நீதிபதிகள் நடவடிக்கை: பள்ளி, கல்லூரிகளில் காட்சி பொருளாக நாப்கின் இயந்திரம்..!

நாளிதழ் ஒன்றில் தமிழகம் முழுவதும் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி,கல்லூரிகளில் நாப்கின் இயந்திரங்கள் மற்றும் பயன்படுத்தப்பட்ட நாப்கின்களை எரியூட்டி அழிக்கும் இயந்திரங்கள் முறையாகப் பராமரிக்கப்படாமல் காட்சிப் பொருளாக உள்ளதாக செய்தி வெளியானது. அந்த செய்தியின் அடிப்படையில் சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி டி.கிருஷ்ணகுமார் மற்றும் நீதிபதி பி.பி.பாலாஜி ஆகியோர் அடங்கிய அமர்வு தமிழக அரசுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தாமாக முன்வந்து எடுத்துள்ளனர்.

தமிழக அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஆர்.நீலகண்டனிடம் நீதிபதிகள், ‘‘கடந்த 2016-ஆம் ஆண்டு உயர் நீதிமன்ற மதுரை கிளை ஒரு வழக்கில் அனைத்து பள்ளி, கல்லூரிகளிலும் நாப்கின் வழங்கும் இயந்திரங்களை வைக்க வேண்டும். இயந்திரம் இல்லாத பள்ளிகளில் தேவைப்படும் மாணவிகளுக்கு அவற்றை சம்பந்தப்பட்ட ஆசிரியைகளே வழங்க வேண்டும் என உத்தரவிட்டு இருந்தது. ஆனால் என்ன காரணத்துக்காக தற்போது அந்த இயந்திரங்கள் செயல்படவில்லை என்பது குறித்து தமிழக அரசு விளக்கமளிக்க வேண்டும்’’ என உத்தரவிட்டனர்.

 

நயினார் நாகேந்திரன்: பாஜக – அதிமுக இடையே இணக்கம் ஏற்பட்டால் மகிழ்ச்சி..!

சுதந்திர போராட்ட தியாகி கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின் 153-வது பிறந்தநாளை முன்னிட்டு நேற்று நெல்லையில் உள்ள அவரது மணிமண்டபத்தில் நயினார் நாகேந்திரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளிக்கையில், தமிழக பாஜக பணிகளை கண்காணிப்பது தொடர்பாக கட்சித்தலைமை முடிவு செய்து ஒருங்கிணைப்பு குழுவை அமைத்திருக்கிறது. அதில் எனது பெயர் இடம்பெறவில்லை. தமிழகத்தில் என்ன செய்ய வேண்டும் என்பதை கேட்டு அறிவதற்காக அந்த குழு தலைவர் டெல்லி சென்றுள்ளார்.

விஜயதரணி எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து விட்டு பாஜகவுக்கு வந்துள்ளார். ஆகையால் அவருக்கு பாஜக வில் ஏதாவது ஒரு பதவி கொடுத்திருக்க வேண்டும். அதில் தற்போது காலதாமதம் ஏற்பட்டுள்ளது. எனினும் அவர் வருத்தப்பட வேண்டாம். வரும் காலத்தில் அவருக்கு உரிய பதவி கொடுக்கப்படும். கட்சியில் எனக்கும் பதவி இல்லை. அதிமுகவில் பல உயர்ந்த பதவிகளில் இருந்து விட்டு பாஜகவுக்கு வந்தேன். பின்னர் மாநில துணைத்தலைவர் பதவி கொடுத்தார்கள். தற்போது சட்டமன்ற குழு தலைவராக மட்டும் இருக்கிறேன். அதிமுக, பாஜக இடையே இணக்கம் ஏற்பட்டால் மகிழ்ச்சிதான் என நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.

கே.என்.நேரு: “கூட்டணியை எங்கள் தலைவர் விட்டுக் கொடுக்க மாட்டார்..!”

