தமிழ்நாட்டில் பாஜக- அதிமுக இடையேயான மோதல் உக்கிரமடைந்தது. இதனால் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக அதிமுக அறிவித்தது. ஆனால் டெல்லி மேலிடம் அதிமுகவை சமாதானப்படுத்த முயற்சித்ததாக கூறப்பட்டது. இதனை அதிமுக திட்டவட்டமாக நிராகரித்துவிட்டது. பாஜகவுடனான கூட்டணி முறிந்தது முறிந்ததுதான். இஸ்லாமியர்கள் அதிமுகவை நம்பலாம்.
இஸ்லாமியர்கள் அதிமுகவுக்கு வாக்களிக்க வேண்டும் என அக்கட்சிப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி லோக்சபா தேர்தல் பிரசாரத்தை கூட தொடங்கிவிட்டார். இதனால் தமிழ்நாடு பாஜக பெரும் நெருக்கடியில் சிக்கி இருக்கிறது. வலிமையான வாக்கு வங்கி கொண்ட அதிமுகவின் இடத்தை எந்த கட்சியை வைத்து நிரப்புவது என்பது குறித்து தீவிர ஆலோசனைகள் நடைபெற்று வருகின்றன.
இதன் ஒருபகுதியாக தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை டெல்லி சென்றார். டெல்லியில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை மட்டும் அண்ணாமலை சந்தித்தார். இதனிடையே அதிமுக கூட்டணி முறிவைத் தொடர்ந்து விவாதிக்க இன்று சென்னையில் தமிழ்நாடு பாஜக மாவட்ட தலைவர்கள் மற்றும் மாநில நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தை அண்ணாமலை அறிவித்திருந்தார். தற்போது இந்த கூட்டம் ரத்து செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
மேலும் அண்ணாமலையின் 3-ம் கட்ட பாதயாத்திரை நாளை முதல் தொடங்க இருந்தது. இதுவும் திட்டமிட்டபடி நடைபெறாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு பாஜகவின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், மேட்டுப்பாளையத்தில் இருந்து அக்டோபர் 6-ந் தேதி அண்ணாமலையின் 3-வது கட்ட பாதயாத்திரை தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படி அடுத்தடுத்து பாஜகவின் நிகழ்ச்சிகள் ரத்து, ஒத்திவைப்பு என அறிவிக்கப்பட்டு வருவது தமிழ்நாடு பாஜகவில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.