ராஜ் தாக்கரே: மசூதிகளில் உள்ள ஒலிபெருக்கிகளை அகற்ற வேண்டும்..!

மகாராஷ்டிரா மாநிலத்திலுள்ள அனைத்து மசூதிகளிலும் பொருத்தப்பட்டுள்ள ஒலிபெருக்கிகளை அகற்ற வேண்டுமென மகாராஷ்டிரா நவ நிர்மாண் சேனா கட்சியின் நிறுவனத் தலைவர் ராஜ் தாக்கரே தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிராவை ஆளும் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா, அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ், பாஜக ஆகிய கூட்டணி கட்சிகளான மஹாயுதி கூட்டணியின் பதவிக்காலம் நவம்பர் 26-ம் தேதியுடன் முடிவடைகிறது. இத்தனை தொடர்ந்து 288 உறுப்பினர்களைக் கொண்ட மகாராஷ்டிரா சட்டசபைக்கு வரும் 20-ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்கு பதிவு நடத்தப்பட்டு வரும் 23-ஆம் தேதி வாக்கு எண்ணப்பட்டு தேர்தல் முடிவுகள் வெளிவரவுள்ளது.

இந்நிலையில், மஹாயுதி கூட்டணிக்கும், உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா, சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் ஆகிய கூட்டணி கட்சிகளான மகா விகாஸ் அகாடி கூட்டணிக்கும் ஆட்சியை கைப்பற்றுவதில் கடும் போட்டி நிலவுகிறது.

இந்நிலையில், மகாராஷ்டிராவில் அமைந்துள்ள மசூதிகளில் உள்ள அனைத்து ஒலிபெருக்கிகளையும் அகற்ற வேண்டும். மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையிலான ஒலிபெருக்கிகளுக்கு அனுமதி இல்லை. கோயில்களில் ஆண்டு முழுவதும் ஒலிபெருக்கிகள் பொருத்தப்பட்டிருந்தால் அவற்றையும் அகற்ற வேண்டும். ஆனால், கோயில்களில் எல்லா நேரமும் ஒலிபெருக்கிகள் பயன்படுத்துவது இல்லை.

கோயிலுக்குச் செல்லும் மக்கள் சில நிமிடத்தில் இறைவனின் பாதத்தை தொட்டு வணங்கிவிட்டு வெளிவந்து விடுகின்றனர். பாலாசாஹேப் தாக்கரேவின் மகன் முதல்வராக இருந்த போதும் நான் ஒலிபெருக்கிகளை எதிர்த்தேன். எங்கள் கட்சியை சேர்ந்த சுமார் 17,000 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஒலிபெருக்கிகளை அகற்றாவிட்டால் மசூதிகளுக்கு முன்பாக அனுமன் சாலிசாவை பாடுவோம் என்று நான் சொல்லி இருந்தேன்” என மகாராஷ்டிரா சட்டப்பேரவை தேர்தல் பரப்புரையில் ராஜ் தாக்கரே தெரிவித்தார்.

மருது சகோதரர்கள் போல கே.கே.எஸ்.எஸ்.ஆரும் , தங்கம் தென்னரசும் விருதுநகர் மண்ணின் தூண்..!

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழகம் முழுவதும் கள ஆய்வு பணிகளை மேற்கொண்டு வருகிறார். இதன் தொடர்ச்சியாக விருதுநகர் மாவட்டத்திற்கு 2 நாள் சுற்றுப்பயணமாக பல்வேறு அரசு நிகழ்ச்சியில் கலந்துக் கொள்வதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்றார். விருதுநகர் மாவட்ட புதிய ஆட்சியர் அலுவலகத்தைத் திறந்து வைத்து 40 ஆயிரம் நபருக்கு பட்டா வழங்கக் கூடிய இந்த மாபெரும் விழாவில் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு கொண்டார்.