சுதந்திர போராட்ட தியாகி கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின் 153-வது பிறந்தநாளை முன்னிட்டு திருச்சி நீதிமன்றம் அருகே உள்ள அவரது உருவச்சிலைக்கு திமுக முதன்மை செயலாளரும், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் கே.என்.நேரு பேசுகையில், திமுக தலைமையிலான கூட்டணி மிகச் சரியான கூட்டணி. நான் லால்குடியில் நேற்று பேசியதை சிலர் தவறாக திரித்து வெளியிட்டுள்ளனர். என்றைக்கும் இப்போதைய கூட்டணியை எங்கள் தலைவர் விட்டுக்கொடுக்க மாட்டார். நான் பேசியதன் கருத்து என்னவென்றால், 38 ஆண்டுகளுக்கு பின் தொடர்ந்து இரண்டாம் முறையாக ஆட்சியைப் பிடித்ததை சட்டமன்றத்தில் ஜெயலலிதா பெருமையாக பேசினார்.

அதேபோல, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி அடுத்த முறையும் தொடர எந்த நிலை வந்தாலும் பாடுபடுவோம் என்ற அர்த்தத்தில் தான் பேசினேன். அதை தவறாக திரித்து வெளியிட்டுள்ளனர். கூட்டணி கட்சி தலைவர்கள் எங்களோடு சுமுகமாக பழகுகின்றனர். எங்கள் கூட்டணி அருமையாக உள்ளது. எங்கள் கூட்டணி மிகச் சரியான கூட்டணி. என கே.என்.நேரு தெரிவித்தார்.

ஆளுநர் ஆர்.என்.ரவி: “தமிழக அரசுப் பள்ளிகளில் கல்வித் தரம் மிக மோசமாக உள்ளது..!”

ஆசிரியர் தினத்தை முன்னிட்டு ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற ‘எண்ணி துணிக’ நிகழ்ச்சியில் ஆசிரியர்கள் மற்றும் கல்வியாளர்களுடன் ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்துரையாடல் நடத்தினார். பின்னர் பேசிய ஆளுநர் ஆர்.என். ரவி, “நாடு சுதந்திரம் அடைவதற்கு முன் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை பல நாடுகள், பல ராஜாக்கள் இருந்தாலும் மக்கள் ஒற்றுமை உணர்வுடன் வாழ்ந்துள்ளார்கள்.

120 ஆண்டுகளுக்கு முன் எனது பாட்டி, பிஹாரின் ஒரு கிராமத்தில் இருந்து பல நாடுகளைக் கடந்து ராமேஸ்வரத்துக்கு வந்துள்ளார். காரணம், ராமேஸ்வரம் தன்னுடையது, ஒவ்வொருவருக்குமானது என்ற எண்ணம் அவருக்கு இருந்தது. அப்படித்தான் பல புண்ணிய தலங்கள் நாடு முழுவதும் உள்ளன.

ராமேஸ்வரம், ராமநாதபுரம் மன்னருக்கானது அல்ல. அது பாரதம் முழுவதும் வசிக்கும் மக்களுக்கானது. ராஜாக்கள், அவற்றின் பாதுகாவலர்கள் மட்டுமே. இதேபோல்தான் காசியும். இப்படித்தான் இந்த நாடு ஒரே நாடாகவும், அதேநேரத்தில் பல ராஜாக்கள் ஆளக்கூடியதாகவும் இருந்துள்ளது. பக்திக்காக மட்டுமல்ல, கல்விக்காகவும் ஒரு இடத்தில் இருந்து மக்கள் வேறு ஒரு இடத்துக்குச் சென்று வந்தார்கள்.

1,500 ஆண்டுகளுக்கு முன், பல்லவ இளவரசர் 500 பேருடன் பிஹாரின் நாளாந்தா சென்றார். அங்கு கல்வி பயின்றார். பின்னர், அவரே ஒரு குருவாக உருவெடுத்தார். அவரே போதி தர்மரானார். யாரும் யாரையும் தடுக்கவில்லை. நீங்கள் வேறு ஒரு நாட்டைச் சேர்ந்தவர் என கூறவில்லை. பல்லவ இளவரசர் மாமல்லபுரத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் அவர் நாளந்தா தன்னுடையது என்று எண்ணினார்.

