கோயம்புத்தூர் மாவட்டம், சிட்டிபாளையத்தில் நடைபெற்ற I.N.D.I.A.கூட்டணியின் மக்களவைத் தேர்தல் பரப்புரையில் மு.க.ஸ்டாலின் கோவை வேட்பாளர் திரு.கணபதி ராஜ்குமார் அவர்களையும், பொள்ளாச்சி வேட்பாளர் திரு.ஈஸ்வரசாமி அவர்களையும், கரூர் வேட்பாளர் ஜோதிமணி அவர்களையும் அறிமுகப்படுத்தி I.N.D.I.A.கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டு எழுச்சியுரை ஆற்றினார்.
அப்போது, தென்னிந்தியாவின் மான்செஸ்டரான கோவைக்கு வந்திருக்கிறேன். தலைவர் கலைஞரை வளர்த்த அன்பான மக்கள் வாழும் கொங்கு மண்ணிற்கு வந்திருக்கிறேன். இயற்கை எழில் கொஞ்சும் பொள்ளாச்சியையும் உள்ளடக்கிய கூட்டத்திற்கு வந்திருக்கிறேன். கோவை, பொள்ளாச்சி, கரூர், ஈரோடு ஆகிய தொகுதி வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டத்தில் பங்கெடுத்துள்ள இந்தியாவின் எதிர்காலம், இந்தியாவின் நம்பிக்கை நாயகன் என் அருமை சகோதரர் ராகுல் காந்தி அவர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் என் மாலை வணக்கம்!
கோவை தொகுதியில் திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளராகப் போட்டியிடும் கணபதி ராஜ்குமார் அவர்கள் இந்த மண்ணின் மைந்தர்! கோவையின் வணக்கத்திற்குரிய மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு மக்கள் பணியாற்றியவர். அதற்கு முன்னால் பதினைந்தாண்டு காலம் கவுன்சிலராகவும் இருந்தவர். ஆங்கில இலக்கியம் படித்தவர். அதோடு, பத்திரிகைத் துறையில் டாக்டர் பட்டம் பெற்றவர். கோவை மக்கள் விரும்பும் அமைதிக் குணம் மிக்கவர் கணபதி ராஜ்குமார்! இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்ததும் கோவையின் அனைத்துத் தேவைகளையும் எடுத்துச் சொல்லிப் பல்வேறு திட்டங்களைக் கொண்டு வர கணபதி ராஜ்குமார் அவர்களை கோவை நாடாளுமன்ற தொகுதி மக்கள் உதயசூரியன் சின்னத்தில் பெருவாரியாக வாக்களித்து, வெற்றி பெற வைக்கவேண்டும்.
பொள்ளாச்சி தொகுதியில் திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளராகப் போட்டியிடும் ஈஸ்வரசாமி அவர்கள், கல்விப் பணியையும் சமூக சேவையையும் தனது நோக்கமாகக் கொண்டு செயல்படக் கூடியவர். கடந்த பத்து ஆண்டுகளாக கழகத்தின் பல்வேறு பொறுப்புகளை ஏற்று மக்கள் பணியையும் ஆற்றி வந்திருக்கிறார். அத்தகைய மக்கள் தொண்டர் ஈஸ்வரசாமி அவர்களை, நாடாளுமன்றத்திற்கு அனுப்பி வைக்க, உதயசூரியன் சின்னத்தில் உங்களது பொன்னான வாக்குகளை அளிக்கவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
அதேபோல் கரூர் நாடாளுமன்றத் தொகுதிக்கு அருமைச் சகோதரி ஜோதிமணி அவர்களுக்குக் கை சின்னத்திலும் வாக்களிக்க வேண்டும். மார்ச் 22-ஆம் தேதி என்னுடைய பரப்புரை பயணத்தை திருச்சியில் தொடங்கினேன். ஒவ்வொரு கூட்டமும் மாநாடுகளைப் போல் நடந்துக்கொண்டு இருக்கிறது! அந்த வரிசையில் இந்தக் கோவை – பொள்ளாச்சி கூட்டத்தையும் வெற்றி விழா மாநாட்டை போல் ஏற்பாடு செய்திருக்கும் அமைச்சர்கள், ஆற்றல்மிகு செயல்வீரர் முத்துசாமி அவர்களுக்கும், அவருக்கு தோளோடு தோள் நின்று களப்பணியாற்றி வரும் தம்பி டி.ஆர்.பி.ராஜா அவர்களுக்கும், பொள்ளாச்சிக்கு பொறுப்பேற்று இருக்கும் சக்கரபாணி அவர்களுக்கும், சாமிநாதன் அவர்களுக்கும், கரூரின் செயல்வீரர் நம்முடைய அன்புக்கினிய சகோதரர் செந்தில் பாலாஜி அவர்களுக்கும், ஒருங்கிணைந்த மாவட்டக் கழகச் செயலாளர்கள், நிர்வாகிகள் அனைவருக்கும் எனது வாழ்த்துகள்! பாராட்டுகள்!
