ஆசிரியர் தகுதித் தேர்வு மதிப்பெண் பட்டியலில் புகைப்படம்

பீகார் மாநிலத்தில் ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான தகுதித் தேர்வு, கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்றது. அதற்கான முடிவுகள் கடந்த மார்ச் மாதம் வெளியிடப்பட்டன. அதில் சில தொழில்நுட்ப பிரச்சினைகள் காரணமாக உருது, சமஸ்கிருதம் மற்றும் அறிவியல் ஆகிய 3 பாடங்களின் மதிப்பெண்கள் வெளியிடப்படாமல் இருந்தது.

அவை தற்போது சரி செய்யப்பட்டு அரசு இணையதளத்தில் மதிப்பெண் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் ரிஷிகேஷ் குமார் என்ற மாணவரின் மதிப்பெண் பட்டியலில், அவரது புகைப்படத்திற்கு பதிலாக மலையாள நடிகை அனுபமா பரமேஸ்வரனின் புகைப்படம் இடம்பெற்றுள்ளது. இந்த புகைப்படம் இணையதளத்தில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ரிப்பன் மாளிகையில் ஆய்வுக்கூட்டம்

சென்னை மாநகராட்சி பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சிப்பணிகள் தொடர்பான ஆய்வுக்கூட்டம் ரிப்பன் மாளிகையில் நடந்தது.

கே.என். நேரு தலைமையில் நடந்த இக்கூட்டத்தில், வளர்ச்சிப் பணிகளின் தற்போதைய நிலைக் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். அத்துடன் பணிகளை விரைவாக முடிக்கவும் உத்தரவிட்டார்.

திருநங்கையர்களுக்கான தமிழ்நாடு அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கல்

சென்னை – தியாகராய நகரில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில், திருநங்கையர்களுக்கான தமிழ்நாடு அரசின் நலத்திட்ட உதவிகளை, நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கப்பாண்டியன், உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் கீதா ஜீவன், பி.கே.சேகர்பாபு மற்றும்  மா. சுப்பிரமணியன் ஆகியோர் வழங்கினார்கள்.

இந்தநிகழ்ச்சியில் சென்னைக்குட்பட்ட நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். இந்நிகழ்வில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

2 வயது சிறுமிக்கு இதய அறுவை சிகிச்சைக்கு உதவிய உதயநிதி ஸ்டாலின்

திருப்பூர் நடராஜ்-வனிதா தம்பதியின் 2 வயது மகள் ஹேமிதா இதய நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். அவரது அறுவை சிகிச்சைக்கு உதவுமாறு நேற்று உதயநிதி ஸ்டாலின் அவர்களிடம் மனு அளித்தனர்.


உதயநிதி ஸ்டாலின் சிறுமி ஹேமிதாவை அப்போலோ குழந்தைகள் மருத்தவமனையில் சிகிச்சை வழங்க நடவடிக்கை எடுத்ததுடன், நேற்று நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

வி. கே. சசிகலா: ‘‘எல்லாத்தையும் சரிபண்ணிடுறேன்’’

வி. கே. சசிகலா தினந்தோறும் தொண்டர்களுடன் தொலைபேசியில் பேசி வருகிறார். அந்த வகையி்ல் சேலம் மாவட்டம் ஆத்தூரை சேர்ந்த சுந்தரத்திடம், ‘‘சேலத்தில் கட்சியினர் தன்னிச்சையான போக்கில் செயல்படுகிறார்கள். கட்சி தொண்டர்கள் கவலைப்படாம இருங்க. நான் வந்து எல்லாத்தையும் சரிபண்ணிடுறேன்’’, என்று வி. கே. சசிகலா தெரிவித்தார்.

கண்ணதாசன் அவர்களின் 95-வது பிறந்தநாளை முன்னிட்டு அமைச்சர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தல்

கவிஞர் கண்ணதாசன் அவர்களின் 95-வது பிறந்தநாளான இன்று தியாகராய நகரில் அமைந்துள்ள அவரது திருவுருவச்சிலைக்கு, நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கப்பாண்டியன், அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, பி.கே.சேகர்பாபு, மா. சுப்பிரமணியன், கயல் விழி செல்வராஜ், எஸ். ரகுபதி மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் மயிலை வேலு, கருணாநிதி, பிரபாகர் ராஜா ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.

