற்றி சமூக வலைதளங்களில் ‘ஹேஷ்டேக்’ போட்டு விளையாடிக் கொண்டு இருக்கிறார்கள். இவர்கள் அடித்துக் கொள்வது போல அடித்துக் கொள்வார்களாம். இதை நாம் நம்பவேண்டுமாம். ‘வாட் ப்ரோ.. இட்ஸ் வெரி ராங் ப்ரோ’
இதையெல்லாம் மக்களுக்கு நாம் சொல்லி புரிய வைக்க வேண்டிய அவசியமில்லை. நம் ஊர் சுயமரியாதை மிக்க ஊர். நாம் எல்லாரையும் மதிப்போம். ஆனால் சுயமரியாதையை மட்டும் யாருக்காகவும் எதற்காகவும் விட்டுக் கொடுக்க மாட்டோம். நாம் எல்லா மொழிகளையும் மதிப்போம். தனிப்பட்ட முறையில் யாரும் எந்த பள்ளியிலும் படிக்கலாம். எந்த மொழியை வேண்டுமானாலும் விருப்பத்துடன் கற்றுக் கொள்ளலாம்.
ஆனால், கூட்டாட்சி தத்துவத்தை மீறி மாநில தன்னாட்சி உரிமைக்கு எதிராக ஒரு மாநில அரசின் மொழிக் கொள்கையை, கல்விக் கொள்கையை கேள்விக் குறியாக்கி வேறு ஒரு மொழியை வலுக்கட்டாயமாக திணித்தால், அதுவும் அரசியல் ரீதியாக திணித்தால் எப்படி? எனவே தவெக சார்பில் இதனை நாங்கள் உறுதியாக எதிர்ப்போம்” என விஜய் தெரிவித்தார்.