தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 17, 18-ம் தேதிகளில் பெய்த அதி கனமழை காரணமாக மாவட்டத்தில் பெரும்பாலான பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார். தொடர்ந்து மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை விரைவுபடுத்தினார். மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு பகுதிக்கும் தனித்தனியாக அமைச்சர்கள், அதிகாரிகள் நியமிக்கப்பட்டு நிவாரண பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
மேலும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புதுடெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்து தென்மாவட்டங்களில் வரலாறு காணாத வகையில் 100 ஆண்டுகள் இல்லாத கனமழை பெய்துள்ளது. இதனை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும், பேரிடர் நிவாரண நிதியில் இருந்து ரூ.2 ஆயிரம் கோடியை அவசர நிவாரண நிதியாக மக்களின் வாழ்வாதார உதவிக்காவும், தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களின் தற்காலிக சீரமைப்பு பணிகளுக்காகவும் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார்.
இதையடுத்து, மத்திய குழுவினர் தூத்துக்குடி மாவட்டத்தில் மழை வெள்ள பாதிப்புகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இதன் தொடர்ச்சியாக கடந்த சில தினங்களுக்கு முன்பு தமிழக முதலமைச்சருடன் தொலைபேசியில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, தூத்துக்குடி மாவட்டத்தில் மழை வெள்ள பாதிப்புகளை நேரில் ஆய்வு செய்ய மத்திய நிதி அமைச்சரை அனுப்பி வைப்பதாக உறுதியளித்தார்.
அதன்படி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் நேற்று தூத்துக்குடி மாவட்டத்தில் மழை வெள்ள பாதிப்புகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடிக்கு வந்த அவரை மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் வரவேற்றனர். தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்த நிர்மலா சீதாராமன், அங்கு வைக்கப்பட்டிருந்த மழை வெள்ள பாதிப்புகள் குறித்த புகைப்படங்களை பார்வையிட்டார். மாவட்டத்தில் மழை வெள்ளம் ஏற்படுத்திய பாதிப்பு குறித்து தமிழக அரசின் உயர் அதிகாரிகள் அவரிடம் விளக்கி கூறினர்.
தொடர்ந்து ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் தலைமையில் வெள்ள பாதிப்புகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு மத்திய தகவல் ஒலிபரப்பு, மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை இணை அமைச்சர் எல்.முருகன், தமிழக நிதி மற்றும் மனிதவள மேலாண்மை துறை, மின்சாரத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தூத்துக்குடி மக்களவை தொகுதி உறுப்பினர் கனிமொழி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆய்வின் போது, தமிழக அரசின் பல்வேறு துறைகளை சார்ந்த உயர் அதிகாரிகள் தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து விளக்கமாக மத்திய நிதியமைச்சரிடம் எடுத்துக் கூறினர்.