மேலும், பட்டாம்புதூரில் நடைபெற்ற அரசு விழாவில் பங்கேற்ற தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது, விருதுநகர் மாவட்டத்தின் புதிய ஆட்சியர் அலுவலகத்தைத் திறந்து வைத்து 40 ஆயிரம் நபருக்கு பட்டா வழங்கக் கூடிய இந்த மாபெரும் விழாவில் கலந்துகொண்டு உங்களையெல்லாம் சந்திக்கக்கூடிய வாய்ப்பைப் பெற்றமைக்கு நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

மருது சகோதரர்கள் போல இந்த மண்ணுக்கு தூணாக விளங்கக்கூடிய மாவட்டச் செயலாளர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் அவர்களையும், தங்கம் தென்னரசு அவர்களையும் நான் மனதார பாராட்டுகிறேன், வாழ்த்துகிறேன். அந்த இருவருக்கும் மாவட்ட வளர்ச்சித் திட்டங்களுக்கு துணை நிற்கக்கூடிய மாவட்ட ஆட்சியர் திரு.ஜெயசீலன் உள்ளிட்ட அரசு அதிகாரிகளுக்கும் என்னுடைய வாழ்த்துகளையும், பாராட்டுக்களையும் நான் தெரிவித்துக் கொள்கிறேன் என மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

நீட் மாணவியை பலாத்காரம் செய்த பயிற்சி ஆசிரியர்கள் மீண்டும் கைது.

உத்தரபிரதேச மாநிலம் கான்பூரிலுள்ள நீட் பயிற்சி மையத்திற்கு கடந்த 2022-ஆம் ஆண்டு மாணவி பயிற்சிக்காக சென்றார். கடந்த ஜனவரி மாதம் உயிரியல் பயிற்சி அளிக்கும் 32 வயதான ஆசிரியர் சாஹில் சித்திக், மாணவியை தனது வீட்டிற்கு விருந்துக்கு அழைத்தார். மாணவி அங்கு சென்ற போது யாரும் இல்லை. அந்த தனிமையை பயன்படுத்திய ஆசிரியர் சாஹில் சித்திக், மாணவியை பலாத்காரம் செய்து வீடியோவில் படம் பிடித்தார்.

பின்னர் அதை வைத்து மிரட்டி 6 மாதமாக ஆசைக்கு இணங்க வைத்தார். இதே போல் நடந்த மற்றொரு விருந்தில் 39 வயதான வேதியியல் ஆசிரியர் விகாஸ் போர்வால் என்பவரும் மாணவியை பலாத்காரம் செய்தார். இந்நிலையில் இதே போல் இன்னொரு மாணவியை ஆசிரியர் சாஹில் சித்திக் பலாத்காரம் செய்த காட்சிகள் வைரலாகி அவர் கைது செய்யப்பட்டார்.

பின்னர் ஜாமீனில் வெளிவந்த அவர் ஹோலி பண்டிகைக்காக சொந்த ஊருக்கு சென்ற மாணவியை உடனே கான்பூருக்கு வரும்படி மிரட்டினார். இதில் பயந்து போன மாணவி காவல் நிலையத்தில் மீண்டும் புகார் கொடுத்தார். அதை தொடர்ந்து காவல்துறையினர் மீண்டும் பயிற்சி ஆசிரியர்கள் சாஹில் சித்திக், விகாஸ் போர்வால் ஆகியோரை கைது செய்தனர்.

ஆழியாற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம் கட்ட ஆய்வு பணிகள் துவக்கம்..!

ஆழியாற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம் கட்டுவதற்கான நடவடிக்கை மேற்கொள்வதற்காக ஆய்வு பணிகள் துவங்கப்பட்டுள்ளது. பொள்ளாச்சியை அடுத்த காளியப்ப கவுண்டன்புதூர் மற்றும் ஆத்து பொள்ளாச்சி கிராமத்தில் சுமார் 3500 க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இதில் காளியப்ப கவுண்டன்புதூர் கிராமத்துக்கு செல்லும் முக்கிய வழித்தடமான, மீன்கரை ரோட்டிலிருந்து 2 கி.மீ தூரத்தில் உள்ள ஆழியாற்றில் குறுக்கே சுமார் 250 மீட்டர் நீளம்,சுமார் 15 அடி அகலத்தில் தரைமட்ட பாலம் அமைந்துள்ளது.

