2024 நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் சூழலில் தமிழகத்தில் கூட்டணி கட்சிகளுடன் திமுக முதல் சுற்று பேச்சுவார்த்தையை நடத்தி முடித்துவிட்டது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னை திரும்பியுள்ள நிலையில், கூட்டணி கட்சிகளுடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு, கூட்டணி கட்சிகளுக்கான தொகுதிகள் ஒதுக்கீடு விவரம் அறிவிக்கப்பட உள்ளது. அதேசமயம் அதிமுக, பாஜக ஆகிய கட்சிகள் இன்னும் கூட்டணியை இறுதி செய்யாமல் தவித்து வருகின்றன.
கடந்த முறை பாஜக, அதிமுக, பாமக, தேமுதிக ஆகிய கட்சிகள் இணைந்து போட்டியிட்ட நிலையில், இந்த முறை, தேமுதிக, பாமக உள்ளிட்ட கட்சிகள் எந்த அணியில் சேரும் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இந்நிலையில் ஊடகம் ஒன்றுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேட்டியளிக்கையில், தமிழ்நாட்டில் யாருடன் கூட்டணி என்பது குறித்து தொடர்ந்து ஆலோசித்து வருகிறோம். அதிமுக கூட்டணிக்காக பாஜக கதவுகள் திறந்தே உள்ளன எனத் தெரிவித்தார். பாஜகவுடன் கூட்டணி கிடையாது என்று அதிமுக தலைவர்கள் கூறி வரும் நிலையில் அமித் ஷா பேட்டியால் பரபரப்பு ஏற்பட்டது.
தஞ்சாவூர் தனியார் மண்டபத்தில் தஞ்சாவூர், நாகை, திருவாரூர், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களின் பல்வேறு அமைப்புகளின் சார்பில் அதிமுக சார்பில் தேர்தல் அறிக்கை தயாரிப்பது தொடர்பான கருத்துக் கேட்புக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கருத்துக் கேட்புக் கூட்டத்தில் பங்கேற்ற, அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் பேசுகையில், “அதிமுக தலைவர்களான அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரை சிறுமைப்படுத்துகின்ற செயலை, எந்தக் கட்சி செய்தாலும் ஏற்றுக்கொள்ள முடியாது.
பாஜகவுடன் அதிமுகவுக்கு ஒட்டும் இல்லை, உறவும் இல்லை. பாஜக என்பது கழட்டிவிடப்பட்ட பெட்டி அதனை மீண்டும் இணைத்துக் கொள்ள மாட்டோம். பாஜக கடந்த 10 ஆண்டுகளில் எந்தெந்த மாநிலங்களுக்கு துரோகம் செய்தது என்பதை தேர்தலின் போது அம்பலப்படுத்துவோம் என ஜெயக்குமார் தெரிவித்திருந்தார். இதற்கிடையே ஏற்கனவே, பாஜக – அதிமுக இடையே மறைமுகமாக கூட்டணி பேச்சுகள் நடந்து வருவதாக கூறப்படுகிறது. தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், டெல்லி பாஜக தலைமை சார்பாக, எடப்பாடி பழனிசாமியுடன் பேசி வருவதாக கூறப்பட்டது.
ஆனால், உள்துறை அமைச்சர் அமித்ஷா பேட்டி குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் தஞ்சாவூரில் செய்தியாளர்களிடம் கூறுகையில், “பாஜக வேண்டுமானால் கூட்டணி கதவுகளை திறந்து வைத்திருக்கலாம். பாஜகவுக்கு அதிமுக கூட்டணி கதவுகள் சாத்தப்பட்டுவிட்டன. பாஜக கூட்டணிக்கு வரக்கூடாது என்பதற்காக கதவை சாத்திவிட்டோம். பாஜகவுடன் கூட்டணி வைக்க வேண்டாம் என்பதுதான் அதிமுக தொண்டர்கள் மற்றும் மக்களின் நிலைப்பாடு. அண்ணாமலையை நாங்கள் ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை. அதிமுக முன்வைத்த காலை பின் வைக்காது” என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.