திமுக அரசின் திட்டங்கள் தமிழகத்தில் உள்ள அனைத்து குடும்பங்களுக்கும் ஏதோ ஒருவகையில் நிச்சயம் பயனளித்துக் கொண்டு இருக்கின்றன. ஆனால் சிலர் மட்டும் குறைசொல்கிறார்கள். அவர்களுக்கு நாம் வார்த்தைகளால் பதில்சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூர், மரகதம் கந்தசாமி மண்டபம் முன்பு புதிதாக வெண்கலத்தால் அமைக்கப்பட்ட கலைஞரின் திருவுருவ சிலை திறப்பு விழா நேற்று நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில், உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு, கலைஞர் சிலையை திறந்து வைத்தார்.
அதன் பின்னர், விழுப்புரம் அரசு சட்டக்கல்லூரி அரங்கத்தில் நடைபெற்ற அரசு விழாவில் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார். இந்த விழாவில், விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 688 ஊராட்சிகளுக்கு கலைஞர்ஸ்போர்ட்ஸ் கிட் 33 வகையான விளையாட்டு உபகரணங்கள் அடங்கிய 825 தொகுப்புகளை வழங்கினார். மேலும், விழுப்புரம் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் 295 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.34.34 கோடி மதிப்பில் வங்கி கடன் இணைப்புகளையும் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் விளையாட்டு உபகரணங்களையும் – வங்கி கடன் இணைப்புகளையும் பெற்ற பயனாளிகளை வாழ்த்தி உதயநிதி ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது, திராவிட மாடல் அரசு விளையாட்டுதுறைக்கு தருகின்ற முக்கியத்துவத்தின் காரணத்தால் ஆண்களுக்கு நிகராக பெண்களும் விளையாட்டு துறையை நோக்கி வருகிறார்கள்.
நம் அரசின் திட்டங்கள் தமிழகத்தில் உள்ள அனைத்து குடும்பங்களுக்கும் ஏதோ ஒருவகையில் நிச்சயம் பயனளித்துக் கொண்டிருக்கின்றன. ஆனால் சிலர் மட்டும் குறைசொல்கிறார்கள். அவர்களுக்கு நாம் வார்த்தைகளால் பதில்சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.