இந்த வழித்தடத்தில் தினமும் நூற்றுக்கணக்கான இருசக்கர வாகனம் முதல் கனரக வாகனங்கள் சென்று வருவது மட்டுமின்றி, பொதுமக்கள் நடந்து செல்லும் முக்கிய வழித்தடமாக அமைந்துள்ளது.ஆனால், காளியப்ப கவுண்டன்புதூர் மற்றும் அதனை அடுத்த ஆத்துப் பொள்ளாச்சி கிராமத்துக்கு செல்ல வசதியாக பல ஆண்டுகளுக்கு முன்பு ஆழியாற்றில் கட்டப்பட்ட தரைமட்ட பாலத்தின் இருபுறமும் தடுப்புச்சுவர் இல்லாமல் உள்ளது. பகல் மற்றும் இரவு நேரத்தில் அந்த வழியாக வாகன போக்குவரத்து இருப்பதால், சில நேரங்களில் கனரக வாகனங்கள் தரைமட்டபாலத்தில் வேகமாக வரும்போது, பொதுமக்கள் அச்சப்படுகின்றனர்.

மற்றொருபுறம், ஆழியாற்றில் இருந்து கேரளாவுக்கு தண்ணீர் திறக்கும் போது பாலத்தை தொட்டு வெள்ளப்பெருக்கு செல்கிறது. இந்த தரைமட்ட பாலமானது தாழ்வாக அமைக்கப்பட்டுள்ளதால், பருவ மழைக்காலங்களில் ஆழியாற்றில் தண்ணீர் அதிகளவு வரும்போது இந்த தரைமட்ட பாலமானது மூழ்கி விடுவதுடன், அந்த வழித்தடத்தில் வாகன போக்குவரத்து துண்டிக்கப்படுகிறது.

இதன் காரணமாக அந்நேரத்தில், காளியப்ப கவுண்டன்புதூர் மற்றும் ஆத்துப்பொள்ளாச்சி கிராமத்துக்கு, அம்பராம்பாளையம் அல்லது நல்லூத்துக்குளி வழியாக சுமார் 5 கி.மீ தொலைவு வரையிலும் சுற்றி வரவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. ஆத்துப்பொள்ளாச்சி மற்றும் காளியப்ப கவுண்டன்புதூர் கிராமத்துக்கு செல்லும் முக்கிய வழித்தடமாக இருப்பதால், இந்த இந்த தரைமட்ட பாலத்தின் இருபுறமும் தடுப்புச்சுவர் அமைத்து,பாதுகாப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மழைக்காலத்தில் போக்குவரத்து தடைப்படுவதை தவிர்க்க, அதன் அருகேயே உயர்மட்ட பாலம் கட்ட, சம்பந்தபட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பல ஆண்டுகளாக பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

 

இந்நிலையில், இந்த தரைமட்ட பாலம் அருகேயே உயர்மட்ட பாலம் அமைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என, காளியப்ப கவுண்டன்புதூர் கிராம மக்கள் எண்ணி இருந்தனர். ஆனால், கடந்த அதிமுக ஆட்சி காலத்தில், அதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்காமல் கிடப்பில் போடப்பட்டது. மேலும், இந்த வழித்தத்தில் உயர்மட்டம் பாலம் அமைப்பதற்கான தொகை கேட்டு கருத்துரு அனுப்பப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால், இதற்கு பதிலாக, வேறு பகுதியில் உயர்மட்ட பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டதாக, பொதுமக்கள் வேதனை அடைந்தனர்.

இந்நிலையில் காளியப்ப கவுண்டன்புதூர் கிராமத்துக்கு செல்லும் வழியில் ஆழியாற்றை கடக்கும் தரைமட்ட பாலத்தை அப்புறப்படுத்தி, உயர்மட்ட பாலம் அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்களின் கோரிக்கையின்படி விரைவில் மேம்பால பணி மேற்கொள்வதற்கான ஆய்வு பணி அவ்வப்போது நடைபெற்று வருகிறது. இந்லையில், பொள்ளாச்சி திமுக எம்பி ஈஸ்வரசாமி நேற்று முன்தினம், ஆத்துப் பொள்ளாச்சியில் இருந்து காளியப்ப கவுண்டன்புதூர் செல்லும் வழியில் ஆழியாற்றை கடந்து செல்லும் தரைமட்ட பாலத்தை உயர்மட்ட பாலமாக மாற்றுவது குறித்து, வரைபடம் வைத்து ஆய்வு பணி மேற்கொண்டார்.

