சேலம் திமுக வேட்பாளர் செல்வகணபதிக்கு ஆதரவாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் செய்தார். அப்போது, “திமுகவுக்கு போடும் ஓட்டுதான் பிரதமர் மோடிக்கு வைக்கிற வேட்டு. ஏனென்றால், பிரதமர் மோடிதான் தமிழக மக்களுக்கு அடிக்கடி வேட்டு வைக்கிறார். தமிழக மக்களை கண்டுகொள்வதில்லை.
சேலத்தில் நடந்த திமுக இளைஞரணி மாநாடு 100 சதவீத வெற்றி கிடையாது. சேலம் திமுக வேட்பாளர் செல்வகணபதியை 3 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற வைத்தால்தான் திமுக இளைஞரணி மாநாடு 100 சதவீத வெற்றியை பெறும். 2021-ல் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு மு.க.ஸ்டாலின் முதல்வரானார். ஆனால், தவழ்ந்து முதல்வரானவர் ஒருவர் இருக்கிறார். தவழ்ந்து சென்ற புகைப்படத்தை காட்டியதால் எடப்பாடி பழனிசாமிக்கு என் மீது கோபம் வருகிறது. உதயநிதிக்கு வேறு வேலையே இல்லை என்கிறார். சசிகலாவுக்கு துரோகம் செய்தவர் இபிஎஸ். அவருக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த தமிழக மக்களுக்கும் துரோகம் செய்தவர் பழனிசாமி. அவரை போல திமுககாரர்கள் பச்சோந்தி கிடையாது.
பிரதமர் மோடி தமிழகம் வருவதில்லை. ஆனால், இப்போது தேர்தல் நேரம் என்பதால் அடிக்கடி தமிழகம் வருகிறார். இன்றுகூட சென்னை வருகிறார். 2026 வரை தமிழகத்தில் வீடு எடுத்து தங்கினாலும் பிரதமர் மோடியால் வெற்றிபெற முடியாது. நான் சவால் விடுகிறேன், அவரால் வெற்றிபெற முடியாது. அந்த அளவுக்கு தமிழகத்தின் கல்வி, மொழி, நிதி உரிமைகளை பறித்துவிட்டார் மோடி. தமிழக வெள்ள பாதிப்புகளை நேரடியாக பார்வையிடவில்லை. ஆனால், இப்போது தேர்தல் நேரம் என்பதால் அடிக்கடி தமிழகம் வருகிறார்.
பிரதமர் மோடியால் வாழுகிற ஒரே குடும்பம் அவரின் நண்பர் அதானி குடும்பம். அனைத்து பொதுத் துறையையும் அதானிக்கு கொடுத்துவிட்டார் மோடி. சேலம் உருக்காலையை தனியாருக்கு தாரை வார்த்தவர் பிரதமர் மோடி. திமுக ஆட்சியில் ஒரு குடும்பம்தான் வாழ்கிறது என்று மோடி சொல்கிறார். ஆமாம், ஒட்டுமொத்த தமிழகமும் திமுகவின் குடும்பம்தான். கருணாநிதியின் குடும்பம்தான். எங்களின் ஒரே லட்சியம் பாஜக அரசை ஓரங்கட்டுவதே.
சென்னையில் இருந்து நான் கிளம்பி 15 நாட்கள் ஆகிவிட்டது. எனது வீட்டுக்கு போனால் என்னை அடையாளம் தெரியாது. அந்த அளவுக்கு எனது குரல் மாறிவிட்டது. தேர்தலுக்கு இன்னும் 9 நாட்கள்தான் உள்ளன. கடந்த முறை 39 தொகுதிகளை வென்றோம். இந்த முறை 40 தொகுதிகளையும் வெல்ல வேண்டும்.
கடந்த சட்டப்பேரவை தேர்தலில் சேலத்தில் இருந்து ஒரே ஒரு எம்எல்ஏவை தான் திமுக சார்பில் தேர்ந்தெடுத்தீர்கள். எடப்பாடியில் நான் தெரு தெருவாக பிரச்சாரம் செய்தேன். எனினும் எங்களுக்கு பெரிய நாமத்தை போட்டீர்கள். இனியும் அந்த தவறை செய்ய மாட்டீர்கள் என நம்புகிறேன்” என உதயநிதி ஸ்டாலின் பேசினார்.