தமிழ்நாட்டில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற இன்னும் 4 நாட்களே உள்ள நிலையில் அரசியல் கட்சி தலைவர்கள் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து பரபரப்பான பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்நிலையில், திருநெல்வேலி அம்பாசமுத்திரம் பகுதியில் நடைபெறும் பிரச்சாரத்தில் திருநெல்வேலி நாடாளுமன்ற தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன், கன்னியாகுமரி பாஜக வேட்பாளர் பொன் ராதாகிருஷ்ணன், தூத்துக்குடி தமாகா வேட்பாளர் விஜயசீலன், தென்காசி வேட்பாளர் ஜான் பாண்டியன், விருதுநகர் வேட்பாளர் ராதிகா சரத்குமார், விளவங்கோடு சட்டமன்ற தொகுதி வேட்பாளர் நந்தினி ஆகியோர் போட்டியிடும் பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக கலந்துகொண்டார்.
அப்போது,வளர்ந்த தமிழகம் தான் வளர்ந்த பாரதமாக மாறும். கடந்த 10 ஆண்டுகளில் பாஜ மிக கடுமையாக உழைத்து மக்கள் நல திட்டங்களை தந்துள்ளது. நெல்லைக்கு புல்லட் ரயில் இயக்குவதற்கான திட்டம் வைத்துள்ளோம். தமிழ் மொழி, கலாசாரத்தை நேசிப்பவர்கள் எல்லோரும் பாஜகவை நேசிக்க ஆரம்பித்துள்ளனர். தமிழ் மொழிக்கு உலகமெங்கும் அங்கீகாரம் பெற்றுத் தருவோம். உலக சுற்றுலா வரைப்படத்தில் தமிழ்நாடு இடம் பெறும்.
உலகம் முழுவதும் திருவள்ளுவர் பண்பாட்டு மையம் என்கிற கலாசார மையம் ஏற்படுத்தப்படும். தென் தமிழ்நாட்டில் இந்த பகுதியை பார்க்கும் போது வீரமும், தேசப்பற்றும் நிறைந்துள்ளது. மருது சகோதரர்கள், வீரபாண்டிய கட்டபொம்மன், வேலு நாச்சியார் என துணிச்சல் மிக்கவர்கள் தங்களது வாழ்நாள் முழுவதும் அந்நியர்களை எதிர்த்து போராடியுள்ளனர். சுதந்திர போராட்ட களத்தில் முத்துராமலிங்க தேவர் தனது படைகளை சுபாஷ் சந்திர போஸிற்கு அனுப்பி வைத்தார்.
இந்தியா வளமான நாடாக வர வேண்டும். பாஜக தமிழ்மொழியை, தமிழ்நாட்டை, தமிழ் மக்களை நேசிக்கும் கட்சி ஆகும். இந்தியா தன்னிறைவு அடைய வஉசி செய்ததை நினைத்து பார்க்கிறேன். அவர் கப்பலோட்டி காட்டிய வழிகளால் இந்தியா பாதுகாப்பு துறையில் தன்னிறைவு பெற்றுள்ளது. காமராஜர் தேசபக்தியும், நேர்மையும் கொண்ட தலைவர்.
தமிழ்நாட்டிற்காக அயராது பணியாற்றியவர். அவரது வழியில் எங்களது லட்சியம் தூய்மையான அரசியல். இந்த கூட்டத்தில் ஒட்டு மொத்த தமிழகத்திற்கும் ஒரு செய்தியை சொல்ல போகிறேன். இத்தனை முறை தமிழ்நாட்டிற்கு நான் வந்துள்ளேன். பாஜகவுக்கும், எனக்கும் மிகப்பெரிய ஆதரவை மக்கள் தந்துள்ளனர். இதன் மூலம் புதிய இந்தியாவை படைக்க போகிறார்கள் என நரேந்திர மோடி உரையாற்றினர்.