அப்போது அவர், நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் மேம்பாலம் கட்டுவதற்கான சாத்தியக்கூறு குறித்து கேட்டறிந்து, விரைந்து மேம்பாலம் அமைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என அப்பகுதி மக்களிடம் தெரிவித்தார். இந்த ஆய்வின் போது, ஒன்றிய திமுக செயலாளர்கள் வக்கீல் தேவசேனாதிபதி, ஜூமாலயா யுவராஜ் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

திருமாவளவன் கேள்வி: விஜய் ‘ஆர்கானிக்னா..!? , விசிக என்ன இன்-ஆர்கானிக்கா ..?!

“விஜய் ஆர்கானிக் மாஸ் என்கிறார்கள். அப்படியானால் விசிக என்ன இன்-ஆர்கானிக் மாஸா?” என தொல் திருமாவளவன் வேதியியல் முறையில் கேள்வி எழுப்பியுள்ளார். விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் நேற்று இரவு நடந்த விசிக நிர்வாகியின் இல்ல நிகழ்வில் விசிக தலைவர் தொல். திருமாவளவன் பங்கேற்றார். அந்நிகழ்வில் தொல். திருமாவளவன் பேசுகையில், “ஒரு ஊரில் ஒரு கொடியை ஏற்றுவது என்பதே நமக்கு யுத்தம், காவல் துறை அனுமதிக்காது.

அந்தப் பகுதியில் இருக்கிற மற்ற அரசியல் அமைப்புகளின் எதிர்ப்பு. அவ்வளவு எளிதாக ஒரு கொடியை நம்மால் ஊன்றிவிட முடியாது. ஒவ்வொரு மாவட்டத்திலும் கொடி ஊன்றுவதில் நமக்கு பெரும் போராட்டங்கள் இருந்திருக்கிறது. கடலூர் மாவட்டத்தில் எண்ணற்ற நிகழ்வுகள். இது அண்மைக் காலமாக மட்டுமல்ல தொடர்ந்து நிகழ்ந்து வருகிறது. இப்போதுதான் உள்ளாட்சி அமைப்புகளில் வெற்றி பெறுவதற்கான சூழலைச் சந்தித்து வருகிறோம். கடுமையான நெருக்கடிகள் எல்லாம் கடந்து பயணித்து வருகிறோம்.

கொடி யுத்தம் என்கிற பெயரிலேயே ஒரு புத்தகமே தொகுக்கலாம். நான் அடிக்கடி சொல்லுவேன், எனக்குப் பின்னால், பத்தாண்டுகளுக்கு பின்னால் கட்சி தொடங்கி இருந்தாலும் கூட பத்திரிகைகளிலும் தொலைக்காட்சிகளிலும் அவர்களை முன்னே சொல்லி என்னைப் பின்னால் கூறுவார்கள். அவர் பெயரை முன்னே போட்டு என் பெயரை பின்னால் போடுவார்கள். இதுதான் இந்த மண்ணின் உளவியல் எனக்கூறி இருக்கிறேன். இப்போதும் அது நடக்கிறது. நம்மை ஓரங்கட்ட பார்த்தாலும் ஒதுக்கப் பார்த்தாலும் நாங்களே மையம் என்பதை தீர்மானிப்போம். நீங்கள் தீர்மானிப்பது மையம் அல்ல நாங்கள் தீர்மானிப்பது தான் மையம்.

ஏன் திரும்பத் திரும்பத் திருமாவளவன் திமுக கூட்டணியில் தான் இருக்கிறோம் என கூறுகிறார். நானாகவா சொல்கிறேன்? நீங்கள் திரும்பத் திரும்பக் கேள்வி கேட்பதால் தான் அந்த பதிலைக் கூறுகிறேன். திமுக விடுதலை சிறுத்தைகள், காங்கிரஸ், இடதுசாரிகள் கூட்டணியில் அதிகாரத்தை பகிர்ந்து கொள்கிறோம். அவர்கள் மேஜர் பார்ட்னர் என்றால், நாங்கள் மைனர் பார்ட்னராக இருக்கிறோம். அதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கிறது. நான் தனியாகச் சென்று திமுகவிடம் டீல் பண்ணவில்லை, காங்கிரஸ் தனியாகச் சென்று கேட்கவில்லை.