அதேபோல்தான் ஆதிசங்கரர். நினைத்துப் பாருங்கள் அவர் நாடு முழுவதும் பயணித்திருக்கிறார். ஒருவரும் அவரை தடுத்ததில்லை. சமூகம் அவரை வரவேற்றது. மக்கள் வரவேற்றார்கள். தற்போதைய அரசியலைக் கொண்டு இந்தியாவை புரிந்துகொள்ள முடியாது. இது ஒரு ராஷ்ட்ரம். ராஷ்ட்ரம் என்பது நாடு என்பதை கடந்த ஒன்று.

கல்விதான் மனிதர்களின் வளர்ச்சிக்கு இன்றியமையாதது. தமிழகம் கல்வியில் சிறந்து விளங்க மிகச்சிறந்த அடித்தளம் அமைத்தவர் முன்னாள் முதல்வர் காமராஜர். அவர்தான் மாநிலத்தின் பல பகுதிகளிலும் பள்ளிகளை அமைத்தார். தொலைதூரம் சென்று கல்வி கற்கும் நிலையை மாற்றினார்.

துரதிருஷ்டவசமாக அந்த அடித்தளம் இன்று பலவீனப்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் அரசு பள்ளிகளில்தான் 60% மாணவர்கள் படிக்கிறார்கள். அரசு பள்ளிகளில் கல்வித் தரம் மிகவும் கீழே சென்றுள்ளது. தேசிய சராசரியைவிட அது குறைவாக உள்ளது.

அரசுப் பள்ளிகளில் 9-ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களில் 75% மாணவர்களால், இரட்டை இலக்க எண்களைக்கூட புரிந்துகொள்ள முடியவில்லை. 40% மாணவர்களால் அவர்களது பாடப்புத்தகங்களைக்கூட படிக்க முடியவில்லை. ஒரு ஆய்வு இதனை தெரிவிக்கிறது. கற்பித்தல் குறைபாடே இதற்குக் காரணம். ஆனால், எந்த கட்டுப்பாடும் இல்லாமல் அனைவருக்கும் தேர்ச்சி வழங்கப்படுகிறது. அவர்கள் பட்டப்படிப்பு படித்து முடிக்கிறார்கள்.

இது நாட்டுக்கு ஆபத்தான நிலையை ஏற்படுத்தக்கூடியது. சான்றிதழ்களை வைத்துக்கொண்டு பல இளைஞர்கள் வேலை கிடைக்காமல் தவிக்கிறார்கள். கல்வியில் ஏற்பட்டிருக்கும் இந்த பின்னடைவை நாம் மறுக்க முடியாது. தமிழ்நாடு சந்தித்து வரும் மற்றொரு பெரிய பிரச்சனை போதைப் பொருள்கள். ஆனால், போதைப் பொருள்கள் பெரிய பிரச்சினை இல்லை என்று மறுக்கக்கூடிய நிலை இங்கே இருக்கிறது. கோகெய்ன், ஹெராயின், மெத் என ரசாயண போதைப் பொருள்களின் பயன்பாடு அதிகரித்து வருகிறது.

பள்ளிகள், கல்லூரிகளில் இத்தகைய போதைப் பொருள்கள் விநியோகிக்கப்படுகின்றன. இதனை நாம் மறுப்பதால் பயனில்லை. இது நடக்கிறது என்பதை ஏற்றுக்கொண்டு, இதற்கு தீர்வு காண வேண்டும். ஆசிரிய சமூகம் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். மாணவர்கள் தவறான பாதையில் சென்றால், அது குறித்து பெற்றோர்களுக்கு தெரிவிக்க வேண்டும். ஆசிரியர் தினம் இதற்கான உறுதியை எடுப்பதற்கானதாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால், மணவர்களுக்கு எதிர்காலம் இல்லாமல் போய்விடும்.

