கடந்த வாரம் வங்கக்கடலில் உருவான மிக்ஜாம் புயல் ஆந்திராவில் கரையை கடந்தாலும் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் , திருவள்ளூர் மாவட்டங்களை சூறையாடிவிட்டு சென்று விட்டது. சென்னையில் பேயாக பெருமழை கொட்டித்தீர்த்துள்ளது. இதனால் எங்கும் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. நகர் பகுதிகளில் வெள்ளம் வடிந்தாலும் பல பகுதிகளில் மரங்கள் முறிந்து விழுந்துள்ளன.
பள்ளிகள், கல்லூரிகளை வெள்ளநீர் சூழ்ந்துள்ளன. இந்நிலையில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழக அரசு சார்பாக நிவாரண உதவி நிதி அறிவிக்கப்பட்டுள்ளது. புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நியாயவிலை கடைகள் மூலமாக வெள்ள நிவாரணமாக 6,000 ரூபாய் ரொக்கமாக வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். வெள்ள நிவாரணம் வழங்குவதற்கான டோக்கன் விநியோக்கும் பணி வரும் 16-ம் தேதி தொடங்குகிறது.
சென்னையில் உள்ள அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும், நியாயவிலை அட்டைக்கு விண்ணப்பித்தவர்களுக்கும் நிவாரணம் வழங்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் நேற்று பல்வேறு இடங்களில் நிவாரண உதவிகளை வழங்கி விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்களிடம் பேசுகையில், நன்றாக வேலை பார்த்துள்ளீர்கள். கடந்த மழை வெள்ளத்தை விட இந்த முறை சிறப்பாக நடவடிக்கை எடுத்துள்ளீர்கள் என்று மத்தியக்குழு ஆய்வு செய்து பாராட்டியுள்ளனர்.
கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தில் வங்கிகளில் பணத்தை எடுத்துக் கொள்கிறார்கள் என்று கூறுகின்றனர். கோவிட் பாதிப்பின் போது வழங்கப்பட்ட நிவாரண தொகை ரூ.2000 அனைவருக்கும் முழுமையாக சென்றடைந்தது. அதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். அதைப்போன்று பாதிக்கப்பட்டவர்கள் யாரும் விட்டு போய்விடக் கூடாது என்பதற்காக தான் தலைவர் முடிவு எடுத்து ரூ.6000 ரொக்கமாக கொடுக்க முடிவு செய்துள்ளார் என தெரிவித்தார்.
மேலும் நிவாரண தொகையை நியாயவிலை கடைகள் மூலம் வழங்குவதற்கு பதிலாக உரிமைத்தொகை போல வங்கிக் கணக்குகளிலேயே செலுத்தலாமே எனக் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு உதயநிதி ஸ்டாலின், “உரிமைத் தொகை வழங்கப்பட்டபோது முதல் மாதம் மினிமம் பேலன்ஸ் இல்லை என்பதால், வங்கியில் பணம் போட்டதை ஏராளமானோருக்கு பிடித்தம் செய்யப்பட்டு விட்டது. பாதிக்கப்பட்ட மக்கள் யாரும் விடுபட்டு விடாமல் அனைவருக்கும் சென்று சேரும் வகையிலே ரொக்கமாக வழங்கப்பட உள்ளது. கொரோனா காலத்தில் பணம் வழங்கப்பட்டது போல இப்போது வெள்ள நிவாரணம் நியாயவிலை கடைகள் மூலமாக வழங்கப்படும்.” என தெரிவித்தார்.
அப்போது ஒரு நிருபர், மத்திய அமைச்சர் இது என்ன ஏடிஎம்மா? கேட்ட உடன் பணத்தை கொடுக்க முடியும் என்று கூறியுள்ளாரே என்று கேட்டதற்கு, ‘‘நாங்கள் என்ன அவங்க அப்பா வீட்டு காசவா கேட்டோம். தமிழ்நாட்டு மக்கள் கொடுத்த வரிப்பணம் தானே? மற்ற மாநிலங்களுக்கெல்லாம் கேட்காமல் கொடுக்கிறீர்கள் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.