‘குட் மார்னிங்’ செய்தி அனுப்புவதற்கு 18% ஜிஎஸ்டி விதிக்கப்படும் என்ற செய்தி முகநூலில் வைரலாகப் பரவி வருகிறது. இந்தச் செய்தி குறித்து இந்தியா ஃபஸ்ட் மாத இதழ் சார்பாக உண்மை சரிபார்ப்பு நடத்தியபோது, இது 8 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு இந்தி செய்தித்தாளில் நையாட்டமாக எழுதப்பட்டது என்பது தெரியவந்தது.
பொதுவாக சில செய்திகள் காட்டுத்தீ போல சமூக ஊடகங்களில் பரவுகின்றன. அதன் உண்மை உண்மைத்தன்மையை ஆராய்ந்தால் அந்த செய்தி கடைசியில் அது வதந்திகளாக இருக்கின்றது. அப்படி செய்தி தான் கடந்த 8 ஆண்டுகளாக ஏப்ரல் மாதங்களில் பரவி வருகின்றது. சமீபத்தில், ‘குட் மார்னிங்’ குறுஞ்செய்திகளை அனுப்புவதற்கு இனி 18 சதவிகித ஜிஎஸ்டி விதிக்கப்படும் என்று கூறும் ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. இந்த விதி ஏப்ரல் மாதம் முதல் அமலுக்கு வரும் என்றும், மொபைல் கட்டணத்துடன் இதையும் செலுத்த வேண்டும் என்றும் அந்த வைரல் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் செய்தியின் நம்பகத்தன்மையை உறுதி செய்வதற்காக இந்தியா ஃபஸ்ட் மாத இதழ் உண்மை சரிபார்ப்புக் குழு விசாரித்ததில், இது 2018-ஆம் ஆண்டு மார்சு 2-ந் தேதி ‘நவ்பாரத் டைம்ஸ்’ (Navbharat Times) நாளிதழில் வெளியான ஒரு நையாண்டிச் செய்தி என்றும், அதன் பகுதிகள் இணையத்தில் பகிரப்பட்டு வருகின்றன என்றும் கண்டறியப்பட்டது.
டிசி உபாத்யாய் என்ற ஃபேஸ்புக் பயனர் மார்ச் 16-ந் தேதி அன்று தனது ஃபேஸ்புக்கில், “காலை வணக்கம் செய்திகளை அனுப்புவதை நிறுத்துங்கள்!” என்ற தலைப்பில் ஒரு பதிவைப் பகிர்ந்திருந்தார் . இந்தப் பதிவில் காணப்படும் செய்தித்தாள் துண்டில், “நீங்களும் உங்கள் நண்பர்கள், உறவினர்கள் மற்றும் அறிமுகமானவர்களுக்குக் காலை வணக்கம் செய்திகளை அனுப்பினால், எச்சரிக்கையாக இருங்கள். இது புதிய நிதியாண்டில் உங்கள் பணத்திற்குப் பெரும் சுமையாக இருக்கப் போகிறது.
ஏப்ரல் 1 முதல், அனுப்பப்படும் காலை வணக்கம் செய்திகளுக்கு அரசாங்கம் வரி விதிக்கும். இது ஜிஎஸ்டி-யைப் போலவே ‘காலை வணக்கம் வரி’ (Good Morning Tax) என வசூலிக்கப்படும். மொபைல் தொலைத்தொடர்பு அமைச்சகத்தின் தலைமைச் செயலாளர் லேக் பால் அவர்களின் கூற்றுப்படி, நீங்கள் அனுப்பும் ஒவ்வொரு காலை வணக்கம் செய்தியையும் வாட்ஸ்அப் மெசஞ்சர் கண்காணிக்கும். அத்தகைய செய்திகளுக்கு 18 சதவீத ஜிஎஸ்டி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அந்தச் செய்தித்தாள் துண்டில் இன்னும் சில விஷயங்கள் விரிவாக எழுதப்பட்டுள்ளன.
எங்கள் குழுவினர் இந்தச் செய்தியைக் கண்டபோது, அந்தச் செய்தித்தாள் துண்டைக் கவனமாகப் படித்தனர். கட்டுரையை உற்று நோக்கியபோது, செய்தித்தாள் துண்டிற்குக் கீழே இருந்த ஒரு சிவப்புப் பட்டை எங்கள் கவனத்தை ஈர்த்தது. அதில், “Bura na mano Holi hai” (தப்பா நினைக்காதீங்க, இது ஹோலி) என்று எழுதப்பட்டிருந்தது.
இந்த வதந்தி 2018-ல் ‘நவ்பாரத் டைம்ஸ்’ (Navbharat Times) நாளிதழில் ஹோலி பண்டிகைக்காக வெளியிடப்பட்ட ஒரு நையாண்டி (Satire) கட்டுரையானது. ஆகையால் “குட் மார்னிங்” மெசேஜ்களுக்கு ஜிஎஸ்டி விதிக்கப்படும் என்று எந்த அரசு அறிவிப்பும் இல்லை. எனவே இத்தகைய ஆதாரமற்ற செய்திகளை உண்மை என நம்பி சமூக ஊடகங்களில் வதந்தியை பரப்பாதீர்கள்.