மாணவர்களை பெரிதாக கனவு காண வைக்க வேண்டும். இதற்கான பொறுப்பை ஆசிரியர்கள் ஏற்க வேண்டும். பல மாணவர்களிடம் பெரிய கனவுகள் இல்லை. தங்கப் பதக்கம் வென்ற மாணவர்கள்கூட, சராசரி வேலை குறித்த கனவையே கொண்டிருக்கிறார். பலரின் கனவுகள் சிறியதாக உள்ளன. ஆலமரத்தின் விதையைப் போன்றவர்கள் மாணவர்கள். ஆனால், பலர் அதனை உணராமல் போய்விடுகிறார்கள்” என தெரிவித்தார்.

வழக்கு போடாமல் இருக்க தலா 2 ஆயிரம்.. காவலரை சிக்க வைத்த ரயில்வே ஊழியர்கள்..!

தஞ்சாவூரை சேர்ந்த மணிவண்ணன், ரமேஷ் ஆகிய இருவரும் சென்னையை அடுத்த கிழக்கு தாம்பரத்தில் தங்கி, தாம்பரம் ரயில்வே யார்டில் தற்காலிக ஊழியராக வேலை செய்து வருகிறார்கள். மணிவண்ணன், ரமேஷ் இருவரும் ரயில்வே யார்டு பகுதியில் அமர்ந்து மது அருந்தி உள்ளார்கள். அப்போது அங்கு சாதாரண உடையில் இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேர், தாங்கள் காவல்துறையினர் எனக்கூறி இருவரையும் தாக்கினர். மேலும் அவர்கள் மேல் வழக்கு போடாமல் இருக்க தலா ரூ.2 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.4 ஆயிரம் தரும்படி கேட்டார்களாம்.

ஆனால் கையில் பணம் இல்லாததால் மணிவண்ணன் அருகில் உள்ள ஏ.டி.எம். மையத்தில் பணத்தை எடுத்து கொடுத்திருக்கிறாராம். இருவரும் தாக்கியதில் காயம் அடைந்த மணிவண்ணன் மற்றும் ரமேஷ் குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். காயத்துக்கான காரணம் குறித்து மருத்துவர் கேட்டபோது, நடந்த சம்பவத்தை கூறினர். இதனால் மருத்துவமனையில் இருந்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் சேலையூர் காவலர்கள் நேரில் வந்து விசாரித்தனர்.

பின்னர் வழக்குப்பதிவு செய்து, ஏ.டி.எம். மையத்தில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்ததில் மணிவண்ணன் மற்றும் ரமேஷ் ஆகியோரை தாக்கி பணம் பறித்தது, தாம்பரம் காவல் நிலையத்தில் தலைமை காவலராக வேலை செய்து வரும் அருண்ராஜ் மற்றும் பிரண்ட்ஸ் ஆப் காவல்துறையில் வேலை செய்த சதீஷ்குமார் என்பதும் தெரியவந்தது. அதனை தொடர்ந்து அவர்கள் 2 பேரும் கைது செய்தனர்.

பின்னர் அவர்களிடம் நடத்தப்பட விசாரணையில் இவர்கள் இருவரும் பல்வேறு பகுதிகளில் இரவு நேரங்களில் சாலையோரம் மது அருந்துபவர்கள், ஜோடியாக நின்று பேசிக் கொண்டிருப்பவர்களை காவல்துறை என மிரட்டி பணம் பறித்தது விசாரணையில் தெரிய வந்தது.

போக்குவரத்து சிக்னல்களில் ஹாரன் ஒலி அதிகரித்தால் சிவப்பு விளக்கு மாறாமல் இருக்கும்..!

