“அமித் ஷாவிற்கு பகிரங்க சவால் விடுத்த மு.க. ஸ்டாலின்”

பிற மாநிலங்களில் கட்சிகளை உடைத்து ஆட்சியமைக்கும் பாஜக வியூகம் தமிழகத்தில் எடுபடாது. “அமித்ஷா அல்ல.. எந்த ஷா வந்தாலும் சரி, உங்களால் தமிழ்நாட்டை ஆள முடியாது. நீங்கள் எத்தனை பரிவாரங்களை சேர்த்துக் கொண்டு வந்தாலும் ஒரு கை பார்க்க திமுக தயார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சவால் விடுத்துள்ளார்.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே ஆண்டார் குப்பத்தில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டு சுமார் 2 லட்சம் பயனாளிகளுக்கு ரூ.357.43 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கிய பின்னர் ரூ.418.15 கோடி மதிப்பிலான முடிவுற்ற திட்டப் பணிகளை தொடங்கி வைத்தார். மேலும் ரூ.390.74 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.

இந்த விழாவில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசுகையில், “இந்தியாவில் உள்ள அனைத்து மாநில உரிமைகளுக்காகவும் தான் தமிழகம் போராடுகிறது. மாநில உரிமைகளை கேட்பது தவறா? நீங்கள் எதையும் செய்யாததால் தான், ஆளுநருக்கு எதிராக உச்சநீதிமன்றம் வரை சென்று வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை பெற்றோம். திமுகவின் பவர் என்ன என்பது தமிழக மக்களுக்கு மட்டுமின்றி, இந்திய மக்களுக்கே இப்போது தெரிந்திருக்கிறது.

மத்திய அமைச்சர் அமித் ஷாவால் நீட் தேர்வில் விலக்கு அளிக்க முடியும் என்று சொல்ல முடியுமா? இந்தியை திணிக்க மாட்டோம் என்று சொல்ல முடியுமா? தமிழகத்திற்கு இவ்வளவு சிறப்பு நிதி கொடுத்துள்ளோம் என்று பட்டியல் போட முடியுமா? தொகுதி மறுசீரமைப்பில் தமிழகத்தின் எண்ணிக்கை குறையாது என்று வாக்குறுதி கொடுக்க முடியுமா? பிற மாநிலங்களில் கட்சிகளை உடைத்து ஆட்சியமைக்கும் பாஜக வியூகம் தமிழகத்தில் எடுபடாது. நீங்கள் எத்தனை பரிவாரங்களை சேர்த்துக் கொண்டு வந்தாலும் ஒரு கை பார்க்க திமுக தயார்.

அடுத்த ஓராண்டில் நீங்கள் எப்படியெல்லாம் எங்களை மிரட்டுவீர்கள் என்று எங்களுக்கு தெரியும். உங்களுடைய உருட்டல் மிரட்டல்களுக்கு அடிபணிகிற அடிமைகள் அல்ல நாங்கள். டெல்லியின் ஆளுகைக்கு தமிழ்நாடு என்றுமே அடிபணியாது. மற்ற மாநிலங்களில் கட்சிகளை உடைத்து, ரெய்டு மூலம் மிரட்டி ஆட்சி அமைக்கிற உங்களோட ஃபார்முலா தமிழ்நாட்டில் வேலைக்கு ஆகாது. தமிழ்நாடு எப்போதும் டெல்லிக்கு அவுட் ஆப் கண்ட்ரோல்தான். தமிழகத்தில் 2026லும் திராவிட மாடல் ஆட்சிதான். ” என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சவால் விடுத்துள்ளார்.