மு.க.ஸ்டாலின்: பழனிசாமியின் வேடமெல்லாம் மக்களிடம் எப்போதும் எடுபடப் போவது இல்லை..!

திருவள்ளூர் மாவட்டம், மஞ்சம்பாக்கத்தில் நடைபெற்ற I.N.D.I.A.கூட்டணியின் மக்களவைத் தேர்தல் பரப்புரையில் மு.க.ஸ்டாலின் திருவள்ளூர் வேட்பாளர் திரு.சசிகாந்த் செந்தில் அவர்களையும், வட சென்னை வேட்பாளர் டாக்டர் கலாநிதி வீராசாமி அவர்களையும் அறிமுகப்படுத்தி I.N.D.I.A.கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டு எழுச்சியுரை ஆற்றினார்.

அப்போது, பழனிசாமி முதலமைச்சராக இருந்து தமிழ்நாட்டினுடைய எல்லா உரிமைகளையும் மொத்தமாக பா.ஜ.க.விடம் அடகு வைத்துவிட்டார்! அதனால்தான், அ.தி.மு.க. அடிமை ஆட்சி என்று அவருடைய ஆட்சியை விமர்சித்தோம்.

எடுத்துக்காட்டாக, சில நிகழ்வுகளை மட்டும் சொல்ல வேண்டும் என்றால், சிறுபான்மையினருக்கு எதிரான CAA சட்டத்தை ஆதரித்து ஓட்டுபோட்டது அ.தி.மு.க. நாடாளுமன்றத்தில் ஓட்டு போட்டது மட்டுமில்லாமல், “இந்தச் சட்டத்தால் எந்த முஸ்லீம் பாதிக்கப்பட்டார்கள்? என்று சட்டமன்றத்திலேயே ஆணவமாகக் கேட்டவர்தான் பழனிசாமி.

அதுமட்டுமில்லாமல், இதே வடசென்னையில் குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராகப் போராட்டம் நடத்திய நான் உள்பட, மரியாதைக்குரிய ப.சிதம்பரம், தோழர் பாலகிருஷ்ணன், சகோதரர் திருமாவளவன், பேராசிரியர் ஜவாஹிருல்லா, தம்பி உதயநிதி- என்று 8000 பேர் மேல் F.I.R. போட்டதுதான் பழனிசாமி ஆட்சி. பெண்கள், குழந்தைகள் என்றுகூட பார்க்காமல் எல்லோர் மேலும்ட் தடியடி நடத்தி ரசித்தார் பழனிசாமி.

இரண்டாவது எடுத்துக்காட்டு, மூன்று வேளாண் சட்டங்கள்! இதையும் ஆதரித்து உழவர்களுக்கு துரோகம் செய்த புண்ணியவான்தான் பழனிசாமி. பாஜகவுக்கு விசுவாசத்தை காட்டும் வேகத்தில், இன்னும் ஒருபடி மேலே போயி, “இந்த சட்டம் வந்தால் நம் விவசாயிகள் உத்தரபிரதேசம் சென்று வியாபாரம் செய்யலாம். இதை எதிர்ப்பவர்கள் விவசாயிகள் இல்லை, புரோக்கர்கள்”- என்று விவசாயிகளின் போராட்டத்தைக் கொச்சைப்படுத்தினார்.

இத்துடன் நிறுத்தினாரா? இல்லை! அய்யன் திருவள்ளுவர், தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர்- என்று தமிழ்நாடு பெரிதும் மதித்துப் போற்றும் ஆளுமைகள் மேல் பா.ஜ.க காவிச்சாயம் பூசியதைக் கைகட்டி, வாய்பொத்தி வேடிக்கை பார்த்தார்.

இவ்வளவு ஏன்? தன்னுடைய சொந்தக்கட்சித் தலைவரான எம்.ஜி.ஆர் அவர்களுக்கு பா.ஜ.க. காவிச்சாயம் பூசியதையே கண்டுகொள்ளாமல் இருந்தவர்தான் பழனிசாமி. அவர்தான், இந்தத் தேர்தலில் பா.ஜ.க.வின் உத்தரவுப்படி, பி-டீமாக நிற்கிறார்.

இதுகூட, அவருடைய சொந்த முடிவு இல்லை. பா.ஜ.க எழுதிக்கொடுத்த ஸ்க்ரிப்ட்டில் இவர் நாடாளுமன்றத் தேர்தலுக்காக நடிக்கிறார். பழனிசாமியின் வேடமெல்லாம் மக்களிடம் எப்போதும் எடுபடப் போவது இல்லை!என மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.