மத்திய கல்வித்துறை இணை அமைச்சர் சுபாஷ் சர்க்கார் அவர்கள் 2 நாள் சுற்றுப்பயணமாக ஆந்திரா மற்றும் தமிழ்நாட்டிற்கு மேற்கொண்டு, பயணத்தை முடித்துக்கொண்டு சென்னை விமான நிலையத்திலிருந்து டெல்லி புறப்பட்டார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த போது சுபாஷ் சர்க்கார், “அனைத்து உயர்கல்வி நிறுவனங்களின் தரத்தை மேம்படுத்துவதன் மூலமாக தகுதியான மாணவர்களை உருவாக்கி முடியும்.” என்று தெரிவித்தார்.
மேலும் அவர் பேசுகையில், புதிய தேசிய கல்விக்கொள்கை இதற்காகவே கொண்டுவரப்பட்டது. தமிழ்நாட்டில் கல்வியின் தரம் நன்றாக இருக்கிறது. புதிய தேசிய கல்விக்கொள்கைக்கு எதிராக தமிழ்நாடு அரசு எந்தவிதமான கருத்தையும் மத்திய அரசிடம் எழுத்துப்பூர்வமாக சமர்பிக்கவில்லை. புதிய தேசிய கல்விக்கொள்கை தமிழ்நாடு அரசு எதிர்க்கவில்லை.
புதிய கல்விக்கொள்கையில் சில முரண்பாடுகள் இருப்பதாக தமிழ்நாடு அரசு கருத்து தெரிவித்து உள்ளது. புதிய கல்விக்கொள்கை குறித்து தமிழ்நாடு அரசு புரிந்துகொள்ள முயற்சி செய்து வருகிறது. தமிழ்நாடு அரசுடன் பேச்சுவார்த்தை நடத்துவதன் மூலமாக புதிய கல்விக்கொள்கையை நாங்கள் நிச்சயம் அமல்படுத்துவோம். புதிய தேசிய கல்விக்கொள்கையை அமல்படுத்துவது தமிழ்நாடு அரசின் பரிசீலனையில் இருக்கிறது.
புதிய தேசிய கல்விக்கொள்கையில் உள்ள மூன்றாவது மொழி இந்தி உள்ளிட்ட வேறு எந்தமொழியாக வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால், தாய் மொழிக்கே முக்கியத்துவம் வழங்கப்பட வேண்டும். புதிய கல்விக்கொள்கையை இந்தியை திணிக்கவில்லை. மாநிலங்கள் அவரவர் விருப்பத்துக்கு ஏற்றபடி கல்விக்கொள்கையை வடிமைக்கிறார்கள். ஆனால் அது தரமானதா என்பதை ஆராய வேண்டும்.
புதிய கல்விக்கொள்கை தரமானது அதை அனைவரும் பின்பற்ற வேண்டும். 3, 5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படுவதன் மூலமாக மாணவர்களின் கல்வித்தரம் மேலும் உயரும். தேர்ச்சியை அடிப்படையாக கொண்டு கல்வி வழங்கும் விதத்தை முடிவு செய்யலாம். மத்திய மாநில அரசுகள் புதிய கல்விக்கொள்கை குறித்து பேசி வருகின்றன.” என தெரிவித்தார்.
சுபாஷ் சர்க்கார் பேசியது குறித்து திமுக எம்.எல்.ஏ டிஆர்பி ராஜா அவர்கள் அவரது ட்விட்டர் பதிவில், “முற்றிலும் தவறான செய்தி!!! கடந்த 17.6.21 அன்று மாண்புமிகு தமிழ்நாடு முதமைச்சர் அவர்கள் மாண்புமிகு பிரதமரை நேரடியாக சந்தித்து தேசிய கல்விக் கொள்கையை முழுமையாக எதிர்த்து கடிதம் கொடுத்துள்ளார்.. ! இதோ அதற்கு சாட்சி..! தினந்தோறும் பொய்க் கதைகளை கூறுவதே பாஜக வின் வேலையாக உள்ளது.. !!!” என குறிப்பிட்டுள்ளார்.