சென்னையில் போக்குவரத்து சிக்னல்கள் அருகே ஹாரன் மூலம் ஒலி மாசு ஏற்படுவதை தடுக்க, காவல்துறை நாட்டின் பிற மெட்ரோ நகரங்களில் பின்பற்றப்படும் நடைமுறையை சென்னை போக்குவரத்து காவல்துறையும் பின்பற்ற உள்ளது. அதாவது, ஒலியை அளவிடும் டெசிமல் மீட்டர்களை போக்குவரத்து சிக்னல்களுடன் பொருத்த திட்டமிடப்பட்டுள்ளது. சிக்னல்களில் நிற்கும் வாகன ஓட்டிகள் தொடர்ந்து ஹாரன் அடித்து கொண்டே இருக்கும் பட்சத்தில், ஒலி மாசு அனுமதிக்கப்பட்ட அளவை தாண்டினால், சிக்னலில் சிவப்பு விளக்கு எரிந்து கொண்டே இருக்கும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது.

முதற்கட்டமாக சென்னையில் இதனை நடைமுறைப்படுத்த தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியம் பரிந்துரையின் பேரில் 50 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட உள்ளது. இந்த நடைமுறை படிப்படியாக மதுரை, கோவை, திருச்சி ஆகிய நகரங்களுக்கும் விரிவுபடுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜாமீனில் வெளிவந்த ஐபிஎஸ் அதிகாரி தானே தீ வைத்த கொடுமை ..!

கடந்த 2012 -ஆம் ஆண்டு ஐபிஎஸ் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிப்பாளையம் பகுதியைச் சேர்ந்த அருண் ரங்கராஜன் சத்தீஷ்கர் மாநிலத்தில் பணியாற்றி வந்துள்ளார். அப்போது அவருடன் பணியாற்றிய பெண் ஐபிஎஸ் அதிகாரியை காதலித்து திருமணம் செய்து கொண்டார் அருண் ரங்கராஜன். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளன

இந்நிலையில், கடந்த ஆண்டு அருண் ரங்கராஜன் கர்நாடகாவுக்கு பணிமாற்றம் செய்யப்பட்டார். கர்நாடகாவில், கலாபுர்கி மாவட்டத்தில் பணியாற்றி வந்த அருண் ரங்கராஜனுக்கு, அங்கு பணியாற்றி வந்த உதவி ஆய்வாளர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அந்த உதவி ஆய்வாளரின் கணவருக்கு இவர்களது பழக்கம் தெரியவந்ததும், இது குறித்து அருண் ரங்கராஜனின் மனைவியிடம் தெரிவித்துள்ளார்.

பெண் காவல் அதிகாரி உடனான பழக்கம் குறித்து தனது மனைவியிடம் சொன்ன காவல் அதிகாரியை அருண் ரங்கராஜன் கடுமையாக தாக்கிய நிலையில், இது குறித்து அவர் காவல்துறையில் புகார் அளித்தார். இதையடுத்து ஐபிஎஸ் அருண் ரங்கராஜன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டதன் தொடர்ச்சியாக அருண் ரங்கராஜன் பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.

மேலும், இந்த விவகாரம் காரணமாக, அருண் ரங்கராஜனின் மனைவி, விவாகரத்து பெற்று பிரிந்து சென்றார். இதையடுத்து, பெண் காவல் உதவி ஆய்வாளரை ஈரோடு கோபிசெட்டிபாளையத்துக்கு அழைத்து வந்து அவருடன் வாழ்ந்து வந்துள்ளார் அருண் ரங்கராஜன். கடந்த பிப்ரவரி மாதம், அருண் ரங்கராஜன், அந்தப் பெண்ணை தாக்கிய நிலையில் அப்பெண் அளித்த புகாரின் பேரில் அவர் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். அருண் ரங்கராஜன் தனது வீட்டுக்கு தானே தீ வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

விஜயலட்சுமி கதறல்: அது எப்படிங்க மிஸ்டர் சீமான் நீங்க அப்படி நடிப்பீங்க?

