ஹெச்.ராஜா விமர்சனம்: திமுக நினைக்கிற மாதிரி விசிக அவ்வளவு பெரிய கட்சி இல்லைங்க..!

பாஜக ஒருங்கிணைப்புக் குழு தலைவர் ஹெச்.ராஜா, திமுக நினைப்பதுபோலவே, விசிக ஒன்றும் தவிர்க்க முடியாத பெரிய அரசியல் சக்தி இல்லை என தெரிவித்துள்ளார்.

பாரதிய ஜன சங்கம் கட்சி தலைவர் பண்டிட் தீன்தயாள் உபாத்யாயா 108-வது பிறந்தநாள் விழா சென்னை தியாகராய நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் நேற்று கொண்டாடப்பட்டது. அவரது படத்துக்கு பாஜக ஒருங்கிணைப்பு குழு தலைவர் ஹெச்.ராஜா மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

பின்னர், செய்தியாளர்களள் சந்திப்பில் ஹெச்.ராஜா பேசுகையில், நாடு முழுவதும் 24-ம் தேதி வரை 5 கோடிக்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் பாஜகவில் இணைந்துள்ளனர். பழநி பஞ்சாமிர்தம் குறித்து கருத்து தெரிவித்த இயக்குநர் மோகன் ஜியை கைது செய்தது முறையற்றது. நீதிமன்றமும் அதையே சொல்லி, தமிழக அரசு, காவல் துறைக்கு பலத்த அடி கொடுத்துள்ளது. அதேநேரம், பிரதமர் குறித்து அவதூறாக பேசிய அமைச்சர் தா.மோ.அன்பரசனை முதலமைச்சர் இன்னும் பதவி நீக்கம் செய்யவில்லை.

விசிக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் விஜயகாந்துடன் மக்கள்நல கூட்டணி வைத்து தேர்தலை சந்தித்தன. ஆனால், அந்த கூட்டணிக்கு வெறும் 6 சதவீத வாக்குகள்தான் கிடைத்தன. அதனால், திமுக நினைப்பதுபோலவே, விசிக ஒன்றும் தவிர்க்க முடியாத பெரிய அரசியல் சக்தி இல்லை.

மேலும் பேசிய ஹெச்.ராஜா, மகாவிஷ்ணு விவகாரத்தில் 2 தலைமை ஆசிரியர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். ஆனால், திருச்சியில் 40-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவிகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியும், அமைச்சர் அன்பில் மகேஸ்அதுபற்றி பேசவில்லை. கிறிஸ்தவர்கள் தொடர்பு இருப்பதால்தான் பேசவில்லையா? என ஹெச்.ராஜா தெரிவித்தார்.