மு.க.ஸ்டாலின்: யார் விசுவாசமான அடிமை என்பதில் இவர்களுக்குள்ளே சண்டை..!

திருப்பூர் மாவட்டம், அவிநாசியில் நடைபெற்ற I.N.D.I.A.கூட்டணியின் மக்களவைத் தேர்தல் பரப்புரையில் மு.க.ஸ்டாலின் நீலகிரி தொகுதி வேட்பாளர் ஆ.இராசா மற்றும் திருப்பூர் தொகுதி வேட்பாளர் திரு. சுப்பராயன் அவர்களையும் அறிமுகப்படுத்தி I.N.D.I.A.கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டு எழுச்சியுரை ஆற்றினார்.

அப்போது, நாட்டையே பாழ்படுத்திய பா.ஜ.க.-வுடன் கள்ளக் கூட்டணி வைத்துக்கொண்டு பழனிசாமி வருகிறார். பழனிசாமிக்கும் ’தமிழ்நாடு பா.ஜ.க.வுக்கும்தான்’ பிரச்சினையே தவிர – அவருக்கும் மோடி – அமித் ஷாவுக்கும் எந்தப் பிரச்சினையும் இல்லை. யார் விசுவாசமான அடிமை என்பதில் வேண்டும் என்றால் இவர்களுக்குள்ளே சண்டையாக இருக்கலாம். ஆனால் எந்தக் காலத்திலும், பிரதமரை எதிர்த்து, ஒன்றிய பா.ஜ.க.வை எதிர்த்து, பழனிசாமியால் கட்சி நடத்தவும் முடியாது; அரசியல் நடத்தவும் முடியாது!

ஏன் என்றால், சசிகலாவிடம் இருந்து பன்னீர்செல்வத்தைப் பிரித்து தர்மயுத்தம் நாடகம் நடத்த வைத்ததே பா.ஜ.க.தான். சசிகலா சிறைக்குப் போன பிறகு, முதலமைச்சர் ஆன பழனிசாமியை – தங்கள் பக்கம் கொண்டு வந்ததும் பா.ஜ.க.தான். இரு துருவங்களாக இருந்த பழனிசாமியையும் பன்னீர்செல்வத்தையும் ஒன்றுசேர்த்ததும் பா.ஜ.க.தான். தினகரனைக் கைது செய்து சிறையில் அடைத்து – அவரையும் தங்களுடைய அடிமையாக மாற்றியதும் பா.ஜ.க.தான். இன்று பன்னீர்செல்வத்தையும் தினகரனையும் மிரட்டித் தேர்தலில் நிற்க வைத்திருப்பதும் பா.ஜ.க.தான். சசிகலாவை அரசியல் பக்கம் வரக்கூடாது என்று தடுத்ததும் பா.ஜ.க.தான். பழனிசாமியைத் தனியாக நிற்கவைத்ததும் பா.ஜ.க.தான்.

இப்படி டிவி சீரியலில் தீடீர்தீடீர் என்று ஆட்களையும் காட்சிகளையும் மாற்றுகிற மாதிரி – சதிநாடகங்களை அரங்கேற்றி இருக்கிறது பா.ஜ.க. தலைமை! உறுதியோடு சொல்கிறேன்! இந்தத் தேர்தலில் நேரடி பா.ஜ.க.வும் மண்ணைக் கவ்வும்! பா.ஜ.க.வின் தொங்குசதைகளும் படுதோல்வி அடைவார்கள்! என மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.