ராகுல் காந்தி கடும் விமர்சனம்: ஏழைகள், விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களை கொல்லும் ஆயுதங்கள் பாஜவின் கொள்கைகள்..!

பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி போன்ற பாஜக.,வின் கொள்கைகள் ஏழைகள், விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களை கொல்லும் ஆயுதங்கள் என பாஜகவை ராகுல் காந்தி கடும் விமர்சனம் செய்துள்ளார். ஜார்க்கண்ட் 81 உறுப்பினர்கள் கொண்ட சட்டப்பேரவைக்கு நவம்பர் 13 மற்றும் 20 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்று நவம்பர் 23-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்று தேர்தல் முடிவுகள் வெளிவர உள்ளது.

இந்நிலையில், மீண்டும் ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைமையிலான கூட்டணியும், ஆட்சியை பிடிக்க பாஜக கூட்டணி கட்சிகள் இடையே கடும் போட்டி நிலவுகிறது. ஜார்க்கண்ட் சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு ஜாம்ஷெட்பூரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் கலந்து கொண்டு ராகுல் காந்தி உரையாடினார்.

அப்போது, பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி போன்ற பாஜக.,வின் கொள்கைகள் ஏழைகள், விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களை கொல்லும் ஆயுதங்கள். நாட்டை ஜாதி, மதம் மற்றும் மொழி அடிப்படையில் பிளவுபடுத்த பாஜக-ஆர்எஸ்எஸ் அரசியல் செய்து கொண்டிருக்கிறது. அரசியலமைப்பை காக்க காங்கிரஸ் விரும்புகிறது. தொழிலதிபர்கள் ஆதாயம் அடைய பிரதமர் மோடி உதவுகிறார். நாங்கள் மோடி அரசை தோற்கடித்து, நாட்டு மக்களின் நலனுக்காக பணியாற்றுவோம் என ராகுல் காந்தி பாஜகவை கடுமையாக சாடினார்.