மாநாடு போல நடந்துகொண்டிருக்கும் இந்தக் கோவை கூட்டத்திற்கு மகுடம் வைத்ததைப் போல், இந்தியாவின் இளந்தலைவர் சகோதரர் ராகுல் காந்தி அவர்கள் வருகை தந்திருக்கிறார்! நாடு சந்திக்க இருக்கும், இரண்டாம் விடுதலை போராட்டத்தில், காங்கிரஸ் கட்சியின் கைகளை வலுப்படுத்த, தி.மு.க. தோளோடு தோள் நிற்கிறது! தி.மு.க. எப்போதும், சோதனைக் காலத்தில் காங்கிரஸ் கட்சியோடு இருக்கும் கூட்டணிக் கட்சி! எப்போதும் வெல்லும் கூட்டணி, நம்முடைய கூட்டணி! அன்னை சோனியா காந்தி மீதும் சகோதரர் ராகுல்காந்தி மீதும் தமிழ்நாட்டு மக்கள் என்றும் தணியாத அன்பும் பாசமும் கொண்டவர்கள்! அப்படிப்பட்ட ராகுல் அவர்களை, நம்முடைய ஸ்டைலில் வரவேற்க வேண்டும் என்றால் ராகுல் அவர்களே வருக… புதிய இந்தியாவிற்கு விடியல் தருக என இந்தியாவின் தென்முனையான தமிழ்நாட்டில் இருந்து வரவேற்கிறேன்.
சகோதரர் ராகுல் அவர்களின் நடைப்பயணத்தை, நான்தான் கன்னியாகுமரியில் தொடங்கி வைத்தேன். மும்பையில் நடந்த நிறைவு கூட்டத்திலும் பங்கெடுத்தேன். ”மக்களிடம் செல்! மக்களிடம் இருந்து கற்றுக்கொள்!” என்ற பேரறிஞர் அண்ணா வழியில், சகோதரர் ராகுல், தன்னுடைய நடைப்பயணத்தில் மக்களுடன் மக்களாக இருந்து அவர்கள் பிரச்சினைகளைத் தெரிந்துகொண்டு, காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை உருவாக்கியிருக்கிறார். இந்த “எலக்ஷனின் ஹீரோ”காங்கிரசின் தேர்தல் அறிக்கைதான். தி.மு.க. தொடர்ந்து வலியுறுத்தும் சமூகநீதி அம்சங்கள் காங்கிரஸ் தேர்தல் அறிக்கையிலும் எதிரொலித்திருக்கிறது. முக்கியமான சில வாக்குறுதிகளை மட்டும் சொல்கிறேன்.
ஏழைப் பெண்களுக்கு ஆண்டுக்கு ஒரு இலட்சம் ரூபாய்!
பெண்களுக்கு ஒன்றிய அரசுப் பணிகளில் 50 விழுக்காடு இடஒதுக்கீடு!
நீட் தேர்வு விலக்கு!
நாடு முழுவதும் சாதிவாரிக் கணக்கெடுப்பு!
ஒன்றிய அரசின் 50 விழுக்காடு இட ஒதுக்கீட்டை உயர்த்த, சட்டத்திருத்தம்!
SC, ST, OBC மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை இரண்டு மடங்கு!
SC, ST, OBC பிரிவினர்களுக்கான காலிப்பணியிடங்கள் ஓராண்டுக்குள் நிரப்ப உத்தரவாதம்!
முக்கியமாக, இந்தக் கோவை – திருப்பூர் மண்டலத்தைக் கடுமையாக பாதித்திருக்கும் ஜி.எஸ்.டி. சட்டத்தை ரத்து செய்து, புதிய சட்டம்!
இங்கு வேளாண் பெருங்குடி மக்கள் வந்திருக்கிறீர்கள். வேளாண் இடுபொருட்களுக்கு ஜி.எஸ்.டி. வரி இருக்காது! விவசாயத்திற்குக் குறைந்தபட்ச ஆதரவு விலைக்குச் சட்ட அங்கீகாரம்!
இப்படி மாநிலங்களுக்கும், நாட்டுக்கும் நம்பிக்கையளிக்கும் வாக்குறுதிகளை ராகுல் காந்தி கொடுத்திருக்கிறார் என மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.