மு.க.ஸ்டாலின்: மோடியும் பாஜகவும் வீட்டுக்கும் கேடு, நாட்டுக்கும் கேடு!

திருப்பூர் மாவட்டம், அவிநாசியில் நடைபெற்ற I.N.D.I.A.கூட்டணியின் மக்களவைத் தேர்தல் பரப்புரையில் மு.க.ஸ்டாலின் நீலகிரி தொகுதி வேட்பாளர் ஆ.இராசா மற்றும் திருப்பூர் தொகுதி வேட்பாளர் திரு. சுப்பராயன் அவர்களையும் அறிமுகப்படுத்தி I.N.D.I.A.கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டு எழுச்சியுரை ஆற்றினார்.

அப்போது, மறுக்கப்பட்ட கல்வி – வேலைவாய்ப்பு – அதிகாரம் இதையெல்லாம் போராடிப் பெற்ற இயக்கம், திராவிட இயக்கம்! பிற்படுத்தப்பட்ட மக்கள் – மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்கள் – ஆதிதிராவிட மக்கள் குறிப்பாக, அருந்ததியின மக்கள்- சிறுபான்மையின மக்கள் என்று அனைத்துத் தரப்பு மக்களுக்கும் இடஒதுக்கீடு வழங்கி, சமூகநீதியின் ஒளிவிளக்காகத் திகழும் ஆட்சிதான் தி.மு.க. ஆட்சி!

ஆனால், மோடி மறுபடியும் ஆட்சிக்கு வந்தால் முதலில் இடஒதுக்கீட்டைத்தான் ரத்து செய்வார். ஏன் என்றால், பா.ஜ.க.வுக்கு சமூகநீதி என்றாலே அலர்ஜி! இந்தியா விடுதலை பெற்றபோது, பல நாடுகள் என்ன சொன்னார்கள்? ”பலதரப்பட்ட மக்கள் வாழும் நாடு, அமைதியாக இருக்காது – பெற்ற சுதந்திரத்தை இவர்கள் ஒழுங்காக காப்பாற்ற மாட்டார்கள்” என்று பல நாடுகள் கூறினார்கள். ஆனால், அவர்களின் கணிப்புகளைப் பொய்யாக்கி, உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடாக இந்தியா இன்று தலைநிமிர்ந்து நிற்கிறது என்றால் அதற்குக் காரணம், ஜனநாயகக் கட்டமைப்புடன் நாடு இயங்க அடிப்படையாக இருக்கும் அரசியலமைப்புச் சட்டம்தான்!

மோடி மறுபடியும் ஆட்சிக்கு வந்தால் நிச்சயம் புரட்சியாளர் அம்பேத்கர் உருவாக்கிய அரசியல் சட்டத்தையே மாற்றிவிடுவார்! அதனால்தான் சொல்கிறோம். மோடி ஆட்சிக்கு வருவது என்பது அரசியல் சட்டத்திற்கு ஆபத்து! ஜனநாயகத்திற்கு ஆபத்து! ஒட்டுமொத்த நாட்டிற்கே பேராபத்து! ஏன் என்றால், பத்தாண்டுகாலமாக பா.ஜ.க. ஆட்சியைப் பார்த்துவிட்டோம்!

நாட்டை எப்படியெல்லாம் சீரழித்திருக்கிறது! பெட்ரோல் – டீசல், கேஸ் – சிலிண்டர் விலை உயர்ந்துவிட்டது! எந்த அளவுக்குத் தொழில் வளர்ச்சி வீழ்ந்துடுச்சு! வேலையில்லாத் திண்டாட்டம் தலைவிரித்து ஆடுகிறது! மோடி மறுபடியும் வந்தால் இந்தியா சர்வாதிகார நாடாக மாறிவிடும்! நாட்டில் ஏழைகளின் எண்ணிக்கை அதிகரித்துவிடும்! கலவரம் செய்வது என்பது பா.ஜ.க.வின் D.N.A.-விலேயே ஊறியது.

நேற்றுகூட ஒரு செய்தி வெளியானது. எல்லோரும் பார்த்திருப்பீர்கள். இதே திருப்பூரைச் சேர்ந்த சகோதரி ஒருவர், வாக்கு கேட்டு வந்த பா.ஜ.க.வினரிடம் ஜி.எஸ்.டி. தொடர்பாக ஒரு கேள்வியைக் கேட்டிருக்கிறார். இதனால் ஆத்திரமடைந்த பா.ஜ.க.வினர் அந்த சகோதரியைத் தாக்கியிருக்கிறார்கள்! இதுதான் பா.ஜ.க. மக்களை மதிக்கும் இலட்சணம்! இதுதான் பா.ஜ.க பெண்களுக்குக் கொடுக்கும் மதிப்பு! மக்களை மதிக்காமல் அதிகாரத் திமிரில் அராஜகங்களும், கலவரமும் செய்யும் பா.ஜ.கட்சி திருப்பூரை மணிப்பூர் ஆக்கிடுவிடுவார்கள். மொத்தத்தில் மோடியும் பாஜகவும் வீட்டுக்கும் கேடு, நாட்டுக்கும் கேடு! என மு.க.ஸ்டாலின் பேசினார்.