‘வெற்றுச் சொம்பு மோடி’ – கர்நாடகாவில் களைகட்டும் காங்கிரஸ் பிரச்சாரம் !

நாட்டின் பதினெட்டாவது மக்களவைத் தேர்தல் 2024 -ஆம் தேர்தல் ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி அதாவது 7 கட்டமாக நடைபெற்று ஜூன் 4 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்நிலையில், கர்நாடகாவில் உள்ள 28 மக்களவைத் தொகுதிகளுக்கும் ஏப்ரல் 26 மற்றும் மே 7 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.

இந்நிலையில், கர்நாடக மாநிலத்தில் பாஜக தலைமையிலான அரசு செயல்பட்டு வந்தபோது, அங்கு பாஜக அமைச்சர்கள் மீது தொடர்ந்து ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்து வந்தது. மேலும், பாஜக அரசு அனைத்து ஒப்பந்ததாரர்களிடம் கமிஷன் கேட்கிறது என்பதை அடிப்படையாக வைத்து காங்கிரஸ் பாஜகவை தொடர்ந்து விமர்சனம் செய்தது.

அதன்படி அங்கு சட்டமன்ற தேர்தலுக்கு முன்னர் அனைத்து டெண்டர்களிலும் 40% கமிஷன் வாங்கும் பாஜகவினரை கிண்டல் செய்யும் விதமாக ‘PayCM – பே சிஎம்’ என்ற ‘க்யூ ஆர் கோடு’ ஒன்றை உருவாக்கி அதனை வைத்து பிரச்சாரத்தில் ஈடுபட்டுவந்தனர். அந்த க்யூ ஆர் கோடினை ஸ்கேன் செய்தால் பாஜகவினர் ஊழல்கள் வெளியாகும் வண்ணம் அதனை வடிவமைத்திருந்தனர்.

அதனைத் தொடர்ந்து தேர்தல் பிரச்சாரத்துக்காக கர்நாடகா வந்திருந்த பிரதமர் நரேந்திர மோடி, ”என்னை 91 முறை காங்கிரஸ் கட்சி அவமானப்படுத்தியுள்ளது என அழாத குறையாக பேசியிருந்தார். இதனை கிண்டல் செய்யும் விதமாக காங்கிரஸ் கட்சியினர், பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக, ‘CryPM’ என்ற புதிய பிரசாரத்தைத் தொடங்கினர்.

காங்கிரஸ் கட்சியின் இதுபோன்ற பிரச்சாரம் பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இதனால் அங்கு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றிபெற்று ஆட்சியை கைப்பற்றியது. இந்த நிலையில், தற்போது நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், வெற்றுச் சொம்பு என மோடியை குறிப்பிட்டு காங்கிரஸ் கட்சி விமர்சித்து வருகிறது.

தமிழ்நாட்டை போல கர்நாடக மாநிலத்துக்கும் மத்திய பாஜக அரசு ஏதும் செய்யாமல் இருந்து வருகிறது. அதனைக் குறிப்பிடும் வகையில், ‘வெற்றுச் சொம்பு மோடி’ என்ற பிரச்சாரத்தை காங்கிரஸ் கட்சி முன்னெடுத்து வருகிறது. இந்த பிரச்சாரம் கர்நாடக மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்று வருகிறது.