நாங்கள் இடம் பெற்றிருக்கக் கூடிய கூட்டணியில் அங்கம் வகிக்கின்ற திமுகவை விமர்சிக்கும் போது அதற்கு நான் பதில் சொல்லவில்லை என்றால் நான் இந்தக் கூட்டணியில் எதற்கு நீடிக்கிறேன் என்பதே கேள்விக்குறியாக மாறும். திமுகவுக்காக சொல்லவில்லை, அந்த அணியில் இடம் பெற்றிருக்கும் விடுதலை சிறுத்தைகளுக்காக பதில் சொல்கிறோம். நாங்கள் வளரும் நிலையில் இருக்கிறோம். கொள்கை பிடிப்போடு இருக்கிறோம். அங்கே போனால் வளரலாமா, இங்கே போனால் வளரலாமா என்று ஒரே நேரத்தில் பேரம் பேசி அரசியல் செய்யவில்லை. அது எங்களுக்கு தேவை இல்லை.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஒரு அரசியல் சக்தியாக பரிணமித்திருக்கிறது. அனைத்துத் தரப்பினரும் ஆதரிக்கக் கூடிய பேரியக்கமாக உள்ளது. கொள்கைப் பிடிப்போடு இருந்தால் தான் எத்தனை சதி முயற்சிகள் நடந்தாலும் அதனை முறியடிக்க முடியும் என்பதற்கு திமுக ஒரு சான்று. இது திமுகவுக்கு வக்காலத்து வாங்குவது அல்ல. இது நமக்கு ஒரு பாடம். திமுக சந்தித்த நெருக்கடிகள் எல்லாம் அரசியல் களத்தில் விவரிக்கவே முடியாது. ஆனால், நாம் சந்தித்த நெருக்கடிகள் வேறு; அது திமுகவுக்கு கிடையாது.

விஜயகாந்த் அரசியலுக்கு வந்தபோது, இந்தக் கட்சிகள் எல்லாம் காணாமல் போய்விடும் என கூறினார்கள். இன்றைக்கு விஜய் வந்தவுடன் எவ்வளவு பயங்கரமான ஹைப். நம் மாநாட்டுக்கு எத்தனை லட்சம் பேர் வந்தார்கள், இத்தனை முக்கியத்துவம் கொடுத்து விவாதித்தார்களா? சினிமா ஹீரோவாகக்கூட இல்லை, திருமாவளவனால் எப்படி இத்தனை லட்சம் பேரை கூட்ட முடிந்தது என விவாதித்தார்களா? இது இந்தியா முழுக்கவே அப்படித்தான் உள்ளது.

ஆனால், 12 மணி… 1 மணி ஆனாலும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் காத்துக் கிடக்கின்றனர். விஜய் ஆர்கானிக் மாஸ் என்கிறார்கள். அப்படியானால் விசிக என்ன இன்-ஆர்கானிக் மாஸா? திருமாவளவன் தலைமையில் ஆட்சி அமையும் என யாரேனும் விவாதித்தார்களா? திருமாவளவன் தலைமையில் கூட்டணி அமையும் என யாரேனும் சொன்னார்களா? நான் அப்படிச் சொல்ல வேண்டும் என்று ஆசைப்படவில்லை, இதுதான் இந்த சமூகம். இப்படித்தான் நம்மை குறைத்து மதிப்பீடு செய்கிறார்கள்.