மலையாள திரை உலகில் பெரும் புயலைக் கிளப்பி இருக்கிறது பெண்கள் மீதான பாலியல் சீண்டல்கள் தொடர்பான ஹேமா கமிட்டி அறிக்கை. இந்த விவகாரம் தமிழ்நாட்டிலும் பேசுபொருளாகி இருக்கிறது. இது தொடர்பாக நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானிடம் செய்தியாளர்கள் கேள்வி கேட்ட போது, அனைத்துத் துறைகளிலும்தான் பெண்கள் மீதான பாலியல் சீண்டல்கள், குற்றங்கள் நடைபெறுகின்றன. ஆனால் திரைத்துறையில் நடப்பதுதான் ஊடகங்களில் தெரிய வருகிறது என கூறியிருந்தார்.

சீமானின் இந்தப் பேட்டிக்கு பதில் தரும் வகையில் நடிகை விஜயலட்சுமி ஒரு வீடியோ பதிவை வெளியிட்டுள்ளார். அதில், சீமானிடம் செய்தியாளர்கள் கேள்வி கேட்க பச்சை குழந்தை போல முகத்தை வைத்துக் கொண்டு பதில் சொல்லியிருக்கிறார். அது எப்படிங்க மிஸ்டர் சீமான் நீங்க அப்படி நடிப்பீங்க? அவங்க கேள்வி கேட்டது பாலியல் குற்றச்சாட்டு பற்றி.. அதாவது நீங்க விஜயலட்சுமி என்ற நடிகையுடன் குடும்பம் நடத்தி அந்த பெண்ணின் வாழ்க்கையை 14 வருஷமாக சீரழிச்சு தமிழ்நாட்டுக்குள்ளேயே வாழவிடாமல் கர்நாடகாவில் தூக்கி அநியாயமாகப் போட்டீங்களே அதான் உலகத்துக்கே தெரிஞ்ச விஷயமாச்சே.

2008-ம் ஆண்டு நாங்க உங்க ஆபீஸுக்கு எங்க அக்காவுடைய குழந்தையை தூக்கிட்டுப் போயிட்டாங்கன்னு கதறிகிட்டு வந்து நின்னோமே. அப்ப என்ன மிஸ்டர் சீமான் நீங்க செய்தீங்க? என்னை காப்பாற்றினீங்களா? அதே ஆபீசில் வைத்து என்னை கதற கதற என் வாழ்க்கையை சீரழிச்சீங்களே ! மறந்துட்டீங்களா?

6 முறை நீங்க பிணையில் இருக்கும் போது கூட மதுரையில் நான் தேவைப்பட்டேன் அதை மறந்துவிட்டீங்களா? நீங்க எல்லா கேடு கெட்ட வேலையையும் செய்துவிட்டு போன வருஷம் ரூ50,000 கொடுத்துடறேன். திமுககாரங்க முன்னாடி பேசாதேன்னு சொன்னீங்களே? கயல்விழிக்கும் எதுவும் தெரிய வேண்டாம்னு சொன்னீங்களே? ஆனால் இந்த டீலை பேசிவிட்டு என்னையும் திமுகவையும் சேர்த்து வைத்து கொச்சை கொச்சையாக பேசுறீங்களே அதை மக்கள் மறந்துட்டாங்கன்னு நினைச்சீங்களா? என் கூட சப்போர்ட்டுக்குதான் வீரலட்சுமி வந்தாங்க. அவங்களை என்ன என்ன கொச்சையா நீங்க பேசினீங்க? காளியம்மாளை பிசிறு.. ம… என பேசியதை மக்கள் மறந்துவிடுவாங்களா? என விஜயலட்சுமி வீடியோ பதிவில் தெரிவித்துள்ளார்.

காவல்துறை மீதுள்ள ஆர்வத்தில் காவலர் உடையில் இருந்த பெண் கைது..!

கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி, ஆனைமலை மாசாணியம்மன் கோயிலுக்கு நேற்று முன்தினம் அமாவாசையையொட்டி ஏராளமான பக்தர்கள் வந்து சென்றனர். இதையொட்டி பாதுகாப்பு பணியில் காவல்துறையினர் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர். அப்போது சந்தேகத்திற்கிடமான வகையில் ஒரு பெண் காவலர் உடையில் நின்றிருந்தார். அந்த பெண் மீது மற்ற காவலர்களுக்கு சந்தேகம் எழுந்தது.

எனவே அவர்கள், அந்த பெண்ணிடம் விசாரித்தனர். அப்போது அந்த பெண், கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த ரீத்தா என்பதும், போலி பெண் காவலர் என்பதும் தெரியவந்தது. காவலர் வேலை மீதுள்ள ஆர்வத்தில் இவ்வாறு செய்ததாக கூறியுள்ளார். இதையடுத்து ஆனைமலை காவல்துறை வழக்குப்பதிந்து ரீத்தாவை கைது செய்தனர்.

உணவு பாதுகாப்பு துறை அதிரடி: தமிழ்நாடு முழுவதும் நூடுல்ஸ் கிடங்குகள் ஆய்வு செய்ய உத்தரவு..!!

தமிழ்நாட்டில் நூடுல்ஸ் விற்பனை, தயாரிப்பு கிடங்குகள் மற்றும் இதர இடங்களில் ஆய்வு செய்ய உணவு பாதுகாப்புத் துறை உத்தரவிட்டுள்ளது. நூடுல்ஸ் தயாரிக்கப்படும் பொருட்கள் தரச் சான்றிதழ் மற்றும் பேட்ச் மற்றும் ஆகியவை இடம் பெற்றுள்ளதா என ஆய்வு செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது. சிறுமி உயிரிழந்த விவகாரம் தொடர்பாக திருச்சியில் நூடுல்ஸ் மொத்த விற்பனையாளரிடம் 800 கிலோ காலாவதியான நூடுல்ஸ் பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.

திருச்சி மாவட்டம், அரியமங்கலம் கிராமத்தை சேர்ந்த ஜான் ஜூடி மெயில்ஸ் மகள் ஸ்டெஃபி ஜாக்லின். திருச்சியில் செயல்படும் தனியார் பள்ளியில் 11-ஆம் வகுப்பு படிக்கிறார். இதனால் சில நேரங்களில் கடைகளில் நூடுல்ஸ் வாங்கியும், சில நேரங்களில் வீட்டிலேயே சமைத்தும் நூடுல்ஸை சாப்பிடுவதை அவர் வழக்கமாகக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் நேற்று வழக்கம் போல் ஆன்லைனில் நூடுல்ஸ் பாக்கெட் ஆர்டர் போட்டுள்ளார். காலை பெற்றோர்கள் சிறுமியை எழுப்பிய பொழுது மாணவி உயிரிழந்துள்ளார். சிறுமி திடீரென உயிரிழந்தது அக்கம் பக்கத்தினருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. சில நிமிடங்களில் வீட்டிற்கே வந்துவிட்டது. அதைத் தொடர்ந்து அவர் நேற்று இரவு நூடுல்ஸ் செய்து சாப்பிட்டு இரவு படுத்துவிட்டார்.

இருப்பினும், காலை அவர் நீண்ட நேரமாகியும் எழவில்லை. குடும்பத்தினர் அவரை எழுப்ப முயன்ற போது தான் அவர் உயிரிழந்துவிட்டது தெரிய வந்துள்ளது. இதனால் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியும் ஏற்படுத்தி உள்ளது. அரியமங்கலம் காவல்துறைக்கு சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற விசாரணை மேற்கொண்ட போது, சிறுமியின் உடலை கைப்பற்றி திருச்சி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் சிறுமி உயிரிழந்ததையடுத்து தமிழகம் முழுவதும் நூடுல்ஸ் கிடங்குகளில் ஆய்வு செய்ய உணவு பாதுகாப்பு துறை உத்தரவு அளித்துள்ளது.