ஸ்டாலின் சூளுரை: I.N.D.I.A கூட்டணி ஆட்சி அமைந்தால், இந்தியா வளம் பெறும்..! தமிழகம் அதிகமாக வளம்பெறும்…!

தேனி மாவட்டம், லட்சுமிபுரத்தில் நடைபெற்ற I.N.D.I.A.கூட்டணியின் மக்களவைத் தேர்தல் பரப்புரையில் மு.க.ஸ்டாலின் பொதுக்கூட்டத்தில் தேனி தொகுதி திமுக வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வன், திண்டுக்கல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சச்சிதானந்தம் ஆகிய I.N.D.I.A.கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டு எழுச்சியுரை ஆற்றினார்.

அப்போது, நான் முதல்வரான பிறகு முதல் சந்திப்பில் இருந்து கோரிக்கை வைக்கிறேன். பிரதமரை நேரில் சந்தித்தும் பலனில்லை. மதுரை எய்ம்ஸ் போன்று, சென்னை மெட்ரோவும் அடிக்கல்லோடு நிற்கக் கூடாது என்று இப்போது மாநில அரசின் நிதியில் இருந்து, மெட்ரோ பணிகள் நடந்துக் கொண்டிருக்கிறது. இதனால் கடுமையான நிதி நெருக்கடி ஏற்பட்டு, பணிகள் மெதுவாக நடக்கும் நிலைமை. இந்தப் பணிகளால் ஆண்டுக்கு நமக்கு ஆகும் செலவு எவ்வளவு தெரியுமா? 12 ஆயிரம் கோடி ரூபாய். இத்தனை குளறுபடிக்கும் காரணம், மோடி. ஆனால், இத்தனையும் மறைத்து, பச்சைப் பொய் பேசுகிறார்.

அமைதியான இந்தியாதான் வளர்ச்சியான இந்தியாவாக வளர முடியும். நம்முடைய எதிர்காலத் தலைமுறைக்கு, அமைதியான இந்தியாவை உருவாக்கி வழங்கும் கடமை வாக்காளர்களான உங்கள் ஒவ்வொருவருக்கும் இருக்கிறது. அதை மனதில் வைத்து, இண்டியா கூட்டணிக்கு நீங்கள் வாக்களிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்வதற்காகத்தான் நான் வந்திருக்கிறேன்.

இண்டியா கூட்டணி ஆட்சி அமைந்தால், இந்தியா வளம் பெறும். குறிப்பாக, தமிழகம் அதிகமாக வளம்பெறும். இங்கே திராவிட மாடல் ஆட்சியை நாங்கள் அமைத்து மூன்றாண்டு காலமாக பல்வேறு சிறப்பான திட்டங்களைத் தீட்டி வருகிறோம். ஏராளமான திட்டங்களை செயல்படுத்திக் கொண்டிருக்கிறோம். மக்களுக்கு நான் செய்ய நினைத்த எல்லாவற்றையும் செய்து முடித்து விட்டேனா என்று கேட்டால், இல்லை. இன்னும் இன்னும் ஏராளமான பல வளர்ச்சித் திட்டங்களைத் தீட்ட வேண்டும். அதற்கு நமக்கு உடன்பாடான மத்திய அரசு, தமிழகத்தை மதிக்கும் மத்திய அரசு அமைய வேண்டும்.

மத்திய அரசின் கூட்டணியில் நாம் எப்போதெல்லாம் இருந்திருக்கிறோமோ, அப்போதெல்லாம் தமிழகத்துக்கு ஏராளமான திட்டங்களைக் கொண்டு வந்திருக்கிறோம். இது தமிழக மக்களான உங்களுக்கு நன்றாகத் தெரியும். அதிமுக மத்திய அரசில் கூட்டணி சேர்ந்தால், சுயநலத்துக்காகப் பயன்படுத்தும். திமுக மத்திய அரசில் இடம்பெற்றால், மாநிலத்தின் நலனுக்காகப் பயன்படுத்தும்.

திமுக ஆட்சியில்தான், வேளாண்மைக்குத் தனி நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்திருக்கிறோம். மூன்றே ஆண்டுகளில் இரண்டு லட்சம் விவசாயிகளுக்கு மின் இணைப்புகள் கொடுத்திருக்கிறோம். நீங்கள் கஜானாவைத் தூர்வாரினீர்கள். நாங்கள் டெல்டா மாவட்டங்களில் கால்வாய்களைத் தூர்வாரிக் காவிரியைக் கடைமடைக்கும் கொண்டு சென்றோம். ஒவ்வொரு ஆண்டும் கொள்முதலில் சாதனை செய்கிறோம். வேளாண் துறை சார்பில் கண்காட்சி, திருவிழா, சங்கமம் என்று நடத்தி, உழவர்கள் உள்ளத்தில் நம்பிக்கை விதைக்கிறோம். மண்ணும் செழிக்கிறது, மக்களும் செழிக்கிறார்கள், இதுதான் திராவிட மாடல் ஆட்சி.

பாஜகவின் தொங்கு சதைகளான பழனிசாமி, பன்னீர்செல்வம், தினகரன் என்று யாராக இருந்தாலும், பாஜகவுக்குக் கொடுக்கும் அதே தண்டனையைக் கொடுங்கள். பாஜகவுக்கு சொந்த செல்வாக்கு இல்லாததால் பன்னீர்செல்வம், தினகரன் போன்ற வாடகை மனிதர்களை வைத்து, தேர்தலைச் சந்திக்கிறது. ‘B-டீம்’-ஆகப் பழனிசாமியின் அதிமுகவைக் குத்தகைக்கு எடுத்து, தனியாக நிற்க வைத்திருக்கிறது. சொந்தமாக முடிவெடுக்க முடியாமல், கீ கொடுத்த பொம்மைபோல் அதிமுகவை ஆட்டுவிக்கிறது பாஜக.

இவர்களை மொத்தமாகத் தோற்கடிக்க வேண்டாமா? தமிழுக்கும், தமிழினத்துக்கும், தமிழகத்துக்கும் வஞ்சகம் செய்யும் பாஜக கூட்டத்துக்கும், துரோகம் இழைக்கும் பழனிசாமி, பன்னீர்செல்வம், தினகரன், பாமக ஆகிய அடிமைக் கூட்டத்துக்கும், திண்டுக்கல், தேனி மக்கள் தக்க பாடம் புகட்ட வேண்டும்” என முதல்வர் மு.க. ஸ்டாலின் உரையாற்றினார்.