ஆசை காட்டினால் நாம் வெளியேறி விடுவோம் என நினைக்கிறார்கள். திருமாவளவன் சராசரி அரசியல்வாதி இல்லை என்பதை காலம் சொல்லும். அதனை புரிந்துகொள்வதற்கு உங்களுக்கு பத்து ஆண்டுகள் தேவைப்படும். யார் புதிய புதிய கட்சிகளை தொடங்கினாலும், எவ்வளவு பெரிய புகழ் பெற்றவர்களாக இருந்தாலும் அவர்கள் விடுதலை சிறுத்தைகளுக்கு போட்டியாக வர முடியாது. நம் களம் முற்றிலும் வேறானது. இந்தக் களத்தில் யாரும் நம்மோடு போட்டிக்கு வரமுடியாது.

இதை நம்மால் மட்டுமே செய்ய முடியும்; இப்படி ஒரு இயக்கத்தை நடத்த முடியும். நாம் களத்தில் மக்களுக்காக உண்மையாக போராடினால் பீடம் நம்மை நோக்கி வரும். அதிகாரம் நம்மை நோக்கி வரும். அரசியல் நம்மை நோக்கி வரும் என்ற அடிப்படையை புரிந்து கொள்ள வேண்டும். மக்கள் பிரச்சினைகளுக்காக நாம் போராட வேண்டும்” என தொல். திருமாவளவன் தெரிவித்தார்.

போதைப் பொருள் வைத்திருந்ததாக சின்னத்திரை நடிகை மீனா கைது..!

இந்நிலையில், போதைப் பொருள் வைத்திருந்ததாகச் சின்னத்திரை நடிகை மீனா சென்னை ராயப்பேட்டையில் உள்ள வணிக வளாகத்தில் கைது செய்யப்பட்டார். தமிழகத்தில் கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்களை குறி வைத்து நாளுக்கு நாள் போதை பழக்கம் அதிகரித்து காணப்படுகிறது. இதனால் காவல்துறை அதிரடி சோதனையில் போதைபொருள் கைப்பற்றப்பட்டு கைது நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னை பெருநகர காவல் எல்லையில் போதைப்பொருட்களை முற்றிலும் ஒழிக்கும் வகையில் காவல் ஆணையர் அருண் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அதன்படி போதை பொருட்களை விற்பனை மற்றும் கடத்தும் நபர்களை கைது செய்யும் வகையில் உதவி காவல் ஆணையர் ஒருவர் தலைமையில் போதைப்பொருள் நுண்ணறிவு தடுப்பு பிரிவு ஒன்று புதிதாக பெருநகர காவல்துறையில் தொடங்கப்பட்டுள்ளது. இந்த பிரிவினர் போதை பொருட்களை விற்பனை மற்றும் கடத்தும் நபர்கள் மீது மட்டுமே கண்டுபிடித்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

போதைப் பொருள் வைத்திருந்ததாகச் சின்னத்திரை நடிகை மீனா சென்னை ராயப்பேட்டையில் உள்ள வணிக வளாகத்தில் கைது செய்யப்பட்டார். சின்னத்திரை நடிகை மீனா கைது செய்யப்பட்டபோது 5 கிராம் மெத்தபெட்டமைன் என்ற போதைப் பொருள் வைத்திருந்ததாக தனிப்படை காவல்துறை தகவல் தெரிவித்துள்ளனர். போதைப் பொருள் வைத்திருந்தது தொடர்பாக இவரிடம் நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில், இவர் சின்னத்திரை நடிகைகள் மற்றும் துணை நடிகைகளுக்குப் போதைப்பொருள் சப்ளை செய்தது தெரியவந்துள்ளது.

தங்கை முறையுடைய +1 பயிலும் மாணவியை கர்ப்பமாக்கிய அண்ணன் போக்சோ சட்டத்தின் கீழ் கைது…!

படிக்க வந்த இடத்தில், ஆசைவார்த்தை கூறி தங்கையை கர்ப்பமாக்கிய அண்ணனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் +1 பயிலும் மாணவி ஒருவர், நேற்று முன்தினம் வகுப்பறையில் அமர்ந்திருந்தபோது திடீரென மயங்கி சரிந்தார். இதனால், திடுக்கிட்ட சக மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் அவரை மீட்டு அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கிருந்த மருத்துவர்கள் பரிசோதித்து பார்த்து விட்டு, மாணவி நிறைமாத கர்ப்பிணியாக இருப்பதாக கூறினர்.

