மணிப்பூர் வன்முறைகள் தொடர்பாக பிரதமர் மோடி அறிக்கை தாக்கல் செய்ய வலியுறுத்தி 26 எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி எம்.பிக்கள் இன்று நாடாளுமன்றம் காந்தி சிலை முன்பாக போராட்டம் நடத்துவோம் என அறிவித்திருந்தனர். அத்துடன் நாடாளுமன்றத்தின் இரு சபைகளிலும் மணிப்பூர் பிரச்சனை தொடர்பாக விவாதிக்க வேண்டும் என திமுக, காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் எம்பிக்கள் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ்களை கொடுத்தும் உள்ளனர்.
மணிப்பூர் விவகாரம் குறித்து அண்மையில் பேசியிருந்த பிரதமர் மோடி, சத்தீஸ்கர் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்திருப்பதாகவும் சுட்டிக்காட்டி இருந்த நிலையில் இன்று காலை திடீரென நாடாளுமன்ற வளாகத்தில் காந்தி சிலை அருகே ராஜஸ்தான் மாநில பாஜக எம்.பிக்கள் ஒன்று கூடினர். ராஜஸ்தானில் ஆளும் காங்கிரஸ் அரசில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்துள்ளதாக கூறி கண்டன முழக்கங்களை பாஜக எம்.பி.க்கள் எழுப்பினர். இது தொடர்பான பதாகைகளையும் அவர்கள் ஏந்தி போராட்டம் நடத்தி உள்ளனர்.