சேலத்தில் “ரோடு ஷோ” உடன் பிரச்சாரத்தை நிறைவு செய்த பழனிசாமி

தமிழ்நாட்டில் “நாளை மறுநாள் ஏப்.19-ம் தேதி நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அரசியல் கட்சி தலைவர்கள் சூறாவளி சுற்றுப்பயணம் சூடுபிடிக்க தொடங்கிய பிரச்சாரம், இன்று மாலையுடன் ஓய்ந்தது. இந்நிலையில், சேலம் மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் பி.விக்னேஷை ஆதரித்து, சேலம் அஸ்தம்பட்டி ரவுண்டாவில் தொடங்கி,சேலம் டவுன் வரை சுமார் 3 கிமீ., தொலைவுக்கு அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி ‘ரோடு ஷோ’ நடத்தி நிறைவு செய்தார்.

சுமார் 2 மணி நேரம் கொட்டிய பூ மழையில் நனைந்தபடி வந்த பொதுச்செயலாளர் பழனிசாமிக்கு, சாலையோரங்களில் நின்ற பொதுமக்களும், கடைகள், வர்த்தக நிறுவனங்களில் பணியாற்றியவர்களும் கைகளை உயர்த்தி காண்பித்து, ஆதரவு தெரிவித்தனர். அப்போது, “மத்திய, மாநில அரசுகள் விலைவாசியைக் கட்டுப்படுத்த தவறியதால், மக்கள் துன்பப்பட்டு வருகின்றனர். காவிரி பிரச்சினையில், அதிமுக அரசு உச்ச நீதிமன்றத்தில் போராடி தீர்ப்பை பெற்றது. அதை அமல்படுத்த பாஜக அரசு தயங்கியபோது, அதிமுக எம்பிக்கள் நாடாளுமன்றத்தை முடக்கி, காவிரி மீதான தீர்ப்பை அமல்படுத்த வைத்தனர்.

பிரதமரும், ராகுல் காந்தியும் மேகேதாட்டு அணையை கட்ட மாட்டோம் என்று கூறவில்லை. தேசிய கட்சிகளான காங்கிரஸும், பாஜகவும் மேகேதாட்டு அணையை கட்ட மாட்டோம் என்று தேர்தல் வாக்குறுதியில் கூறவில்லை. தமிழகத்தை, தேசியக் கட்சிகள் திட்டமிட்டு புறக்கணிக்கின்றன. எம்பிக்களுக்கான தேர்தல் நிதியை அதிமுக எம்பிக்கள் ரூ.367 கோடியை பெற்றுத் தந்தனர். ஆனால், திமுக எம்பிக்கள் எம்பிக்களுக்கான நிதியை 75 சதவீதம் செலவு செய்யாமல் விட்டனர். மத்திய, மாநில அரசுகள் மக்கள் விரோத ஆட்சியை நடத்துகின்றன. மத்திய அரசு, மக்களை மதம், சாதியை வைத்து பிரித்துப் பார்க்கிறது.

மக்களை சாதி, மதத்தை வைத்து, பிரித்துப் பார்ப்பதை அதிமுக ஒருபோதும் ஏற்காது. நாடாளுமன்றத்தில், தமிழகத்தின் பிரச்சினைகளை எடுத்துக்கூற, தனித்து நிற்க வேண்டும். எனவே, சுதந்திரமாக செயல்பட்டு தமிழக மக்களின் குரல் நாடாளுமன்றத்தில் ஒலிக்க அதிமுக தனித்து நிற்கிறது” என பழனிசாமி உரையாற்றினார்.