தொடர் சிகிச்சையில் மாணவிக்கு பெண் குழந்தை பிறந்தது. தொடர்ந்து மாணவி மற்றும் குழந்தையை மேல் சிகிச்சைக்காக திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தகவலறிந்த நாமக்கல் சைல்டு லைன் அலுவலர்கள், மருத்துவமனைக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர். புகாரின்பேரில், திருச்செங்கோடு அனைத்து மகளிர் காவல்துறை விசாரணை நடத்தியதில் மாணவியின் கர்ப்பத்திற்கு காரணமான சாணார்புதூர் பகுதியைச் சேர்ந்த ரங்கராஜ் என்பவரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

இதுகுறித்து காவல்துறையினர் கூறுகையில், நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த சாணார்புதூர் கிராமத்தை சேர்ந்த கூலி தொழிலாளி ரங்கராஜின் பெரியம்மா மகளான 16 வயது மாணவி, கடந்தாண்டு ராசிபுரம் பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 10-ஆம் வகுப்பில் சேர்ந்தார். தாயாருக்கு உடல்நிலை சரியில்லாததால் மாணவி, சித்தி அங்காயி வீட்டில் தங்கி படித்துள்ளார். கடந்த 2023-ஆம் ஆண்டு மே மாதம் வீட்டில் யாரும் இல்லாத போது மாணவியிடம் தங்கராஜ் ஆசைவார்த்தை கூறி தகாத உறவில் ஈடுபட்டுள்ளார். தொடர்ந்து பலாத்காரம் செய்ததில் மாணவி கர்ப்பமானார்.

இதை அறிந்து பல்வேறு பகுதிகளில் உள்ள மருந்தகங்களில் மாணவிக்கு கருக்கலைப்பு மாத்திரை வாங்க முயற்சித்துள்ளார். ஆனால், மாத்திரை கிடைக்கவில்லை. இதனிடையே 10-ஆம் வகுப்பு படிப்பை முடித்த மாணவி, கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனது சொந்த ஊரான பள்ளிபாளையம் வந்துவிட்டார். பின்னர், அங்குள்ள மகளிர் பள்ளியில் +1 சேர்ந்து படித்து வந்துள்ளார்.

இந்நிலையில், நிறைமாத கர்ப்பிணியாக இருந்த மாணவிக்கு நேற்று முன்தினம் வகுப்பறையில் பிரசவ வலி ஏற்பட்டு மயங்கியுள்ளார். சக மாணவிகள், ஆசிரியர்கள் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தபோது, அங்கு பெண் குழந்தையை மாணவி பிரசவித்துள்ளார். விசாரணைக்கு பின்பு தங்கராஜை கைது செய்தது அப்பகுதியில் பெரும் பப்பரப்பை ஏற்படுத்தியது.

திமுக இளைஞரணி சார்பில் தாராபுரம் கலைஞர் நூலகம் திறப்பு..!

திருப்பூர் தெற்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் தாராபுரம் கலைஞர் நூலகம் திறப்பு விழாவில் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் மற்றும் மனித வள மேலாண்மைத்துறை அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ், ஈரோடு நாடாளுமன்ற எம்பி இ கே பிரகாஷ், பொள்ளாச்சி நாடாளுமன்ற எம்பி ஈஸ்வரசாமி, திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளர் இல. பத்மநாபன் ஆகியோர் நூலகத்தை ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தனர்.

இதனையடுத்து நூலகத்திற்குள் சென்று வைக்கப்பட்டுள்ள நூல்கள் அனைத்தையும் பார்வையிட்ட இரு அமைச்சர் மற்றும் இரண்டு எம்பிக்கள் மற்றும் திமுகவினர் மற்றும் இளைஞர் அணியினரோடு இணைந்து தங்கள் வருகையை பதிவேட்டில் பதிவு செய்ததோடு நீண்ட நேரம் அங்கிருந்த நூல்களை வாசித்து விட்டு புறப்பட்டுச் சென்றனர்.

