குணால் கம்ரா: முதலமைச்சரே சொன்னாலும் மன்னிப்பு கேட்க முடியாது..!

மகாராஷ்டிரா முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் வேண்டுகோள் விடுத்திருந்தாலும் துணைமுதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டேவை கேலி செய்து பாடியதற்காக மன்னிப்பு கேட்க முடியாது என குணால் கம்ரா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். ஸ்டாண்ட் – அப் காமெடியனான நடிகர் குணால் கம்ரா, சமீபத்தில் தனது யூடியூப் சேனலில் ஒரு வீடியோவை வெளியிட்டார். அதில், சிவ சேனாவை உடைத்து, MLA -க்கள் சிலரை தன் பக்கம் இழுத்து பிறகு பாஜக கூட்டணியில் இணைந்து ஒரு துரோகி ஆதாயம் அடைந்தார் என விமர்சித்து இருந்தார். மேலும் அவர், சிவ சேனா உருவாக பாஜகதான் காரணம். சிவ சேனா இரண்டாக உடையவும் பாஜகதான் காரணம் என்று அந்த விடூயோவில் இருந்தது. இதனால் மகாராஷ்டிரா அரசியலில் பெரும் புயல் வீசிக் கொண்டிருக்கிறது.

நடிகர் குணால் கம்ராவுக்கு எதிராக சிவசேனா தொண்டர்கள் வன்முறையில் இறங்கினர். குணால் கம்ராவின் நிகழ்ச்சி நடைபெற்ற ஸ்டுடியோவை சிவசேனா தொண்டர்கள் சூறையாடினர். மகாராஷ்டிரா சட்டசபையிலும் இந்த விவகாரம் எதிரொலித்தது. குணால் கம்ரா மீது காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளனர். இதனிடையே துணை முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டேவை கேலி செய்ததற்காக, குணால் கம்ரா மன்னிப்பு கேட்க வேண்டும் என்று முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் அறிவுறுத்தி இருந்தார்.

இந்நிலையில், குணால் கம்ரா வெளியிட்டுள்ள அறிக்கையில், முதலமைச்சர் பட்னாவிஸ் கேட்டுக் கொண்டாலும் கூட ஏக்நாத் ஷிண்டேவை கேலி செய்து பாடியதற்காக மன்னிப்பு கேட்கவே முடியாது; எந்த வன்முறை கும்பலுக்கும் பயப்படமாட்டேன். நீங்கள் இடிக்க விரும்புகிற இடத்தை சொல்லுங்கள். அங்கே மீண்டும் நிகழ்ச்சி நடத்தி காட்டுகிறேன். எனக்கு எதிராக வன்முறைதான் சரி என களமிறங்கியவர்கள் மீது சட்டம் பாயுமா? என் ஸ்டுடியோவை சூறையாடியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா? என குணால் கம்ரா அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.