கொரோனவால் வாழ்வாதாரம் இழந்த ஆசிரியைக்கு திமுக சார்பில் ரூ.50, 000 நிதியுதவி

கொரோனா பெரும்தொற்று இன்று  உலகெங்கும் பரவுவதை காட்டிலும் பல குடும்பங்களின் பொருளாதாரம் கேள்விக்குறியாக மாறியுள்ளது.

அதன்வரிசையில், கொரோனா பெருந்தொற்றால் தந்தையை இழந்து,தாயும் கவலைகிடமான நிலையில் தன் வாழ்வாதாரம் நொடிந்த நிலையிலிருந்த பெண் ஆசிரியையின் பொருளாதார நிலையை மனதில் கொண்டு, தி.மு.க கோயம்புத்தூர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் மருதமலை சேனாதிபதி அவர்களின் சார்பாக குறிச்சி வடக்கு பகுதி பொறுப்பாளர் எஸ்.ஏ. காதர் மற்றும் நூறாவது வட்ட பொறுப்பாளர் சுரேஷ்பாபு ரூ.50, 000 ரொக்கமாக இன்று வழங்கினர்.

தடுப்பூசி போடாவிட்டால் அரசு ஊழியர்களுக்கு சம்பளம் இல்லை

உலகையே இன்று கொரோனா ஆட்டிப்படைத்து கொண்டுள்ள நிலையில், கொரோனாவுக்கு எதிரான ஒரே பேராயுதம் தடுப்பூசிதான் என்பது அனைத்து மருத்துவ நிபுணர்களும் ஒத்துக்கொண்ட உண்மை. அதனால்தான் விரைவாகவும், அதிகபட்ச பேருக்கும் தடுப்பூசி போடுவதில் மத்திய, மாநில அரசுகள் ஆர்வம் காட்டுகின்றன.

ஆனால் மத்திய பிரதேச மாநிலம் உஜ்ஜைன் மாவட்ட ஆட்சியர் அஷீஷ் சிங், அரசு ஊழியர்கள் வருகிற ஜூலை 31-ந் தேதிக்குள் அரசு ஊழியர்கள் தடுப்பூசி செலுத்திக்கொண்டு அதற்கான சான்றிதழை காண்பித்தால்தான், அடுத்த மாதத்தில் அவர்களுக்கு சம்பளம் கிடைக்கும் என்று கூறிவிட்டார்.

பெண்களின் பாதுகாப்பு கடவுளின் கையில் தான் இருக்கிறது

உத்தர பிரதேசத்தின் மதுராவில் ரவுடிகள் சிலர் 17 வயது சிறுமிக்கு தொந்தரவு கொடுத்ததோடு அவளை 2-வது மாடியில் இருந்து கீழே தள்ளி விட்டனர். ஆபத்தான நிலையில் அந்த சிறுமி சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த கொடூர சம்பவத்தை கண்டித்து காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தனது டுவிட்டர் பதிவில், ‘உத்தரபிரதேசத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருகிறது. ‘மக்கள் உயிர் பயத்தில் நடுங்குகிறார்கள், ஆனால் அரசாங்கம் உறங்குகிறது’. மதுராவில் ரவுடிகளின் அட்டகாசத்தால் சிறுமி உயிருக்கு போராடுகிறாள். காட்டாட்சியில், பெண்களின் பாதுகாப்பு கடவுளின் கையில் தான் இருக்கிறது’ என்று கூறியுள்ளார்.

ஜே.பி.நட்டா: பா.ஜனதாவை தவிர பிற கட்சிகள் அனைத்தும் தற்போது தனிமைப்படுத்தலில் உள்ளன

பா.ஜனதா கட்சியின் முன்னோடியான ஜனசங்கத்தை நிறுவிய சியாமா பிரசாத் முகர்ஜியின் 68-வது நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி பா.ஜனதா சார்பில் டெல்லியில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் கலந்துகொண்டு பேசிய கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, எதிர்க்கட்சிகளை கடுமையாக குற்றம் சாட்டினார்.

அப்போது, பா.ஜனதாவை தவிர பிற கட்சிகள் அனைத்தும் தற்போது தனிமைப்படுத்தலில் உள்ளன. சில கட்சிகள் அவசர சிகிச்சை பிரிவில் கூட இருக்கின்றன. இந்த நாட்களில் எதிர்க்கட்சி தலைவர்களை மக்கள் மத்தியில் பார்க்க முடியவில்லை. டுவிட்டர் தளத்திலும், செய்தியாளர் சந்திப்புகளிலும்தான் காண முடிகிறது என தெரிவித்தார்.