இந்த நிகழ்ச்சியில் திருப்பூர் தெற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ஜெயக்குமார்.நகரச் செயலாளர் முருகானந்தம் 28 வது வார்டு கவுன்சிலர் ஸ்ரீதர். மாநில மகளிர் தொண்டர் அணி துணைச் செயலாளர் சத்யா பழனிக்குமார் மாநில விளையாட்டு மேம்பாட்டு அணி துணைச் செயலாளர் எஸ் கார்த்திக். ஒன்றிய செயலாளர்கள் எஸ் வி செந்தில் குமார் சந்திரசேகர், பேரூர் கழகச் செயலாளர் மக்கள் தண்டபாணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கூட்டுக் குடிநீர் திட்ட ராட்சத குடிநீர் குழாயில் ஓட்டை போட்டு தண்ணீர் திருடிய எடையத்தங்குடி ஜி.எஸ்.பிள்ளை தன்னாட்சி பொறியியல் கல்லூரி..!

கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் திட்ட ராட்சத குடிநீர் குழாயில் ஓட்டை போட்டு, அதிலிருந்து குழாய் இணைத்து முறைகேடாக தண்ணீர் திருடிய தனியார் கல்லூரிக்கு ரூ.2 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. நாகப்பட்டினத்தில் இயங்கி வரும் எடையத்தங்குடி ஜி.எஸ்.பிள்ளை தன்னாட்சி பொறியியல் கல்லூரி இயங்கி வருகின்றது.

இந்த கல்லூரி அருகில் கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் திட்ட ராட்சத குடிநீர் குழாய் அமைந்துள்ளது. ராட்சத குடிநீர் குழாயில் ஓட்டை போட்டு, அதிலிருந்து குழாய் இணைத்து முறைகேடாக தண்ணீரை எடையத்தங்குடி ஜி.எஸ்.பிள்ளை தன்னாட்சி பொறியியல் கல்லூரி திருடுவதாக தகவல் தெரிய வந்தது. அந்த தகவலின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வில் எடையத்தங்குடி ஜி.எஸ்.பிள்ளை தன்னாட்சி பொறியியல் கல்லூரி தண்ணீர் திருடியது கண்டுபிடிக்கப்பட்டது.
இத்தனை தொடர்ந்து இந்த எடையத்தங்குடி ஜி.எஸ்.பிள்ளை தன்னாட்சி பொறியியல் கல்லூரிக்கு ரூ.2 கோடி அபராதம் விதிக்க மாவட்ட நிர்வாகம் முடிவு எடுத்துள்ளது.

‘கலாம்-சபா’ நூலகத்தை மயில்சாமி அண்ணாதுரை திறந்து வைப்பு ..!

சென்னை வியாசர்பாடியில் ராணுவ விஞ்ஞானி வி.டில்லிபாபு நிறுவிய ‘கலாம்-சபா’ நூலகத்தை விஞ்ஞானி மயில்சாமி அண்ணா துரை நேற்று திறந்து வைத்தார். சென்னை வியாசர்பாடி மல்லிகைப்பூ காலனியில் பிறந்தவர் ராணுவ விஞ்ஞானி வி. டில்லிபாபு. இவர் தனது இல்லத்தில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கான நூலகம் மற்றும் வழிகாட்டி மையத்தை நிறுவியுள்ளார்.

இந்த திறப்பு விழாவில், மயில்சாமி அண்ணாதுரை பங்கேற்று, நூலகத்தை திறந்து வைத்தார். பின்னர் நிகழ்ச்சியில் மயில்சாமி அண்ணாதுரை பேசுகையில், டில்லிபாபுவின் இந்த முயற்சி, அவரைப்போல தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள அனைவருக்கும் முன்மாதிரியாக இருக்கும். உச்சம் தொட்ட ஒவ்வொருவருக்கும் பின்னால் ஒருவர் இருப்பார். வியாசர்பாடியில் உயர இருப்பவர்களுக்கு பின்னால் கலாம்-சபா நூலகம் இருக்கும். வியாசர்பாடியில் இருந்ததால் தான் உயர முடிந்தது என்ற நிலையை இந்த நூலகமும், டில்லிபாபுவின் முயற்சியும் உருவாக்கும் என மயில்சாமி அண்ணாதுரை பேசினார்.